Published:Updated:

“எங்கேயும் நிம்மதியா போக முடியலை!”

“எங்கேயும் நிம்மதியா போக முடியலை!”
News
“எங்கேயும் நிம்மதியா போக முடியலை!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: எம்.உசேன்

`பாப் கட்' வெட்டி ஹைஃபை லுக்கில் இருக்கிறார் இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன். “என்ன மேடம், திடீர்னு இப்படி ஒரு கெட்டப். இது எந்தப் படத்துக்கு?” என்று கேட்டால், ‘`உங்க பேட்டி முடியும்போது இதுக்கான பதிலைச் சொல்றேன். கொஞ்ச நேரம் சஸ்பென்ஸ், ப்ளீஸ்..!’’ எனச் சிரிக்கிறார்.

`` ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு வயசான ஒரு பாட்டி வந்திருந்தாங்க. அவங்க கதையைக் கேட்டதும், எனக்குள்ள பல டன் பாசிட்டிவ் எனர்ஜி வந்த மாதிரி இருந்தது. `இதையே படமா எடுக்கலாம்'னு ஸ்கிரிப்ட் எழுதினேன். அதுதான் `அம்மணி'. இந்தப் படத்தை நான் இயக்கி நடிச்சிருக்கேன். 82 வயசுல உள்ள ஒரு பாட்டி, ஓய்வுபெறும் நிலையில் இருக்கும் 57 வயசு அம்மா - இந்த ரெண்டு கதா பாத்திரங்கள்தான் கதைக்கு உயிரே.

 ‘அம்மணி’, ரொம்பச் சின்ன பட்ஜெட் படம். வியாசர்பாடியில் ஒரு மாசம் ஷூட்டிங். கொடுத்த பட்ஜெட்ல இருந்து 20 சதவிகிதம் கம்மியாகவே படத்தை எடுத்துட்டேன். படத்தைப் பார்த்த எல்லாருமே `ரொம்ப நல்லா இருக்கு'னு பாராட்டினாங்க. படத்தின் கடைசி 20 நிமிடக் காட்சிகள், ரசிகர்களை மிரளவைக்கும். இது சத்தியம்.”

“மூன்று படங்கள் இயக்கி முடிச்சிட்டீங்க. ஒரு இயக்குநரா என்ன கத்துக்கிட்டீங்க?”

“சினிமாவுல கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு. முன்னாடிலாம் படம் இயக்கும்போது `நாம எதுவும் தப்பா எடுக்கிறோமோ?'னு தோணும். ஆனா, இப்ப மலையாளத்துல வினித் நிவாசன் இயக்கும் படத்துக்கு ஷூட்டிங் போனபோதுதான் `அட, நாமும் இப்படித்தானே இயக்குறோம்’னு எனக்கு நம்பிக்கை வந்தது.

“எங்கேயும் நிம்மதியா போக முடியலை!”

அப்புறம் இயக்குநர் வெற்றிமாறன் ‘Save the cat’னு ஒரு புக் கொடுத்து, ‘இந்த புக்கைப் படிங்க. சினிமாவையே வேறவிதமா பார்ப்பீங்க’னு சொன்னார். அவர் சொன்னது ரொம்ப கரெக்ட். அடுத்துவரும் என் படங்கள் இன்னும் வேற லெவல்ல இருக்கும்.”

 “பெண் இயக்குநர்கள் படம் பண்ணும்போது என்ன மாதிரியான சவால்களைச் சந்திக்கவேண்டி இருக்கு?''

“ஆபீஸ் போயிட்டு வரும் பெண்களுக்கே, தங்களுடைய பசங்களை சரியா கவனிக்க முடியல; குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியலைனு வருத்தம் இருக்கும். இதுல சினிமான்னா சொல்லவே வேண்டாம். நம் நேரமும் உழைப்பும் இன்னும் அதிகமா தேவைப்படும். இந்தத் தடைகளை எல்லாம் தாண்டித்தான், தமிழ் சினிமாவில் சுஹாசினி, ரேவதி, மதுமிதா, நந்தினினு பல இயக்குநர்கள் ஜெயிச்சு இருக்காங்க.''

