பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“அப்பா நடிக்கலை... தம்பி பேசலை!”

  “அப்பா நடிக்கலை... தம்பி பேசலை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அப்பா நடிக்கலை... தம்பி பேசலை!”

ம.கா.செந்தில்குமார்

‘‘நாங்க தமிழ் சினிமாவை ஆக்கிரமிச்சிட்டதாவும், இங்கே இருக்கிற தியேட்டர்களை வளைச்சிட்டதாவும் அப்போ பொய்ப் பிரசாரம் பண்ணினாங்க. ஆனா, இப்ப சினிமாவை உண்மையில் யார் ஆக்கிரமிச்சிருக்கா..? லக்ஸ் தியேட்டரை மிரட்டி வாங்கினது யார்னு எல்லாருக்குமே தெரியும். லக்ஸ் ஸ்கிரீன்கள் விற்பனைக்குப் பிறகுதான், வடபழநி `பளாசோ’ தியேட்டருக்கு அனுமதியே கொடுத்தாங்க’’ - டாப் கியரில் ஆரம்பிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ஒரு பக்கம் அப்பா ஸ்டாலின் தேர்தல் ஃபீவரில் ‘முடியட்டும்... விடியட்டும்!’ என தமிழ்நாட்டை வலம்வர, உதயநிதியோ சினிமாவில் சின்ஸியராக இருக்கிறார். ‘மனிதன்’ பட ஷூட்டிங்கில் இருந்தவரைச் சந்தித்தேன்.

‘‘ `மனிதன்' என்ன மாதிரியான படம்?’’

‘‘ ‘பெரிய வக்கீல்னு நிரூபிச்சுக்காட்டுறேன்’னு  சண்டைபோட்டுட்டு பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு வர்றான் ஹீரோ. இங்கே சின்னச் சின்ன வழக்குகள்கூட கிடைக்காமக் கஷ்டப்படுறான். அந்தச் சமயத்துல பெரிய வக்கீல்களை முக்கியமான ஒரு விஷயத்துக்காக எதிர்த்து நிக்கிறான். அது என்ன விஷயம், அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதை எல்லாம் அவன் எப்படிச் சமாளிக்கிறான் என்பதே ‘மனிதன்’. ராதாரவி, பிரகாஷ்ராஜ்னு சீனியர்ஸ் இருக்காங்க. இந்த லெஜண்ட்களுக்கு நடுவுல நாமளும் இருக்கோங்கிறதே சந்தோஷம்!’’

‘‘ ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு ஹன்சிகா காம்பினேஷன்ல நடிக்கிறீங்க. என்ன சொல்றாங்க?’’

‘‘ `நீ உண்மையாவே தேறிட்ட, நல்லாவே நடிக்கிற'னு அவங்களும், `ஆரம்பத்துல உங்களுக்கு லிப் சிங்க் ஆகவே ஆகாது. இப்ப பெர்ஃபெக்டா நடிக்கிறீங்க'னு நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் மாறி மாறிப் பாராட்டிட்டே இருக்கோம். இதுல முதல் பாதிக்கு ஹன்சிகான்னா, ரெண்டாவது பாதிக்கு ‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷ். ரிப்போர்ட்டரா வர்றாங்க. அவங்களும் செமயா நடிச்சிருக்காங்க.’’

  “அப்பா நடிக்கலை... தம்பி பேசலை!”

‘‘ ‘ஓ.கே. ஓ.கே’ உங்களுக்கு நல்ல அறிமுகம் தந்த படம். ஆனால், அடுத்தடுத்த படங்கள் சரியாப் போகலையே?’’

‘‘எனக்கு ப்ளஸ், மைனஸ் ரெண்டுமே ஓ.கே. ஓ.கே-தான். `தொடர்ந்து காமெடிப் படமே பண்றீங்களே'னாங்க. `கெத்து' பண்ணினேன். `ஃபைட் நல்லா இருக்கு; விஷுவல்ஸ் நல்லா இருக்கு. ஆனா, காமெடியே இல்லை’ங்கிறாங்க. `ஓ.கே'னு நினைச்சுக்கிட்டு இப்ப `மனிதன்' பண்ணிட்டிருக்கேன். இது சோஷியல் மெசேஜ் படம். இதையடுத்து சுசீந்திரன் சார் படம், டபுள் ஹீரோ சப்ஜெக்ட். நானும் விஷ்ணுவும் பண்றோம். ஆன்டி ஹீரோ, வில்லன்னு நான் எல்லாத்துக்கும் ஓப்பனா இருக்கேன். கார்த்திக் சுப்புராஜ்கூட அப்படி ஒரு லைன் சொல்லியிருக்கார். நமக்கு நல்ல படம் பண்ணணும்; அது கமர்ஷியலாவும் இருக்கணும். அவ்வளவுதான்.’’

