பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இனி இதுதான் சினிமா!

இனி இதுதான் சினிமா!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி இதுதான் சினிமா!

கார்க்கிபவா

`கடந்த 20 ஆண்டுகளில், 2015-ம் ஆண்டில் தான் குறைவான பேர் திரையரங்குக்கு வந்திருக்கிறார்கள்' என்கின்றன புள்ளிவிவரங்கள். அதிலும், சினிமாவின் முக்கிய ஆடியன்ஸான 15-25 வயதுக்கு உட்பட்டவர்கள் திரையரங்குக்கு வருவது அடியோடு குறைந்திருக்கிறது. ஆனால், அவர்கள் சினிமா பார்க்காமல் இல்லை. அப்படியானால் என்ன சிக்கல்?
இந்தியாவில் சினிமாவை விரும்புவோர் 50 கோடி பேருக்கு மேல் இருக்கிறார்கள். இவர்களிடம் சினிமாவைக் கொண்டுபோய்ச் சேர்க்க, 8,000 திரையரங்குகள் மட்டுமே இருக்கின்றன. இந்த இரண்டுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க ஒன்றால் மட்டும்தான் முடியும். அது, தொழில்நுட்பம்!

1,000 பேர் அமரக்கூடிய திரையரங்குகள், தற்போது சிறிய அரங்குகளாக மாறிவருகின்றன. பெரிய திரைகள் சிறியதாகும் அதே சமயத்தில், வீட்டில் இருக்கும் சின்னத்திரை பெரிதாகிக் கொண்டே வருகிறது. ஒருகாலத்தில் 14 இன்ச் போர்ட்டபிள் டி.வி ஃபேஷனாக இருந்தது. இப்போது 42 இன்ச் டி.வி-யைப் பார்த்தாலும் `இன்னும் கொஞ்சம் பெருசா வாங்கியிருக்கலாமோ!' என்றே தோன்றுகிறது. இப்படி, சினிமா தியேட்டரையே வீட்டுக்குள் வரவழைக்கும் காலம் வந்துவிட்டது. மொபைல் மூலமும் படங்கள் பார்க்கும் காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக் கிறோம். அப்படி என்றால், எதிர்காலத்தில் சினிமாவை நாம் எப்படி எல்லாம் பார்ப்போம்?

இனி இதுதான் சினிமா!

ஸ்ட்ரீமிங் தளங்கள்

இந்தியாவில் இணையத்தின் வேகம் ஒப்பீட்டு அளவில் குறைவு. ஆனால், சில ஆண்டுகளில் இது மாறக்கூடும். அப்போது `நெட்ஃப்ளிக்ஸ்', `ஹீரோ டாக்கீஸ்' போன்ற இணையதளங்கள் கடைசி கிராமம் வரை சென்றடையும். இந்த நிறுவனங்கள், இணையத்தின் வழி மட்டும் அல்லாமல் மொபைல், டேப்லெட் வரை படங்களைக் கொண்டுசேர்க்கிறார்கள். மாதம் 500 ரூபாய் செலுத்தி உறுப்பினர் ஆகிவிட்டால், அவர்கள் தளத்தில் இருக்கும் அனைத்து மொழிப் படங்களையும் சீரியல்களையும் நாம் விரும்பியபோது பார்த்துக்கொள்ளலாம். வீட்டில் பாதிப் படம் பார்த்துவிட்டு, மீதிப் படத்தை அலுவலகம் செல்லும் வழியில் மொபைலில் பார்த்துக்கொள்ளலாம். யூடியூபிலும் பணம் செலுத்தி படம்பார்க்கும் வசதி வந்துவிட்டது. ஒரு முறை பார்க்க, 50 ரூபாய் முதல் வசூலிக்கிறார்கள். ஸ்மார்ட் டி.வி., மொபைல், லேப்டாப் என இணையம் இருக்கும் எதிலும் பார்க்கலாம். இவை எல்லாமே லீகலாக நடப்பவை. இதன் மூலமும் தயாரிப்பாளர் லாபத்தைப் பெற முடியும்.

அதிகாரபூர்வ டி.வி.டி-க்கள்

இணையத்தின் வேகம் அதிகரித்து, விலை சல்லிசாகும் வரை டி.வி.டி-க்களுக்கு டிமாண்ட் இருக்கும். இப்போது தெருவுக்குத் தெரு விற்கும் திருட்டு டி.வி.டிக்களை ஒழிக்க, தயாரிப்பாளர்களே அதிகாரபூர்வமான டி.வி.டி-க்கள் விற்கத் தொடங்குவார்கள். பாலிவுட்டில் எப்போதோ இதை முயற்சித்துவிட்டார்கள். கோலிவுட்டில் சேரன் தனியாக C2H என ஒன்றை ஆரம்பித்து, பின்னர் அது தோல்வியில் முடிந்துவிட்டது. மீண்டும், முறையாக இதுபோன்ற ஒரு முயற்சி வரும் என்கிறது கோடம்பாக்கம்.

