Published:Updated:

நான் நடிச்சது... ரெண்டே ரெண்டு... தமிழ்ப் படங்கள்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நான் நடிச்சது... ரெண்டே ரெண்டு... தமிழ்ப் படங்கள்தான்!
நான் நடிச்சது... ரெண்டே ரெண்டு... தமிழ்ப் படங்கள்தான்!

கார்க்கிபவா

“`ஒரு குடும்பத்துல இருக்கிற எல்லோருக்குமான விஷயங்களும் என் படத்துல இருக்கணும்’னு நினைப்பேன். ஏன்னா, `சினிமா'ங்கிறது எல்லோருக்குமான கலைங்கிறதோட, அப்பதான் தியேட்டருக்குக் குடும்பத்தோடு வருவாங்கங்கிற சுயநலமும் உண்டு” - அட்டகாசமாகச் சிரிக்கிறார் நாகார்ஜுனா. 50 ப்ளஸ் தாண்டியும் இன்னமும் ஸ்டைல் ஹீரோ. தமிழில் கார்த்தியுடன் நடித்த `தோழா' ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார்.

``ஒரு பெரிய பணக்காரன். கணக்கே பண்ண முடியாத சொத்து. திடீர்னு ஒரு விபத்து, அவன் வாழ்க்கையையே மாத்திடுது. உலகத்துல இருக்கிற எல்லா வசதிகளோடும் இருந்தவன், ஒரே நிமிஷத்துல எதுவுமே இல்லாத சாதாரண ஆளா ஆகிடுறான். குடும்பம் இல்லாத அவனைப் பார்த்துக்கொள்ள ஒருவன் தேவைப்படுகிறான். அவன்தான் கார்த்தி. கார்த்திக்கு எமோஷனலா பல பிரச்னைகள். இரண்டு எதிரெதிர் துருவங் களான இவங்களை, நட்பு எப்படி இணைக்குதுங்கிறதுதான் `தோழா'. ஒருவர் இன்னொருவருக்குத் தரும் அன்பும் ஆறுதலும் அவ்வளவு அழகா வந்திருக்கு. ‘The Intouchables’-னு ஒரு பிரெஞ்சுப் படம். அந்தக் கதையை, நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி எடுத்திருக்கோம். நிச்சயம் நம் மனசுக்கு நெருக்கமானவனா இருப்பான் `தோழா'.''

நான் நடிச்சது... ரெண்டே ரெண்டு... தமிழ்ப் படங்கள்தான்!

``தமிழ்ல நிறையப் படங்கள் பண்ணியிருக்கீங்க. உங்களுக்குப் பிடிச்ச கேரக்டர் எது?’’

``இப்படித்தான் எல்லோருமே சொல்றீங்க. ஆனா, நான் தமிழ்ல நேரடியா நடிச்ச படம் ரெண்டே ரெண்டுதான். `ரட்சகன்’, `பயணம்’ அவ்வளவுதான். மற்றது எல்லாமே டப்பிங். `இதயத்தைத் திருடாதே' தமிழ்ப் படமா தெரியணும்னு மணி சார் ரொம்ப மெனக்கெட்டார். வேணும்னா லிஸ்ட்ல அதையும் சேர்த்துக்கலாம். மற்றபடி என் தெலுங்குப் படங்களை இங்கே டி.வி-யில்  அடிக்கடி போடுறதால, அப்படித் தோணலாம்.  தமிழ்நாட்டுல எங்கே போனாலும், என்னையும் தமிழ் ஹீரோவாவே பார்க்கிறது, கடவுள் எனக்குக் கொடுத்த ஜாக்பாட்.''

``பிஸியாவே இருக்கக்கூடிய உங்க சினிமா பயணம், இப்போ எப்படி இருக்கு?’’

