Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 9

குறும்புக்காரன் டைரி - 9
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 9

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 9

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 9
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 9

தினமும் அம்மா சமையல் பண்ணும்போது, 'இதைப் பண்றதுக்கு இவ்வளவு நேரமா?’னு சலிப்பா சொல்லிடுவேன். ஆனா, சமைக்கிறது எம்புட்டுக் கஷ்டம்னு தெரிஞ்சுக்கிற காலமும் என் லைஃப்ல வந்துச்சு.

எக்ஸாம் டைம்ல, சொந்தக்காரங்க கல்யாணம்னு அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிட்டாங்க. ''டேய் லோகேஷ், தம்பி சின்னப் பையன். நீதான் அவனைப் பத்திரமா பாத்துக்கணும்'னு என் அண்ணன்கிட்டே சொல்லிட்டுப் போனாங்க. எலிக்கு செக்யூரிட்டியா பூனைப் படையை வெச்ச மாதிரி இருந்தது.

கொஞ்ச நேரம் விளையாடிட்டு வீட்டுக்கு வந்து படிக்கலாம்னு புஸ்தகத்தைத் தொறக்கும்போது,  'டேய் கிஷோர், இங்கே இருந்த தயிர்சாதம் எங்கடா?'னு கத்துறான் லோகேஷ்

குறும்புக்காரன் டைரி - 9

நான் கூலா, 'பக்கத்து வீட்டு நாய் ரொம்ப நேரமா பசியில கத்திச்சு. அந்தச்  சாதத்தை நாய்க்கு வெச்சுட்டேன்'னு பெருமையா சொன்னேன்.

'அடேய், அது நமக்காக அம்மா ரெடி பண்ணி வெச்சுட்டுப் போனதுடா'னு சொன்னதும் ஷாக்.

'அய்யய்யோ! அப்போ நமக்கு சாப்பிட?'னு கேட்டதும், முறைப்போட துரத்தினான். சில பல டாம் அண்ட் ஜெர்ரி ஓட்டங்களுக்குப் பிறகு, டயர்டாகி, ''இப்போ என்னதான்டா பண்றது?'னு சோகமா கேட்டேன்.

கொஞ்சம் யோசிச்சவன், 'நாமளே சமைச்சா என்ன?'னு ஆர்வமா கேட்டான் லோகேஷ்.

''எனக்கென்னமோ இது சரிப்பட்டு வரும்னு தோணலை''னு ஒரு ரியாக்‌ஷனைக் காட்டியதும், ''அட வாடா, இது என்ன ராக்கெட் ஃபார்முலாவா? இன்னிக்கு நமக்கு நாமே சமைக்கிறோம், சாப்பிடுறோம்'னு கிச்சனுக்கு இழுத்துட்டுப் போனான்.

எல்லாச் சாமான்களையும் வெறிக்க வெறிக்கப் பார்த்தவன்கிட்டே, ''லோகேஷ், ஒரு நாள் ஒரு வேளை சாப்பிடாமக்கூட இருந்துக்கலாம்டா. எதுக்கு ரிஸ்க்?'னு கெஞ்சினேன்

குறும்புக்காரன் டைரி - 9

''வாழ்க்கைனா ரிஸ்க் வேணும்டா. அரிசியையும் தண்ணியையும் எடு. குக்கர்ல சமைப்போம்'னு ஒரு போர் வீரன் போல தயாரானான்.

ரொம்ப நேரம் லைட்டரை கிளிக்கியும் கேஸ் ஸ்டவ் எரியவே இல்லை. ''சே, என்னடா இது, லைட்டர் சரியில்லடா’னு டென்ஷன் ஆனான் லோகேஷ்.

நான் சந்தேகமா குனிஞ்சு பார்த்துட்டு, ''டேய், கீழே ஆன் பண்ணவே இல்லையே. சாவியே போடாம ஸ்டார்ட் பண்ணினா எப்படிடா வண்டி ஓடும்?'னு கேட்டேன்.

கேஸை ஆன் பண்ணி, ஸ்டவ்வுக்கு நேரே லைட்டரை க்ளிக் பண்ண குப்புனு தீ வந்தது, ''ஹையா சூப்பர்... உனக்குள்ளே இவ்ளோ திறமை இருக்கும்னு நினைக்கவே இல்லை. இனி என் திறமையைப் பார்''னு சொன்னான்.

ஒரு சமையல் பண்றதுக்கு சயின்டிஸ்ட் லெவல்ல பில்டப் குடுக்குறானேன்னு வெறுப்பா இருந்தாலும் வேற வழியில்ல. சோறு முக்கியம்னு கம்முனு இருந்தேன்.

''குக்கர்ல சமைக்கணுமா? அம்மாவை நினைச்சுப் பார் லோகேஷ். நமக்கு ஏதாச்சும் ஆனாலும் பரவாயில்லை. குக்கருக்கு ஏதாச்சும் ஆனா, குமுறக் குமுற அடிப்பாங்க.

குறும்புக்காரன் டைரி - 9

'அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்'னு சொல்லி குக்கரை எடுத்து வெச்சான். அரிசியைப் போட்டு தண்ணியை ஊத்தியாச்சு. இனி, குக்கர் விசில் அடிக்கிறதுதான் பாக்கி, அப்பதான் ஒரு டவுட்டு.

