பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“ரஜினி சார்தான் என் அடையாளம்!”

“ரஜினி சார்தான் என் அடையாளம்!”
News
“ரஜினி சார்தான் என் அடையாளம்!”

நெகிழும் ராகவா லாரன்ஸ்நா.சிபிச்சக்கரவர்த்தி

``என் மனைவியும் பொண்ணும், விஜயவாடா கனக துர்காம்மா கோயிலுக்குப் போயிருந்தப்ப அங்க ‘பட்டாஸ்’ங்கிற தெலுங்குப் படம் பார்த்திருக்காங்க. படம் முடிஞ்சதும் அங்கே இருந்தே எனக்கு போன். ‘சூப்பர் படம். நீங்க இதை தமிழ்ல பண்ணினா கன்ஃபர்ம் ஹிட்’னு சொன்னப்போ அவங்க குரலில் அப்படி ஒரு சந்தோஷம். ஆனா, எனக்கு வெவ்வேறு கமிட்மென்ட்ஸ். அதை அப்பவே மறந்துட்டேன். இதற்கு இடையில் ஆர்.பி.சௌத்ரி சாரிடம் இருந்து அழைப்பு. ‘ஒரு தெலுங்குப் படம். உங்களுக்கு செமத்தியா இருக்கும். படம் பார்க்கிறீங்களா?’னு கூப்பிட்டார். போய்ப் பார்த்தேன். என் மனைவி சொன்ன அதே ‘பட்டாஸ்’ படம். அதை தமிழுக்காகக் கொஞ்சம் மாற்றி ‘மொட்ட சிவா கெட்ட சிவா’வா வர்றேன்'’ - லாரன்ஸின் முகத்தில் மாஸ் மகிழ்ச்சி. ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா-2’... யாராலும் விரட்ட முடியாத ஒன்றாக, கோடம்பாக்கத்துக்குப் பேய் பிடிக்கவைத்ததில், இந்த மொட்ட பாஸுக்குப் பெரிய பங்கு உண்டு.

‘‘என் வளர்ச்சியில் ஆர்.பி.சௌத்ரி சார் முக்கியமானவர். ‘அற்புதம்’ படத்தில் என்னை ஹீரோவாக்கியவர். ‘என்னய்யா... எப்பப் பார்த்தாலும் பேய்ப் படமா பண்ணிட்டு இருக்க. சோஷியல் படம் பண்ண வாய்யா!’னு கூப்பிட்டார். ‘நீங்க சொன்னா, பண்றேன் சார்’னேன். ஒரிஜினல் தெலுங்கு ‘பட்டாஸ்’ல ஒரே கேரக்டர்தான். ஆனா, தமிழுக்காக ரெண்டு கெட்டப்களா மாற்றினோம். படம் முடிஞ்சதும் சௌத்ரி சாருக்குப் போட்டுக் காட்டினேன். ‘யோவ்... ரொம்ப மாஸா இருக்குய்யா. படம் வேற லெவலுக்குப் போயிடுச்சு’னு பாராட்டினார். இந்தப் படத்துக்கான அட்வான்ஸைத்தான் `அறம் செய விரும்பு’க்காக ஆனந்த விகடனுக்குக் கொடுத்தேன். அதைக் கேள்விப்பட்டதும் உடனே கூப்பிட்டார்... `நீ எனக்குப் படம் பண்ற - பண்ணலைங்கிறது வேற விஷயம்யா. ஒரு கோடி ரூபாயை நல்ல விஷயத்துக்குத் தூக்கிக் கொடுத்த பாரு... பெரிய மனசுய்யா உனக்கு’னு சொன்னார். எனக்கு வேற எதுவும் வேணாம்ஜி இந்த வாழ்த்து போதும்.’’

“ரஜினி சார்தான் என் அடையாளம்!”

‘‘பேய் ரூட்ல இருந்து உங்களை மாத்திவிடுற அளவுக்கு ‘பட்டாஸ்’ அப்படி என்ன கதை?’’

‘‘தவறைத் தட்டிக்கேட்கிற போலீஸ்காரன் தான். இங்கே போலீஸ் படம்னா, ஆக்‌ஷன் பறக்கும். ஆனா, அந்த ஆக்‌ஷன் அனலை கொஞ்சம் குறைச்சு ஃபுல் காமெடி ஏத்தியிருக்கோம். வடிவேலு சார், விவேக் சார் தவிர்த்து கோவை சரளா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், வி.டி.வி கணேஷ், தம்பி ராமையா, சாம்ஸ், மன், தேவதர்ஷினி, மனோபாலா, மயில்சாமினு இன்னைக்கு ஃபீல்டுல இருக்கிற அத்தனை காமெடியன்களையும் களம் இறக்கியிருக்கோம். இன்னும் ஸ்பெஷலா கோவை சரளாக்கா. இதுல அவங்களுக்கு லேடி கான்ஸ்டபிள் கேரக்டர். பின்னிட்டாங்க. ஹீரோயின் நிக்கி கல்ராணிக்கு ரிப்போர்ட்டர் ரோல். இயக்குநர் சாய்ரமணி உழைப்பு பேசப்படும்.’’

