Published:Updated:

"வில்லனாக நடிக்க ஆசை!”

 "வில்லனாக நடிக்க ஆசை!”
News
"வில்லனாக நடிக்க ஆசை!”

ம.கா.செந்தில்குமார், பா.ஜான்ஸன், படம்: கே.ராஜசேகரன்

‘‘‘இது அடுத்த படத்துக்கான கெட்டப்பா?’னு கேட்கிற மீடியா மக்கள்கிட்ட ‘ஆமாம், அடுத்து வர்ற ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’வுல போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேரக்டர். அதுக்காகத்தான்’னு சொல்லிச் சமாளிக்கிறேன். ஆனால், இதில் உண்மை இல்லை. ஓவர் சந்தோஷத்துல, வழக்கத்தைவிட கொஞ்சம் ஜாஸ்தியா சாப்பிடுறேன். அதான் வெயிட் போடக் காரணம்'’ - கலகலவெனச் சிரிக்கிறார் நிவின் பாலி.

சென்னையில் 300-வது நாளை நோக்கி ‘பிரேமம்’ ஓடிக்கொண்டிருக்கிறது. ‘மலரா, செலினா, மேரியா... இதில் யாருக்கு மாஸ் அதிகம்?’ என, அந்தப் பட ஹீரோயின்ஸ் பெயரில் ஆன்லைனில் அலப்பரை செய்கிறார்கள் இளைஞர்கள். இன்னொரு டீம், வேட்டி கட்டுவதை ஃபேஷனாக்கி, குறுந்தாடி கெட்டப்புக்கு மாறிச் சுற்றுகிறது. இப்படி தென் இந்தியா முழுவதும் ட்ரெண்டில் இருக்கும் ‘பிரேமம்' நாயகன் நிவின் பாலியைச் சந்தித்தேன்.

‘‘ ‘பிரேமம்’ படத்துக்கு முன், ‘பிரேமம்’ படத்துக்குப் பின்... எப்படி இருக்கிறார் நிவின் பாலி?’’

‘‘தமிழ், கன்னடம், தெலுங்குனு எங்கே  போனாலும் செம ரெஸ்பான்ஸ். மெசேஜ், போன்கால், வாட்ஸ்அப்னு விரட்டுறாங்க. கடந்த 275 நாட்களா அன்பையும் வாழ்த்துக்களையும் வாங்குறதையே முழுநேர வேலையா பண்ணிட்டு இருக்கேன். போன முறை சென்னை வந்தப்ப, `சத்யம்' தியேட்டர்ல ‘பிரேமம்’ பார்த்தேன். ஹவுஸ்ஃபுல். நான் பார்த்தது ரிலீஸான 225-வது நாளில். தமிழில் டப் பண்ணப்படாத ஒரு நேரடி மலையாளப் படத்துக்கு, கேரளாவில் என்ன ரெஸ்பான்ஸ் இருக்குமோ, அதைவிட அதிகமான ரெஸ்பான்ஸ். அந்த காலேஜ் டான்ஸ் பாட்டு வரும்போது ஸ்கிரீனுக்கு முன்னாடி போய் நின்னு டான்ஸ் ஆடுறாங்க. அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்.’’

 "வில்லனாக நடிக்க ஆசை!”

‘‘இந்த அளவுக்குப் பெரிய வெற்றியை எதிர்பார்த்தீர்களா?’’

‘‘சத்தியமா இல்லை. இப்படி ஒரு ஃபீல்குட் மூவியா வரும்; இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும்னு எதிர்பார்க்கலை. இதில் வரும் காதல்களை எல்லாரும் தங்களோடு ரிலேட் பண்ணவைத்ததுதான் இந்த வெற்றிக்குக் காரணம். அல்போன்ஸ் இந்த ஸ்கிரிப்ட்டை என்கிட்ட முதல்ல சொல்லும்போது, `இந்தப் படம் பண்ணணுமா?'னுகூட யோசிச்சேன். காரணம், நான் ஏற்கெனவே வரிசையா பண்ணின ரொமான்டிக் படங்கள். ‘இதை நான் பண்ணினால் வரிசையா ரொமான்டிக் மூவிஸ் பண்ணிட்டு இருக்கிற ஒரு ஹீரோட்ட இருந்து இன்னொரு ரொமான்டிக் மூவினுதான் நினைப்பாங்க. ஃப்ரெஷ்ஷா இருக்காது. அதனால நீ வேற ஒரு ஹீரோவுடன் பண்ணு. ஃப்ரெஷ்ஷா இருக்கும்’னேன். ‘இல்லடா இது ரொமான்டிக்தான். ஆனால், என் ட்ரீட்மென்ட் நிச்சயம் வித்தியாசமா இருக்கும். என்னை நம்பு’னான். நம்பினேன். இப்போ ஹிட் ஆகிருச்சு.’’

