பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“அமலாதான் அம்மா!”

 “அமலாதான் அம்மா!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அமலாதான் அம்மா!”

பா.ஜான்ஸன்

``பொதுவா ரெண்டு மொழிகள்ல ஒரு படம் வெளியாகுதுன்னா, ஒண்ணு டப் பண்ணுவாங்க; இல்லைனா பைலிங்குவலா ரெண்டு மொழிகளுக்கும் ஒரே சமயத்துல ஷூட் பண்ணுவாங்க. ஆனா, எனக்குக் கொஞ்சம் வித்தியாசமா நடக்குது. இந்தியில `நில் பேட்டி சன்னாட்டா' எடுத்து முடிச்சிட்டு, அதே படத்தை `அம்மா கணக்கு'னு தமிழ்லயும் ஷூட் பண்ணி, இப்போ ரெண்டு மொழிகளிலும் ஒரே நாள்ல படம் ரிலீஸ்'' - முதல் படத்திலேயே இரு மொழிகளிலும் இயக்குநர் ஆன சந்தோஷத்துடன் பேசத் தொடங்குகிறார் அஸ்வினி ஐயர் திவாரி. பாலிவுட்டில் படா எதிர்பார்ப்பில் இருக்கும் அமீர் கானின் `டங்கல்' படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரியின் மனைவி.

``நான் பக்கா மும்பை பொண்ணு. காலேஜ்ல ஃபைன் ஆர்ட்ஸ் படிச்சு முடிச்சிட்டு, `லியோ பர்னெட்'னு ஒரு விளம்பர நிறுவனத்துல கிரியேட்டிவ் ஹெட்டா 14 வருஷம் வேலைசெஞ்சேன். அந்தச் சமயத்துலதான் `What for breakfast?'னு ஒரு குறும்படம் இயக்கினேன். அதுக்கு தேசிய விருது கிடைத்தது. அதுக்கு அப்புறம் ஏதாவது பண்ணணும்னு யோசிச்சப்போ, என் கணவர் நிதேஷ் திவாரி சொன்ன ஐடியாதான் இந்தப் படம். இந்தியில `தனு வெட்ஸ் மனு', தனுஷ் நடிச்ச `ராஞ்சனா' படங்களை இயக்கின ஆனந்த் எல் ராய், படத்தைப் பார்த்துட்டு `இதை எல்லாருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கணும். நானே வெளியிடுறேன்'னு சொல்லிட்டார். அவர், படத்தின் டிரெய்லரை தனுஷ் சார்கிட்ட காட்ட, அவருக்கு அது பிடிச்சுப்போயி, அப்படியே தமிழுக்கும் வந்தாச்சு!''

 “அமலாதான் அம்மா!”

``கதையில் அப்படி என்ன ஸ்பெஷல்?''

``ஒரு அம்மாவுக்கும் பொண்ணுக்கும் இடையில் நடக்கும் விஷயங்கள்தான் கதை. பொதுவா பெற்றோர்களுக்கு, குழந்தையின் உலகத்துக்குள்ள தங்களை இணைச்சுக்கவும் அவங்களைப் புரிஞ்சுக்கவும் நிறையப் பொறுமை தேவைப்படும். இந்த விஷயத்தை ஒரு அம்மாவுடைய பார்வையில் இருந்து சொல்ற படம்தான் `அம்மா கணக்கு'.''

``அமலா பால் - ரேவதி. இந்தக் கதையில் ரெண்டு பேரும் எப்படிப் பொருந்தியிருக்காங்க?''

``அம்மா-பொண்ணு கதைனு சொன்னதும் எல்லாரும் `ரேவதி அம்மா, அமலா பால் மகள்'னுதான் நினைக்கிறாங்க. ஆனா, அம்மா ரோல்ல நடிக்கிறது அமலா பால். 14 வயசுக் குழந்தைக்கு அம்மாவா எப்படி பிஹேவ் பண்ணணும்னு நிறைய அம்மாக்கள்கிட்ட பேசி ரெஃபெரன்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டாங்க. ரொம்ப சவாலான ரோல். அற்புதமா பண்ணியிருக்காங்க. ரேவதி மேடம், அமலாவை வழிநடத்துறது, குழப்பங்களைத் தீர்த்துவைக்கிறதுனு ஒரு மெச்சூர்டு தோழியா நடிச்சிருக்காங்க.''

 “அமலாதான் அம்மா!”

``தமிழில் இளையராஜா இசை அமைச்சிருக்காரே?''

``ஆமாம். தனுஷ் சார் ஒருநாள் கால் பண்ணி, `நம்ம படத்துக்கு ராஜா சார் மியூஸிக் பண்ணா எப்படி இருக்கும்?'னு கேட்டார். எனக்கு ஒரு நிமிஷம் எதுவுமே புரியல. அடுத்த நாள் ராஜா சாரைப் பார்த்தோம். அவர் ஆல்ரெடி இந்திப் படத்தைப் பார்த்துட்டார். `ரொம்பப் பிரமாதமாப் பண்ணியிருக்கே. நான் இல்லாமலே இந்தப் படம் நல்லா இருக்குமே'னு சொன்னார். `நீங்க இருந்தீங்கன்னா, இந்தப் படத்தோட லெவலே வேற சார்'னு சொன்னேன். `ராஜா சார்கூட நான் ஒரு படத்தில் சேர்ந்து வேலை செஞ்சிருக்கேன்’னு சொல்றது, எனக்கு லைஃப்டைம் பெருமை.''

``இப்போ, வீட்டுக்குள்ளேயே இரண்டு இயக்குநர்கள். எப்படி இருக்கு வாழ்க்கை?''

``அவரும் ஒரு இயக்குநர் என்பதால் உதவிக்கும் தலையீடுக்குமான எல்லை அவருக்குத் தெரியும். தமிழ்ல படம் பண்ண நான் தயங்கினப்போ, என்னை சம்மதிக்கவெச்சதில் அவருடைய பங்கு அதிகம். அவருடைய படங்கள்ல லுக்ஸ், காஸ்ட்யூம்ஸ், கலர் எல்லாத்துலயும் என்னுடைய சஜஷன்ஸை நான் சொல்வேன். ஹேப்பி கோயிங்!''