Published:Updated:

“இது பாலுமகேந்திராவின் கனவு!”

“இது பாலுமகேந்திராவின் கனவு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இது பாலுமகேந்திராவின் கனவு!”

ம.கா.செந்தில்குமார்

‘‘என் பையன்கிட்ட, ‘ ‘அவள் அப்படித் தான்’னு ருத்ரைய்யா ஒரே ஒரு படம்தான் எடுத்தார். அதுக்காகவே 40 வருஷங்களா டைரக்டர் என்கிற பேரோடு இருந்து செத்துப்போனார். ஆனால், இப்ப எத்தனையோ படங்கள் பண்ணியிருந்தாலும் அடையாளம் இல்லாமலேயே பலர் போயிடு றாங்க. நான் படம் பண்ணினா, அப்படி ஒரு பதிவா பண்ணணும். இல்லைன்னா பண்ணக் கூடாது’னு சொல்லிட்டு இருந்தேன். இப்ப அந்த வாய்ப்பு கிடைச்சிருக்குனு நம்புறேன்’’ - எம்.ஆர்.பாரதியின் பேச்சில் அப்படி ஒரு நிதானம். மூத்த பத்திரிகையாளர், பதிப்பாளர், பி.சி.ஸ்ரீராம், பாலுமகேந்திரா உள்பட மரியாதைக்குரிய திரை ஆளுமைகளின் நண்பர் என பாரதிக்குப் பல முகங்கள். இப்போது ரேவதி, அர்ச்சனா, நாசர், பிரகாஷ்ராஜுடன் சேர்ந்து ‘அழியாத கோலங்கள்’ போடவருகிறார்.
‘‘பல பத்திரிகைகளில் இருந்திருக்கேன். எழுத்தாளர் பிரபஞ்சன் விகடனில் எழுதும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். இளம்வயதில் உதவி இயக்குநராகவும் இருந்தேன். அப்ப பி.சி.ஸ்ரீராம் தான் இயக்கிய ‘மீரா’ படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பு தந்தார். ஒரு விளம்பர கம்பெனி ஆரம்பிச்சு, 100 விளம்பரங்களுக்கு மேல் எடுத்தேன். அதற்கும் பி.சி-தான் இன்ஸ்பிரேஷன். விகடனில் வந்த ஸ்டெல்லா புரூஸின் ‘அது ஒரு நிலாக்காலம்’ நாவலை, 32 வாரங்களுக்கு ஜெயா டி.வி-யில் சீரியலா பண்ணினேன். பப்ளிகேஷன் ஆரம்பிச்சு இன்ஜினீயரிங் மாணவர்களுக்கான புத்தங்களை வெளியிடுறேன். நான் ஆசைப்படுற சினிமாவை இப்ப இயக்கிட்டு இருக்கேன்.’’

“இது பாலுமகேந்திராவின் கனவு!”

‘‘இத்தனை வருடங்களுக்குப் பிறகு `படம் பண்ணணும்'ங்கிற நம்பிக்கை எப்படி வந்தது?’’

``நான் ஸ்கூல் படிக்கிறப்ப ஆங்கில மனப்பாடப் பாட்டுல, ‘டாம் வொயிட்வாஷ் தி ஃபென்ஸ்’னு ஒரு பாடல். ஸ்கூல் விடுமுறையில் பசங்க விளையாடப் போவாங்க. அப்ப ஒருத்தனை,
‘நீ இந்தக் கம்பி வேலிக்கு வெள்ளையடி’னு அவங்க அம்மா சொல்லிடுவாங்க. ‘மாட்டிக் கிட்டியா...’னு மத்த பசங்க கிண்டலடிப்பாங்க. ‘போடா முட்டாள்களா. வெள்ளையடிக்கிறதும் சந்தோஷம்தான்டா’னு அந்தப் பையன் சொன்னதா வர்ற அந்தப் பாட்டு, இன்னைக்கும் நினைவுல இருக்கு. எதைச் செஞ்சாலும் ரசிச்சு செய்றதும் ஈடுபாட்டோடு செய்றதுலயும் உள்ள மகிழ்ச்சி பெருசு. அப்படி இருந்த எனக்கு, ரொம்ப நாள் தள்ளிப்போன கனவு நனவாகியிருக்கு. அந்த வகையில் மகிழ்ச்சி.’’

“இது பாலுமகேந்திராவின் கனவு!”

‘‘இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் உங்கள் படம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெரும்னு நம்புறீங்க?’’