‘‘படத்தில் உங்களுக்கு மூன்று ஹீரோயின்கள். அவர்களில் யார் உங்கள் ஃபேவரிட்?’’

‘‘எனக்கு மட்டும் இல்லை, எல்லாருக்கும் மலர்தான். ஸ்கிரிப்ட்டைப் படிக்கும்போதே, ‘இந்த மலர் கேரக்டர் பண்ணப்போறது யாரு?’னுதான் கேட்டேன். அப்ப ஆடிஷன்ல எடுத்த கிளிப்பிங்ஸை அல்போன்ஸ் காட்டினான். ‘டேய்... என்னடா முகம் எல்லாம் பிம்பில்ஸா இருக்கு!’னேன். ‘ஒரு பிரச்னையும் இல்லை. இதுக்கு அப்புறம் இந்த பிம்பில்ஸ்கூட ஃபேஷனாயிடும். அவங்க சிரிக்கும்போதும் பேசும்போதும் இந்த கேரக்டருக்கு ஒரு லைஃப் இருக்கு. அதுக்கு இவங்க தேவை’னு சொன்னான். அவன் சொன்னது நடந்திருச்சு.’’

 "வில்லனாக நடிக்க ஆசை!”

`` ` ‘ஆட்டோகிராஃப்' படத்தின் ஜாலியான வெர்ஷன்தான் ‘பிரேமம்’ ' என ஒரு விமர்சனம் வந்ததே?’’

‘‘ `ஆட்டோகிராஃப்’, `அட்டகத்தி’ இந்த ரெண்டு படத்தின் காக்டெயில்தான் `பிரேமம்'னு சொன்னதை விட்டுட்டீங்களே. நான் `ஆட்டோகிராஃப்' பார்த்திருக்கேன். `அட்டகத்தி' பார்க்கலை. ‘க்ளைமாக்ஸ்ல என் கல்யாணத்துக்கு மலர் வர்ற எபிசோடை `ஆட்டோகிராஃப்' உடன் கம்பேர் பண்ணுவாங்களேடா’னு அல்போன்ஸ்கிட்ட கேட்டேன். ஆனால் அல்போன்ஸ் ரொம்ப சிம்பிளா, ‘ `ஆட்டோகிராஃப்' க்ளைமாக்ஸ்ல ஹீரோ கல்யாணத்துக்கு எல்லா ஹீரோயின்ஸும் வந்திருப்பாங்க. இதுல எல்லாரும் வரலை, மலர் மட்டும்தான். உனக்கு இப்ப ஓ.கே-வா?’னு சிரிச்சிட்டு ஷூட் பண்ண ஆரம்பிச்சிட்டான். ஏன்னா, அவன் அந்த அளவுக்கு தன் ஸ்கிரிப்ட்ல நம்பிக்கையா இருந்தான். அந்த நம்பிக்கையும் எங்களுக்குள் இருந்த அந்த நட்பும்தான் ‘பிரேமம்’ வெற்றிக்கான காரணம்.’’

 "வில்லனாக நடிக்க ஆசை!”

‘‘தமிழ் சினிமா பிரபலங்கள் யார் எல்லாம் வாழ்த்தினார்கள்?’’

``விஜய் சார் பேசினார். ‘ரொம்ப சூப்பரா பண்ணிட்டு இருக்கீங்க. வித்தியாசமான படம். சீக்கிரமே சந்திப்போம்’னார். மணி சாரைச் சந்திச்சேன். ‘நல்லா பண்ணியிருக்கீங்க. சில படங்களுக்குத்தான் இப்படி எல்லாமே சேர்ந்து அமையும். கீப் அப் த குட் வொர்க்’னார். நாம வியந்து பார்க்கிற மனிதர்கள்கிட்ட இருந்து இப்படியான வாழ்த்துக்கள் வர்றப்ப அவ்வளவு சந்தோஷம். செல்வராகவன் சார், சிவகார்த்திகேயன், பாபி, ஸ்ருதிஹாசன்னு தினமும் பாராட்டு. ஷங்கர் சார் `பிரேமம்' பற்றி ட்வீட் பண்ணியிருந்தார். ‘நன்றி’ங்கிறதைத் தவிர வேற ஒண்ணும் சொல்லத் தெரியலை.’’

‘‘ ‘தட்டத்தின் மறயத்து’, ‘பெங்களூர் டேஸ்’ என உங்க படங்கள் தொடர்ந்து தமிழில் ரீமேக் ஆகின்றன. ‘பிரேம’த்தை இங்கே ரீமேக் செய்தால், உங்கள் கேரக்டருக்கு யார் சரியாக இருப்பார்?’’

