என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

தமிழ் சினிமாவின் புதிய இளைஞர்கள்!

கவின்மலர், ந.வினோத்குமார்படங்கள் : கே.ராஜசேகரன், ஓவியங்கள் : ஹரன்

##~##

'கோவிந்தா... கோவிந்தா’, 'முழுமதி முழுமதி’, 'உன்னைக் கண்டேனே’, 'இதுவரை இதுவரை’, 'மருதாணிப் பூவைப் போல’, 'கன்னித் தீவுப் பொண்ணா..’, 'ஒரு முறைஇரு முறை பல முறை’, 'இதுவரை என் நெஞ்சில்’.... ராஜா, ரஹ்மான்களுக்கு இடையிலும் தங்கள் இருப்பை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இளைய தலைமுறை இசை யமைப்பாளர்களைச் சந்திக்கவைத்தோம்.  இது கலகலப்பான அரட்டை ஆர்கெஸ்ட்ரா!

அறிமுகப் படலத்தைத் தொடக்கிவைத்தார் 'எங்கேயும் எப்போதும்’ சத்யா. ''ஜிங்கிள்ஸ் பண்ணினேன். வித்யாசாகர் சார்கிட்ட கீ-போர்டு புரொகிராமரா இருந்தேன். 'ஆடுகிறான் கண்ணன்’ சீரியலில் முதல் வாய்ப்பு. அப்புறம் 'ஏன் இப்படி மயக்கினாய்’ படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனா, 'எங்கேயும் எப்போதும்’ அறிமுக அடையாளம் ஆகிவிட்டது. எனக்கு ஜி.ஆர் - டு - ஏ.ஆர். பிடிக்கும்... புரியலையா? ஜி.ராமநாதன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை!'' என்றவரைத் தொடர்கிறார் 'முரண்’ சாஜன் மாதவ்.

தமிழ் சினிமாவின் புதிய இளைஞர்கள்!

''என் அப்பா ரவீந்திரன், மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளர். தமிழிலும் 'ரசிகன் ஒரு ரசிகை’, 'லட்சுமி வந்தாச்சு’னு படங்கள் பண்ணி இருக்கார். கர்னாட்டிக் மியூஸிக், பியானோ கத்துக்கிட்டு அப்பா வின் சிபாரிசு எதுவும் இல்லாமலேயே ஜிங்கிள்ஸ் பண்ணினேன். அப்படியே சினிமாவுக்கும் வந்தாச்சு. 'கதிர்வேல்’தான் முதல் படம். ஆனால், 'முரண்’ முந்திக்கிச்சு!'' என்றார்.

''ஜிங்கிள்ஸ், ராக் அண்ட் ரோல் பேண்ட்னு பிஸியா இருந்தேன். எய்ட்ஸ் விழிப்பு உணர்வு தொடர்பா மிஷ்கின், சசிகுமார், கிருத்திகா உதயநிதி மூணு பேரும் இயக்கிய குறும்படங்களுக்கு இசையமைச்சேன். அந்த அறிமுகம் மூலமா 'யுத்தம் செய்’ வாய்ப்பு கொடுத்தார் மிஷ்கின். கிருஷ்ணகுமாரோட சுருக்கம்தான் கே!'' என்று 'சுருக்’ பெயர்க் காரணம் சொன்னார் கே.

தொடர்ந்தார் அருள்தேவ். ''வித்யாசாகர் சார்கிட்ட கீ-போர்டு புரொகிராமரா 10 வருஷம் இருந்தேன். தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் 500 படங்களுக்கு மேல் அவர்கூட வேலை பார்த்து இருக்கேன். யுவராஜ் சார், 'போட்டா போட்டி’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போ எஸ்.பி.ராஜ்குமாரோட 'பார்க்கணும்போல இருக்கு’, 'பாரி’, 'நகர்ப்புறம்’ படங்கள் பண்றேன்'' என்றார்.

''நிறைய கிறிஸ்துவப் பாடல்களுக்கு இசை அமைச்சிருக்கேன். அந்த அனுபவம்தான் சினிமா வரை இழுத்துட்டு வந்திருச்சு'' - 'கண்டேன்’ விஜய் எபிநேசரின் ஒரே ஒரு வரி அறிமுகம் இது.