‘‘மற்ற நடிகர்கள், இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்கலாமே?’’

‘‘தயாரிக்கலாம்தான். ஆனா, நான் என்னமோ வீட்ல கட்டுக்கட்டா பணத்தை அடுக்கி வெச்சிருக்கிற மாதிரி `ரெட் ஜெயன்ட்'ல இருந்து போனாலே நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லாரும் சம்பளத்தை எக்குத்தப்பா ஏத்திக் கேக்கிறாங்க. அதான் பிரச்னை. ஆனாலும் நல்ல ஸ்கிரிப்ட் வந்தா சின்ன பட்ஜெட் படங்கள்னு இல்லை, நிச்சயமா பெரிய பட்ஜெட் படங்களையும் தயாரிப்பேன்.''

‘‘ஆனால், ஏகப்பட்ட படங்கள் தயாராகி ரிலீஸ் பண்ண முடியாத சூழல் இருக்கிறதே?''

‘‘இன்னைக்கு சினிமா ரொம்பக் கஷ்டமான சூழல்ல இருக்கு. ஒரு படத்தின் வருவாயில் 40 சதவிகிதம், சாட்டிலைட் உரிமையை விற்பதன் மூலமா வந்துட்டு இருந்தது. ஆனா, சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குறதை எல்லா சேனல்களும் நிறுத்திட்டாங்க. நடிகர்களும் டெக்னீஷியன்களும் சம்பளத்தை ஏத்திக்கிட்டேபோறாங்க. தமிழ் சினிமாவுல ஹீரோ, காமெடியன், டச்சப் பாயாக்கூட இருக்கலாம்... தயாரிப்பாளரா மட்டும் இருக்கவே கூடாது. அவ்வளவு ரிஸ்க். அதனாலதான் பாரம்பர்ய நிறுவனங்கள் தயாரிப்பை நிறுத்திட்டாங்க. இன்னைக்கு எல்லா முன்னணி ஹீரோக்களும் தயாரிப்பாளரா ஆனதுக்கு இதுதான் காரணம். இந்தி சினிமாவில் இருப்பதுபோல், ‘லாபத்தில் பங்கு’ என்ற முறையைக் கொண்டுவர்றதுதான் இதுக்கு ஒரே தீர்வா இருக்கும்னு நினைக்கிறேன்.’’

‘‘இந்தச் சூழல்ல அரசு என்ன பண்ணணும்னு நினைக்கிறீங்க?’’

‘‘சினிமாவில் அரசின் தலையீடு இருக்கு. அதை எல்லாம் தாண்டி ஈகோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புதான் 99.9 சதவிகிதப் பிரச்னைக்குக் காரணம். ‘கெத்து’ ரிலீஸ் சமயத்துல தயாரிப்பாளர் சங்கத்துல இருந்து, ‘நீங்க விஜய் டி.வி-க்கு பேட்டிதரக் கூடாது’னு சொன்னாங்க. ‘ஏன்?’னு கேட்டேன். ‘அவங்க படம் வாங்குறது இல்லை’னாங்க. ‘உங்க ரூல்ஸ்படி நான் விஜய் டி.வி-க்கு விளம்பரம்தான் தரக் கூடாது. ஆனா, என் படத்தை புரொமோட் பண்ண அவங்க அரை மணி நேர நிகழ்ச்சிக்குக் கூப்பிடுறாங்க. இதில் என்ன தப்பு? என் படத்தை ஜெயா டி.வி-கூடத்தான் வாங்குறது இல்லை. ஆனா, ஜெயாவில் அரை மணி நேரம் ஸ்லாட் வாங்கித் தாங்க. நான் அங்கேயும் போய் பேட்டி தர்றேன்’னேன். அமைதியாகிட்டாங்க. பிரச்னையைப் பேசி தீர்க்கிறதைவிட அதைப் பெருசு பண்ணுவதில்தான் இங்கே ஆர்வமா இருக்காங்க.’’

‘‘உங்களுடைய ஒவ்வொரு படத்துக்கும் வரிவிலக்குக்காக கோர்ட் படி ஏறிட்டு இருக்கீங்களே?’’

