பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தங்கத்தின் பேரானந்தம்!

தங்கத்தின் பேரானந்தம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கத்தின் பேரானந்தம்!

திரைப்பட இயக்குநர் சார்லஸ்

மீபத்தில் நடந்த 88-வது ஆஸ்கர் விருது விழாவின் சர்ப்ரைஸ், ஆஸ்கர் வின்னர் லியோனார்டோ டிகாப்ரியோ மட்டும் அல்ல; தனது 87-வது வயதில் ஆஸ்கர்  வென்று உலகத்தின் பார்வையையே தன் பக்கம் திருப்பிய இத்தாலிய இசைமேதை எனியோ மோரிகோனேவும்தான்.

2015-ம் ஆண்டு ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை `தி ஹேட்ஃபுல் எயிட்' படத்துக்காகப் பெற்றிருக்கிறார் எனியோ மோரிகோனே. 50 வருடங்களாக 500 படங்களுக்கும் மேலாக இசையமைத்து, உலகம் எங்கும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியவர் இவர். ஹாலிவுட் படங்களுக்கு பிஸியாக இசையமைத்துக் கொண்டிருந்த காலத்தில்கூட, தன் சொந்த நாட்டையும் பிறந்த ஊரான ரோம் நகரையும்விட்டு வெளியேறாத எனியோ மோரிகோனேவுக்கு இப்போதும் ஆங்கிலம் பேசத் தெரியாது.

இதற்கு முன்னர் இவர் இசையமைத்த ஐந்து படங்கள் ஆஸ்கர் பரிசீலனைப் பட்டியலில் இருந்தும் அவருக்கு அந்த விருது கிடைக்கவில்லை. ஆனால், 2007-ம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு ஆஸ்கர் விருது வழங்கிக் கெளரவித்தது ஆஸ்கர் கமிட்டி. அப்போது விழா மேடையில் பேசிய எனியோ `இந்த விருது எனக்குத் தொடக்கம்தான். இதே உத்வேகத்துடனும் ஊக்கத்துடனும் இசைப் பணிகளைத் தொடர்வேன்’ என அவர் சொன்னதை எல்லோரும் வழக்கமாகச் சொல்வதுதான் என எடுத்துக்கொண்டார்கள். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, `தி ஹேட்ஃபுல் எயிட்' படத்தின் இசையமைப்புக்காக இந்த ஆஸ்கர் விருதைப் பெற்று ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் எனியோ.

தங்கத்தின் பேரானந்தம்!

திரைப்படம், ஒரு காட்சிக் கலை. கதை, வசனம் எல்லாம் விஷுவலுக்குப் பின்னால்தான். அப்படியானால் இசையின் இடம் என்ன? பின்னணி இசையால் ஒரு படத்தை வேறு உயரத்துக்குத் தூக்கிச் சென்றுவிட முடியும் என்பதை பலமுறை நிரூபித்துக்காட்டியிருக்கிறார் எனியோ மோரிகோனே.

`கெளபாய்' படப் புகழ் இயக்குநர் செர்ஜியோ லியோனி இயக்கிய `தி குட், தி பேட் அண்ட் தி அக்லி’ படத்தில் ஒரு விஷுவல் கவிதைபோல, ஒரு மயானக் காட்சி உண்டு. ‘அசிங்கமானவ’னாக வரும் கதாபாத்திரம், நூற்றுக்கணக்கான கல்லறைகளுள் எதிலோ ஒன்றில் புதைக்கப் பட்டிருக்கும் தங்கத்தைத் தேடி ஓடும் வசனம் இல்லாத காட்சி அது. அவனது கண்களில் தெரியும் பேராசை மெள்ள மெள்ள அதிகரித்து வெறியாகவே மாற அவன் ஓடுகிறான். அவனைச் சுற்றி இருப்பவையோ இறந்த மனிதர்களின் கல்லறைகள், வாழ்க்கை நிலையில்லாதது என்பதை அறிவிக்கும் சாட்சியங்கள். ஆனால், புதையலைத் தேடி அலைபவனின் கண்களில் மட்டும் ஆசை குறையவே இல்லை. மெள்ள மெள்ள வேகம் அதிகரித்து, இறுதியில் காட்சிச் சட்டத்துக்குள் அவன் ஓர் இடத்தில் இருக்க, அவனைச் சுற்றி உலகம் சுற்றுவதுபோலத் தெரியும் கட்டம் அற்புதமானது. நடிப்பும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் இணைந்து உருவாக்கிய இந்தக் காட்சிக்கு உயிரூட்டியது உண்மையில் இசைதான். எனியோ மோரி கோனே இந்தக் காட்சிக்காக அமைத்த பின்னணி இசைக்கோர்வைக்குப் பெயர் `தங்கத்தின் பேரானந்தம்’.

