Published:Updated:

கதவுக்கு பின்னால் ஓர் உலகம்!

கதவுக்கு பின்னால் ஓர் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
கதவுக்கு பின்னால் ஓர் உலகம்!

பா.ஜான்ஸன்

கதவுக்கு பின்னால் ஓர் உலகம்!

பா.ஜான்ஸன்

Published:Updated:
கதவுக்கு பின்னால் ஓர் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
கதவுக்கு பின்னால் ஓர் உலகம்!

ந்த உலகமே, பரந்துவிரிந்த வெளியின் ஒரு மிகச் சிறிய அறைதான். நீங்கள் அறிந்திருக்கவே முடியாத ஒரு கதவு திறக்கப்பட்டு, நீங்கள் செல்லும் அந்த இடம்தான் உண்மையான உலகம் என்பதை நிஜமாகவே பார்க்கும்போது எப்படி உணர்வீர்கள்? அப்படித்தான் இருந்தது ஜேக் என்கிற ஐந்து வயதுச் சிறுவனுக்கு.

ஜாய் என்கிற 17 வயதுடைய பெண், ஒருவனால் கடத்தப் படுகிறாள். அவன், ஜாயை ஓர் அறையில் அடைத்துவைத்து தினமும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்துகிறான். இரண்டு ஆண்டுகள் கழித்து, ஜாய்க்கு ஒரு மகன் பிறக்கிறான். அவன்தான் ஜேக். அவன் பிறந்தது முதல் வெளி உலகத்தைப் பார்த்ததே இல்லை. அவனைப் பொறுத்தவரை, அந்த அறைதான் உலகம்; அங்கு அவன் பார்க்கும் பூச்சிகள், பல்லிகள் மட்டும்தான் நிஜம். அந்த உலகத்தைத் தாண்டி அவனுக்குத் தெரிந்தது அந்த அறையில் இருக்கும் மந்திரத்தால் இயங்கும் தொலைக்காட்சியும், அதில் வரும் போலி மனிதர்களும்தான். அப்படித்தான் அவனிடம் ஜாய் சொல்லி வளர்ப்பாள்.

கதவுக்கு பின்னால் ஓர் உலகம்!

ஓல்டு நிக் (ஜாயைக் கடத்தி அடைத்துவைத்திருப்பவனுக்கு ஜாய் வைத்த பெயர்) வந்து கொடுமைப்படுத்தும்போது எல்லாம் ஓர் அலமாரியில் ஜேக்கை அடைத்துவிடுவாள் ஜாய்.

ஜேக்குக்கு ஐந்து வயது ஆகிறது. அந்தச் சூழலில் நிக், தான் வேலை இழந்துவிட்டதால், இனிவரும் நாட்களில் உங்களுக்கான உணவுப்பொருட்கள் வழங்க முடியாத நிலை என ஜாயிடம் சொல்கிறான். இனியும் இந்த ஒற்றை அறைக்குள் தன் மகனின் எதிர்காலத்தையும் முடித்துக்கொள்ள முடியாது. இங்கு இருந்து தப்பிக்க வேண்டும் என்ற முடிவுக்குவருகிறாள் ஜாய். அதற்கு ஒரே வழி தன் மகனை இங்கு இருந்து தப்பிக்கவைத்து, அவன் மூலம் உதவிபெறுவதுதான். அதற்கு முன்னர் ஜேக்குக்கு வெளி உலகம் என்பது உண்மைதான் என்பதை சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