‘‘ஹிட்டடித்த ‘காஞ்சனா-2’ டயலாக்கையே படத் தலைப்பா வெச்சுட்டீங்களே?’’

‘‘நமக்கு குழந்தை ரசிகர்கள்தான் அதிகம். முதல்முறையா அவங்களுக்கு பேய்கள் ஃப்ரெண்டாகக் காரணம் `காஞ்சனா’தான். `அந்த சென்டிமென்ட்ல அதையே தலைப்பா வைக்கலாம்'னு சொன்னாங்க. தவிர, முதல் பாதி முழுக்கத்   தலைமுடி இருக்கும்,  இன்டர்வெலுக்குப் பிறகு மொட்டை கெட்டப்ல வருவேன். இந்தத் தலைப்பு அந்த கேரக்டரைச் சொல்ற மாதிரியும் இருக்கும் என்பதால் ‘மொட்டை சிவா கெட்ட சிவா’வே ஏகமனதாகத் தேர்வானது.’’

“ரஜினி சார்தான் என் அடையாளம்!”

‘‘சீனியர் சத்யராஜ் நடிக்கிறார். என்ன ஸ்பெஷல் எதிர்பார்க்கலாம்?’’

‘‘அவர் ஸ்பாட்டுக்கு வந்துட்டாலே நான் நாற்காலி நுனிக்குப் போயிடுவேன். அதை அவரே கவனிச்சுட்டு, ‘ஏங்க, நீங்க என்னங்க... ஃப்ரீயா உட்காருங்க’ என்பார். அவ்வளவு ஐடியாஸ், அவ்வளவு அறிவுரைனு அன்பானவர். நாளைய இளைஞர்கள் லெவலுக்கு இறங்கி காமெடி பண்ணுவார். அவருக்கு என் மொட்டை கேரெக்டர் ரொம்ப ஸ்பெஷல். ‘ஏங்க அள்ளுதுங்க மாஸ்’னு சொல்லிட்டே இருக்கார். வெரைட்டி கேரக்டர்கள்ல நாம ரசிச்ச மனுஷன் இப்ப நம்மகூட நடிக்கிறார். அவ்வளவு சந்தோஷம்.’’

‘‘லாரன்ஸ் படம்னா ஆட்டமும் பாட்டும்தான் ஸ்பெஷல். இதுல என்ன பண்ணியிருக்கீங்க?’’

‘‘ஜெயசித்ராம்மாவின் பையன் அம்ரிஷ்தான் மியூஸிக் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். ‘சங்கிலி புங்கிலி கதவைத் திற...’, ‘சில்லாட்டா பில்லாட்டா...' மாதிரி இதுல நாலு பாடல்கள் இருக்கு. எல்லாமே ஹை ஃப்ரீக்வென்ஸி லெவல்.

எம்.ஜி.ஆர் பாடலின் ரீமிக்ஸ்கூட ஒண்ணு இருக்கு. நமக்கு ரசிகர்கள் வரும்போது இருந்ததைவிட போகும்போது அதிக எனர்ஜியோட வெளியில போகணும். யெஸ், ஆல் கிளாஸ் மாஸா இருக்கணும். அவ்வளவுதான்.’’

“ரஜினி சார்தான் என் அடையாளம்!”

‘‘ ‘காஞ்சனா’ வரிசையில் அடுத்து எந்தப் பேய்?’’

‘‘பேய் ட்ரெண்டை உருவாக்கணும்னு நான் எதுவும் பண்ணலை. எங்க டீமோட சின்ஸியரான வொர்க் ஒரு ட்ரெண்டை உருவாக்கிருச்சு. இப்ப எல்லாருமே எடுத்துச் செய்யும்போது நமக்கும் சந்தோஷம்தானே? ஆனா, பேயைத் தள்ளிவைக்கலை. ‘காஞ்சனா’வின் வரிசையில் அடுத்து ‘நாகா’. அதுல சி.ஜி வொர்க் அதிகம். அது முடியுறதுக்கு இடையில ஒரு படம் பண்ணிடலாமேனுதான் ‘மொட்டை சிவா கெட்ட சிவா’வைக் கையில் எடுத்தேன். ‘நாகா’வும் வருவான். ஆனா, `நாகா’வுக்கு முன்னாடியே ‘ரஜினிமுருகன்’ இயக்குநர் பொன்ராம்கூட செம கமர்ஷியலா ஒரு படம் பண்றேன்.’’

‘‘ `அறம் செய விரும்பு’ மூலம் பலருக்கும் உதவியிருக்கீங்க. என்ன ரெஸ்பான்ஸ்?’’

