Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 6

குறும்புக்காரன் டைரி - 6
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 6

குறும்புக்காரன் டைரி - 6

குறும்புக்காரன் டைரி - 6

குறும்புக்காரன் டைரி - 6

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 6
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 6

ட்டாம் வகுப்புப் படிக்கும் கிஷோர், வருங்கால வி.வி.ஐ.பி. தன்னுடைய குழந்தைப் பருவ வாழ்க்கையை வருங்காலத் தலைமுறைகள் தெரிஞ்சுக்கிறதுக்காக, டைரி எழுதறான். கிஷோரின் இந்த மகத்தான பணி, இதோ தொடருது...

எனக்குப் பிடிக்கவே பிடிக்காத சப்ஜெக்ட், அறிவியல். கெமிஸ்ட்ரியின் சில ஈக்குவேஷன்களைப் பார்க்கும்போது, கல்வெட்டு எழுத்துகள் மாதிரி இருக்கும். இந்த ராஜேஷ் பயல்தான் சயின்ஸ்ல 100 மார்க் வாங்கினா, பிரேயர்ல 10 ரூபா பேனா பரிசு கொடுப்பாங்கனு விழுந்து விழுந்து கவனிப்பான்.  ஆனா, இன்னிக்கு நான் சயின்ஸ் கிளாஸைக் கவனிச்சது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருந்துச்சு.

குறும்புக்காரன் டைரி - 6

நான் தர்பூசணிப் பழம் சாப்பிடுறப்போ, பல முறை கொட்டையோட சாப்பிட்டுருவேன். அப்போ, 'போச்சு, உன் வயித்துக்குள்ளே தர்பூசணிக் கொடி முளைக்கப்போகுது’னு சொல்வார் அப்பா.

ஒரு வேளை என் வயித்துக்குள்ளே தர்பூசணிக் கொடி முளைச்சா, நான் குடிக்கிற தண்ணியை அந்தக் கொடியே எடுத்துக்கும். தர்பூசணிப் பழம் மாதிரி வயிறு  குண்டாயிருமோ’னு நினைப்பேன்.

ஆனா, தாவரங்கள் வளர சூரிய ஒளி தேவைனு இன்னிக்கு சயின்ஸ் சார் சொன்னார். வயித்துக்குள்ளே சூரிய ஒளியே இல்லையே, அப்புறம் எப்பிடி செடி, கொடியெல்லாம் முளைக்கும்? அப்பாடா, 'தப்பிச்சேன்டா சாமி’னு நினைச்சுக்கிட்டேன். இப்போ என்னோட கவலை, மரம் முளைப்பது பற்றி இல்ல. நாளைக்கு ஊர்ல இருந்து வர்ற மாமாவை எப்பிடி சமாளிக்கப்போறேன்னுதான். ஏன், இந்த மாமாவைப் பார்த்தா எனக்கு பயம்னு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு.

முன்னொரு காலத்துல, அதாவது நான் நடக்க மட்டுமே ஆரம்பிச்சிருந்த காலத்துல, சாப்பிடுறதுக்கு ரொம்ப அடம்பிடிப்பேனாம். (அப்பவே, அம்மாவின் கைமணம் புரிஞ்சிருக்கு). அப்படி ஒருநாள் நான் சாப்பிட அடம்பிடிச்சப்போ, அம்மா பயங்கர டென்ஷன் ஆகிட்டாங்களாம்.

உடனே அலமாரியில் இருந்த ஒரு போட்டாவை எடுத்து, 'ஏய், இப்போ நீ சாப்பிடலைனா, இந்தப் பூச்சாண்டிகிட்ட புடிச்சுக் குடுத்துருவேன்’னு சொன்னாங்க.

குறும்புக்காரன் டைரி - 6

அந்த போட்டாவில், முகம் முழுக்க தாடியோடு, நோக்கு வர்மம் மூலம்  கேமரா லென்ஸை உடைக்கிற மாதிரி முறைப்போடு ஒருத்தர் இருந்தார். நானும் பயந்து, சாப்பிட ஆரம்பிச்சுட்டேனாம். அப்போ ஆரம்பிச்சது அம்மாவுக்கு இந்த ஐடியா. நான் எதுக்கு அடம்பிடிச்சாலும் அந்த போட்டாவை அலமாரியில் இருந்து எடுத்துருவாங்க. 'ஒழுங்கா சொல்றதைக் கேளு. இல்லைனா, பூச்சாண்டிகிட்ட புடிச்சுக்குடுத்துருவேன்’னு பயமுறுத்த ஆரம்பிச்சுருவாங்க.

