Published:Updated:

“எனக்கு பயமே கிடையாது!”

“எனக்கு பயமே கிடையாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எனக்கு பயமே கிடையாது!”

கமல் குடும்பம் ஸ்பெஷல் ஆல்பம்ம.கா.செந்தில்குமார்

‘‘நியூயார்க் நகர கார்ப்பரேஷன் குழாய்களில் யார் வேண்டுமானாலும் பைப்பைத் திறந்து தண்ணீர் குடித்துவிட்டு உயிரோடு இருக்கலாம். நான் நியூயார்க் போனால், தனியாக தண்ணீர் பாட்டில்கள் வாங்குவது இல்லை. பைப்பில் ஜில்லென வரும் ஐஸ் வாட்டர்தான். பாத்ரூம் பைப் முதல் எங்கும் அங்கு நல்ல தண்ணீரே. அதற்குக் காரணம் நீர்நிலைகளை அவர்கள் அவ்வளவு சுத்தமாக வைத்திருப்பதுதான். இந்தியாவிலும் அதுபோல் நடக்க வேண்டும் என்ற கனவு எனக்கு உண்டு’’ - ஒரு வாய் சப்பாத்தி, ஒரு கேரட் துண்டு, ஒரு தக்காளித் துண்டு... சரிவிகித உணவு உண்டபடி உரையாடுகிறார் உலக நாயகன்.

ஒரு மதிய நேரத்தில் கமல்ஹாசனுடன் நடந்த சந்திப்பில் இருந்து...

‘‘ட்விட்டரில் இணைந்திருக்கிறீர்கள். சோஷியல் மீடியாவின் அசுர வளர்ச்சி, அதில் பெருகிவரும் எதிர்மறை விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘கடிதம் எழுதினோம்; தந்தி அடித்தோம்; அலை பேசினோம். இன்று எல்லாம் மாறிவிட்டது. அந்த மாற்றத்தின் உச்சம்தான் சமூக வலைதளங்கள். இது ஒரு மொழி மாதிரி. இதன் வேகமும் வீரியமும் பெரிது. இதன் எதிர்வினைகள் நல்லதாகவும் இருக்கும்; கெட்டதாவும் இருக்கும். என் வீடு இருக்கும் ஆழ்வார்பேட்டை தெருவில் முன்னர் மாடியில் இருந்து ரௌடிகள் பாட்டில்களை வீசுவார்கள். சில நேரங்களில் பாட்டில் தெறிப்பதுகூட வியப்பாக இருக்கும். இந்த ரௌடித்தனத்தை தெரு அளவில் பண்ண முடியும். வீட்டுக்குள் வந்தால் போலீஸைக் கூப்பிட்டுவிடுவோம். அது சாலையாக இருந்தால் என்ன, சமூக வலை தளமாக இருந்தால் என்ன? சகமனிதனுக்கு மரியாதை இல்லாமல் செய்வது அனைத்துமே ரௌடித்தனம்தான்.’’

“எனக்கு பயமே கிடையாது!”

‘‘சென்னை மழை வெள்ளம் சமயத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது... அதுதொடர்பாக உங்கள் நண்பருக்கு நீங்கள் எழுதிய கடிதம் செய்தியாகி சர்ச்சையானதே?’’

‘‘முதல் விஷயம், அதை நான் மீடியாவுக்காக எழுதவில்லை. அடுத்து அதில் யாரையும் நான் வம்புக்கும் இழுக்கவில்லை. அது எனக்குள் இருந்த சோகம். மழை சமயத்தில் நானும் என் நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம். ‘உங்க வீடெல்லாம் எப்படி இருக்கு?’ என்று நான் கேட்க, அவரும் கேட்க ஒருவருக்கொருவர் உறவுக்குக் கேட்டுக்கொண்டோம். அப்போது எனக்கு அழுகையே வந்துவிட்டது. `ஐயய்யோ என்னங்க... உங்க வீடெல்லாம் நல்லா இருக்குல்ல?’ என்றார். ‘என் வீடு நல்லா இருக்கு என்பது எந்த விதத்தில் சந்தோஷம்? மக்கள் வெளியில ரொம்பக் கஷ்டப்படுறாங்களே... ஒண்ணுமே பண்ண முடியலையே.  பெரிய பயில்வானாக இருக்கலாம். பத்து கல்லு மூடி ஒரு குழந்தை செத்துபோச்சுன்னா, என்ன பண்ண முடியும்? அந்தப் பத்து கற்களை அந்தச் சமயத்தில் தடுக்க முடியலையே என்ற வருத்தம்தான்’ எனப் பேசிக்கொண்டிருந்தோம். அந்தச் சோகத்தை, மன அழுத்தத்தை கடிதமாக வேறு ஒரு நண்பருக்கு எழுதினேன். அது வெளிவந்துவிட்டது. அதன் பிறகு, ‘அது நான் எழுதிய கடிதம் இல்லை’ என பொய் சொல்ல முடியாது. ஆனால், நான் சொல்லாதது சிலவற்றை அதன் தமிழ் மொழிபெயர்ப்பில் சேர்த்துவிட்டார்கள். அவ்வளவுதான். ஆனால் அது என் ஓலம். ஓலமிடக்கூட இங்கு உரிமை இல்லை என்றால் எப்படி?’’