இந்த ஜமாவில் கொஞ்சம் சீனியர் எஸ்.எஸ்.குமரன். 'பூ’, 'களவாணி’ படங்களின் இசையமைப்பாளர் மற்றும் 'தேநீர் விடுதி’ படத்தின் இயக்குநர் ப்ளஸ் இசையமைப் பாளர்! ''செந்தில்குமரன்... சுருக்கமா எஸ்.எஸ்.குமரன். அடையார் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சினிமாட்டோகிராஃபி படிச்சேன். துறைமுகத்துல ஆபீஸர் ரேங்க்ல வேலைல இருந்தாலும், இசைதான் என்னோட முதல் சாய்ஸ். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல யூனியன் சேர்மன் ஆகிட்டா, பிரபலங்கள்கூட போட்டோ எடுக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படி இளையராஜா சார்கூட போட்டோ எடுத்துக்கணும்னே சேர்மன் ஆனேன். 'என்னடி முனியம்மா ஒங்கண்ணுல மைய்யி’ பாட்டை 'செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா’ மெட்டில் பாடி பசங்களை கேன்வாஸ் பண்ணி சேர்மன் ஆனேன். அது ஒரு கனாக் காலம். இப்போ 'கேரள நாட்டிளம் பெண்களுடனே’, 'ரதம்’ படங்களுக்கு மியூஸிக் பண்ணிட்டு இருக்கேன்'' என்றார்.

தமிழ் சினிமாவின் புதிய இளைஞர்கள்!

மிக மென்மையான குரலில் பேசத் தொடங்கினார் தாஜ் நூர். ''ரஹ்மான் சார் கிட்ட 14 வருஷம் வேலை பார்த்தேன். 'தயவுசெஞ்சு தனியாப் பண்ணு. இப்படியே இருந்தா கம்போஸிங் மறந்துடும்’னு சொல்லி பிடிச்சுத் தள்ளிவிட்டார். அப்படித்தான் 'வம்சம்’ பண்ணினேன். இப்போ 'எத்தன்’, 'மல்லுக்கட்டு’, 'ஆயிரம் முத்தங் களுடன் தேன்மொழி’, 'ஓம்’னு நிறையப் படங்கள்'' என்று நிறுத்திக்கொண்டார். 'அவ்வளவுதானா?’ என்பதுபோல சதீஷ் சக்ரவர்த்தி பார்க்க, ''கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கம்ப்யூட்டர் மூலமா இசையமைக்கும் டிரெண்ட் தொடங்கியபோது, ஏறத்தாழ எல்லா இசையமைப்பாளர்களுடனும் வேலை பார்த்திருக்கேன்!'' என்றார்.

இப்போது திருப்தியான பார்வையோடு தொடர்ந்தார் சதீஷ் சக்ரவர்த்தி. ''என் அப்பா தாயன்பன் இசையமைப்பாளர். ரெண்டு வருஷம் ரஹ்மான் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்துட்டு, 'கனிமொழி’ பண்ணினேன். ஒரு முறை ராஜா சாரைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ அவர் வெஸ்டர்ன் கிளாஸிக்கல் மியூஸிக்கில் எக்ஸர்சைஸ் எழுதிப் பார்த்துட்டு இருந்தார். இவ்வளவு சாதிச்ச பிறகும் இன்னும் கத்துட்டு இருக்காரேனு எனக்குப் பயங்கர ஆச்சர்யம். ஒவ்வொரு நாளும் ஏதாவது கத்துக்கிட்டே இருக்கணும்னு நான் கத்துக்கிட்ட நாள் அது!'' என்றார் சதீஷ் சக்ரவர்த்தி.

பிடித்த இசையமைப்பாளர் குறித்துப் பேச்சுத் திரும்பியபோது அனைவரின் ஒருமித்த சாய்ஸ்... இளையராஜா!

''ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு பாட்டை ஹிட் அடிச்சுடலாம். ஆனா, ரீ-ரிக்கார்டிங்ல... ராஜா ராஜாதான்!'' என்கிறார்கள் கோரஸாக.

''யுவன்ஷங்கரோட பெஸ்ட் கம்போசிஷன் மெலடியில்தான் வரும்.  'நினைத்து நினைத்துப் பார்த்தேன்’ என்ன ஒரு கிளாஸிக் பாட்டு! தி பெஸ்ட் மெலடி மாஸ்டர் அவர். ஆனா, டிரெண்ட்படி அவர்கிட்ட ஃபாஸ்ட் பீட் பாடல்கள்தான் நிறையக் கேட்டு வாங்குறாங்க. ராஜா சாரின் மெலடி திறமை அப்படியே அவர்கிட்ட இருக்கு'' என்றார் சதீஷ்.