செர்ஜியோ லியோனி எப்போதும் முக்கியமான காட்சித்தொடர்களைப் படம்பிடிப்பதற்கு முன்னர், தனது பள்ளித் தோழரும் இசையமைப்பாளருமான எனியோ மோரிகோனேயிடம் அந்தக் காட்சியை விளக்கி, பின்னணி இசையைப் பதிவுசெய்து வாங்கிக்கொள்வார். பிறகு, அந்த இசையை படப்பிடிப்புத் தளத்தில் ஒலிக்கச்செய்து, அதற்கு ஏற்ப படம்பிடிப்பார். இதனாலேயே அவர் படங்களில் வரும் பல காட்சிகள், பாடலைப் படமாக்கியதுபோல இருக்கும். அந்தக் கல்லறைக் காட்சியும் அதன் தொடர்ச்சியாக வரும் உச்சக் காட்சியில் மூன்று பேருக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதலும், இதே போல இசைக்குத் தக்கபடி படமாக்கப்பட்டு தொகுக்கப்பட்டவைதான்.

லியோனி, தனது ஆரம்பகாலப் படங்களை இத்தாலிய மொழியிலேயே எடுத்தார்; செலவைக் குறைப்பதற்காக ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு நடத்தினார். ஆனால், கதைகளோ அமெரிக்கக் கௌபாய்களைப் பற்றியவை. இந்த விநோதக் கலவை காரணமாக, அந்தப் படங்கள் `ஸ்பாகட்டி வெஸ்டர்ன் (Spaghetti Western)’ என்ற தனிப் பெயரில் அடையாளப்படுத்தப்படுகின்றன. அந்தப் படங்களுக்கு இசையமைத்ததின் மூலம்தான் எனியோ மோரிகோனே முதன்முதலில் வெளியுலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தார்.

பெரிய இசைக் குழுவை வைத்து ஒலிப்பதிவு செய்வதற்கான பட்ஜெட் இல்லாததால் புதுமையாக, துப்பாக்கி வெடிக்கும் சத்தம், சாட்டையின் சத்தம், விசில், குரல் ஒலிகள், மவுத் ஆர்கன் மற்றும் மோர்சிங் போன்ற சிறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி அவர் அந்தப் படங்களுக்கு இசை கோத்தார். அந்தப் புதிய இசை வடிவம் `ஸ்பாகட்டி வெஸ்டர்ன் மியூஸிக்’ என உலகெங்கும் இன்றும் தனித்த இசை வடிவமாக அறியப்படுகிறது.
 
ரோலண்ட் ஜோஃபே இயக்கிய ‘தி மிஷன்’ படத்துக்கு அவர் அமைத்த இசை, தெய்வீகம்! வேறு எப்படியும் அதை விவரிக்க முடியாது. ‘ஓபோ’ என்கிற மரத்தால் ஆன குழல் இசைக் கருவியுடன் எளிமையாக ஆரம்பித்து விரிந்து நிறையும் அதன் தீம் இசையைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நம் கண்கள் பனிக்கும். பின்னணி இசை ஒரு படத்துக்கு எத்தனை ஆழத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இப்போதும் சொல்லப்படும் படம் அது. அந்த இசைக்கு ஆஸ்கர் நாமினேஷன் கிடைத்தது... ஆனால் விருது கிடைக்கவில்லை. ஆஸ்கர் விருதுகளின் மேல் நம்பிக்கையை இழக்கவைக்கும் நிகழ்வுகளில் ஒன்று அது.

தங்கத்தின் பேரானந்தம்!

குவான்டின் டொரன்டினோ, தன் படங்களுக்கு என தனியாக இசையமைப்பாளரை வைத்துக் கொள்பவர் அல்ல. காட்சி களுக்குப் பொருத்தமான இசையை வெவ்வேறு இசைக் கலைஞர்களின் ஆல்பங்களில் இருந்து தேர்ந்தெடுத்து அவற்றுக்கான உரிமத்தைப் பெற்று பயன்படுத்திக்கொள்வார். அப்படி அவர் தன் பல படங்களுக்கு எனியோ மோரிகோனேயின் இசைத் தொகுதிகளைத் தொடர்ந்து பயன்படுத்தியபடியேதான் இருந்தார். இப்போது ‘தி ஹேட்ஃபுல் எயிட்’ படத்துக்கு அவரையே முழுமையாக இசையமைக்க வைத்திருந்தார் டொரன்டினோ.

எனியோ மோரிகோனேவின் அப்பா ஒரு ட்ரம்பட் இசைக் கலைஞர். அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாத நாட்களில் எனியோதான் அப்பாவின் இடத்தை நிரப்பியவர். 1956-ம் ஆண்டு தன் இசைக்கு வரிகள் சேர்த்து, உயிர் கொடுத்த மரியோ ட்ரவியா என்னும் பாடலா சிரியரைக் காதலித்து மணந்து கொண்டார் எனியோ.

60 ஆண்டுகளாகத் தொடர்கிறது இந்த இசைக்காதல்.

எனியோவுக்கு கோல்டன் குளோப் விருது அளிக்கப்பட்ட போது, அதை மோரிகோனேவின் சார்பாக இயக்குநர் டொரன்டினோ பெற்றுக்கொண்டார். அப்போது `எனியோ மோரிகோனே, என் விருப்பத்துக்கு உரிய இசையமைப்பாளர். நான் இசையமைப்பாளர் எனச் சொல்வது, திரைப்பட இசையமைப்பைப் பற்றி அல்ல. அது ஒரு குப்பை. நான் பேசுவது மொஸார்ட், பீத்தோவன் போன்ற இசை மாமேதைகளைப் பற்றி' என்றார்.

ஆமாம்... எனியோ மோரிகோனே ஓர் இசை மாமேதை!