``என் படங்கள் தொடர்ந்து ஹிட். இதுக்கு மேல ஒரு நடிகன் என்ன கேட்கப்போறான்? சந்தோஷமா இருக்கேன். `மனம்', எனக்கு ரொம்ப ஸ்பெஷல்; எங்க அப்பா நடிச்ச கடைசிப் படம். அது பெரிய ஹிட் ஆனதும், ஃபேமிலி என்டெர்டெயினரா மக்கள் ஏத்துக்கிட்டதும் எக்ஸ்ட்ரா போனஸ். இப்ப `தோழா'வில் கம்ப்ளீட்டா வேற கேரக்டர். என் கரியர்ல இந்த பீரியட் ரொம்ப முக்கியமான காலம்!''

`` `மனம்' படத்தை தமிழில் எடுத்தா, யார் யார் நடிக்கலாம்னு யோசிச்சிருக்கீங்களா?’’

``நானும் கார்த்தியும் இதைப் பற்றி நிறையப் பேசியிருக்கோம். கார்த்தியும் சூர்யாவும் சேர்ந்து, லேசா மாற்றலாம்னுகூட யோசிச்சாங்க. ஆனா, அது எடுபடாது. சிவாஜி சார் இருந்திருந்தா, சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு நடிச்சிருக்கலாம். எப்படி யோசிச்சாலும் யாரும் சிக்கலை. இந்தியில ராஜ் கபூர் குடும்பம் நினைச்சா, பண்ணலாம். ஆனா, இதுவரை யாரும் கேட்கலை.''

``உங்க பசங்க நாக சைதன்யா, அகில்... ரெண்டு பேரும் கலக்குறாங்களே!’’

``ரெண்டு பேரும் ரொம்பச் சின்னப் பசங்க. நல்லவேளை, எங்களுக்குள் போட்டி இருக்க வாய்ப்பு இல்லை. நாக சைதன்யாவின் நடிப்பு ரொம்ப ரியலா இருக்கு. எந்த கேரக்டர் பண்ணாலும் நம்புற மாதிரியான நடிப்பைக் கொடுக்கிறார். கடின உழைப்பாளி. அவரோட டெடிக்கேஷன் வேற லெவல்.

நான் நடிச்சது... ரெண்டே ரெண்டு... தமிழ்ப் படங்கள்தான்!

அகில், செம ஜாலியான ஆள். என்ன செய்தாலும் ஸ்டைலா செய்றார். பொண்ணுங்களுக்கு அவரோட பாடி லாங்வேஜ் ரொம்பப் பிடிக்குது. யாரோட தாக்கமும் அவர் நடிப்பில் தெரியல. முதல் படம் அவ்வளவு பெருசா போகலைன்னாலும் மக்கள் அவரை ஏத்துக்கிட்டாங்க. இனிமேல் அவர்தான் பார்த்துக்கணும்.''

``ஹீரோயின்ஸ் பற்றி உங்ககிட்டதான் கேட்கணும்... இப்ப யார் நல்லா நடிக்கிறாங்க?’’

``இந்த ஜெனரேஷன்ல நடிக்கத் தெரிஞ்சவங்க நிறையப் பேர் வந்துட்டாங்க. தமன்னா ரொம்ப நல்லா நடிக்கிறாங்க. ஒரு சீனைப் புரிஞ்சுக்கிட்டு, அதை அழகாக்க அவங்க எடுத்துக்கிற முயற்சிகள் பாராட்டப்படவேண்டியது. சமந்தா நடிப்பிலும் ஒரு நேர்த்தி இருக்கு.''

``அமலா எப்படி இருக்காங்க?’’

``ரொம்ப நல்லா இருக்காங்க. ஊர் சுத்திட்டே இருக்காங்க. அவங்களுக்குப் பிடிச்ச விஷயங்களா பார்த்துப் பார்த்துச் செய்றாங்க. அவங்க சந்தோஷமா இருந்தாலே, நாங்க சந்தோஷமா இருப்போம்.''
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு