Published:Updated:

விவசாய உண்மைகள் குத்திக்காட்டும் குத்தூசி!

விவசாய உண்மைகள் குத்திக்காட்டும் குத்தூசி!
News
விவசாய உண்மைகள் குத்திக்காட்டும் குத்தூசி!

ம.கா.செந்தில்குமார்

‘`நம் முப்பாட்டன்கள் விவசாயத்தை நம் தாத்தன்களுக்குச் சொல்லிக்கொடுத்தாங்க. தாத்தன்கள்கிட்ட இருந்து நம் அப்பாக்கள் கைக்கு வந்த விவசாயம், நம் கைக்கு மடைமாறி இருக்கணும். ஆனா, அது நடக்கலை. அதன் விளைவுதான் இப்ப உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் மையம். ‘நான்தான் படிக்கலை, என் பையனாவது படிக்கட்டும்’னு நம்மைப் படிக்கவெச்சு நகரத்துக்கு வேலைக்கு அனுப்பி வெச்சாங்க. அதனால விவசாயம் அடுத்த தலைமுறைக்குப் போகாம கிட்டத்தட்ட வழக்கொழிஞ்சிட்டு இருக்கு. பாதி பூமி தரிசாவும் மீதி பூமி ரியல் எஸ்டேட் ப்ளாட்டாவும் சிதறிக் கிடக்கு. விவசாயத்தை நம்மிடம் கொண்டுசேர்க்காத பெற்றோர்கள் மட்டும்தான் இதில் குற்றவாளிகளா? இப்படி நடப்பு விவசாய உண்மைகளைக் குத்திக் காட்டுற படம்தான் `குத்தூசி’ '' - அறிமுக சினிமாவிலேயே விவசாயம் விதைக்க வருகிறார் இயக்குநர் சிவசக்தி. இவர் சீனுராமசாமியிடம் துணை இயக்குநராக இருந்தவர்.

விவசாய உண்மைகள் குத்திக்காட்டும் குத்தூசி!

‘‘நாம நிறையப் படிச்சு, நிறையச் சம்பாதிச்சு சகல வசதிவாய்ப்புகளோடு இருக் கிறதுக்கு ஆதாரம் விவசாயமும் விவசாயிகளும்தான். ஆனா, அந்தப் பாரம்பர்ய விவசாயமும் இயற்கை விவசாய முறைகளும் கிட்டத்தட்ட அழிஞ்சிருச்சு. காரணம்... அறிவியல், அதிக மகசூல்ங்கிற பேர்ல யார் யாரோ நம் மூளைக்குள் திணிச்ச விஷயங்கள். அதையும் தாண்டி, பாரம்பர்ய விவசாயத்தை விடாம இருக்கிறவங்களையும் அழிவு அறிவியல் துரத்துது. ஆனா, எதுவுமே இயற்கையோடு ஒன்றிணைந்தால்தான் பாதுகாப்பு. அதுதான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும்.’’

விவசாய உண்மைகள் குத்திக்காட்டும் குத்தூசி!

‘‘நல்ல தலைப்பு... நல்ல கதை. இதை வெற்றிகரமான சினிமாவாக்க என்ன பண்ணியிருக்கீங்க?’’

‘‘பையனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முயற்சிபண்ணும் ஒரு குடும்பம், அதுக்காக தங்கள் நிலத்தை ஒரு வெளிநாட்டு கம்பெனியிடம் விற்க முடிவுசெய்யுது. அந்தச் சமயத்தில் அந்தக் குடும்பத்தில் நிகழும் ஒரு மரணம் குடும்பத்தையே புரட்டிப்போடுது. அப்போ நிலத்தை விற்கும் முடிவில் இருந்து அந்தக் குடும்பம் பின்வாங்க, வெளிநாட்டு கம்பெனியின் உண்மை முகம் தெரியவருது. ஒட்டுமொத்த ஊரும் அந்த கம்பெனி பக்கம் நிற்க, வெளிநாடு செல்ல இருந்த அந்த இளைஞன் அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே கதை. இதில் காதல், காமெடி, குடும்பம், ஆக்‌ஷன் கலந்து இயல்பு மீறாம சொல்லியிருக்கேன்.’’

விவசாய உண்மைகள் குத்திக்காட்டும் குத்தூசி!

‘‘ `வத்திக்குச்சி’ படத்துக்கு அடுத்து திலீபனுக்கு இது இரண்டாவது படம்... எப்படி நடிக்கிறார்?’’

‘‘இயல்பாக வரும் உடல்மொழிதான் திலீபனுக்குப் பலம். அவருக்கு ஆக்‌ஷனும் இயல்பா வருது. ‘ரொமான்ஸ், எமோஷன் சீன்ல மட்டும் கொஞ்சம் கவனிச்சுக்கங்க சார்’னார். ஆனா, கதையை அழகா உள்வாங்கிட்டு பல காட்சிகளை ஒரே டேக்ல ஓ.கே பண்ணிட்டார். அடுத்தடுத்து சரியான கதைகளை மட்டும் தேர்வுசெய்து நடிச்சா, விஷால் அளவுக்கு செமையான ஆக்‌ஷன் ஹீரோவா வருவார்.’’

விவசாய உண்மைகள் குத்திக்காட்டும் குத்தூசி!

‘‘தமிழ் சினிமா வழக்கப்படி ஹீரோயின் மலையாள வரவு. அமலா என்ன சொல்றாங்க?’’

‘‘‘ஹீரோயின் தேட ஆரம்பிச்சப்ப, ‘புதுமுகமா துறுதுறுனு நம்ம கிராமத்துப் பொண்ணு மாதிரியும் இருக்கணும், கொஞ்சம் மாடர்ன் காஸ்ட்யூமுக்கும் கண்ணை உறுத்தக் கூடாது’னு மனசுக்குள்ள சில கண்டிஷன்ஸ் வெச்சி ருந்தேன். நினைச்ச மாதிரியே கதைக்கு அவ்வளவு அழகா பொருந்தியிருக்காங்க அமலா. வீரூ சரண் வசனம், படத்துக்குப் பலம். கவிஞர் வ.ஐ.ச.ஜெயலபாலனுக்கு, முக்கியமான ஒரு கதாபாத்திரம்.  ஒரு இத்தாலிக்காரரை வில்லன் ஆக்கியிருக்கிறோம்... மிரட்டியிருக்கார்.’’