##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
த்ரிஷா, தமிழின் நம்பர் ஒன் நடிகை (படத்தில்தான் பாஸ்!). நிச்சயதார்த்தம் முடிந்து நிஷாவைக் கைப்பிடிக்கக் காத்து இருக்கும் மாதவன்... மல்ட்டி மில்லியனர். ஒரு நடிகையின் சினிமா வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் குழப்பி, 'சூர்யாவுக்கும் நிஷாவுக்கும் ஏன் ஒரே கேரவன் வேன்?’, 'வெளிநாட்டு ஷூட்டிங்கில் விஷாலோடு ரகசியச் சந்திப்பா?’ என்று சதா சந்தேகம் மாதவனுக்கு.

விடுமுறைக்காகத் தன் தோழி சங்கீதாவுடன் கப்பலில் பயணிக்கிறார் த்ரிஷா. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான சங்கீதா விவ£கரத்தானவர். அங்கே, மாதவனுக்காக த்ரிஷாவைப் பின்தொடர்கிறார் முன்னாள் ராணுவ மேஜரும் இன்னாள் டிடெக்டிவ்மான கமல். தன் கேன்சர் நண்பன் ரமேஷ்அரவிந்தின் மருத்துவச் செலவுகளுக்காகவே இந்தத் துப்பறியும் புராஜெக்ட். 'த்ரிஷாவுக்கு வேறு காதல்களும் இல்லை... கள்ள உறவுகளும் இல்லை!’ என்று துப்பறிந்து கமல் சொன்னதுதான் தாமதம். மாதவன் 'அப்படியே திரும்பிடுங்க. பணம் கொடுக்க முடியாது!’ என்கிறார். மாதவனின் அழுகுணி ஆட்டத்தால் மனம் நொந்த கமல், 'த்ரிஷாவுக்கு ஒரு காதலன் இருக்கிறான்!’ என்று ஆடும் தகிடு தத்தம் - இந்த இரண்டு ஆட்டங்களுக்கு இடையில் புகுந்து புறப்படுகிறது அம்பு!
ஆச்சர்யம்... ரொமான்ஸ் சில்மிஷங்கள் எதுவுமே இல்லாத கமல் படம். கண்கள் கலங்கி வார்த்தைகளை மென்று விழுங்குவது, உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் வார்த்தைகளைப் பாதியிலேயே விட்டுவிடுவது என கமல் பிராண்ட் படம். கூடுதலாக இதில் கவிஞர் அவதாரம்!
மாதவனோடு விவாதித்துக்கொண்டே கார் ஓட்டி, விபத்துக்கு உள்ளாகும் த்ரிஷா, பிறகு கமல் மனைவி மரணத்துக்குத் தான்தான் காரணம் என்று கண்கள் கலங்கும்போது மட்டும் சின்ன தாகப் பிரகாசிக்கிறார். அம்புபோலப் பல திசை களிலும் பாய்ந்து கலக்கி இருப்பவர் மாதவன்.''தப்பு தான் எதுவுமே நடக்கலையே மேஜர்? எதுக்கு ஃபுல் கேஷ் கொடுக்கணும்?'' என்று போங்கு ஆட்டம் ஆடுவதாகட்டும், த்ரிஷா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று கமல் சொல்வதை நம்பி, சரக்கு நீச்சல் அடித்து கண்டமேனிக்கு வாய்குழறு வதாகட்டும் மாதவனுக்கு இந்தப் படம் பென்ச் மார்க். 'இந்த ஆம்பளைகளே இப்படித்தான்டி’ என்று தன் மகனையே நம்பாமல், 'நல்லாத் தூங்குற குழந்தைங்க கால் கட்டை விரலை ஆட்டு வாங்க’ என்று கலாய்ப்பதில் தொடங்கி, க்ளைமாக் ஸில் சரக்கு அடித்து அலப்பறை கொடுப்பதுவரை... சபாஷ் சங்கீதா!

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையும் மனுஷ்நந்தனின் ஒளிப்பதிவும் ஆறுதல் அம்சங்கள். த்ரிஷாவின் தாறுமாறான டிரைவிங்கால் மரணமடைவது கமலின் மனைவி என்கிற இடைவேளை சஸ்பென்ஸ் மட்டுமே போதாதே. என்னதான் பிரச்னையோ... காமெடியும் போதவில்லை. கதையும் நகர்கிற விதமாக இல்லை.
என்னதான் நகைச்சுவை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்திரித்ததைத் தவிர்த்து இருக்கலாம்.
மன்னார், மதன், அம்பு என்று டைட்டிலுக்கு யோசித்த நேரத்தை கமலும் கே.எஸ்.ரவிக்குமாரும், திரைக்கதையை உருவாக்கச் செலவழித்து இருந்தால்... கிடைச்சிருக்கும் தெம்பு!
- விகடன் விமர்சனக் குழு