பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சாலக்குடி ஆட்டோ கலைஞன்!

சாலக்குடி ஆட்டோ கலைஞன்!
News
சாலக்குடி ஆட்டோ கலைஞன்!

அதிஷா, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ட்டோக்காரர், மிமிக்ரி கலைஞர், நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர், சினிமா நடிகர், செண்டைமேள வாத்தியக் கலைஞர்... என பன்முகங்கள்கொண்ட கலாபவன் மணியின் `நாடன் பாட்டுக்கள்’, இப்போதும் கேரளா தெருமுனை தேநீர்க் கடைகளில் ஒலிக்கின்றன. ஆனால், அவர் இப்போது இல்லை.

சாலக்குடி, குன்னத்துநாடு கிராமத்தில், ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஏழாவது குழந்தை மணி. அப்பா குன்னச்சேரி ராமனுக்கு கூலி வேலை. பெரும்பாலான நாட்களில் வீட்டில் பட்டினி. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் அப்பா, திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, துண்டால் உடல் வியர்வையைத் துடைத்தபடி பாடத் தொடங்குவார். பிள்ளைகள் ஓடிவந்து அருகில் உட்கார, திண்ணைக் கச்சேரி களைகட்டும். பசியையும் மீறி பாடல்கள் கணீரென ஒலித்துக்கொண்டே இருக்கும். பாடல் மயக்கத்தில் பிள்ளைகள் உறங்குவர். தன் பால்யம் முழுக்க, ஒவ்வொரு நாளும் காதை நிறைத்த, வியர்வை மணக்கும் அந்தப் பாடல்கள்தான் கலாபவன் மணியின் கலையார்வத்துக்கு விதை.

சாலக்குடி ஆட்டோ கலைஞன்!

படிப்பை, வறுமை முடக்கிப்போட, பத்தாவது படிக்கும்போதே ஆட்டோ ஓட்ட ஆரம்பித்துவிட்டார் மணி. ஆனால், அதன் பிறகு அவர் பார்த்த வேலைகளின் பட்டியல் நீளம்... ஆயுர்வேத மருத்துவ அசிஸ்டென்ட், கள் இறக்குவது, மணல் லாரி லோடுமேன், சிப்பி எடுப்பது, கயிறு பிரிப்பது, கிணறு தோண்டுவது, கல் வெட்டுவது, கட்டடத் தொழிலாளி, சாலைப் பணியாளர். ஆனால், எந்த வேலைக்கு மத்தியிலும் பாட்டும், பள்ளிக்காலத்தில் கற்ற மிமிக்ரியும் சந்தோஷமும் கட்டாயம் இருக்கும். இவரது ஆட்டோ பயணிக்கு, பயணத்தோடு சேர்த்து பாட்டும் மிமிக்ரியும் ஃப்ரீயாகக் கிடைக்கும். அப்படி பரிச்சயமான பீட்டர், மணியை கலாபவனில் சேர்த்துவிட, `கலாபவன்’ மணியானார். கலாபவன் அனுமதி இல்லாமல் தூர்தர்ஷன் நாடகம் ஒன்றில் நடித்ததால் அங்கு இருந்து வெளியேற்றப்பட்டார் மணி. ஆனால், கடைசி வரை அவர் பெயரோடு கலாபவன் இருந்தது!

சினிமா வாய்ப்புத் தேடும் படலம்... `கேப்டன் பிரபாகரன்’ படத்தில் ஒரு சிறிய வேடம். படப்பிடிப்புத் தளத்தில் தமிழ் நடிகர்களை மிமிக்ரி செய்ய, அதைப் பார்த்த விஜயகாந்த் கூப்பிட்டுப் பாராட்டினார். மணிக்கு அன்றைய தினம் 150 ரூபாயும் வயிறு நிறையச் சாப்பாடும்தான் சம்பளம். பிறகு, நான்கு ஆண்டுகள் நரக வேதனை... வாட்டும் வறுமை.