இதுவரை தான் `பொய்' எனச் சொல்லிய அனைத்தும் `உண்மை' என ஜேக்கிடம் சொல்ல, ‘நீ பொய் சொல்ற, நம்ப மாட்டேன்’ என்று கத்து கிறான் ஜேக். அவனுக்கு எப்படிப் புரியவைப்பது எனக் குழம்பிக்கொண்டிருக்கும் வேளையில், ஜேக் தானாகவே புரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறான். அடுத்தது, அவனை அங்கு இருந்து தப்பிக்கவைக்க வேண்டும். ஜேக்குக்குக் காய்ச்சல், அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு நிக்கிடம் கூறுகிறாள் ஜாய். அவன், `நான் நாளை மருந்து வாங்கி வருகிறேன்' எனக் கூறிச் சென்றுவிடுகிறான். மறுநாள் `ஜேக் இறந்து விட்டான்' எனக் கூறி, ஒரு தரைவிரிப்பில் சுற்றிக் கிடத்திவைத்திருக்கிறாள். நிக், அவனைப் புதைப்பதற்காக எடுத்துச் சென்று தன் வண்டியில் ஏற்றுகிறான். அந்த வண்டியில் இருந்து தப்பும் ஜேக், ஒருவரின் உதவியுடன் போலீஸிடம் ஒப்படைக்கப்பட, ஜாயும் மீட்கப்படுகிறாள். இந்தப் புது உலகத்தில் தன்னை இணைத்துக் கொள்ள முடியாமல் ஜேக்கும், ஒருவித மன அழுத்தத்துடன் இருக்கும் ஜாயும் எப்படி சகஜமாகிறார்கள் என்பதாகப் பயணிக்கிறது ‘ரூம்’ என்ற அமெரிக்கப் படத்தின் கதை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதவுக்கு பின்னால் ஓர் உலகம்!

ஜேக்கின் ஐந்து வயதில் இருந்து ஆரம்பிக்கும் படம் முழுக்க, ஜேக்கின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. ஜாயாக நடித்திருக்கும் பிரி லார்சன், ஜேக்காக நடித்திருக்கும் ஜேக்கப் ட்ரெம்ப்லே இருவரின் நடிப்பும் அவ்வளவு இயல்பு. உண்மையை ஜேக்குக்குப் புரியவைக்கும்போது, ‘இவ்வளவு நாளா இதை ஏன் நீ சொல்லலை?’ எனக் கேட்கிறான் ஜேக். ‘அப்போ உனக்கு இதைப் புரிஞ்சிக்க வயசு பத்தாது. அதனாலதான்’ என ஜாய் சொன்னதும், ‘பேசாம நான் நாலு வயசுலயே இருந்திருக்கலாம்’ எனக் குழந்தைத் தனமாகப் பேசும் ஜேக்கும், `நீங்கள் ஜேக்குக்கு அவனின் தந்தையைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும்' என பத்திரிகையாளரின் கேள்விக்கு, தன் நிலையை எப்படி விளக்குவது எனக் கலங்கும் ஜாயும் ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார்கள்.

படத்தின் இறுதியில், தாயுடன் தான் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் எனக் கூறுகிறான் ஜேக். கதவு உடைக்கப்பட்டு அறைக்குள் நுழைந்ததும், நம்முடைய உலகம் எவ்வளவு சுருங்கியிருந்தது என வியக்கிறான். கடைசியில் அங்கு இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பை சொல்லி, ‘குட் பை ரூம்’ சொல்லிவிட்டு தாயுடன் கிளம்புகிறான்.

“ஒவ்வொரு கதவுக்குப் பின்னாலும் ஓர் உலகம் இருக்கிறது. ஆனால், அது எனக்கு எப்போதும் அச்சத்தைத் தராது. ஏனென்றால், இப்போதும் நீ என்னுடன் இருக்கிறாய் அம்மா” எனச் சொல்வதுடன் படம் முடிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரியாவில் எலிசபெத் என்கிற 42 வயதுப் பெண், ஓர் அறையில் இருந்து மீட்கப்பட்டாள். 24 ஆண்டுகளாக அவளை ஓர் அறையில் அடைத்து பாலியல் கொடுமையை நிகழ்த்தியிருக்கிறான் ஜோசப் என்பவன். இதனால் எலிசபெத்துக்கு ஏழு குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்களில் நான்கு குழந்தைகள் எலிசபெத்தோடு அந்த அறையிலேயே வசிக்கிறார்கள். மீதி மூன்று குழந்தைகளை வளர்த்தது எலிசபெத்தின் தாய். எலிசபெத்தை அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்திய ஜோசப், வேறு யாரும் அல்ல; அவன்தான் அவளின் தந்தை. இந்த வக்கிரமான உண்மைச் சம்பவத்தைத் தழுவி, எம்மா டோனோக்யூ எழுதிய நாவல் ‘ரூம்’. அதே பெயரில் லென்னி ஆப்ரஹாம்சன் படமாக இயக்கியிருக்கிறார்.

சிறந்த படம், சிறந்த நடிப்பு, சிறந்த திரைக்கதை என பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுவரும் `ரூம்' உலகம் முழுக்க சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது!