Published:Updated:

“இதற்குத்தான் ஆசைப்பட்டேன்!”

   “இதற்குத்தான் ஆசைப்பட்டேன்!”
“இதற்குத்தான் ஆசைப்பட்டேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

“டான்ஸ் மேல காதலா இருந்தப்ப, `நடிக்கணும்'னு ஆசை வந்துச்சு. நடிக்க சான்ஸ் கேட்டு, சினிமா கம்பெனிங்க படி ஏறி இறங்கிட்டு இருந்தேன். பல டைரக்டர்களை மீட் பண்ணியிருக்கேன். `யாராவது சான்ஸ் தர மாட்டாங்களா...'னு ஏங்கிக்கிட்டு இருந்த காலம் அது. இப்ப அஞ்சு வருஷமா சினிமாவுல தீவிரமா நடிச்சுக்கிட்டு இருக்கிறதைப் பார்த்தா சந்தோஷமா இருக்கு’’ துறுதுறுவெனப் பேசுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

“சினிமா கனவு எப்படி நிறைவேறுச்சு?”

“காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்கும்போதே நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அலைஞ்சு திரிஞ்சு ஒருவழியா ‘அவர்களும் இவர்களும்’னு ஒரு படத்துல நடிச்சேன். அந்தப் படம் வந்ததே பல பேருக்குத் தெரியாது. அவ்வளவுதான் நம்ம சினிமா கரியர்னு நினைச்சுட்டு இருந்தப்போதான் ‘அட்டகத்தி’ படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. சின்ன ரோல்னாலும் பசங்க மனசுல ஒரு இடம் பிடிச்சுட்டேன். ஒரு சின்ன பிரேக்கும் கிடைச்சது.

   “இதற்குத்தான் ஆசைப்பட்டேன்!”

அடுத்து விஜய் சேதுபதிகூட ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’னு பல படங்கள். இப்ப `நல்லா நடிக்கிறேன்'னு எல்லாரும் சொல்றாங்க. கேட்கவே சந்தோஷமா இருக்கு. இதுக்குத்தானே இந்த ஐஸ்வர்யா ஆசைப்பட்டா!”
 
“தொடர்ந்து விஜய் சேதுபதி கூடவே நான்கு படங்களுக்கு மேல் நடிச்சுட்டீங்களே?”

“ஆமா... ஒவ்வொரு படத்துலயும் என்னை நடிக்கக் கூப்பிடுறதுக்கு முன்னாடி, `ஏற்கெனவே ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்காங் களே'னுதான் இயக்குநர்கள் யோசிப்பாங்க. ஆனா, எங்களை ஸ்கிரீன்ல பார்க்கும்போது புதுசா இருக்கும். அதுதானே முக்கியம்.

`ரம்மி’ பட ஷூட்டிங்லதான் விஜய் சேதுபதியை முதன்முதலாப் பார்த்தேன். ‘கூடமேல கூட வெச்சு...’ பாட்டு ஷூட் பண்ணாங்க. நான் கையில கூடையைத் தூக்கிட்டு வெட்கப்பட்டு விஜய்யைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே நடந்து வரணும். ஆனா, இந்த சீன் எடுக்கவே 20 டேக் மேல தாண்டிடுச்சு. எல்லாருக்கும் டென்ஷன். விஜய் சேதுபதிதான் பக்கத்துல வந்து நின்னு ‘நீங்க நல்லா நடிக்கிறீங்க. தைரியமா பண்ணுங்க’னு என்கரேஜ் பண்ணினார். அப்ப இருந்து, ‘இடம் பொருள் ஏவல்’, `பண்ணையாரும் பத்மினியும்', ‘தர்மதுரை’னு ஒண்ணா டிராவல் பண்றோம். விஜய் சேதுபதி ஆல்வேஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்.''

   “இதற்குத்தான் ஆசைப்பட்டேன்!”

“ `காக்கா முட்டை’யில் உங்க நடிப்பை நிறையப் பேர் பாராட்டினாங்க...” எனக் கேட்கும்போதே குறுக்கிடுகிறார்...

“இந்தப் படத்தின் வாய்ப்பை மட்டும் நான் மிஸ் பண்ணியிருந்தா, வாழ்க்கை முழுக்க வருத்தப்பட்டிருப்பேன். மணிகண்டன்கிட்ட முதல்ல கதை கேட்டபோது, `ரெண்டு பசங்களுக்கு அம்மாவா?! யோசிக்கிறேன்'னு சொல்லிட்டு வந்துட்டேன். இதைப் பத்தி விஜய் சேதுபதிகிட்ட எதேச்சையா சொன்னப்பதான் `மணிகண்டன் பிரமாதமான டைரக்டர். சான்ஸை விட்டுடாதீங்க. கண்டிப்பா நடிங்க’னு சொன்னார். முதலில் ஆடிஷன்ல நடிக்கவெச்சாங்க. இதைப் பார்த்த வெற்றி மாறன் சார், ‘இந்தப் பொண்ணு சரி இல்லை. வேற யாரையாவது மாத்திடலாம்’னு சொல்லிட்டார். ஆனாலும் மணிகண்டன்தான் என்னை நம்பிக்கையா நடிக்க வெச்சார்.

படம் எடுத்து முடிச்சு முழுப் படத்தையும் பார்த்தப் பிறகு, வெற்றி மாறன் சார் ‘எப்படிங்க இந்தப் பொண்ணை நடிக்க வெச்சீங்க?’னு கேட்டு பாராட்டினார். அதேபோல சர்வதேச விருது நிகழ்ச்சியிலும் இதுதான் நடந்தது. `அந்தக் குழந்தைகளுக்கு உண்மையான அம்மாவா இவங்க?'னு நிறையப் பேர் கேட்டாங்க. இந்த இயல்பான நடிப்புக்குக் காரணம் மணிகண்டன்தான். சின்னச் சின்ன ரியாக்‌ஷன்கூட கவனிச்சு மாத்தினார். நாளைக்கு எனக்கு பையன் பிறந்தா ‘பாருடா... அம்மா நல்ல நல்ல படங்களில் எல்லாம் நடிச்சிருக்கேன்’னு பெருமையா சொல்ல முடியும்.”

“ `காக்கா முட்டை'க்குப் பிறகு எந்த மாதிரி கதைகள் உங்களிடம் வருது?”

“வித்தியாசமான நிறைய ரோலில் நடிக்கக் கூப்பிடுறாங்க. ‘குற்றமே தண்டனை’யில நெகட்டிவ் கேரக்டர் பண்ணியிருக்கேன். ‘தர்மதுரை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மனிதன்’னு நான் இப்ப நடிச்சிருக்கிற எல்லா படங்களுமே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.”

அடுத்த கட்டுரைக்கு