என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

மாவீரன் கரிகாலன்!

நா.கதிர்வேலன்

##~##

''இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடி நடக்கிற கதை. 'கரிகாலன்’ காலத்தை அச்சுஅசல் அப்படியே கொண்டுவரணும்னு ஓடிட்டு இருக்கோம். உடனே, 'ஏதோ வரலாற்றுச் சரிதை’னு முடிவு பண்ணி டாதீங்க. இது முழுக்க முழுக்க ஃபேன்டஸி. ஒரு 'கிளாடியேட்டர்’, 'டிராய்’ மாதிரி தமிழில் இதுவரை ஒரு படம்கூட வரலை. அப்படிப்பட்ட க்ளாஸிக் தமிழ்ப் பதிவாக கரிகாலன் இருப்பான். படத்துக்கு பட்ஜெட்டே போடலை. ஏன்னா, அதுதான் போய்க்கிட்டே இருக்கே!'' - உற்சாகம் தெறிக்கப் பேசுகிறார் இயக்குநர் எல்.ஐ.கண்ணன். ஹாலிவுட்டில் சினிமா படித்து, அறிமுக வாய்ப்பிலேயே விக்ரம், மெகா பட்ஜெட் என்று படா கேன்வாஸ் பிடித்திருப்பவர்.

 ''சோழ மன்னன் கரிகாலன் மீது ஏன் இத்தனை அக்கறை?''

''தமிழ் படிக்கும் யாராலும் பள்ளிப் பாடத்தில் கரிகாலனைத் தாண்டாமல்  இருக்க முடியாது. ஏனோ, சந்திரகுப்த மௌரியர் கண்டுகொள்ளப்பட்ட அளவுக்கு கரிகாலன் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், கரிகாலன் ஒரு மாவீரன். புறநானூற்றுப் பாடல்களில் சிலவற்றில் கரிகாலன் வருகிறான். பொன்னியின் செல்வனில் ஆதித்திய கரிகாலன் தென்படுகிறான். சாண்டில்யனின் யவன ராணியில் கரிகாலன்பற்றிய குறிப்புகள் இருக்கு. 'கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை’ பாட்டை உங்க வாழ்க்கையில் ஒரு தடவையாச்சும் கேட்ருப்பீங்க. கிடைச்ச வரை கரிகாலன் பற்றிய குறிப்புகள் அவ்வளவு சுவாரஸ்யம். அலெக்சாண்டர் மாதிரி பெரிய வசீகரனா இருந்திருக்கான். எங்களுக்குக் கிடைச்சதை எல்லாம் சினிமாவில் கொண்டுவர முடியாது. அதனால், எது தேவையோ அதை வெச்சுக் கதை சொல்லி இருக்கோம்!''

மாவீரன் கரிகாலன்!

''கரிகாலன் ஒரு மாவீரன்தான். ஆனால், நூற்றாண்டுகளுக்கு முந்தைய அந்த வாழ்க்கை இன்றைய டிரெண்ட் சினிமாவாக வடிவம் எடுக்க முடியுமா?''

''அதுதான் மேஜிக். இந்தியாவில் இந்த அளவுக்கு ஒரு சினிமாவில் கிராஃபிக்ஸ் பண்ண முடியுமானு ஆச்சர்யத்தின் உச்சத்துக்குப் போவீங்க. ஏற்கெனவே 'எந்திரன்’ படத்துக்கு அனிமேஷன் பண்ண அனுபவம் இருக்கு எனக்கு.

மாவீரன் கரிகாலன்!

கரிகாலனின் ஆரம்ப காலத்தில் இருந்து, ஆட்சியைப் பிடிக்கிற வரைக்குமான கதை செம விறுவிறுப்பா இருக்கும். காதல், போர், வீரம், வெறி, வெற்றி, பரவசம்னு பல நிலைகளைக் கடந்து போகும். நம்ம ஆளுங்களுக்கு ஃபேன்டஸி எப்பவுமே பிடிக்கும். 'ஒரு காலத்தில் பெரிய மரப் பொந்தில் அண்டரண்டபட்சி இருந்தது’னு பாட்டி கதை சொன்னப்போ, கண்கள் விரியக் கேட்டு ரசிச்சு லயிச்ச நமக்கு, இது எல்லாமே பிடிக்கும். சினிமா பண்ணும் வித்தையில் எவ்வளவோ டெக்னிக்குகள் வந்தாச்சு. அதில் பாதிகூட நமக்குத் தெரியாது. எல்லாத்தையும் தெரியவைப்பான் கரிகாலன்!''