‘‘ ‘ஏழாம் அறிவு’ தொடங்கி சமீபத்தில் வந்த ‘கெத்து’ வரை என் எல்லா படங்களுக்கும் கோர்ட்டுக்குப் போய்தான் வரிவிலக்கு வாங்கியிருக்கேன். ‘நீர்ப்பறவை’, நான் தயாரிச்ச படங்கள்லயே நல்ல படம்னு எல்லாரும் சொல்றாங்க. அதுக்குக்கூட வரிவிலக்கு இல்லை. ‘வரிவிலக்கு தரலாமா... வேண்டாமா!’னு பரிந்துரைக்க ஒரு குழு இருக்கு. அதில் உள்ள எல்லாருமே இப்ப உள்ள முதலமைச்சர் நடிச்சிட்டு இருந்தப்ப ஃபீல்டுல இருந்தவங்க. அவங்க எல்லாருமே நல்லவங்க. அவங்களை நான் குறைசொல்ல விரும்பலை. அதிகாரிகள் எழுதிக் கொடுக்கிறதுக்குக் கீழே கையெழுத்து போட்டுட்டுப் போயிடுறாங்க. அந்தக் குழுவுக் காக ஷோ போடும்போது வந்து பார்த்தீங்கன்னா, அதை மட்டுமே வெச்சு ஒரு காமெடிப் படம் எடுக்கலாம். பலருக்கும் தமிழை சரியா எழுதவே தெரியாது. இவங்கதான், ஒரு படம் ‘தமிழ் கலாசாரத்தை மீறாமல் இருக்கிறதா, இல்லையா'னு பரிந்துரைக்கிறவங்க. ‘இந்த ஏழு பேரை எந்த அடிப்படையில் நியமிச்சீங்க? அவங்க தமிழ் அறிஞர்களா? அந்தக் குழுவையே கலைக்கணும்’னு உயர் நீதிமன்றத்தில் ஒரு கேஸ் போட்டிருக்கேன்.’’

  “அப்பா நடிக்கலை... தம்பி பேசலை!”

‘‘அரசியலுக்கு வருவோம்... ‘நமக்கு நாமே’வுக்கு நல்ல ரீச். ஆனாலும் ‘சில விஷயங்கள் டிராமாபோல் இருக்கு’னு சொல்றாங்களே?’’

‘‘அப்பா சைக்கிள் ஓட்டினாங்க, ஸ்கூட்டர் ஓட்டினாங்க என்பதால், இதை டிராமானு சொல்லிட முடியாது. அப்பா போய்ப் பார்த்தது எல்லாரும் நம் மக்கள்தானே, அவங்க எல்லாருமே ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளா என்ன? நிச்சயமா இந்த மாதிரியான எதிர்மறை விமர்சனங்கள் வரும்னு தெரியும். அதையும் தாண்டி அதில் உள்ள பாசிட்டிவ் விஷயங்களை எடுத்துக்கணும்.

`நமக்கு நாமே'வை ‘டிராமா’னு விமர்சிக்கிற யாரும், எந்த நிகழ்ச்சியா இருந்தாலும் வீடியோ கான்ஃபரன்ஸிங்ல தொடங்கிவைக்கிற ஜெயலலிதாவை விமர்சிக்கிறது இல்லையே.

  “அப்பா நடிக்கலை... தம்பி பேசலை!”

`தி.மு.க அரசு அமைஞ்சாலும் ‘நமக்கு நாமே’வைத் தொடர்வேன்'னு அப்பா சொல்லியிருக்காங்க.வெற்றியோ, தோல்வியோ அப்பா, மக்களை தொடர்ந்து சந்திச்சுக்கிட்டே இருக்காங்க. மக்களை நேரடியா தேடிப்போய்ப் பார்க்க, அவங்க என்னைக்குமே தயங்கினதே இல்லை.’’

‘‘ஆனால், உங்க குடும்பதுக்குள்ளேயே அப்பா-பெரியப்பா மனக்கசப்பு இன்னும் தீரலை. உங்க சகோதரர்களுக்குள் உறவு எப்படி இருக்கு?’’

‘‘எங்களுக்கு எப்பவும் தாத்தாதான் முக்கியம். அரசியல், குடும்பம் எதுவா இருந்தாலும் அவரை மீறி எந்த முடிவும் எடுக்கிறது இல்லை. அவர் ஒரு விஷயம் சொல்லிட்டார்னா அதைப் பற்றி நாங்க கமென்ட் பண்றதும் தப்பு. அருள்நிதியும் நானும் எப்பவும்போல ரெகுலரா பேசிக்கிறோம். ஆனா, துரையுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறது இல்லை. அதுக்கு நிறையக் காரணங்கள் இருக்கு. எல்லாருக்கும் அவங்கவங்க அப்பா முக்கியம்தானே? பேசி சண்டை போட்டுக்கிறதைவிட பேசாம இருக்கிறதும் நல்லதுதானே!’’