‘‘ஐயோ, இங்கதான் நிறைய ஆர்ட்டிஸ்ட் இருக்காங்களே. தனுஷ், விஜய் சேதுபதி, பாபினு எல்லாருக்குமே... ஆனா,  நானே திரும்பவும் பண்ண மாட்டேன். எனக்கு நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்கத்தான் ஆர்வம். இப்ப தமிழ்ல ஒரு படம் கமிட் ஆகியிருக்கேன். கௌதம் ராமச்சந்திரன்னு ராஜீவ் மேனன் சாரிடம் இருந்தவர் இயக்குறார். ஏப்ரல் மாசம் ஷூட்டிங் போறோம்.’’

‘‘தமிழில் இருந்து மலையாளத்தில் ஒரு படத்தை ரீமேக் செய்தால் எதைச் செய்வீர்கள்... அதில் எந்த கேரக்டரில் நடிப்பீர்கள்?’’

‘‘படம், ‘ஜிகர்தண்டா’. அதில் பாபி கேரக்டர். அதேபோல ‘சூது கவ்வும்’ ரொம்பப் பிடிச்சது. தவிர எனக்கு ஒரு வில்லனா நடிக்கணும்னு ஆசை. அதுவும் நல்ல இயக்குநர் படத்துல வில்லனா வரணும்.’’

‘‘மலையாளத்தில் நீங்களே தயாரித்து நடிக்கும் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’ படத்தில் என்ன ஸ்பெஷல்?’’

‘‘எனக்கு தயாரிப்புல ஆர்வம். ஆனால் நடிப்பு, தயாரிப்பு ரெண்டையும் பேலன்ஸ் பண்றது ரொம்பக் கஷ்டம். நடிகர்கள் கண்டிப்பா ஒரு படத்தையாவது தயாரிக்கணும். ஏன்னா இப்ப இந்தப் படத்தை முடிச்சப்ப, சினிமாவில் எனக்கு ஒரு கன்ட்ரோல் வந்தமாதிரி ஃபீல். ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’ வழக்கமான போலீஸ் கதை கிடையாது. ரியலிஸ்ட்டிக்கான ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லைஃப்ல என்ன நடந்ததுனு சொல்ற படம். ரியல் லைஃப்ல போலீஸ் யாரும் சூப்பர் ஹீரோ கிடையாது. உயர் அதிகாரிகள், தினமும் வழக்குகளை ஃபாலோ பண்ணுவதுன்னு அழுத்தங்களோடவே வாழ்றவங்க. இதுக்கு இடையில் மனைவி, மக்கள்னு யதார்த்தமான மனிதர்கள். அந்த யதார்த்த ஏரியாவைப் பேசுற படம். இதைப் பார்த்துட்டு, ‘சரியான போலீஸ் படம் எடுத்திருக்காங்க’னு சொன்னா சந்தோஷப்படுவேன். `பிரேமம்’ல மேரியோட ஃப்ரெண்ட் கேரக்டர்ல வந்த ஒல்லிப் பையன் அல்தாஃப் என் நண்பன். அடுத்து அவர் டைரக்ட் பண்ற படத்தைத் தயாரிக்கிறேன்.’’

‘‘இயக்குநர்கள், உங்களை மாதிரியான இளம் நடிகர்கள்னு மலையாளத்தில் ஒரு டீம் வந்து அனைத்தையும் புதிதாகப் பண்ண ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்களுக்குள் நட்பு எப்படி இருக்கிறது?’’

‘‘எனக்கு ஒரு நல்ல மல்ட்டி ஸ்டாரர் ஸ்கிரிப்ட் வந்தால், ‘இப்படி ஒரு ஸ்கிரிப்ட் வந்திருக்கு. ரொம்ப நல்லா இருக்கு கேட்டுப்பார்’னு எங்களுக்குள் ஷேர் பண்ணிக்கிறோம். ஒரு படம் ஃபினிஷ் ஆகும்போது, ‘படம் முடிச்சிருக்கோம். பார்த்துட்டு மிஸ்டேக்ஸ் இருந்தா சொல்லு’னு மத்த ஹீரோக்களைக் கூப்பிடுறோம். அதேபோல ஒரு இயக்குநர்கிட்ட ஸ்கிரிப்ட் இருந்தா, அதை இன்னொரு இயக்குநரே தயாரிக்க வர்றார். அந்தப் படத்தை லிஃப்ட் பண்ணணும்னா இன்னொரு இயக்குநரே அதுல ஒரு கேரக்டரா நடிச்சுத்தரவும் முன்வர்றார். இப்படி அன்போட, ஆரோக்கியமான போட்டியோட எங்க நட்பு சூப்பரா இருக்கு.’’

‘‘மற்ற மலையாள ஹீரோக்கள் வருஷத்துக்கு மூன்று நான்கு படங்கள் பண்ணும்போது நீங்க மட்டும் வருஷத்துக்கு ஒரு படம் பண்ண என்ன காரணம்?’’