அந்த போட்டாவை எப்போ பார்த்தாலும் பயம் ஷோல்டர்ல ஏறிக்கும். வீட்டுல யாரும் இல்லாத நேரம், அந்த போட்டாவைத் தூக்கிப் போட்டுட பிளான் பண்ணுவேன். ஆனா, பயமா இருக்கும். ஒரு வேளை ஜூமான்ஜி படத்துல வர்ற மாதிரி, போட்டோவில் இருந்து அந்தப் பூச்சாண்டி வந்துட்டான்னா?

'அடேய் கிஷோர், என்னையா தூக்கிப்போட நினைக்கிறே. உன்னை தூக்கிட்டுப் போய் ஏழு கடலுக்கு அப்பால் இருக்கிற குகையில் வெச்சுடுறேன்’னு சொல்லிட்டா?

இப்படியே சில வருஷங்கள் போச்சு. ஒரு ஞாயிற்றுக் கிழமை. வீட்டுல எல்லோரும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தோம். கதவைத் தட்டும் சத்தம். என் ஃப்ரெண்ட்ஸ்தான் வர்றாங்கன்னு ஓடிப்போயி கதவைத் திறந்தேன். வெளியே, போட்டோவில் பார்த்த அதே உருவம். 'அய்யய்யோ, பூச்சாண்டி’னு அலறி அடிச்சு மாடிக்கு ஓடிட்டேன்.

அம்மாவும் அப்பாவும் அந்தப் பூச்சாண்டியோடு பேசுறதும் சிரிக்கிறதும் கேட்டுச்சு. அப்புறம், அப்பா மேலே வந்தார். கூடவே, அண்ணன் லோகேஷ். அவன் கையில் பெரிய சாக்லேட். அதில், முக்கால்வாசியைத் தின்னுட்டான்.

''டேய் கிஷோர், அது பூச்சாண்டி இல்லடா. மாமா. இதோ பார்த்தியா, அவர் வாங்கிட்டு வந்த சாக்லேட்''னு சொன்னான்.

குறும்புக்காரன் டைரி - 6

என் அம்மாவின் தம்பிதான் அவர். பேரு பூபதி. ஃபேமிலி பிரச்னையால ரொம்ப வருஷமா யாரையும் பார்க்காம இருந்தாராம். 'மாமா ரொம்ப ஜாலியான டைப். உன்னோடு விளையாடுவார். கதைகள் சொல்வார். பயப்படாம கீழே வா’ என்றார் அப்பா.

அந்த மாமா என்னிடம் சகஜமா பழக ஆரம்பிச்சாலும், பயமாவே இருந்துச்சு. 'ஏன்ப்பா, மாமா பூச்சாண்டி மாதிரியே இருக்காரு’னு கேட்டேன்.

'பெரியவனாகி தாடி வளர்ந்தா அப்படித்தான் இருக்கும்’னு அப்பா சொன்னார். அப்போ, நானும் பெரிய வயசில் பூச்சாண்டி மாதிரிதான் இருப்பேனா?

இதெல்லாம் ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால நடந்தது. இப்போ, காஞ்சனாவே நேர்ல வந்தாலும் லெஃப்ட் கையால் சொடுக்குப்போட்டு, 'சப்வே சப்’ விளையாடி, நமக்குள்ளே போட்டி வெச்சுப்போமா போட்டி’னு கேட்பேன்.

சரி, அப்புறம் எதுக்கு பயம்னு கேட்கறீங்களா? ஏதோ சின்ன வயசுல கதை சொன்னார் சரி. இப்பவும் வீட்டுக்கு வரும்போதெல்லாம் கதை சொல்றேன், ஜோக் அடிக்கிறேன்கிற மொக்கை தாங்கலை.

குறும்புக்காரன் டைரி - 6

'கிஷோர், உன் மாமா நாளைக்கு வர்றார். நானும் அப்பாவும் ஒரு ஃபங்ஷனுக்கு வெளியே போறோம். லோகேஷ் இந்தி எக்ஸாமுக்குப் போயிடுவான். நீதான் அவரோடு பேசிட்டு இருக்கணும்’னு அம்மா சொன்னாங்க.

நாளைக்கு சண்டே எனக்கு இப்படியா விடியணும் என்கிற கவலையோடு இதோ இந்த டைரியை எழுதிட்டு இருக்கேன்.

(டைரி புரட்டுவோம்)