
தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி
எட்டாம் வகுப்புப் படிக்கும் கிஷோர், வருங்கால வி.வி.ஐ.பி. தன்னுடைய குழந்தைப் பருவ வாழ்க்கையை வருங்காலத் தலைமுறைகள் தெரிஞ்சுக்கிறதுக்காக, டைரி எழுதறான். கிஷோரின் இந்த மகத்தான பணி, இதோ தொடருது...
நேத்து வரைக்கும் யாராச்சும் என்கிட்ட, 'எதுக்காக கிஷோர் ஸ்கூல்ல எக்ஸாம்லாம் வைக்கிறாங்க?’னு கேட்டிருந்தா, 'மார்க் எடுக்க’னு சொல்லியிருப்பேன். ஆனா இன்னைக்குத்தான், எக்ஸாம் ஒவ்வொரு ஸ்டூடன்டையும் யோசிக்கவெச்சு பல விஷயங்களில் அறிவாளி ஆக்குதுனு தெரிஞ்சுக்கிட்டேன். நீங்களும் அறிவாளி ஆகணும்னா, என்னை மாதிரி படிக்காம வந்து, மூணு மணி நேரம் எக்ஸாம் ஹாலில் இருந்து பாருங்க.
கொஸ்டீன் பேப்பரை எவ்வளவு சின்னதா மடிக்க முடியும்? ஆன்ஸர் ஷீட்ல மொத்தம் எத்தனை லைன்ஸ் இருக்கு? என் பேனாவோட பிராண்டு என்ன? கொஸ்டீன் பேப்பர்ல எத்தனை தடவை 'கி’ எழுத்து வந்திருக்கு? இந்த மூணு மணி நேரத்துல ஜெகன் எத்தனை வாட்டி பேனாவைக் கடிச்சான். இப்படிப் பல விஷயங்களைக் கவனிச்சேன்.

நான், ஒண்ணும் எழுதாம உட்காரக் காரணமான ஜெகன், அவ்வளவு நேரம் எழுதுறதைப் பார்த்ததும் செம கடுப்பு. தனியா படிச்சு இருந்தா, குறைஞ்சது 10 கேள்விக்காவது பதில் எழுதியிருப்பேன். இந்தப் பய, ''சயின்ஸ் எக்ஸாம் பயங்கர டஃப்பா வரப்போகுதாம். எல்லாரும் தனித்தனியா படிக்கிறதைவிட, மொத்தமா படிச்சா, ஆளுக்கு சில ஆன்ஸர் படிச்சாலே போதும். அதை மத்தவங்களுக்கும் சொல்லிக்கொடுப்போம். ஈஸியா எல்லாரும் எல்லா ஆன்ஸரையும் தெரிஞ்சுக்கலாம்’னு சொன்னான்.
இந்த ஐடியாவுக்கு, என்னோட இருந்தவங்க லைக் போட, அடுத்த அரை மணி நேரத்துல எங்க வீட்டு மொட்டைமாடியில் இனிதே ஆரம்பமானது க்ரூப் ஸ்டடி. இந்த அண்டர்கவர் ஆபரேஷன்ல... வெயிட், மொட்டைமாடி எப்படி அண்டர்கவர் ஆகும்? இந்த 'அப்பர் ஓப்பன்’ ஆபரேஷன்ல சம்பந்தப்பட்டவங்க... நான், ஜெகன், ராஜேஷ், தினேஷ். நடுவுல நடுவுல 'க்ரூப் ஸ்டடி நடத்துறது எப்படி?’னு டிப்ஸ் கொடுக்க, சீனியரான என் அண்ணன் லோகேஷ் வந்துட்டுப்போனான். செட் புராப்பர்டியா சயின்ஸ் புத்தகங்கள், சில பல ஸ்நாக்ஸ் ஐட்டங்கள். போதாததுக்கு, என் அம்மா அப்பப்போ டீ போட்டுக் குடுத்தாங்க.
நாலு பேரும் வட்டமா உட்கார்ந்து, நடுவுல தின்பண்டங்களை வெச்சுக்கிட்டோம். யார் யார் எந்தப் பாடத்தைப் படிக்கணும்னு செலெக்ட் பண்ணினோம். 'சரி, படிக்க ஆரம்பிக்கலாமா?’னு கேட்டேன்.
இந்த ஜெகன், பயதான் 'எடுத்த உடனே பாடத்துக்குப் போகணுமா? மணி ஏழுதானே ஆகுது, கொஞ்ச நேரம் பாடம் சம்பந்தமா ரிலாக்ஸா பேசுவோம். அது, படிக்க இன்னும் எளிமையா இருக்கும்’னு சொன்னான்.