‘‘ஆனால் அதற்கு எதிர்வினையாக, ‘கருத்து கந்தசாமி... விளம்பரத்துக்காகப் பிதற்றுகிறார்...’ என்றெல்லாம் நிதி அமைச்சர் ஓ.பி.எஸ்-ஸிடம் இருந்து வந்த அறிக்கையை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?’’

‘‘அதுதான் எனக்குப் புரியவே இல்லை. அது நான் சொல்லாத ஒன்று. அதனால்தான் அடுத்து நான் எழுதிய பதிலில்கூட `இது அவருக்கான மறு அறிக்கை இல்லை’ எனத் தெளிவுபடுத்தினேன். ஏனெனில், பேசிக் கொண்டே இருந்தால் நீண்டுகொண்டேதான் இருக்கும். நான் அந்த மாதிரி அரசியல் விளையாட்டு விளையாடியது இல்லை. ஓட்டுச்சாவடி அரசியல் விளையாட்டு எனக்குத் தெரியாது. என்னை அரசியலாக்கவேண்டிய அவசியமே கிடையாது. எனக்கு அரசியலில் ஆர்வமே கிடையாது என்பதை ஜோக்காகச் சொல்லிப்பார்த்தேன், கோபமாகச் சொல்லிப் பார்த்தேன். எப்படிச் சொன்னாலும் சந்தேகப்படு கிறார்கள். ‘எங்கேயோ இந்தாளுக்கு மனசுக்குள்ள அரசியல் ஆசை இருக்கு’ என்று நினைக்கிறார்கள். அது அல்ல என் அரசியல். என் அரசியல் மக்கள் சார்ந்தது; என் ஊர் சார்ந்தது; அது ஊரோடு சேர்ந்து தன்னால் என்னில் இருந்து வெளிவரும்.’’

‘‘ `விஸ்வரூபம்’ பிரச்னைக்குப் பிறகு ஜெயா டி.வி-யில் ஒரு பட்டிமன்றத்துக்கு நடுவராகப் போனது, ஓ.பி.எஸ் அறிக்கைக்குப் பிறகு ‘வருந்துகிறேன்’ என்ற தொனியிலான உங்களின் பதில் அறிக்கை... இது சமரசம் செய்துகொள்வதாக ஆகிவிடாதா?”

‘‘நான் யாருடனாவது சண்டைபோட்டால் தானே, சமரசம் செய்வதற்கு. தவிர ‘மழை சமயத்தில் யாருமே எதுவும் செய்யவில்லை’ என நான் சொன்னதாகவும் பலபேர் செய்யும் வேலைகளை நான் கிண்டலடித்துவிட்டதுபோலவும் என் எழுத்து திசைமாற்றப்பட்டது. அதனால் `நற்பணி செய்பவர்களின் மனம் கோணியிருந்தால் வருந்துகிறேன்’ என்றுதான் சொன்னேன். மற்றபடி எனக்கு பயமே கிடையாது. தவறு செய்தவனுக் குத்தானே மன்னிப்பு... நான்தான் எந்தத் தவறும் செய்யவில்லையே?”

‘‘லைகா தயாரிப்பில் ரஜினி ‘2.0’-ல் நடிக்கிறார். அதே லைகாவுடன் சேர்ந்து நீங்கள் ‘மருதநாயகம்’ பண்ணப்போவதாகவும் தகவல் வருகிறதே?’’

