பிரீமியம் ஸ்டோரி

‘காட்டு எருமையின் ஈரல்’ போலவே ஒரு டூப்ளிக்கேட்டைத் தயாரித்து வைத்திருந்தது ‘ரெவனென்ட்' படப்பிடிப்புக் குழு. லியோ அதைக் கடித்துத் தின்பதுபோல காட்சி. கசப்பு இருக்கக் கூடாது என இனிப்பாக போலி ஈரல் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தனர். அதை வாங்கிப் பார்த்த லியோ, `இது வேண்டாம்' என மறுத்துவிட்டார். ‘எனக்கு நிஜ லிவர் கிடைக்குமா?’ கேட்டதும் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. காரணம், லியோ சுத்தமான வெஜ்ஜி; அடுத்து, அதை அசைவம் சாப்பிடுபவரால்கூட முகர்ந்துபார்க்க முடியாது.

‘எனக்கு நிஜ லிவர்தான் வேண்டும். ரெடி பண்ணுங்க’ என உறுதியாகச் சொல்லிவிட, இரண்டொரு நாட்களில் படப்பிடிப்புக் குழு தயார்செய்து தந்தது. மூச்சைப் பிடித்துக்கொண்டு அந்த ரத்தம் சொட்டும் துர்நாற்றம் அடிக்கும் காட்டு எருமையின் ஈரலை, மூக்குக்கு அருகே கொண்டுசெல்ல கொடூரமாகக் குமட்டுகிறது. மீண்டும் மீண்டும் எனப் பலமுறை அந்தக் காட்சிக்காக மெனக்கெடுகிறார். சரியாக வரவில்லை. -40 டிகிரி குளிரில் நடுங்கியபடி இப்படி ஒரு விஷயத்தைச் செய்யவேண்டிய அவசியம் லியோனார்டோவுக்கு இல்லவே இல்லை. பாப்புலாரிட்டி கோபுரத்தின் மொட்டைமாடியில் நிற்கும் மிஸ்டர் ஹாலிவுட். ஆனால், `எத்தனை முறையானாலும் செத்தேபோனாலும் செய்தே தீருவேன்' என அந்த ரத்தம் வழியும் பச்சை ஈரலைக் கடித்துத் தின்ன ஆரம்பிக்கிறார். அவருக்கான ஆஸ்கர் அப்போதே ரிசர்வ் செய்யப்படுகிறது.

நின்று வென்ற லியோ!

ஒரு சினிமாவில் நடிப்பதற்காக எந்த அளவுக்கு வருத்திக்கொள்ள முடியுமோ... அந்த எல்லை களை அநாயாசமாகத் தாண்டவேண்டியிருந்தது `ரெவனென்ட்' படத்துக்காக. மைனஸ் குளிரில் உறைந்துபோன ஆற்றில் இறங்கி ஓடவேண்டும். சும்மா கிடையாது... 45 கிலோ எடை உள்ள கரடித் தோலைத் தோளில் சுமந்தபடி ஓடவேண்டும். தண்ணீரில் இறங்கிவிட்டால் கரடித்தோல் நீரை உறிஞ்சி இரண்டு மடங்கு எடை கூடிவிடும். தண்ணீரில் சில நிமிடங்கள் நின்றாலும் கால் ஃப்ரீஸ் ஆகி நரம்புகள் இழுக்கத் தொடங்கிவிடும். ஒருமுறை ஷூட்டிங்கின்போதே ஐஸ் தண்ணீரில் மூழ்கி எமதர்மன் வீட்டு என்ட்ரன்ஸ் வரைக்கும் போய்விட்டுத் தப்பித்திருக்கிறார் லியோனார்டோ டிகாப்ரியோ. அந்த உண்மையான அர்ப்பணிப்புக்குத்தான் இப்போது ஆஸ்கர்.

நின்று வென்ற லியோ!