‘‘சினிமாவில் நான் ஒரு துளி. அப்படிப்பட்ட என் படம் 100 கோடி ரூபாய் வசூல் ஆகுது. அதுக்கு நான் ஏதாவது செஞ்சாகணுமா இல்லையா? உதவி பண்ண முடிவுபண்ணின பிறகு யோசிக்கவே கூடாது. யோசிச்சா இங்கே எதையுமே செய்ய முடியாது. ‘மொட்ட சிவா...’ல கமிட் ஆனதுமே அட்வான்ஸா வந்த ஒரு கோடி ரூபாயைக் கொடுக்கலாம்னு முடிவுபண்ணிட்டேன். பணம் கொடுத்துடலாம், அதை யார் மூலமா செய்றது? யோசனையே இல்லை... ஆனந்த விகடன்தான் ஒரே சாய்ஸ். ‘கலாமின் காலடிச்சுவட்டில்... அறம் செய விரும்பு’ திட்டம் தீயா பத்திக்கிச்சு. எங்கே போனாலும் ஜனங்க சுத்திக்கிறாங்க. மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமா கலங்கவெச்சிடுறாங்க. மழை வெள்ளப் பாதிப்பு சமயத்துல ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். அன்புல கலங்கவெச்சுட்டாங்க. வெளியூர்ல இருந்து வந்து சென்னையைச் சுத்தப்படுத்திய துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையான பொருட்கள் கொடுத்தோம். அவங்க நன்றி சொல்லும்போது, ‘இந்த நன்றிக்கு நான் தகுதியானவன்தானா?’னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். நான் டான்ஸ் மாஸ்டரா வரணும்னு நினைச்சேன்... வந்தேன். ஆனா, அதுக்கு அப்புறம் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்... எல்லாமே போனஸ்தான். ` ‘அறம் செய விரும்பு’ திட்டத்தை விட்டுடாதீங்க’னு சொல்றாங்க. மக்களின் அன்புக்கு என்ன வேணும்னாலும் செய்யலாம். ஏதோ என்னால முடிஞ்சதை கிள்ளிக்கொடுத்திருக்கேன். எதிர்காலத்தில் கண்டிப்பா அள்ளிக்கொடுப்பேன். ‘ரொம்பப் பெரிய விஷயம் பண்றீங்க. சூப்பர்... சூப்பர்... வாழ்த்துகள்’னு ரஜினி சார் மனசார வாழ்த்தினார். இன்னைக்கு நான் சினிமாவில் இருக்கிறது அவர் போட்ட விதை. ‘ரொம்ப நாட்களாக மனசுக்குள்ளயே இருந்துச்சுண்ணே. இந்தப் பணம் எல்லாம் எங்கே இருந்து வருதுனு யோசிச்சேன். அங்கே இருந்துதானே வருதுனு தோணுச்சு. கொடுத்துட்டேன்’னு சொன்னேன். அவருக்கு அவ்வளவு சந்தோஷம். ‘ஆனந்த விகடன்கூட சேர்ந்து பண்றது இன்னும் நியாயமா, தர்மமா, சரியா இருக்கும். சரியானவங்களுக்குச் சரியான வழியில போய்ச் சேரும். வெரி குட்... வெரிகுட்’னார். ரஜினி சார், எனக்கு குருபோல இருந்து வழிநடத்துறவர். எந்தப் பின்னணியும் இல்லாம சினிமாவுக்கு வந்த எனக்கு அடையாளம், பின்னணி எல்லாமே ரஜினி சார்தான்!’’

“ரஜினி சார்தான் என் அடையாளம்!”

‘‘ராகவேந்திரா சுவாமிக்குக் கோயில் கட்டுனீங்க. இப்ப உங்க அம்மாவுக்குக் கோயில் கட்டுறீங்க. என்ன காரணம்?’’

‘‘முன்னெல்லாம் நாம ஜெயிக்கணும்... நாம மட்டும்தான் ஜெயிக்கணும்னு எனக்குள் பொறாமை உணர்வு இருக்கும். அடுத்தவங்க படம் ஓடுதுனு காதுல விழுந்தாலே செம கோபம் வரும். இப்ப அந்தக் கோபம் எல்லாம் போயேபோச்சு. ராகவேந்திர சுவாமி கோயில் கட்டினதுக்குப் பிறகுதான் இவ்வளவு மாற்றங்களும். இப்ப என் அம்மாவுக்குக் கோயில் கட்டிட்டு இருக்கேன். ‘டேய்... உயிரோட இருக்கிறவங்களுக்கு யாராவது கோயில் கட்டுவாங்களா?’னு என் குடும்பத்துக்குள்ளேயே அவ்வளவு எதிர்ப்பு. ‘அம்மா போனபிறகு அவங்களுக்குக் கோயில் கட்டி என்ன பண்றது? இருக்கும்போதே அவங்களைச் சந்தோஷமா வெச்சுக்கணும்னு தோணுச்சு. எனக்குத் தெரிஞ்சது சாமி கும்பிடுறதுதான். ‘என் புள்ளை எனக்காகக் கோயிலே கட்டுறான்'னு அவங்க பெருமைப்படணும். இந்த உலகத்துலயே தாய்க்குக் கோயில் கட்டினது நானாகத்தான் இருக்கும். அந்தத் தெய்வமும் எங்க அம்மாவும் வேறவேற இல்லை. சொல்லணும்னு தோணுச்சு. அதான்... அவ்ளோதான்!’’