Published:Updated:

உலகத்துல எவ்வளவோ கோர்ஸ் இருக்கு...நான் ஏன் இன்ஜினீயரிங் படிச்சேன்?

உலகத்துல எவ்வளவோ கோர்ஸ் இருக்கு...நான் ஏன் இன்ஜினீயரிங் படிச்சேன்?
உலகத்துல எவ்வளவோ கோர்ஸ் இருக்கு...நான் ஏன் இன்ஜினீயரிங் படிச்சேன்?

பா.ஜான்ஸன், ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

`படிச்ச படிப்புக்கு ஒழுங்கா வேலைக்குப் போயிருந்தா, நீ பெரிய ஆளாகியிருப்பேடா!' என வீட்டில் திட்டு வாங்காத படைப்பாளிகள்  யாராவது உண்டா? தமிழ் சினிமாவில் இன்று பிரபலமாக இருக்கும் பல இயக்குநர்களும் இப்படித்தான் ஒருகாலத்தில் நிறையப் படித்துவிட்டு வீட்டைப் பகைத்துக்கொண்டு படம் எடுக்க வந்தவர்கள். ஒருவேளை, அவர்கள் படித்த  படிப்புக்கு ஏற்ற வேலையைப் பார்த்திருந்தால் என்ன ஆகியிருப்பார்கள்?

மணிரத்னம்:

காமர்ஸ் - எம்.பி.ஏ


பலமுறை பேங்க் எக்ஸாம் எழுதி, நிச்சயம் பாஸாகியிருப்பார். தினமும் தயிர்சாதம் கட்டிக்கொண்டு, எலெக்ட்ரிக் ட்ரெயின்லயே சென்று வந்திருப்பார்.

உலகத்துல எவ்வளவோ கோர்ஸ் இருக்கு...நான் ஏன் இன்ஜினீயரிங் படிச்சேன்?

பேங்குக்கு வரும் கஸ்டமர்களிடம்,

“என்ன?”

“என் பையன் அக்கவுன்ட்டுக்குப் பணம் போடணும்.”

“எவ்ளோ?”

“25,000 ரூவா. எல்லாம் ஆயிரம் ரூவாயா இருக்கு.”

“சலான்?”

“இந்தாங்க, எல்லாம் சரியா பூர்த்தி பண்ணியிருக்கேனுங்களா?”

சுவர் கடிகாரத்தைக் காட்டி ``லன்ச் டைம்'' என ஒற்றை வார்த்தையாகப் பேசி கஸ்டமர்களை கிறுக்குப் பிடிக்க வைத்திருப்பார். இருட்டிய பிறகும் ஹாஃப் லைட்டில் கணக்கு எழுதிக்கொண்டிருப்பார். ஓடும் ரயிலில் ஓவர் டைம் வேலைசெய்து வங்கியின் மும்பை கிளைக்குமான வேலைகளையும் சேர்த்து பார்த்து, பெஸ்ட் எம்ப்ளாயி அவார்டு வாங்கியிருப்பார்.

ஷங்கர்

டிப்ளோமா இன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்

உலகத்துல எவ்வளவோ கோர்ஸ் இருக்கு...நான் ஏன் இன்ஜினீயரிங் படிச்சேன்?

`ஷங்கர் - தி மெக்கானிக்கல் இன்ஜினீயர்' எனப் பெயர்ப்பலகை போட்டு, அசிஸ்டென்ட் ரோபோக்களிடம் அசைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருப்பார். பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்குக் கொடுக்கும் ஜென்டில் ரோபோ, லஞ்சம் வாங்குபவரைக் கண்டுபிடிக்கும் நவீன மெஷின், தப்பு செய்பவர்களை கருடபுராணப்படி தண்டிக்கும் அந்நிய எந்திரன் எனக் கண்டுபிடித்திருப்பார். கப்பலைக் காற்றில் ஓட்டுவது, ஏரோபிளேனை தண்ணீரில் மிதக்கவிடுவது என புதுப்புது ஆராய்ச்சிகளைத் தெறிக்கவிட்டுக் கொண்டிருப்பார். முன்பாதி கார், பின்பாதி ஹார்லி டேவிட்சன் பைக் என ஆல்டர் செய்த விநோத வாகனத்தைக் கண்டுபிடித்து, அதன் அறிமுக விழாவுக்கு அர்னால்டை அழைத்து வந்திருப்பார். அந்த வாகனம், தண்ணீரில் விழுந்தால் கப்பலாக மாறும்; செவ்வாய்க் கிரகத்துக்குப் போக ராக்கெட்டாக மாறும்; சுகர் வந்தால் சைக்கிளாக மாறும்; எதிரிகளை பழிவாங்கும்; காசு நிறைய இருந்தால் கேர்ள் ஃப்ரெண்டாகக்கூட மாறும் என மல்டி பர்ப்பஸ் தேவைகளையும் பூர்த்திசெய்யும் என, பிரமாண்டமான சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்திருப்பார். இது தவிர, வானத்துக்கு நீல நிறத்துக்குப் பதில் வானவில் வண்ணம் பூசுவது எப்படி? ரோபோவுக்கும் பெண்ணுக்கும் இடையில் காதல் பூக்கும் சாத்தியம் உண்டா? போன்ற சப்ஜெக்ட்டுகளோடு  ‘ஃபாரின் சாங்கும் பிரமாண்ட பட்ஜெட்டும்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி, டாக்டரேட் முடித்திருப்பார்.

