Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 7

குறும்புக்காரன் டைரி - 7
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 7

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 7

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 7
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 7

எட்டாம் வகுப்புப் படிக்கும் கிஷோர், வருங்கால வி.வி.ஐ.பி. தன்னுடைய குழந்தைப் பருவ வாழ்க்கையை வருங்காலத் தலைமுறைகள் தெரிஞ்சுக்கிறதுக்காக, டைரி எழுதறான். கிஷோரின் இந்த மகத்தான பணி, இதோ தொடருது...

ந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகியும், இன்னிக்கும் ஸ்கூல்ல பசங்க எல்லாம் சிரிக்கிறாங்க. ஆறாம் வகுப்பு சின்னப் பசங்ககூட என்னைப் பார்த்து சிரிக்கிறதுதான் பப்பி ஷேமா இருக்கு. எல்லாம் இந்த ஜெகன் பையனால் வந்தது.

'ஸ்கூல் ஆண்டு விழாவுல ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஸ்கிரிப்ட் பண்ணலாமா கிஷோர்?’னு அவன்தான் கூப்பிட்டான்.

சரி, நாமும் ஸ்கூல் பிரபலம் ஆகலாமேனு சம்மதிச்சேன். கட்டபொம்மன் நாடகம். நான்தான் கட்டபொம்மன், ஜாக்சன் துரையா, ஜெகன். டயலாக் எல்லாம் எழுதி, விடிய விடிய பிராக்டிஸ் பண்ணினோம்.

குறும்புக்காரன் டைரி - 7

ஆண்டு விழா அன்னிக்கி முதல் ஆளா ஸ்கூலுக்கு வந்து வெயிட் பண்ணினா, இந்த ஜெகன் பய காய்ச்சல்னு லீவு போட்டுட்டான். விழாவில் பெர்ஃபார்ம் பண்றவங்க எல்லாம் மேடைக்குப் பின்னாடி இருந்தோம்.                  கோ - ஆர்டினேட்டர் மிஸ்கிட்டே போய் நின்னேன்.

'கடைசி நிமிஷத்துல வந்து சொல்றியே. அதெல்லாம் எனக்குத் தெரியாது. வேற யாரையாவது ஜாக்சன் துரையா ரெடி பண்ணிட்டு வா’னு டென்ஷனா கத்தினாங்க.

புரியாம முழிச்சுக்கிட்டு இருந்தப்போ, சேட்டு வேஷத்துல இருந்த ராஜேஷ், 'அவ்வளவுதானே கிஷோர், ஜாக்சன் துரை டயலாக் எனக்கு அத்துபடி. டிரெஸ் எல்லாம் இங்கேதானே இருக்கு, என் புரோகிராம் முடிஞ்சதும் நானே ஜாக்சன் துரை வேஷத்துல நடிக்கிறேன்’னு சொல்லி, என் வயித்துல கார்ன் ஃப்ளாக்ஸ் வார்த்தான்.

அதுக்கு அப்புறம் நடந்ததுதான் வேடிக்கையே. ரெண்டு பேரும் ஸ்டேஜ் ஏறிட்டோம். கட்டபொம்மன் மாதிரி வீரத்தோடு டயலாக் பேசிட்டு நிமிர்ந்தேன். ராஜேஷ் பேச  வேண்டிய நேரம். அந்தப் பய, போன நாடகத்துல நடிச்ச சேட்டு கேரக்டரின் ஹாங்ஓவர்ல, 'அரேய் கட்டபொம்மா, இப்போ, கடைசியா நிங்கள் என்ன சொல்றான். வரி டியூ கட்றியா மாட்டியா?’னு கன்னாபின்னா தமிழில் பேச ஆரம்பிக்க,  மொத்த ஆடியன்ஸும் சிரிச்சுட்டாங்க. அந்தப் பயத்தில் எனக்கும் டயலாக் மறந்துபோக, ஸ்கிரீனை இறக்கிட்டாங்க.

மிஸ்கிட்டே செம பரேடு. விழா  முடிஞ்சதும் ஒவ்வொருத்தனும் தேடிவந்து 'கட்டபொம்மன் - பஜன்லால் சேட் நாடகம் சூப்பர்டா கிஷோர். நிங்கள் எப்போ டியூ கட்றான்?னு நக்கல் பண்ணிச் சிரிச்சாங்க.

குறும்புக்காரன் டைரி - 7

அடுத்தடுத்த நாளும் இதே கேலி. இந்த ஜெகன் பயல், 'ஸாரிடா கிஷோர்’னு ப்ரூ வார்த்தையில் முடிச்சுட்டான். ஆண்டு விழாதான் காமெடி ஆகிடுச்சு. அடுத்த சான்ஸ் கிடைக்கட்டும். பின்னிடுவோம்னு இருந்தப்போதான் விமலா மிஸ், 'போன மாசம் புக் ரிவ்யூக்காக எல்லோரையும் புக்ஸ் படிக்கச் சொன்னேனே செஞ்சீங்களா? நீங்க படிச்ச புத்தகத்தைப் பத்தி நாளைக்குச் சொல்லணும்’னு சொன்னாங்க.