‘‘நீங்க எவ்வளவு பிரமாண்டமாகப் படம் எடுத்தாலும் அடிப்படையா நல்ல கரு இல்லைனா, அந்தப் படம் ஜெயிக்காது. ‘தான் உருவாக்கிய ஒருத்தனே தனக்கு எதிரியா வந்து நின்னான்’ இதுதான் ‘எந்திரன்’. சமீபத்துல ‘குயின்’ இந்திப் படம் பார்த்தேன். அங்க அது 100 கோடி கலெக்ட் பண்ணியிருக்கு. காரணம், ‘ஒரு பெண் தனியாக ஹனிமூன் போனா’ என்ற அதன் ஒற்றை வரி. இப்படி ஒரு லைன்தான் ஒரு பெரிய வெற்றிக்குக் காரணமா இருக்கு. டிஜிட்டல், அனிமேஷன்னு மற்ற கருவிகள் எல்லாம் அந்த ஒற்றை வரி கன்டென்ட்டுக்கு அழகு சேர்க்கத்தானே தவிர, அதுவே முக்கியம் கிடையாது. அதனால் யாரோட உதவியும் இல்லை னாக்கூட என்னால இங்கே தொடர்ந்து படங்களும் பண்ண முடியும், வெற்றியும் பெற முடியும்.’’

“இது பாலுமகேந்திராவின் கனவு!”

‘‘ஓ.கே... `அழியாத கோலங்கள்' எந்தத் தருணத்தில் தொடங் கியது?’’

‘‘அர்ச்சனா என் ஃப்ரெண்ட். அவங்க இந்தியன் பனோரமா விருதுக் குழுவில் ஜூரியாக போனப்ப, கிட்டத்தட்ட 160 படங்கள் பார்த்தாங்க. போயிட்டு வந்து அந்தப் படங்கள் பற்றி பேசிட்டு இருந்தாங்க. அதில் ஒரு பெங்காலிப் படம் அவங்களை ரொம்பப் பாதிச்சிருச்சு. ‘அந்த லைனை மட்டும் எடுத்துக்கிட்டு நாம பண்ணினால் என்ன?’னு பேச ஆரம்பிச்ச அந்தத் தருணத்துலதான் இந்தப் படம் உருவாச்சு. அந்தப் பட உரிமையை முறைப்படி வாங்கி, அதில் எங்களுக்குப் பிடிச்ச மாற்றங்களைப் பண்ணி னோம். என் இன்னொரு ஃப்ரெண்ட் ஈஸ்வரிராவிடம் இந்த ஐடியாவைச் சொன்னதும், அவங்களே படத்தைத் தயாரிக்க முன்வந்தாங்க. நாங்க எல்லாருமே பாலுமகேந்திராவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தவங்க; ‘அவருக்கு ஏதாவது ஒண்ணு பண்ணணும்’கிற எண்ணம் உள்ளவங்க. பாலுமகேந்திரா மிஷனா இந்தப் படத்தை ஆரம்பிக்கலாம்னு முடிவுபண்ணி தொடங்கினோம். நடுத்தர வயதுப் பெண்களின் பிரச்னைகளைப் பற்றி தொடர்ந்து சினிமாவாக் கணும் என்ற குறிக்கோளை மனசுல வெச்சு இந்த புராஜெக்ட்டை ஆரம்பிச்சோம். பாலுவின் கனவுகளோடு தொடர்ந்து பயணிக்கிறோம்.’’

“இது பாலுமகேந்திராவின் கனவு!”

‘‘பாலுமகேந்திராவின் முக்கியமான படங்களில் ஒன்று ‘அழியாத கோலங்கள்’. அதே தலைப்பில் பண்றீங்க. கதையில் என்ன ஸ்பெஷல்?’’

‘‘கல்லூரியில் படிக்கும்போது ஒரு பெண்ணால் ஈர்க்கப்பட்டு ஒரு கவிதை எழுதுறான் ஒருவன். அதுக்கு ஏக பாராட்டு. அது ஆனந்த விகடன்ல பிரசுரம் ஆகுது. ‘நீ தொடர்ந்து எழுது’னு அவள் அவனை உற்சாகப்படுத்துறா. வாசிப்பும் உழைப்பும், அவனை பிரபலமான எழுத்தாளனா ஆக்குது. வேறொரு பெண்ணுடன் திருமணம், குழந்தைனு செட்டிலாகிறான். கால் நூற்றாண்டுக்குப் பிறகு, சாகித்ய அகாடமி விருது வாங்குறான். அப்ப அவன் தரும் பேட்டியில், ‘வங்கி வேலைக்குப் போகணும்னு படிச்சிட்டு இருந்த என்னை, இலக்கியம் பக்கம் திருப்பியது ஒரு பெண்தான்’கிறான். டெல்லியில் இருந்து திரும்பியதும் தன் வீட்டுக்குக் கூடப் போகாம, 25 வருடங்கள் கழிச்சு அந்த மழை இரவில் அவளைச் சந்திக்கப் போறான். அந்த ஓர் இரவுதான் கதை.’’