“நிறையப் படங்கள் நடிச்சிட்டு இருக்கீங்க. என்ன மாதிரியான ரோல் உங்களுக்கு வருகிறது?”

``ஃபிரேமுக்கு முன்னாடி சும்மா நிற்பது, வந்தவங்களுக்கு காபி கொண்டுவந்து கொடுக் கிறதுனு பழைய ரோல்கள்தான் வருது. ஆனா, ‘யுத்தம் செய்’ படத்துல நல்ல ரோல். அதுக்காக மொட்டை போட்டு நடிச்சேன். இப்ப அந்த மாதிரி தமிழ்ல கேரக்டர்கள் வர்றதே இல்லை. மலையாளத்துல நிறைய நல்ல கேரக்டர் வருது. இப்ப நிவின் பாலி நடிக்கும் ‘ஜேக்கோப்னிட்ட ஸ்வர்க்கராஜ்ஜியம்’ படத்துல சூப்பர் ரோல் பண்ணியிருக்கேன்.”

“`சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிதான் உங்களை மீடியா வெளிச்சத்துக்குள் கொண்டுவந்தது. நிகழ்ச்சியைவிட்டு ஏன் வெளியே வந்தீர்கள்?”

“அந்த நிகழ்ச்சி, எனக்குள் நிறைய மாற்றங் களைக் கொண்டுவந்தது. பலரது வாழ்க்கையில் நடந்த சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, ஒருகட்டத்துல என்னையே அது முடக்கிப் போட்டது. எங்கேயும் நிம்மதியா போக முடியலை, சினிமா பார்க்க முடியலை. மனசுக்குள்ள யாராவது ஒருத்தருடைய கதை எப்பவும் ஓடிக்கிட்டே இருந்தது. `இதுல இருந்து வெளியில வரணும், ஒரு பிரேக் எடுக்கணும்'னு தோணிச்சு. அதுதான் வெளியே வந்தேன்.”

“எங்கேயும் நிம்மதியா போக முடியலை!”

“மீண்டும் இதேபோன்ற ஒரு நிகழ்ச்சி நடத்துவீர்களா?”

“நிச்சயமா நடத்துவேன். அப்படி நடத்தினால், அந்த நிகழ்ச்சி முடிந்து, அதன் பிறகு அவங்க வாழ்க்கை எப்படி மாறுதுங்கிறதையும் காமிக்கணும். அப்பதான் மக்களுக்கும் தெரியும்; நிகழ்ச்சியிலும் ஒரு அப்டேஷன் இருக்கும். இதுக்கு எந்த சேனல் கூப்பிட்டாலும் நான் மீண்டும் நிகழ்ச்சி நடத்த ரெடி... விஜய் டி.வி தவிர.”

“`என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?’னு சொல்லி கிண்டல்...

கேள்வியை முடிக்கும் முன்னரே குறுக்கிடுகிறார்...

“அதைப் பற்றி இனி பேசவே வேண்டாம்னு நினைக்கிறேன். அதுக்காக இனி நேரம் செலவழித்தால் நாம முட்டாள் ஆகிடுவோம். `என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?’னு என்னைக் காலாய்க்கவோ, திட்டவோ என்ன வேணும்னாலும் பண்ணுங்க. ஆனா, நான் அதை எல்லாம் சட்டையே செய்யப்போறது இல்லை. சரி விடுங்க. பேட்டி முடியப்போகுது... நானே `பாப் கட்'டுக்கான காரணத்தைச் சொல்லிடுறேன். முடிவெட்டப் போன கடையில் ‘முடியைக் கொஞ்சம் கம்மியா வெட்டுங்கப்பா’னு சொன்னேன். கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள பட்டுனு இப்படி வெட்டிட்டார். வேற வழி இல்லை. முடிதானே, வளர்ந்திடப்போகுதுனு நானும் விட்டுட்டேன். இந்த கெட்டப்பும் ஓ.கே-தானே?'' என இடைவெளி இல்லாமல் சிரிக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.