இந்த ஆஸ்கருக்குப் பின்னால் 22 ஆண்டுகாலக் காத்திருப்பு இருக்கிறது. இதுவரை ஐந்து முறை ஆஸ்கருக்காக நாமினேட் செய்யப்பட்டு, ஐந்து முறையும் ஜஸ்ட் மிஸ்ஸானது லியோவின் வேதனை ஹிஸ்ட்ரி மிஸ்ட்ரி. 1994-ம் ஆண்டில் தொடங்கியது இந்த ஆஸ்கர் வேட்டை. ‘வாட்ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்’ என்ற படத்துக்காக, சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டபோது அவரை வீழ்த்தியது `டாமி லீ ஜோன்ஸ்'.

நின்று வென்ற லியோ!

லியோ பிறந்து வளர்ந்த ஏரியா, ரெளடிகளின் பிறப்பிடம். திரும்பிய பக்கம் எல்லாம் விபசாரம். தடுக்கி விழுந்தால் போதைப்பொருள். பள்ளிகளுக்குச் சென்றால், நிச்சயம் கெட்டுச் சீரழிவது உறுதி. 15-வது வயதில் வீட்டில் ‘எனக்கு ஸ்கூல் எல்லாம் வேண்டாம். நான் நடிக்கிறேன்’ எனச் சொல்லிவிட்டான் சிறுவன் லியோ. அப்போது இருந்தே அவனுடைய அம்மாதான் ஒவ்வொரு நாளும் நடிகர் தேர்வுகளுக்கு அழைத்துச்செல்வார். சின்னச்சின்னப் படங்களில் நடிக்க ஆரம்பித்த லியோவுக்கு, ராபர்ட் டிநீரோதான் திருப்புமுனையாக இருந்தார். 1993-ம் ஆண்டில் வெளியான ‘தி பாய்ஸ் லைஃப்’ படத்துக்கான ஆடிஷனில் அவராகவே பார்த்து தேர்ந்தெடுத்த திறமைசாலி ‘லியோ!’
 
1996-ம் ஆண்டில் வெளியான ‘ரோமியோ + ஜூலியட்’ அவரை சாக்லேட் ஹீரோவாக, இளசுகளின் டார்லிங்காக மாற்றியது. `டைட்டானிக்' அவர் மேல் பித்துப்பிடிக்கவைத்தது. `டைட்டானிக்'குக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றதும், ‘ஓட்டுக்களை ஒழுங்கா எண்ணுங்கடா’ என ஆஸ்கர் கமிட்டிக்கு  இமெயில் அனுப்பி தெறிக்கவிட்டனர் அவரது ரசிகர்கள்.

நின்று வென்ற லியோ!

2002-ம் ஆண்டில் `கேங்ஸ் ஆஃப் நியூயார்க்', கொஞ்சம் வளர்ந்த வேறு ஒரு லியோவை அறிமுகப்படுத்தியது.

2004-ம் ஆண்டில் வெளியான `ஏவியேட்டர்' மெச்சூர்டு நடிகனாக நிலைநிறுத்தியது. வயது ஏற ஏற, சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே ‘ஜாங்கோ அன்செயின்ட்’ படத்தில் கொடூரமான கொலைகார ஸ்மைலிங் வில்லனாக நடிப்பதற்கு எல்லாம் தனி கெத்து வேண்டும்.

நின்று வென்ற லியோ!

‘உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ படத்துக்காக, 2014-ஆம் ஆண்டே கிடைத்திருக்கவேண்டிய அங்கீகாரம் ஆஸ்கர். ஆனால் கிடைக்கவில்லை. அதற்காக சோர்ந்துவிடாத லியோ 100 மடங்கு உழைப்புடன் ‘ரெவனென்ட்'-டில் திரும்பி வந்தார். அந்த உறுதிதான் லியோ. 40 வயதில் வாழ்க்கை தொடங்கு வதாகச் சொல்வார்கள். ஆஸ்கர் நாயகன் லியோவுக்கு, இப்போது வயது 41. மைல்ஸ் டு கோ!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு