Published:Updated:

இறுதிச் சுற்று - சினிமா விமர்சனம்

இறுதிச் சுற்று - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
இறுதிச் சுற்று - சினிமா விமர்சனம்

இறுதிச் சுற்று - சினிமா விமர்சனம்

விளையாட்டுத் துறை அரசியலை நாக் அவுட் பண்ணும் பவர்ஃபுல் பன்ச்.

பாக்ஸிங் அசோசியேஷன் அரசியலால், ஒலிம்பிக் கனவோடு வாழ்க்கை யையும் தொலைக்கிறார் மாதவன். கோச் ஆன பின்னரும் கோபம் குறையாமல் வாழ்கிறார். அது, வட இந்தியாவில் இருந்து வட சென்னைக்குத் தூக்கியடிக்கிறது. அங்கே மீனவக் குப்பத்தில் சந்திக்கும் பாக்ஸர் மதிக்குப் பயிற்சிகொடுக்க ஆரம்பிக்கிறார். மாதவனை மிதித்தவர்களை மதி எப்படி பஞ்சர் ஆக்குகிறார் என்பது மீதிக் கதை.

இறுதிச்சுற்று மட்டும் அல்ல; படத்தின் ஒவ்வொரு சுற்றிலும் மதியாக வரும் ரித்திகா செம ஸ்கோர் செய்கிறார். `யோவ்... கிழம்' என மாதவனைக் குறும்பாக அழைப்பதும், அக்காவுக்காக மாதவனின் டிரில் பனிஷ்மென்ட்டை ஏற்பதும், `உனக்கு என்ன வேணும் மாஸ்டர்... நாக்அவுட்தானே?' எனக் கேட்டு ஜெயிப்பதும், ஓடிவந்து காற்றில் உயர எழும்பி மாதவன் இடுப்பில் அமர்வதும் என, படம் முழுக்க ரித்திகாதான் கெத்து. செங்கிஸ்கான் எபிசோட், போல்டான `போலா பன்ச்'. ஒரிஜினல் பாக்ஸரான ரித்திகாவின் அட்டகாச நடிப்புக்குக் காத்திருக்கின்றன விருதுகள்.

இறுதிச் சுற்று - சினிமா விமர்சனம்

காதல் மாதவன், இதில் கறார் கோச். உடல் முழுக்க கர்வம், தலை முழுக்க கேசம், மனம் முழுக்க பாக்ஸிங் நேசம் என உடலிலும் நடிப்பிலும் அத்தனை முறுக்கு. `கொஞ்சம் அன்பா சொல்லித்தாப்பா...’ எனும் நாசரிடம் `அப்புறம் உங்களை மாதிரிதான் கையைக்கட்டி நிக்கணும்’ என எகிறி அடிக்கும்போது கண்களில் தெறிக்கும் கோபமும் அக்கறையும்... மெஜஸ்ட்டிக் மேடி. இது மாதிரி கேரக்டர் என்றால் பிரேக் எடுத்துக்கொண்டே வரலாம். இது வேற லெவல் மேடி.

இயக்குநர் சுதா கொங்கராவுக்கு இது லைஃப்டைம் படம். திரைக்கதைக்காக மெனெக்கெட்ட மூன்று ஆண்டு உழைப்பு, ஒவ்வொரு ஃப்ரேமிலும் க்ளாப்ஸ் அள்ளுகிறது. ரித்திகா சிங், மாதவன், நாசர், ராதாரவி... என காஸ்ட்டிங் கனகச்சிதம்.

கோபக்கார கோச், தனக்கு நடந்த நிராகரிப்பை தனது ஸ்டூடன்ட் மூலம் பழி தீர்க்கும் கதை கொஞ்சம் பழசுதான். அதை மறக்கவைக்கும் திரைக்கதையும், இந்தக் குறும்புப்பொண்ணு கடைசி வரை போகுமா என சந்தேகிக்க வைக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்சும் அந்தக் குறையைத் தூக்கியடிக்கின்றன.

இறுதிச் சுற்று - சினிமா விமர்சனம்

இந்தி வெர்ஷனுக்கு உதவும் என ரித்திகாவின் அம்மாவை செளகார்பேட்டை ஆக்கியதும், அக்காவே பழி தீர்ப்பதும் இட்லிக்குப் பொருந்தாத சட்னி.

`வா மச்சானே'வில் குத்தி, `சண்டக்காரா'வில் சரணடைய வைக்கிறது சந்தோஷ் நாராயணின் இசை. நீங்கள் தொடப்போகும் உயரம், எங்கோ தொலைவில் இருக்கு பாஸ். சிவக்குமார் விஜயனின் கேமரா செம லாகவமாக ரிங்குக்குள் டிராவல் செய்கிறது.

அரசியல் சதுரங்கத்தில் பகடையாக வெட்டுப்படும் அப்பாவி விளையாட்டு வீரர் களின் வலியைப் பதிவுசெய்த நேர்மைக்கும், அதை சுவாரஸ்ய சினிமாவாக்கிய இயக்கத் துக்கும் தம்ஸ்அப்!

- விகடன் விமர்சனக் குழு