‘‘ ‘நீங்க சரினு போன் பண்ணி சொன்னா போதும், ‘மருதநாயகம்’ தொடங்கிடலாம்’ என்கிறார் லைகா சுபாஷ்கரன். ஆனால், அந்தப் படத்தைத் தொடங்குவதற்கு முன்பான தயாரிப்பு வேலை பெருசு. அவர் என் மேல் நம்பிக்கை வைத்திருக் கிறார் என்பதற்காக, எப்படி வேண்டுமானாலும் இழுத்துவிட்டு விளையாட முடியாது. இப்போது ‘மருதநாயகம்’ ஆரம்பித்தால் முடிக்க ஒரு வருடத்துக்கு மேலாகிவிடும். ஆனால், இப்போது வேறு ஒரு படம் பண்ணுகிறோம். ராஜ்கமல் பண்ணுகிறது. இதில் லைகாவும் சம்பந்தப்பட்டு இருக்கிறது.’’

“எனக்கு பயமே கிடையாது!”

``அந்தப் படத்தில் என்ன விசேஷம்?’’

‘‘அதில் என்னுடன் ஸ்ருதியும் நடிக்கிறார். படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. ஏப்ரலில் தொடங்கும்!’’

‘‘ஸ்ருதி நடிக்க வந்த புதிதில், ‘அவங்க நிரூபிக்க கால அவகாசம் கொடுங்க’ எனச் சொல்லியிருந்தீர்கள். ஒரு சீனியராக, ஸ்ருதியைப் பற்றிய உங்களின் ஒப்பீனியன் என்ன?’’

‘‘ஸ்ருதி என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டியதாக இருக்கிறது. ஏனெனில், என்னைப் பற்றியே சொல்லிக்கொள்வது போலான சிக்கல். ஸ்ருதி, நான் எழுதிய கவிதைகளில் ஒன்று. அதுவும் விரும்பி எழுதிய கவிதை. நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேனோ, அதே எண்ணம் அவருக்கும் இருக்கிறது; உத்வேகமும் உள்ளது. அவருடைய இந்த வெற்றிக்குக் காரணம், என் மகளாக இருப்பது அல்ல. அது அவருடைய திறமை. அவர் ஒரு முழுப் படத்துக்கு இசையமைக்கக்கூடிய திறமைசாலி. இங்கு எத்தனை நடிகைகளை அப்படிச் சொல்லிக்காட்ட முடியும். நடனம் நன்கு தெரியும். ஆங்கிலம்தான் என்றாலும்கூட, நன்றாகவே எழுதுவார். இந்தத் தகுதிகள் எல்லாம் பிற்காலத்தில் அவருக்கு உதவும். தவிர, ‘எனக்கு என்ன தகுதியோ, அதற்கு ஏற்ற வெற்றி வரணும். அதை அடைந்தே தீருவேன்’ என்ற வைராக்கியமும் அவரிடம் உள்ளது. அவர் நடிக்க வந்த புதிதில் ஒரு திட்டம் போட்டோம். அவரை பெரிய அளவில் விளம்பரம் செய்து டமாரம் அடித்து ராஜ்கமல் மூலம் அறிமுகப்படுத்தக் கூடாது என்பதே அது. `ஸ்ருதி, நான் உன்னிடம் வந்து தேதி கேட்பேன். அப்போது `பார்த்துச் சொல்றேன்' எனச் சொல்லி என்னிடம் சம்பளம் பேசி வாதாடி, எந்தச் சலுகையும் இல்லாமல் நான் அந்தச் சம்பளத்தை சந்தோஷமாக உனக்குக்  கொடுக்க வேண்டும்' என்றேன். இன்று அதுதான் நடக்கிறது.’’

‘‘ஸ்ருதிக்கு வயது 30. அவர் ஃபேமிலி லைஃபுக்குள் வரவேண்டும் என்று ஓர் அப்பாவாக அவரிடம் பேசியது உண்டா?’’

‘‘நான் வேறுவிதமான அப்பா. அவருக்கு என்ன சந்தோஷமோ, அந்த  லைஃபுக்குள்தான் அவர் வரணும். அவருடைய வாழ்க்கை, அவருடைய சந்தோஷம். அதை அவர்தான் நிர்ணயம் செய்ய வேண்டும். 11 வயதுப் பையனை பொடனியில் தட்டி பூணூல் போட்டிருந்தால், போட்டிருக்கலாம். ஆனால், என் தகப்பனார் அன்று அப்படிச் செய்ய வில்லை. நான் மறுத்ததும் விட்டுவிட்டார். என் நண்பர்கள் வற்புறுத்திய அளவுக்குக்கூட என் தகப்பனார் என்னை வற்புறுத்தவில்லை. என் தந்தை எனக்குத் தந்த சுதந்திரத்தை நான் ஸ்ருதிக்குக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்குத் திருமணத்திலேயே நம்பிக்கை கிடையாது. அவருக்கு இருந்தால், அவருடைய சந்தோஷம் என்னவோ... அப்படித்தான் பண்ண வேண்டுமே தவிர, நான் மாப்பிள்ளை பார்ப்பது போன்ற கொடுமை வேறு ஒன்று இருக்கவே இருக்க முடியாது.’’