''எத்தனை விசில் வரணும், ஒரு இருபது?'னு கேட்டான்.

'என்னது இருபதா? ட்வென்ட்டி ட்வென்ட்டி மேட்சா நடக்குது? பத்து இருக்கும்'

சரி, உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். 15 வெச்சிப்போம்னு முடிவுக்கு வந்தோம். அடுத்து, குழம்பு எப்படி வைக்கலாம்னு டிஸ்கஷன், ''அம்மாவுக்கே போன் பண்ணி கேட்டா என்ன?'

'சொந்தச் செலவுல சூனியம் வெச்சுக்கிற மாதிரி. வேணும்னா ஜெகன் அம்மாவுக்கு போன் பண்ணிக் கேக்கலாம்'னு சொன்னேன்.

அவங்களுக்கு போன் பண்ணி கேட்டதும், ''அட பரவாயில்லையே, ரொம்ப பொறுப்பா சமையல் பண்றீங்களே''னு பாராட்டுப் பத்திரம் வாசிச்சுட்டு,  ''என்ன காய்கறி இருக்கு?''னு கேட்டாங்க.

கேரட்டும் கத்திரிக்காயும் இருந்துச்சு. அவங்க சொல்லச்சொல்ல நோட் பண்ணிக்கிட்டே வந்தோம். நடுவுல குக்கர் சத்தம் போட, 'என்ன சத்தம் கிஷோர்'னு கேட்டாங்க.

''அரிசி வெச்சிருக்கோம். குக்கர் விசிலடிக்குது ஆன்ட்டி. 15 வந்தா போதும்தானே?''னு கேட்டேன்.

'என்னது பதினைஞ்சு விசிலா? அடேய், குக்கரே வெடிச்சுரும். மூணுக்கு மேல வைக்கக் கூடாது'னு ஆன்ட்டி பதற, உடனே பாய்ஞ்சு ஆஃப் பண்ணினோம்.

'கிஷோர் இதுவரைக்கும் எத்தனை விசில் வந்திருக்கு?'னு லோகேஷ் கேட்க, 'ரெண்டோ, மூணோ மறந்துட்டேன். ச்சே என்ன டெக்னாலஜி கண்டுபுடிச்சு இருக்காங்க. குக்கர் விசிலை கவுன்ட் பண்றதுக்கு ஒரு டிஜிட்டல் கவுன்டர் வெச்சா எவ்ளோ ஈஸியா இருக்கும்'னு சொன்னேன்.

அடுத்தது குழம்பு. ஜெகன் அம்மா சொன்ன குறிப்புகளின் அடிப்படைல ஒண்ணொன்னா பண்ணினோம். 'உப்பு தேவையான அளவு.'

'அது என்னடா தேவையான அளவு?

குறும்புக்காரன் டைரி - 9

'யாருக்குத் தெரியும்? குத்துமதிப்பா போடுவோம். குக்கரைத் திறந்து சாதம் வெந்துடுச்சா பாரு'ன்னு சொன்னான்.

நான் பிஸ்கட் பாக்கெட்டைத் திறக்கற மாதிரி குக்கரை டப்புனு திறந்ததும், 'புஸ்ஸ்ஸ்’னு நீராவி அடிக்க, பயந்துபோய் குக்கரைக் கீழே போட்டுட்டேன். கிச்சன் ஃபுல்லா சாதம்.

அப்போ, காலிங்பெல் சத்தம் கேட்டுச்சு. 'ஐயையோ அம்மா ரிட்டன் வந்துட்டங்களோ?’னு பேய் முழி முழிச்சேன். லோகேஷ் தைரியமா போய் கதவைத் திறந்தான்.

ஜெகன் அம்மா. ''நீங்க சமைக்கறேன்னு சொல்லி என்ன அமர்க்களம் பண்ணப்போறீங்களோனு பயந்துட்டே வந்தேன். என்ன ஆச்சு?''னு கேட்டுக்கிட்டே உள்ளே வந்தாங்க. கிச்சனின் அலங்கோலத்தைப் பார்த்துட்டு, ''நீங்க எதுவும் சமைக்க வேணாம். என் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க'னு சொல்லி கூட்டிட்டுப் போனாங்க.

அங்கே ஃபுல் கட்டு கட்டிட்டுத் திரும்பும்போது, ''டேய் கிஷோர், வீட்டுக்குப் போனதும் கிச்சனை சுத்தம் செய். ஒரு குக்கரைக்கூட ஒழுங்கா திறக்கத் தெரியலை’னு ஏப்பத்தோடு மிரட்டலா சொன்னான் லோகேஷ்.

வருங்காலத்துல பெரிய சயின்ட்டிஸ்ட் ஆகி, விசிலைக் கவுன்ட் பண்ற மாதிரியும்  ஆட்டோமேட்டிக்கா ஓப்பன் ஆகிற மாதிரியும் ஒரு குக்கரைக் கண்டுபிடிக்கணும்!

(டைரி புரட்டுவோம்)