Published:Updated:

சினிமா விமர்சனம் : தென்மேற்குப் பருவக்காற்று

சினிமா விமர்சனம் : தென்மேற்குப் பருவக்காற்று

சினிமா விமர்சனம் : தென்மேற்குப் பருவக்காற்று

சினிமா விமர்சனம் : தென்மேற்குப் பருவக்காற்று

Published:Updated:
##~##
தா
ய்ப் பாசம்தான் பாடுபொருள். ஈரமும் வீரமும் நிரம்பிய வெள்ளந்தித் தீவிரவாதி இந்தத் தாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைரமுத்துவின் வார்த்தைகளில் அம்மாக்கள் அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே 'தென்மேற்குப் பருவக் காற்று’ வீசத் துவங்கிவிடுகிறது. கிராமத்துத் தெருக்கள், கிடை ஆடுகள், களவாணிகள், மினி பஸ்கள் எனப் பட்டிக்காட்டு சுற்றுப்பயணம் காட்டும் விதத்தில் கவர்கிறது சீனு ராமசாமியின் இயக்கம்.

அப்பா இல்லாமல் வளரும் மகன் விஜய் சேதுபதியை (அறிமுகம்), பாசமும் நேசமுமாக வளர்க்கிறார் சரண்யா. தனது கீதாரியில் ஆடு திருடும் கும்பலில் ஒருவனை விரட்டிப் பிடிக்கிறார் விஜய் சேதுபதி. கட்டிப் புரண்டு, தோள் முறுக்கி, மரத்தில் சாய்த்து முகமூடி உருவினால், அது திருடன் அல்ல... திருடி! விஜய் சேதுபதியின் மனதைக் களவாடுகிறார் 'கள்ளச்சி’ வசுந்தரா. ஆனால், சிலபல காரணங்களால் விஜய்-வசுந்தரா காதலுக்கு முட்டுக்கட்டை இடுகிறார் சரண்யா. இடையில் வசுந்தரா வீட்டில் இருந்தும் சூறாவளி கிளம்ப, காதல் ஜோடிக்கு என்ன ஆனது என்கிற கதை!  

சினிமா விமர்சனம் : தென்மேற்குப் பருவக்காற்று

விதவைத் தாயாக சரண்யா. அதீத உஷார் - கறார் 'ஆத்தா’வை அச்சு அசலாகக் கண் முன் நிறுத்துகிறார். சட்டை-பாவாடை அணிந்து ஓடி வரும் 'எதிர்கால’ மருமகளைக் கெத்தாகப் பார்த்து வெற்றிலை பாக்கு மாற்றுவது, கத்திக் குத்து வாங்கியும் துண்டை இறுக்கி கட்டிக்கொண்டு மினி பஸ் பிடித்து மருத்துவமனையில் சேரும் தினவு என... ஒரு வாழ்க்கை வாழ்ந்துஇருக்கிறார் சரண்யா. வாழ்த்துக்கள் ஆத்தா!

அம்மாவுக்குப் பயந்து பதுங்கிப் பிறகு பாய்வதுமாக 'அறிமுகமா?’ என்று ஆச்சர்யப்படுத்துகிறார் விஜய் சேதுபதி. தேங்கிப் பயணிக்கும் திரைக்கதை பாசஞ்சருக்கு அவ்வப்போது கரி நிரப்புவது 'தீப்பெட்டி’ கணேசனின் கோக்குமாக்குதான். 'ஏன்டா... மினி பஸ்ல அலையோ அலைன்னு அலைஞ்சப்பலாம் அவளுக்கு ஒரு தங்கச்சி இல்லைன்னு சொல்லவே இல்லையேடா நீ!’ என்று பொளீர் பொளேரெனப் பொளக்கிறார். விஜய் சேதுபதிக்கு நிச்சயித்த ஹேமலதா, மாமாவுக்கு ஆசை ஆசையாகக் கலர் வாங்கி வருவதும், பிறகு 'இனிமே இது என்கிட்டே இருக்குறது சரியில்லை!’ என்று மாமா படத்தைத் திருப்பிக் கொடுப்பதுமாக ஒன்றிரண்டு காட்சிகளிலேயே, கலங்கவைக்கிறார்.  பாவாடை தாவணியும், மஞ்சள் - முகமுமாக, ஓங்குதாங்கான உடம்பில் திரியும் நாயகி வசுந்தரா 'களவாணிக் குடும்பந்தேன். ஆனா, என்னைத் திருட்டுத்தனமா எடுத்துக்கலாம்னு நினைக்காதீங்க’ என்கிற இடம், செமத்தியான வெட்டு!

''பொண்ணு நல்ல கலர்தான்ல... அட, கறுப்பும் கலர்தான்டா!’, 'நாலு தடவைகூட ஜெயிலுக்குப் போகலைன்னா என்ன மருவாதி... நமக்குத்தானே கட்டிப் போட்டுருக்காங்க ஜெயிலு!’ என்று சூடும் சுவையுமாக மண் மணம் பரப்பும் வசனங்கள். கிடைக்குள் ரணகளம் ஆடும்போதும், சரண்யா ஏறிச் செல்லும் மினி பஸ் திசையில் திரும்பும் ஆடுகளைப் பதிவு செய்யும்போதும் சரி... செழியனின் ஒளிப்பதிவு படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. 'சாமி நூறு சாமி இருக்குதே... அட, தாய் ரெண்டு தாய்

சினிமா விமர்சனம் : தென்மேற்குப் பருவக்காற்று

இருக்குதா?’, 'கல்லப் புழிஞ்சு கஞ்சி ஊத்தினாயே!’ போன்ற வரிகளில் தன் பங்குக்குத் தாலாட்டுகிறது வைரமுத்துவின் பேனா!

குறிப்பிட்ட நாலு பேரையே சுற்றிச் சுற்றி வரும் கதையும், சமயங்களில் திக்கு திசை தெரியாமல் தேங்கி நிற்கும் பரபரப்பில்லாத திரைக்கதையும்தான் தென்மேற்குப் பருவத்தின் வறட்சி முகம்!  

தமிழ் சினிமாவின் அசுரப் பசிக்கு, இது ஒரு சங்குப் பால் மட்டுமே. ஆனாலும்... இது தாய்ப் பால்!

- விகடன் விமர்சனக் குழு