‘‘ஸ்ருதி நடித்ததில் பிடித்த படம் எது?’’

‘‘என் படத்திலேயே நான் அப்படிச் சொல்ல மாட்டேன். ‘அதெல்லாம் முடிஞ்சுபோச்சு. என் அடுத்த படம்தான் எனக்குப் பிடித்த படம்’ என்பேன். அப்படிச் சொல்வது என்றால், அவர் நடித்ததிலேயே ரொம்பப் பிடிக்கப்போகும் படம்... அடுத்து நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கப்போகும் படம்தான்.’’

‘‘அக்‌ஷராவுக்கு ‘ஷமிதாப்’க்குப் பிறகு அடுத்த படம் கமிட் ஆவதில் தடுமாற்றமா?’’

‘‘எது என முடிவெடுப்பது அவர்களின் உரிமை. அதில் நான் தலையிட முடியாது. ‘நான் டெக்னீஷியன்ப்பா’ என்பார். ‘இல்லம்மா நானும் அப்படி பாலசந்தர் சார்கிட்ட சொல்லியிருக்கேன். ‘அதெல்லாம் அப்புறம் வெச்சுக்க. இப்படி நடிக்கிறது உன் லைஃப்ல மறுபடியும் வராது. முதல்ல நடி’னு சொன்னார்’ என்றேன். ஆமாம்... அவரும் இப்போது ஒரு படத்தில் நடிக்கிறார்.’’

“எனக்கு பயமே கிடையாது!”

‘‘சுப்புலட்சுமி எதில் விருப்பமாக இருக்கிறார்?’’

‘‘அற்புதமான எழுத்தாளருக்கான எல்லா சாயலும் தெரிகிறது. சுப்பு உள்பட உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பன்னிரண்டு குழந்தைகள் ஆக்ஸ்ஃபோர்டில் மூன்று மாதங்கள் தங்கி, ஒரு எழுத்துப்பட்டறையில் வேலைசெய்து திரும்பினார்கள். அப்போது அவருக்கு வயது பதினாலரை. ஆமாம், அவர் உயரமாக இருக்கிறாரே தவிர, சின்னப் பெண்தான். எனக்கென்னவோ அவர் அந்தத் துறையில் வருவார் என்றே தோன்றுகிறது. அவருக்கு மீடியா ஆர்வம் அதிகம். அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு. என்ன முடிவு எடுக்கிறார் என்பதற்காகக் காத்திருக்கிறோம்.’’

‘‘கௌதமிக்கும் உங்களுக்குமானது ஓர் அபூர்வ உறவு. அவருடனான இந்தப் பயணம் எப்படி இருக்கிறது?’’

‘‘ `இதை முதலிலேயே செஞ்சிருக்கக் கூடாதா மடையா’ என நினைத்துக் கொள்வேன். இது விநோத ஒப்பந்தமாக இருக்கலாம். இந்த ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய நியாயமும் நேர்மையும் நீங்கள் கான்ட்ராக்ட் போட்டுக்கொண்டாலும் வராது. எங்களுக்குள் எந்த எழுத்து வடிவத்திலும், ‘இப்படித்தான் இருக்கணும். அப்படிப் பண்ணலைனா இதுதான் விளைவு’ என்றெல்லாம் எதுவும் இல்லை. அதைப் பற்றி நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை. ஆச்சர்யமாக இருக்கிறது. பன்னிரண்டு வருடங்களாக அதே அன்போடு உள்ளோம்.’’

‘‘ `கமல், எய்ட்ஸ் விழிப்புஉணர்வு போன்ற படங்களில் நடிப்பாரே தவிர, கமர்ஷியல் விளம்பரங்களில் நடிக்க மாட்டார்’ என அறிவோம். ஆனால், திடீரென போத்தீஸ் விளம்பரத்தில் நடித்தீர்கள். இந்தத் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம்?’’