வீடியோ ஆன் டிமாண்ட்

`விஸ்வரூபம்' படத்தை இந்த முறையில்தான் கமல்ஹாசன் வெளியிட நினைத்தார். ஒரு படம் அரங்குக்கு வரும் அதே நாளில், D2H மூலம் வீட்டில் இருந்தபடியே பார்த்து மகிழலாம். படத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விலை இருக்கும். ஸ்ட்ரீமிங் தளங்களில் சந்தா கட்டினால் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டு மானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இதில் ஒவ்வொரு முறையும் பார்ப்பதற்கு பணம் கட்ட வேண்டும். D2H சேவை, கிராமங்கள் வரை சென்று சேர்ந்துவிட்டதால், இந்த முறை இன்னும் சில வருடங்களிலேயே பிரபலமடையும் சாத்தியங்கள் அதிகம்.

வெர்ச்சுவல் ரியாலிட்டி

டெக்னாலஜியின் சமீபத்திய அட்டகாச கண்டுபிடிப்பு இது. VR என்ற ஆப், மொபை லிலேயே சினிமா பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது. மொபைலோடு கண்களில் மாட்டிக் கொள்ளும் வெர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடி தருகிறார்கள். அதில் மொபைலை வைத்து விட்டால், மொபைல் ஸ்கிரீனை லென்ஸ் மூலம் ஸூம் செய்து பெரிதாகக் காட்டும். VR ஆப், திரையில் இருக்கும் காட்சியை இரண்டாகப் பிரிக்கும் வேலையைச் செய்யும். அது இரண்டு கண்களுக்கும் தனித்தனி காட்சியாகக் காட்டும். படம் பார்ப்பவருக்கு, ஒரே காட்சியைப் பார்ப்பது போன்று தோன்றும். `தொடர்ந்து இரண்டு மணி நேரம் இப்படிப் பார்த்தால் தலைவலி வரும்' என முன்னர் நெகட்டிவ் விமர்சனங்கள் கிளம்பின. இதற்காகவே சாம்சங் தனது வாடிக்கையாளர் களிடம் ஒரு சர்வே நடத்தியது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது என்ற முடிவுக்கு வர, இந்த டெக்னாலஜியில் தைரியமாக கோடிகளைக் கொட்டியிருக்கிறது சாம்சங் நிறுவனம்.

இனி இதுதான் சினிமா!

முதல் கட்டமாக VR ஆப்-ல் டிரெய்லர்கள், வீடியோ பாடல்கள் போன்றவற்றைத் தந்திருக்கிறார்கள். லெனோவா நிறுவனம் சமீபத்தில் 12,000 ரூபாய்க்கு மொபைலோடு
VR கண்ணாடியையும் விற்றது. ஃப்ளாஷ் சேலில் விற்கப்பட்ட இந்த மொபைல், செம ஹிட்!

 ஐமேக்ஸ்

வீட்டுக்குள் திரையரங்கைக் கொண்டுவரலாம். ஆனால், ஐமேக்ஸ் திரையைக் கொண்டுவர விரும்பினால் உங்கள் வீடு கிரிக்கெட் கிரவுண்ட் சைஸில் இருக்க வேண்டும். அப்படி ஒரு மகா, மெகா திரைதான் ஐமேக்ஸின் ஸ்பெஷல். ஐமேக்ஸ் ஃபார்மெட்டில் படமாக்கும்போது அதன் ஒளி, ஒலி தரம் ஈடு இணையற்றது. அதில் படம் பார்க்கும்போது உணரும் பரவசம், இதுவரையிலான சினிமா அனுபவத்தில் பெஸ்ட் என்கிறார்கள்.

இனி இதுதான் சினிமா!

ஐமேக்ஸ், சென்னையில் இரண்டு இடங்களில் இருக்கிறது. ஆனால், `ஸ்மெல் -ஓ -விஷன்' என்ற அடுத்தகட்ட அதிரடி இன்னும் வரவில்லை. இதில் ஒரு பேய்ப் படம் பார்க்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் நள்ளிரவு வேளையில் ஒரு மோகினி நடந்து வந்தால், உங்களுக்கு மல்லிகை வாசம் வரும். பூகம்பம் வந்தால், உங்கள் கால்களுக்கு அடியில் அதிரும். கிட்டத்தட்ட கதை நடக்கும் உலகுக்குள் நுழைந்து வெளியே வந்த அனுபவத்தை இது ஏற்படுத்தும்.

200 மைல் வேகத்தில் பைக்கில் பறக்கும் ஜேம்ஸ்பாண்டின் பின்னால் அமர்ந்து செல்லும் அனுபவத்தைத் தரும் அளவுக்கு யோசித்துவருகிறது டெவலப்பர்ஸ் டீம். இவை எல்லாம் நம்ம சத்யத்துக்கும் தேவிக்கும், மதுரை இம்பாலாவுக்கும், திருச்சி கலையரங்கத்துக்கும் வரத் தாமதம் ஆகலாம். ஆனால், இதுதான் சினிமாவின் எதிர்காலம்!