''காவிரிப்பூம்பட்டினம், உறையூர், சோழர் கால நாகரிகம்... இதெல்லாம் தமிழனின், தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகள். அதை அப்படியே கொண்டுவர முடியுமா?''

''காவிரிப்பூம்பட்டினம்  கண்கொள்ளாத பேரழகில் மயக்கும் துறைமுக நகரம். இன்னைக்குப் போய்ப் பார்த்தால் அதன் சாயல்கள்கூடக் கிடைக்காது. உறையூர் சகல செல்வங்கள் மற்றும் செல்வாக்கோடு இருந்த பிரதேசம்.

இன்னைக்கு அதன் சுவடுகள்கூடக் கிடையாது. எல்லாத்தையும் மறு உருவாக்கம் செய்திருக்கோம். காவிரிப் பூம்பட்டினம்கிற கனவு நகரத்தை கிட்டத்தட்ட மறுநிர்மாணம் பண்ணி யாச்சு. ஆனா, அது எப்படின்னு இப்பவே கேட்கக் கூடாது.  ஸ்க்ரீன்ல பார்க்கும்போதுதான்  தெரியும். இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி காட்டுறது தானே கலை? தமிழ் சினிமாவுக்கான எங்கள் உழைப்பின் பரிசுதான் கரிகாலன். செலவாகிற பணத்துக்கு கணக்குப் பார்க்காத பார்த்தி-வாசன்னு இரண்டு சகோதரர் கள்தான் என் கனவின் அச்சாணி!''

மாவீரன் கரிகாலன்!

''விக்ரம் கரிகாலனாக தன்னை உருமாத்திக்கிட்டாரா?''  

''அதுக்குத் தேவையே இருக்காதுன்னு நினைக்கிறேன். அந்தக் கம்பீரம், உடல்வாகு, பார்வை, வீரம், நடிப்பு... இதுக்கு மேல் என்ன வேணும்? மாவீரனுக்கான எல்லா லட்சணங்களும் உடையவர் விக்ரம். கதை - திரைக்கதையை டீடெயில் பண்ண உடனே கால்ஷீட் கொடுத்துட்டார். ஆனா, இந்த மாதிரி படங்களில் நடிப்பது சும்மா விளையாட்டு கிடையாது. ஈடுபாடும் தன்னை வருத்திக்கும் மனப்பக்குவமும் இருந்தால் மட்டும்தான் கரிகாலன் கதாபாத்திரத்துக்கு செட் ஆக முடியும். நிச்சயம் 'கரிகாலன்’ விக்ரமின் பயணத்தில் ஒரு மைல் கல்!''

மாவீரன் கரிகாலன்!

''எல்லா இடங்களிலும் தமிழ் புகழ். ஆனா, ஹீரோயின்களுக்கு மட்டும் மாற்றான் தோட்டத்தில் மல்லிகை பறிக்கப் போயிடுவீங்களே...''

''இதுக்கு என்ன பதில் சொல்ல? எந்தச் சாயலும் இல்லாத ஃப்ரெஷ் முகம் தேவைப்பட்டது. கரிகாலனின் வாழ்க்கையில் பல இடங்களில் பல பெண்கள் பங்கெடுக்கிறார்கள். அதில் அயல் தேசத்தில் இருந்து வரும் ஒரு பெண், ஒரு டான்ஸர், கிராமத்துப் பெண்ணுனு மூணு பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துஇருக்கோம். சல்மானின் ஜோடியாக 'வீர்’ படத்தில் நடித்த ஷெரின் கான், 'ரத்த சரித்தி’ரத்தில் வந்த ராதிகா அப்தே, மித்ரா சூரியன்னு மூணு பேர் நடிக்கிறாங்க. வாங்களேன்.... ரிலாக்ஸா ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி போவோம்!''