‘‘விளம்பரத்தில் நடிக்க வெகுநாட்களாகவே கேட்டுவந்தனர். ஆனால், பல விஷயங்களுக்கு எங்களுக்கு காசு தேவைப்படுகிறது. நற்பணிகளைச் செலவு இல்லாமல் செய்ய முடியாது. இதுவரை என் ரசிகர்கள் 20 கோடி ரூபாய்க்கும் மேல் நற்பணிகள் செய்துள்ளனர். அவை அவர்களின் சொந்தப் பணம். அதுக்கு நிகராக நான் பண்ணிக்காட்ட வேண்டாமா? அதற்கான முயற்சிதான் இந்த விளம்பரப் பட நடிப்பு. ஆனால் இந்த முடிவுக்கு என் கம்யூனிஸ்ட் நண்பர்கள் பலர் வருத்தப்பட்டார்கள். அதை சினிமாவில் இருந்தே சம்பாதித்துப் பண்ணுவது என்பது சிரமம். அதனால் இதில் வரும் நிதியை அப்படியே நற்பணிகளுக்குத் திருப்பிவிட வசதியாக இருந்தது.’’

‘‘இந்த விளம்பரப் பட வருவாயை ஒரு தொண்டு நிறுவனத்துக்குக் கொடுத்ததாகச் செய்தி வந்தது. ஆனால், அதை நீங்கள் மறுக்கவும் இல்லை; உறுதிப்படுத்தவும் இல்லை.’’

‘‘கொடுத்ததே தெரியாமல் பண்ணுவதுதான் பெரிய விஷயம். நமக்கு வேலை நடக்கணும்... அவ்வளவுதான். அந்தப் பணம் உதவிக்குத்தான்  போய்க்கொண்டிருக்கிறது. ‘பெற்றால்தான் பிள்ளையா’... இது, நானும் தினத்தந்தி அதிபர் அவர்களும் சேர்ந்து நடத்தும் தொண்டு நிறுவனம். இதில் தமிழக மக்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். இதைச் சொல்லவே எங்களுக்கு சங்கோஜமாக இருக்கிறது. யார் செய்வது என்பது தெரியாமல் இருப்பது நல்லது என நினைத்தேன். என் முகப்பு பெரிது என்பதால், பப்ளிசிட்டிக்கு அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இல்லை என்றால், அதுகூடத் தெரிந்திருக்காது. 7,000 குழந்தை களை நாங்கள் தத்தெடுத்தோம். அத்தனை பேருக்கும் எய்ட்ஸ் உள்ளது. அவர்களுடைய எஞ்சிய நாட்கள் எத்தனை எனத் தெரியாது. இப்போது அந்தப் பிள்ளைகளுக்கு கல்லூரி செல்லும் வயது வந்துவிட்டது. எங்களுக்கு இப்போது அதிகப் பதற்றம்... காரணம், அதில் சிலருக்குக் கல்யாண வயதும் வந்துவிட்டது; குடும்பம் பெரிதாகி விட்டது. ஆனால் ஒரு விஷயம், இன்று அந்தப் பிள்ளைகள் உள்பட யாருமே ஏழை கிடையாது. அப்படித்தான் நாங்கள் நினைக்கிறோம். பேரை எல்லாம் விளம்பரப்படுத்தவோ, போட்டோ எடுத்துக்கொள்ளவோ முடியாது. அதனால் தான் வாங்கிய காசு, செய்த செலவை மட்டும் விளம்பரப்படுத்திவருகிறோம்.’’

‘‘அந்த மாதிரியான தேவைகளுக்குத் தொடர்ந்து விளம்பரங்களில் நடிப்பீர்களா?’’

‘‘ ‘சினிமா மற்றும் விளம்பரப் படங்களில் நடிக்கும் கமல்ஹாசன்’ என வந்துவிடக் கூடாது. அதனால் தேவைப்பட்டால் நடிப்பேன். இங்கே நற்சேவை செய்துவிட்டு அங்கு சிகரெட் விளம்பரம் பண்ணினால் அர்த்தமே கிடையாது. ஒருவிதமான கேன்சரைப் போக்க, இன்னொரு தீரா நோய்க்கு வழிவகுக்க முடியாதே! விற்கும் பண்டம் எது என்பதும் முக்கியம்.’’

‘‘ ‘ஸ்ருதிக்கு 30. நமக்கு 60...’ இப்படி இந்த டிராவலை நீங்கள் நினைத்துப்பார்ப்பது உண்டா?’’

‘‘சிலர் வயதாகிவிட்டது என நினைப்பார்கள்; சில பேர் வயதுக்குவந்துவிட்டோம் என நினைப்பார்கள். நான் இப்போது வயதுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன்!’’