Published:Updated:

கமல் - ரஜினி கூட்டணி... கண்ணா இதெப்டி இருக்கு...!?

கமல் - ரஜினி கூட்டணி... கண்ணா இதெப்டி இருக்கு...!?
கமல் - ரஜினி கூட்டணி... கண்ணா இதெப்டி இருக்கு...!?

``கமலோடு இணைந்து அரசியல் செய்வீர்களா?'' என நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, வழக்கம்போல காலத்தின் மீது பழியைப் போட்டுவிட்டார் ரஜினி. உண்மையிலேயே கமல் - ரஜினி இணைந்து அரசியல் செய்தால் எப்படியிருக்கும் என யோசித்துப் பார்ப்போமே!

இருவரும் இணைந்தே கட்சி நடத்துவதாக இருந்தால், `கட்சிக்கு யார் தலைவர்?' என்ற கேள்வியே முதலில் எழும். ரஜினி ரசிகர்கள், `ரஜினிதான் தலைவரா இருக்கணும்' என்பார்கள். கமல் ரசிகர்களோ, `கமல்தான் தலைவராக இருக்கணும்' எனச் சொல்வார்கள். பிறகென்ன, உலகத்திலேயே ஒரு கட்சிக்கு இரண்டு தலைவர்கள். ஆரம்பமே அதகளம்தான்!

இவர்கள் கட்சி தொடங்கியதுமே தமிழிசை முதல் ஆளாக, ``இரண்டு பேர் சேர்ந்தாலே கட்சி ஆரம்பிக்கிறது இப்ப ஃபேஷனாப்போச்சு! கட்சி நடத்துவது என்ன, பார்ட்னர்ஷிப் வியாபாரமா?" எனக் கொளுத்திப்போட, ரஜினி அதிரடியாக ``என்ன கண்ணுங்களா...உங்க கண்ணுங்களுக்கு ரெண்டே ரெண்டு பேர்தான் தெரிவாங்க. ஆனா, எங்களுக்குப் பின்னாடி ரெண்டு கோடி பேர் இருக்கிறது தேர்தல் வந்த பிறகுதான் தெரியும். இதெப்படி இருக்கு?!" எனக் கிண்டலோடு பதிலடி தர, கமல் தனது அறிக்கையில், `இருமணம் கலந்த திருமணம் என்றாலும் இருவரே பிரதானம். இரவு-பகல் என்று இரண்டு மட்டும் இணைந்ததே நீவீர், நான், நாம் என இயங்கும் இவ்வுலகம். கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, கைகள் இரண்டு, கால்கள் இரண்டு கண்டீரே, சிந்திக்கும் மூளையும் மனமும் ஒன்று என இயங்குவதுதானே மனித வாழ்வு. இதில் எங்கே தாழ்வு?' என வழக்கமான கவித்துவ ட்வீட் வெளியிட, தமிழிசை மெர்சலாகி ஒதுங்கிவிடுவார்!

விடாது கருப்புபோல அடுத்து ஹெச்.ராஜா தன் பங்குக்கு, `பகுத்தறிவுப் போலியோடு, ஆன்மிகம் பேசும் ரஜினியும் இணைந்து கூத்தடிப்பது தமிழகத்தின் சாபக்கேடு!' எனக் காரசாரமாக அறிக்கைவிட, ``ஆம், யாம் கூத்தாடிகளே! இனித் தமிழகம் மட்டுமல்லாமல், இந்திய அரசியலையும் கூத்தாட்டுபவர்களும் யாமே!" என கமல் மட்டும் நறுக்கென பதிலடி கொடுப்பார்.

ஸ்டாலினிடம் இவர்களது அரசியல் பிரவேசம் பற்றி நிருபர்கள் கருத்துக் கேட்க, ``இப்பவாவது அவர்களது கட்சிக்குக் கொள்கை இருக்கிறதா? இல்லையென்றால், வழக்கம்போல `தலை சுத்திடுச்சு' எனச் சொல்வாரா என்று அவரைத்தான் கேட்கவேண்டும்!" என்று கழுவுற மீனில் நழுவுற மீனாகப் பதில் சொல்லிச் செல்வார். அவருக்குப் பதிலளிக்கும் ரஜினியோ, ``என்னை வாழவைக்கும் தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே எங்கள் கொள்கை! இதைவிட வேறென்ன கொள்கை தேவை?" என்று பதில் தருவார்.

``தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தப்போகிறாரா? இவ்வளவு காலமாக, தமிழக மக்கள்தான் ரஜினி அய்யாவின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியிருக்கிறார்கள். என் தம்பிமார்கள், இவரது திரைப்படங்களுக்காகக் கூடுதல் கட்டணத்தில் படம் பார்த்துப் பார்த்துத்தான்... ஏமாந்து ஏமாந்துதான் இன்று கட்சி தொடங்கி, தான் சேர்த்த சொத்துகளைக் காப்பாற்றும் அளவுக்கு வந்துள்ளார். என்னைப்போல் துணிச்சலாகத் தனிக்கட்சி நடத்தட்டுமே! திரைப்படத்திலேயே சேர்ந்து நடிக்க விரும்பாத ரஜினி அய்யாவும் கமல் அய்யாவும் கட்சி நடத்துவதற்கு இணைந்திருக்கிறார்கள் என்றால், இந்த சீமானையும் சீமானின் தம்பிகளையும் பார்த்துப் பயந்துபோயிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்!" என நக்கலும் நையாண்டியுமாக சீமான் பொளந்து கட்டுவார்.

`செல்வச்சீமானாக அரசியல் செய்யவில்லை... செல்வங்களைத் தொலைத்தேனும் தமிழகம் தொலையாமல் காக்கவே அரசியல் செய்கிறோம். `அரசியல்' எனலாம், `அறசியல்' எனவும் சொல்லலாம்' என ட்விட்டரில் சீமானுக்கு பதிலைத் தெறிக்கவிடுவாரே கமல்

உடனே அமைச்சர் ஜெயக்குமார் மைக்குகளின் முன்பு வந்து, ``திரையுலகில் தொலைந்துபோனவர்கள், இனிமேலும் தங்களால் நடிக்க முடியாது எனத் துவண்டுபோனவர்கள் எல்லோரும் தமிழகம் தொலைந்துபோனதாகச் சொல்வது வேடிக்கை! இப்போது மட்டுமல்ல, இனிவரும் தேர்தல்களிலும் அ.தி.மு.க என்கிற பேரியக்கத்தையோ, அ.தி.மு.க-வின் ஒண்ணரைக் கோடி தொண்டர்களையோ இவர்களால் தொடக்கூட முடியாது! அனைவரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது! அனைவராலும் புரட்சித்தலைவி ஆக முடியாது!" என, சூடு பறக்கப் பேசுவார்.

`எமக்கு, நாட்டைக் கொள்ளையிடத் தேவையில்லை; வழக்குமன்றத்தின் முன்பு மண்டியிடவும் தேவையில்லை. மறைந்தவர்களோடு போட்டியிடும் ஆள்கள் நாங்கள் அல்ல. எதிரில் நிற்போரோடு போரிடும் மறவர் யாம்!' என கமல் ட்வீட்ட, தமிழக அரசியலில் மீண்டும் சூடுபறக்கும்... அனல் தெறிக்கும்!

`அதுசரி... இதனால் நமக்கு என்ன நன்மை?' என்றெல்லாம் கேட்டால், விடு `ஜூட்'தான்!