கௌதம் வாசுதேவ் மேனன்

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்

உலகத்துல எவ்வளவோ கோர்ஸ் இருக்கு...நான் ஏன் இன்ஜினீயரிங் படிச்சேன்?

ஃபெராரி, பி.எம்.டபிள்யூ, ஆடி போல ஆவணி, கார்காலம், கோடை இடி எனத் தமிழில் பெயரிடப்பட்ட இன்டர்நேஷனல் தர வாகனங்களை அறிமுகப்படுத்தி பல கார் ஷோரூம்களைத் திறந்திருப்பார். புல்லட், பல்ஸர் போல `பாயும் தோட்டா', `பறக்கும் கோடரி' என்ற பைக்குகளையும் அறிமுகப்படுத்தியிருப்பார்.  ஃப்ரீ டைமில் இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்குச் சென்று, ‘உலகத்துல எவ்வளவோ கோர்ஸ் இருந்தும் நீ ஏன் இன்ஜினீயரிங் எடுத்த?’ எனக் கேள்வி கேட்டு, செமினார் எடுத்திருப்பார். ‘காதல்கிறது, நம்மள ட்ரில் பண்ணணும்; ஸ்பேனர் போட்டு முறுக்கணும்; ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்ல வெக்கணும்’ என கெஸ்ட் லெக்சர் கொடுத்திருப்பார். இன்னும் கொஞ்சம் டைம் இருந்தால், ‘அமெரிக்காவில் இரண்டு சைக்கோ கொலைகாரர்கள்’, ‘உன்னைப் புரிந்தால்’, ‘மிச்சம் என்பது கொடுமையடா’, ‘ஃபேஸ்புக் நோக்கி பாயும் போட்டா’ எனத் துப்பறியும் நாவல்கள்கூட எழுதியிருப்பார்.

பாலா

பி.ஏ. தமிழ் இலக்கியம்

உலகத்துல எவ்வளவோ கோர்ஸ் இருக்கு...நான் ஏன் இன்ஜினீயரிங் படிச்சேன்?

இலக்கிய ரெளடியாக இந்தியா முழுக்க வலம் வந்து, விகடனில் `முரட்டுக் கவிஞனின் கறுப்புப் பக்கங்கள்' எழுதியிருப்பார். தன் புரியாதக் கவிதைகளால் வாசகர்களை சேதுவாக்கி அலையவிட்டிருப்பார். அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறையில் பேராசிரியராகச் சேர்ந்து, டெரர் தமிழைக் கற்றுக்கொடுத்திருப்பார். பின் நவீனத்துவ எக்ஸிஸ்டென்ஷியலிச நாவலாக எழுதி, சாகித்ய அகாடமி டு மயிலாப்பூர் அகாடமி வரைக்கும் அத்தனை விருதுகளையும் அள்ளியிருப்பார். இலக்கிய மேடைகளில் சித்தர் பாடல்களை எல்லாம் உடுக்கை அடித்து ஆடிக்காட்டி, மனதில் துருப்பிடித்த ஆணி கொண்டு அறைந்து சக இலக்கியவாதிகளை மிரளவைத்திருப்பார். விமர்சகர்கள் கேள்விகளுக்கு அடித்தே பதில் சொல்லி, ‘நவீன இலக்கிய நாலடியார்’ என்ற அடைமொழி பெற்றிருப்பார்.

கார்த்திக் சுப்புராஜ்

மெக்கட்ரானிக்ஸ்

உலகத்துல எவ்வளவோ கோர்ஸ் இருக்கு...நான் ஏன் இன்ஜினீயரிங் படிச்சேன்?

குறும்படம் எடுக்காமல் குட் பாயாக ஆறு டிஜிட் சம்பளத்தில் ஐ.டி புரொஃபஷன் ஆகியிருப்பார். டேட்டா புராசஸிங் இன் தி மெக்கானிக்கல் கன்ட்ரோல் சிஸ்டம் ஆஃப் எலெக்ட்ரிக்கல் சர்க்யூட் புராசஸிங்கில் கோடிங் கோலம் போட்டுக்கொண்டிருந் திருப்பார்.  வாட்ஸ்அப், ஃபேஸ்புக்போல வாட்ஸ் 360 டிகிரி, ஃபுல் பாடிபுக் என நியூ வேவ் சமூக வலைதளங்களைக் உருவாக்கி, மார்க் ஸூக்கர் பெர்க்குக்கே மண்டை காயவிட்டி ருப்பார். “நாம கோடிங் எழுதணும். `செமயா எழுதினான்டா'னு சொல்ற மாதிரி ஒரு கோடிங் எழுதணும்” எனப் பேட்டிக்கொடுத்திருப்பார்.

அடுத்த கட்டுரைக்கு