1995-ம் ஆண்டில் வெளியான `அக்‌ஷரம்’ படத்தில் கலாபவன் மணிக்கு கொஞ்சம் பெரிய கதாபாத்திரம் அமைய, ‘வாசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' (தமிழில் காசி) படம் மணியை உச்சத்தில் கொண்டுவந்து நிறுத்தியது. அந்தப் படத்தில் பார்வையற்ற ஹீரோவாக தன் நடிப்பு முத்திரையைப் பதித்தார் மணி. படம் சூப்பர் டூப்பர் ஹிட். அது மூன்று மொழிகளில் ரீமேக் ஆக ஒட்டுமொத்த கேரளாவும் மணியைக் கொண்டாடியது.

அந்தப் படத்துக்காக இவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய விருது வேறு ஒருவருக்கு வழங்கப் பட்டது. அதைக் கேட்டு `அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார் மணி’ என்ற செய்திகள் அடுத்த நாள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. எதையுமே நகைச்சுவையாக்கும் மணி, இதையும் ஜாலியான நாட்டுப்புறப் பாடலாக மேடை ஏற்றி முழங்கினார். `என் வாழ்வின் கடினமான கணங்களை நானே கேலியாக்கியிருக்கிறேன். அப்படிப்பட்ட நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன் என ஏளனம் செய்பவர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்’ என்றார் மணி.

சாலக்குடி ஆட்டோ கலைஞன்!

‘சம்மர் இன் பெத்லேகம்’, ‘வேட்டம்’, ‘சோட்டா மும்பை’, ‘கருமாடிக்குட்டன்’... படங்களில் மணியின் கதாபாத்திரங்கள் தனித்துவமானவை.

மணி தமிழில் நடித்தது மிகச் சொற்பப் படங்களே. ஆனாலும், அவற்றில் தன் தனித்த முத்திரையை அழுந்தப் பதித்தார். கடைசியாக அவர் நடித்த `பாபநாசம்’ படம் அதற்கு சான்று. விசித்திர சேஷ்டைகள் செய்த `ஜெமினி’ தேஜா கதாபாத்திரத்தை யாரால்தான் மறக்க முடியும்?

வாழ்க்கையின் முதல் பாதியில் மணி அனுபவித்த வறுமை, அவரை தொடர்ந்து ஏழைகளோடே வைத்திருந்தது. அவரை மக்கள் கலைஞனாக மாற்றியதில் சாலக்குடி மார்க்சிஸ்ட் அமைப்புக்கு நிறையப் பங்கு உண்டு.

தான் பிறந்த சாலக்குடிக்குச் செய்த உதவிகள் பற்றி இப்படிச் சொன்னார் `கலாபவன்’ மணி... ‘நான் செய்வதை உதவி எனச் சொல்லாதீர்கள். அப்படி நினைத்து நான் எதையும் செய்யவில்லை. ஓர் ஊரில் ஒருவன் நன்றாக வாழ்கிறான் என்றால், அதற்குக் காரணமாக அந்த ஊரில் வறுமையில் துடிக்கும் மனிதர்களும் இருப்பார்கள். சமூகம் அப்படித்தான் இயங்குகிறது என நான் புரிந்துகொள்கிறேன். என் வாழ்வின் ஆரம்பத்தில் நான் ஓட்டிய ஆட்டோதான் எங்கள் குடும்பத்தின் பசியைப் போக்கியது. ராப்பகல் பாராமல் கிக்கர் அடித்து அடித்து என் இடுப்பும் கைகளும் தளர்ந்துவிடும். அதை நினைத்தால் இன்றைக்கும் அழுதுவிடுவேன். பழைய வாழ்க்கை மனதில் என்றும் அழிவது இல்லை. ஆனால், இந்தச் சாலக்குடிக்காரன் சாலக்குடி நாட்டைவிட்டு எங்கும் போகவில்லை’.

உண்மைதான் மணி சேட்டா!