சில சமயங்களில் நகல் எடுத்ததுபோல பாடல்களில் வருவது குறித்துப் பேசியபோது, ''டாக்டர்கிட்ட போய் நோய் என்னன்னு மட்டும்தான் சொல்லணும். 'பச்சை கலர்ல ரெண்டு மாத்திரை கொடுங்க’னு கேட்டா அது அபத்தம் இல்லையா? டைரக்டர் சிச்சுவேஷனை மட்டும்தான் சொல்லணும். அதை விட்டுட்டு, அந்தப் பாட்டு மாதிரி வேணும்னு கேட்கிறது நியாயமா?'' என்று கேள்வி எழுப்பினார் எஸ்.எஸ்.குமரன்.

சேட்டிலைட் சேனல்களின் பிரமாண்ட இசைப் போட்டிகள்பற்றி விவாதித்தார்கள். ''அந்தப் போட்டிகள் நிச்சயம் வரவேற்புக்கு உரியவைதான். ஆனா, அந்த ஷோக்களை முதல் படிக்கட்டா நினைக்கணுமே தவிர, வளர்ற குழந்தைங்க அதிலேயே திறமையின் உச்சத்தை அடைஞ்சுட்டோம்னு நினைச்சு தேங்கிடக் கூடாது'' என்றார் அருள்தேவ்.

''அந்தப் போட்டிகளில் ஜெயிப்பவர்களை உடனே சினிமாவில் பாடவைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. சினிமாவில் பின்னணி பாட டெக்னிக்கலா நிறையக் கத்துக்கணும். அப்படிக் கத்துக்கிட்டு வர்றவங்க மட்டும்தான் ஜெயிக்கிறாங்க'' என்ற சாஜன் மாதவை ஆமோதித்துத் தொடர்கிறார் சதீஷ்.

''ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளர், எஸ்.பி.பி-கிட்ட 'எப்படி மேடையில சுதி கலையாமப் பாடுறீங்க?’னு கேட்டார். அதிர்ச்சி அடைந்த எஸ்.பி.பி. 'அதைக்கூடக் கத்துக்கலைன்னா, அப்புறம் நான் எப்படி ஒரு பாடகர்னு சொல்லிக்க முடியும்’னு கேட்டார். இப்போ பின்னணி பாடும் கார்த்திக், ஹரிசரண், ரஞ்சித் போன்றவர்கள் இந்த டி.வி. நிகழ்ச்சிகள் மூலமா வந்தாலும் டெக்னிக்கல் அறிவை அப்டேட் பண்ணிக்கிட்டதாலதான் வெற்றியைத் தக்கவெச்சுக்க முடிந்தது'' என்றார் சதீஷ்.

''இன்னொரு விஷயம்... அப்படியான போட்டிகளுக்குப் பாடகர்களை எப்படி நீதிபதிகளா நியமிக்கலாம்? அவங்கள்ல சிலரே ரெக்கார்டிங்ல அவ்வளவு தப்பு பண்ணுவாங்க. அவங்க போட்டியாளர்களின் சின்னச் சின்னத் தப்புகளுக்குக்கூட 'அது சரியில்லை... இது சரியில்லை’னு பெரிசா ரியாக்ட் பண்றப்போ சிரிப்பாவும் வேதனையாவும் இருக்கு. நான்கூட வாய்ப்பு இல்லைன்னா ஜட்ஜா போயிடலாம்னு பார்க்குறேன்'' என்று அதிரடி ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

இசை தவிர, இன்ன பிற ஆர்வங்கள் குறித்துப் பேச்சுத் திரும்பியது. ஓவியம், பைக் சாகசம்,  நீச்சல் ஆகிய விருப்பங்களுக்கு மத்தியில் விஜய் எபிநேசரின் ஆர்வம் அனைவரையும் நெகிழவைத்தது.  

''பூந்தமல்லியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் நடத்திட்டு இருந்தேன். சென்னையின் குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த 600 குழந்தைகளுக்கு உதவிட்டு வர்றோம். 10 வருஷம் அந்த இல்லத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன். இப்போ இசை பக்கம் நான் கவனம் செலுத்த, நண்பர்களும் அன்பர்களும் அதைப் பார்த்துக்கிறாங்க. ஆனா, அடிக்கடி ஓடிப் போய் பார்த்துக்குவேன்'' என்று விஜய் நிறுத்த, உடனே வெடித்தெழுந்தது ஆரவாரக் கைத்தட்டல்!