நியாயம்தானேனு நினைச்சோம்.முதல்ல, கெமிஸ்ட்ரி ஃபார்முலா பத்திதான் ஆரம்பிச்சது. அது, கெமிஸ்ட்ரி கிளாஸ்ல ராஜேஷ் பண்ண கலாட்டாக்களுக்கு யு டர்ன் அடிச்சு அப்படியே, இதுவரை கிளாஸ்ல நடந்த கலாட்டாக்கள் எல்லாம் மொத்த ஹிஸ்ட்ரியா மாறிடுச்சு. அதில் ஒண்ணு, க்ளாஸ்ல நடத்தின ட்வெண்டி 20.
கிஷோர், ஒரு சூப்பர் ஐடியா, சின்னதா ஒரு மேட்ச் போடலாம். கொஞ்ச நேரம் விளையாடினா மைண்டு ஃப்ரெஷ்ஷா இருக்கும். நல்லா படிக்கலாம்’னு சொன்னான் தினேஷ்.
உடனே வேஸ்ட் பேப்பர்ஸைக் கசக்கி, பந்து ஆக்கினோம். நோட்டுதான் பேட். ஆரம்பமாச்சு, மொட்டைமாடி டி-20. நானும் ராஜேஷ§ம் ஒரு டீம், ஜெகனும் தினேஷ§ம் ஒரு டீம். முதல் மேட்சில் பரிதாபமான ஸ்கோர்ல தோற்றோம். ஜெயிக்கிறவரைக்கும் விளையாடக் கூப்பிடணும்கிற யுனிவர்சல் விதிப்படி 'இந்த மேட்ச்ல ஜெயிங்கடா பாக்கலாம்’னு சொன்னோம்.
இப்படியே பத்தரை மணி வரை போச்சு. டயர்ட் ஆகி, புத்தகத்தை கையில் எடுத்தோம். போன எக்ஸாம்ல கம்மியான மார்க் வாங்கி அப்பாகிட்ட திட்டு வாங்கியது, இந்த வாட்டி சயின்ஸ் எக்ஸாம் கஷ்டமா இருக்கப் போறதாக மிஸ் சொன்னதுனு கண்ணு முன்னாடி நிறை நட்சத்திரங்கள் வந்துபோனதால சீரியஸா படிக்க ஆரம்பிச்சேன்.

ஒரு பக்கம்கூட தாண்டல. அதற்குள் ஜெகன், 'மேட்ச் விளையாடி செம டயர்டா இருக்கோம். தூக்கம் வருது. இப்ப படிச்சா ஒண்ணும் மண்டைல ஏறாது. காலையில மூணு மணிக்கு அலாரம் வைப்போம். 7 மணி வரைக்கும் படிப்போம். காலையில படிச்சா அப்படியே மைண்டுல நிக்கும்’னு சொன்னான்.
எனக்கும் ஏற்கெனவே எழுத்துகள் ராட்டினம் சுத்துற மாதிரியே தெரிஞ்சதால சரினு தோணிச்சு. கீழே போய், அப்பாவோட மொபைலை எடுத்துட்டுவந்து, அலாரம் வெச்சேன். ஆளுக்கு ஒரு மூலையில் படுத்தோம்.
காலையில மூணு மணிக்கு அலாரம் அடிக்க, எடுத்து ஆஃப் பண்ண உடம்பு வளையாததால், அப்படியே தூங்கினோம். ரெண்டாவது முறையும் அலாரம் கத்த, ஸ்னூஸ்ல போட்டு மீண்டும் தூக்கம். மூணாவது முறையும் அடிச்சப்போ, என்ன பண்ணினேன்னு தூக்கத்துல தெரியல. காலையில கண் முழிச்சுப் பாத்தா, பக்கத்துல ஒரு பயலையும் காணோம்.
'ஏழு மணி வரைக்கும் என்னடா தூக்கம்? உன் ஃப்ரெண்ட்ஸ் அஞ்சு மணிக்கே போயிட்டாங்க’னு என அம்மா சொல்ல, தூக்கிவாரிப் போட்டுச்சு.
எக்ஸாம் ஹால்ல நுழைஞ்சதும் ஜெகன்கிட்ட போய், 'நீதான க்ரூப் ஸ்டடி ஐடியா குடுத்தவன். எக்ஸாம் முடியட்டும் உன்னைக் கவனிச்சுக்கிறேன்’னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன். அந்த ஹால்ல என்னைப் போலவே பரிதாபமா முழிச்சுக்கிட்டு இருந்த இன்னும் ரெண்டு ஜீவன்கள் ராஜேஷ§ம் தினேஷ§ம். ஆனா, இந்த ஜெகன் பய மட்டும் ரொம்ப நேரமா எழுதிக்கிட்டே இருந்தான்.

ராத்திரி ஃபுல்லா நம்ம கூடத்தானே விளையாடினான். எப்படித்தான் படிச்சான்? என் டைரியில் எழுதுறதுக்காவது இந்தக் கொஸ்டீனுக்கு பதில் தெரிஞ்சுக்கணும். பின்னாடி யாரை எல்லாம் பழிவாங்க யூஸ் ஆகும்னு நினைச்சுக்கிட்டேன். ஒரு வழியா அடிக்கடி படிச்சதை ஞாபகச் சுரங்கத்துல இருந்து தோண்டி எடுத்து எக்ஸாமை எழுதிட்டு நிமிர்ந்தா, ஆள் எஸ்கேப். முன்னாடியே பேப்பரைக் கொடுத்துட்டுப் போயிட்டான்.
இப்போ என் கவலை, எக்ஸாம் ரிசல்ட் பத்தி இல்ல. நிச்சயம் பாஸ் ஆகிடுவேன். ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வரப்போற அப்பாவை எப்படிச் சமாளிக்கப்போறேன்னு நினைக்கிறப்பதான் திகிலா இருக்கு. அப்பாவோட செல்போன்ல அலாரம் வெச்சுக்கிட்டு படுத்தேன். மூணாவது முறை அடிச்சப்போ என்ன செய்தேன்னு தெரியலைனு சொன்னேன் இல்லியா? அது, அப்புறம்தான் தெரிஞ்சது. தூக்கக் கலக்கத்துல தூக்கி வீசியிருக்கேன். அது, மொட்டைமாடிச் சுவர்ல மோதி, உடைஞ்சு இருக்கு. காலையில, அப்பா குளிச்சுட்டு இருக்கும்போதே எஸ்கேப் ஆகி, ஸ்கூலுக்கு வந்துட்டேன்.
இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார். அவரைச் சமாளிக்க ஏதாவது ஐடியா சொல்லுங்களேன்!
(டைரி புரட்டுவோம்)