அப்பத்தான் இப்படி ஒரு விஷயமே ஞாபகம் வந்துச்சு. ஹோம்வொர்க் செய்யுறதுக்கே நேரம் சரியா இருக்கு. அப்படியே ஒரு புத்தகத்தோடு உட்கார்ந்தாலும், ஒரு பாரா படிக்கிறதுக்குள்ள காதுக்குள்ள தாலாட்டு கேட்குது. கண்கள் கிறங்கி, தூக்கம் வந்துருது. 'தினமும் தூங்குறதுக்கு முன்னாடி நாலு பக்கமாச்சும் படிக்கணும்’னு அப்பா அடிக்கடி சொல்வார். எனக்குத்தான் நாலாவது வரியிலேயே தூக்கம் வந்துருதே.

நம்ம கை வேற சும்மா இருக்காது. புத்தகத்தில் இருக்கிற போட்டோவுக்கு மீசை வரையப் பரபரக்கும். ஸ்கூல் லைப்ரரி புக்கை வாங்கிட்டுப்போய், லேட்டா கொடுத்து ஃபைன் கட்டியதைவிட, மீசை வரைஞ்சு ஃபைன் கட்டியதுதான் அதிகம்.

ஆனாலும், இந்த சான்ஸை விடக் கூடாது. சூப்பரா புக் ரிவ்யூ பண்ணி, கட்டபொம்மன் நாடகக் கறையைத் துடைக்கணும்னு முடிவு எடுத்தேன். என் அண்ணன் லோகேஷின் புக் ஷெல்ஃபில் தேடினேன். ஒரு இங்கிலீஷ் புக் கண்ல சிக்கிச்சு. இந்தப் புத்தகத்துப் பேரை கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு எடுத்துப் பார்த்தேன்.

குறும்புக்காரன் டைரி - 7

அட, இந்தப் புத்தகத்துக் கதை, படமா வந்திருக்கு. ஜெகன் வீட்டுல நானும் அவனும்தான் பார்த்தோம். காட்சிகள் மனசில் நிக்குது. பேசாம அந்தக் கதையைச் சொல்லிடுவோம். புக் ரிவ்யூக்கு அவனவன் மாங்கு மாங்குனு படிச்சிருப்பான். நாம புக் பெயரையும், ஆசிரியர் பெயரையும் படிச்சுக்கிட்டா போதும். (இதான்டா ராஜதந்திரம்)

அடுத்த நாள் கிளால்ல எனக்கு முன்னாடி ஜெகனைக் கூப்பிட்டாங்க. பய அந்தப் படக் கதையை அப்படியே சொல்ல ஆரம்பிச்சுட்டான். 'சே... எல்லாரும் ராஜதந்திரம் ஸ்டாக் வெச்சிருக்காங்களே! இருந்த ஒரு ஐடியாவும் காலி. என்னடா செய்றது?’னு முழிச்சேன். தன்னோட முறையை முடிச்சுட்டு என் பக்கத்துல வந்த ஜெகன், 'எப்படி சமாளிச்சேன் பார்த்தியா’னு லுக் விட, எனக்கு செம கடுப்பு. எல்லா விஷயத்திலும் நமக்கு வில்லனாவே இருக்கானேனு கோபம் வந்தது.

'கிஷோர், நீ படிச்ச புத்தகத்தை வந்து சொல்லு’னு மிஸ் கூப்பிட்டாங்க.  தலைக்குள்ளே பல்பு எரிய, தடால்னு எழுந்து கிளாஸ் முன்னாடி நின்னு சொல்ல ஆரம்பிச்சேன்.

ஜெகன் சொன்ன அதே கதையில் நடுவுல நடுவுல மாற்றம் செஞ்சு சொன்னதும்,   மிஸ்ஸுக்கு சந்தேகம் வந்து, 'ஜெகன் சொன்ன கதையையே சொல்றியா?’னு கோபமா கேட்டாங்க.

'இல்லே மிஸ். இது, அந்தப் புத்தகத்தின் பார்ட் டூ. நானும் அவனும் சேர்ந்துதான் அந்தப் புக்ஸை வாங்கினோம். அப்படித்தானே ஜெகன்?’னு அவனைப் பார்த்தேன்.

'ஆ... ஆமா மிஸ்’னு சொல்லிக்கிட்டே என்னை முறைச்சான்.

குறும்புக்காரன் டைரி - 7

'ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு என்னமோ அழுகுணி ஆட்டம் ஆடுறீங்க. நாளைக்கு  வரும்போது ரெண்டு பேரும் அந்த புக்ஸைக் கொண்டுவாங்க’னு சொல்லிட்டாங்க.

கதையை ஒழுங்கா சொன்ன அந்த ஜாக்சன் துரைகிட்டே நிச்சயமா புக் இல்லே. 'பார்ட் டூ’னு கதை விட்ட இந்த கட்டபொம்மன்கிட்டே இருக்கிறதே அந்த புக்தான். ஆனா, அதை எடுத்து வர முடியாது. ரெண்டு பேரும் நாளைக்கு வாங்கிக் கட்டிக்கப்போறோம்.

இப்படி ஒரு சோக முடிவோடு, இந்த எபிசோடை முடிக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ்!

(டைரி புரட்டுவோம்)