Published:Updated:

“பெண் இயக்குநர்கள் போராடணும்!”

“பெண் இயக்குநர்கள் போராடணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பெண் இயக்குநர்கள் போராடணும்!”

பா.ஜான்ஸன்

```பத்து வருஷத்தில் இதுமாதிரி ஒரு கம்ப்ளீட் ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் வந்தது இல்லை’னு ராஜ்குமார் ஹிரானி சார் பாராட்டினார். இன்னும் நிறையப் பாராட்டுக்கள் வந்துக்கிட்டே இருக்கு. ‘துரோகி’க்குப் பிறகு நான் உழைச்ச ஆறு வருஷங்கள் வீண்போகலைனு காட்டியிருக்கு என் ‘இறுதிச்சுற்று’ வெற்றி” என்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.


``பெண் இயக்குநர்கள்னா சாஃப்ட்டா லவ், காமெடினு லைட்டான சப்ஜெக்ட்லதான் படம் எடுப்பாங்கனு ஒரு கருத்து இருக்கு. ஆனா, உங்க ரெண்டு படங்களுமே ஆக்‌ஷன் களம். எப்படி?''

``நான் யோசிக்கிற விஷயத்தை ஒரு ஆணாவோ, பெண்ணாவோ யோசிக்கிறது இல்லை. ஒரு இயக்குநரா மட்டும்தான் யோசிப்பேன். இது பண்ணா நல்லாயிருக்கும், அது பண்ணா நல்லாயிருக்கும்னு யோசிச்சுப் பண்ணா,  கண்டிப்பா அது வேலைக்கு ஆகாது. எனக்கு என்ன பிடிக்கும்னு பார்த்து அதைப் பண்ணாதான் நல்லாயிருக்கும். எனக்குப் பிடிச்ச விஷயம் ஆக்‌ஷன்... அவ்வளவுதான்.''

“பெண் இயக்குநர்கள் போராடணும்!”

`` ‘இறுதிச்சுற்று’ படத்துக்கான லைன் எப்படிக் கிடைச்சது?''

``என்கிட்ட ஒரு ஸ்போர்ட் ஸ்கிரிப்ட் 15 வருஷம் முன்னாடியே இருந்தது. 2010-ல `துரோகி' படம் ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு, அந்தப் பழைய ஸ்கிரிப்ட் எடுத்துப் படிச்சேன். நிறைய ஸ்போர்ட்ஸ் க்ளிப்பிங்ஸ் பார்த்தேன். அப்பதான் சேரிகள்ல இருந்து குத்துச்சண்டை விளையாட்டுக்கு சின்னச்சின்னப் பொண்ணுங்களை அவங்க அப்பா அம்மாவே அனுப்புறாங்கனு தெரிஞ்சது. ஏன்னா, அதுக்கு அதிகம் செலவு பண்ணத் தேவை இல்லை. 250 ரூபாய்க்கு கிளவ்ஸ் வாங்கினாப் போதும். ஒரு போட்டியில ஜெயிச்சா, ஏதாவது ஒரு அரசாங்க வேலைக்குப் போயிடலாம்னு சொல்லிக் கலந்துக்கிற இவங்களைப்போல உள்ளவங்கதான் அதிகம். அவங்களைத் தேடிப் போய்ப் பார்த்தா, பல பேர், உள் அரசியலால் எப்படி எல்லாம் பாதிக்கப்படுறாங்கனு  தெரிஞ்சது. பாக்ஸிங் சிஸ்டம் என்னன்னா, ஒருத்தர் ஜெயிக்கிறார்னா அடுத்த லெவல் போறதுக்கு அந்த கோச், அப்புறம் அவருக்கு மேல இருக்கும் அசோசியேஷன் சொன்னாதான் முடியும். இவங்க எவ்வளவு திறமையானவங்களா இருந்தாலும், ஒரு நல்ல கோச் கிடைச்சாதான் அடுத்த லெவல் போக முடியும். இல்லைன்னா, பணத்தையோ,  இல்ல வேற மாதிரி கவனிப்பையோ எதிர்பார்க்கிறாங்க. வலியைத் தேடிப்போய் வாங்கிக்கிற விளையாட்டு இது. அதனாலதான்  பணக்காரங்க இதில் அதிகமா கலந்துக்கிறது இல்லை.''

``ராஜ்குமார் ஹிரானி இந்தப் படத்துக்குள் எப்படி வந்தார்?''

``மாதவனும் ஹிரானி சாரும் பக்கத்துப் பக்கத்து வீடு. படம் முழுக்க எடுத்து முடிச்சிட்டு ஹிரானி சார்கிட்ட காமிச்சேன். ‘ஐ லவ் த ஃபிலிம். இந்தப் படத்தை நான் வெளியே கொண்டு போய்க் காட்டுறேன்’னு சொன்னார். 600 கோடி ரூபாய் வசூல் பண்ணின படத்தின் இயக்குநர், நம் படத்தைப் பார்த்து, அழுது, வியந்து `இந்தப் படத்துல என் பங்கும் இருக்கும்'னு சொல்றார்னா, அது எவ்வளவு பெரிய ப்ளஸிங். நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்''.

``பாக்ஸிங் மாதிரி, சினிமாவுக்கும் அதிகமா பெண் இயக்குநர்கள் வர்றது இல்லையே?''

``2007-ல நான் மணிரத்னம் சார்கிட்ட இருந்து வெளியே வந்தேன். ஒன்பது வருஷங்கள் ஆச்சு, ரெண்டு படங்கள்தான் பண்ணியிருக்கேன். ஒரு வாய்ப்பு கிடைக்கிறதுக்கு, படம் எடுக்கிறதுக்கு, அதை ரிலீஸ் பண்றதுக்குனு எல்லாமே இங்கே பிரச்னை. இது ஆண்-பெண் பாகுபாடு இல்லாம வர்ற பிரச்னைகள். எதிர்த்துப் போராடுறவங்க ஜெயிக்கிறாங்க. இந்தக் குணம் உள்ள ஆண்-பெண் நிச்சயமா இங்கே ஜெயிக்க முடியும். ஆனா, அந்தப் போராட்டத்துக்கு பெண்கள் தயாரா இருக்கணும்!''