‘‘ஒரு படத்தை முடிச்சு ரிலீஸ் பண்ணிட்டு அதோட ரிசல்ட் தெரிஞ்ச பிறகு அடுத்த படம் பண்றதுதான் என் பாலிசி. அதுக்குக் காரணம் என்னோட ஒவ்வொரு படத்தோடயும் நான் அட்டாச் ஆகிடுவேன். என் சீனியர்ஸ், ‘அட்டாச்மென்ட் இருக்கணும்தான். ஆனால் படத்தோட ரொம்ப அட்டாச் ஆகுறது நல்லது இல்லை. படம் தோல்வியடையும்போது அந்த வருத்தத்துல இருந்து மீண்டு வர்றது ரொம்பக் கஷ்டமா இருக்கும். நிறைய சினிமா பண்ணு. தொடர்ந்து நிறையப் படங்கள் பண்றப்ப ஏகப்பட்ட கதைகளின் கலாசாரங்களைக் கடந்து போக வாய்ப்பு கிடைக்கும். இப்படியான கதைகள்தான் ஒரு நடிகனை சுத்திகரிப்பு செய்யும்’னு நிறைய அட்வைஸ் பண்ணி இருக்காங்க. அவங்க சொல்றதும் உண்மைதான். ஒரு படம்னா அந்த கேரக்டருக்காக மெனக்கெடுறது, ஸ்கிரிப்ட்ல இன்வால்வ் ஆகிப் பண்றதுனு இதுவும் உண்மைதான். எப்படிப் பண்ணினாலும் சமரசம் இல்லாம படம் பண்ணணும். அவ்ளோதான் சிம்பிள்.’’

‘‘சென்னை நாட்கள் எப்படி இருக்கு?’’

‘‘எப்ப சென்னை வந்தாலும் அவ்வளவு சந்தோஷமா உணர்வேன். ஏன்னா, இங்க அப்படி ஒரு பாசிட்டிவ் வைப் இருக்கு. நான் சென்னை கிளம்பும்போது இருக்கிற ஆர்வத்தைப் பார்த்துட்டு, ‘ஏன் சென்னைன்னா மட்டும் இவ்வளவு ஆர்வமா கிளம்புறீங்க. என்ன விஷயம்... இடிக்குதே?’னு என் மனைவி கிண்டல் பண்ணுவாங்க. ‘வேறொண்ணும் இல்லை. எனக்கு தமிழ்நாடு ரொம்பப் பிடிக்கும்’ம்பேன். யெஸ் ஐ லவ் சென்னை.’’

 "வில்லனாக நடிக்க ஆசை!”

‘‘உங்க சினிமா ரொமான்ஸ் ஜோடிகள்ல உங்க மனைவிக்கு பிடிச்சவங்க யார் யார்?’’

‘‘நஸ்ரியா, `மலர்’ சாய் பல்லவி, மஞ்சிமா... இந்த மூணு பேரையும் பிடிக்கும். ஃபேமிலியாவே அவங்களுக்கு இந்த மூணு பேரையும் நல்லா தெரியும்.’’

 "வில்லனாக நடிக்க ஆசை!”

‘‘வீட்ல என்ன சொல்றாங்க. உங்க லவ் லைஃப் எப்படி இருக்கு?’’

‘‘மனைவி ரிணா ஜாய். நாங்க ரெண்டு பேரும் காலேஜ்ல ஒண்ணா படிச்சோம். நண்பர்களா இருந்து காதலர்கள் ஆனோம். அவங்க ரொம்ப மெச்சூர்டான பொண்ணு. சினிமாவுல பார்க்கும் காதல் எபிசோட்ஸ் எதுவும் எங்க லவ்ல கிடையாது. காதலைக்கூட புரபோஸ் பண்ணினது இல்லை. ‘ஐ லவ் யூ’ சொல்றதுல தொடங்கி சுவர் தாண்டிக் குதிச்சதுனு எந்தச் சாகசமும் பண்ணலை. `காதல் காட்சிகள்ல ஓவரா நடிக்க வேண்டாம். லிமிட்டுக்குள்ள நடிங்க. இல்லைனா வீட்டுக்குள்ள நுழையறது சிரமம். பாத்துக்கங்க’ம்பாங்க. நான் அப்படி ஒண்ணும் இன்டென்ஸ் ரொமான்ஸ் பண்றது இல்லை. அதனால அவங்ககிட்ட தப்பிக்கிறேன். இப்ப ‘தாவீத்’னு மூன்றரை வயசுல பையன் இருக்கான். நாங்க `தாதா'னு கூப்பிடுவோம். ‘டேவிட்’டின் மலையாள அர்த்தம்தான் தாவீத். வெரி நாட்டி பாய். அவன்கூட விளையாடுறதுல நேரம் போறதே தெரியாது. ரொம்ப ஹேப்பியா இருக்கோம்.’'