Published:Updated:

“12 மொழிகள்லயும் படம் இயக்கணும்!”

“12 மொழிகள்லயும் படம் இயக்கணும்!”
“12 மொழிகள்லயும் படம் இயக்கணும்!”

ம.கா.செந்தில்குமார்

‘‘பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ ரிசல்ட் சமயங்கள்ல நியூஸ் பேப்பரைப் படிக்கவே பயமா இருக்கும். அப்படி ரெண்டு மூணு வருஷங்களுக்கு முன் ‘தைரியலட்சுமி என்ற மாணவியின் தற்கொலை’ செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்துச்சு. ப்ளஸ் டூ-வில் 1,040 மார்க் வாங்கின அந்த மாணவி, தான் எதிர்பார்த்த மார்க் வரலைனு தற்கொலை பண்ணிக்கிட்டதா சொன்னாங்க. அவளை அந்த நிலைக்குத் தள்ளினது யார்? பெற்றோரா, பள்ளியா, ஆசிரியர்களா? இந்த அடுக்கடுக்கான கேள்விகளில் இருந்து பிறந்ததுதான் இந்த ‘அப்பா’ கதை’' - இந்த அன்பும் அக்கறையும்தான் சமுத்திரக்கனி ஸ்பெஷல். நல்லாசிரியனாக ‘சாட்டை’ சுழற்றியவர், இந்த முறை தந்தைகளுக்குப் பாடம் புகட்டும் ‘அப்பா’வாக வருகிறார்.

‘‘15-17 வயசுதான் பசங்களுக்கு நல்ல விஷயங்களை மனதில் விதைக்க சரியான தருணம். ஆனா, அந்தச் சமயத்தில் அவங் களோட ஆசை, ஆர்வம், கனவு எல்லாத்தையும் முடக்கி, அடக்கி, ஒடுக்கி, ‘இந்த வேலைக்குப் போகணும், அதுக்கு இதைத்தான் நீ படிக்கணும்’னு கட்டுப்படுத்துறோம். இன்னைக்கு 90 சதவிகிதமானவங்களை விசாரிங்க... படிச்சது ஒண்ணாவும் பார்க்கிற வேலை வேறு ஒண்ணாவும் இருக்கும். அதுக்கு பெற்றோர்களின் நிர்பந்தம்தான் காரணம். இந்த அவலம் பற்றித்தான் ‘அப்பா’வில் பேசியிருக்கேன்.’’

“12 மொழிகள்லயும் படம் இயக்கணும்!”

‘‘ஓர் ஆசிரியர் எப்படி இருக்கணும்னு ‘சாட்டை’யில் பேசியிருந்தீங்க. அதன் தொடர்ச்சிதான் ‘அப்பா’வா?’’

‘‘இது `சாட்டை’யின் அடுத்த பாகம் கிடையாது, இது வேற. எல்லாத்தையுமே பாசிடிவ்வா பார்க்கக்கூடிய பையனை அவன் போக்குல விட்டு, அவனுக்கு எது பிடிச்சிருக்கோ... அதை நோக்கி அவனைச் செலுத்தணும்னு நினைக்கிற ஒரு தகப்பனா நான் நடிச்சிருக்கேன். ‘பையனை நான்தான் டிசைன் பண்ணுவேன்; அவன் இத்தனை மணிக்கு எழணும்; இதைத்தான் படிக்கணும்; டிகிரி முடிச்சிட்டு வெளிநாடு போய்ப் படிக்கணும்’னு கரு உருவாகும்போதே, பிளான் பண்ணக்கூடிய தகப்பனா தம்பி ராமையா அண்ணன். பள்ளியோ, கல்லூரியோ, வேலைக்குப்போற இடமோ எங்குமே வாழ்ந்ததுக்கான அடையாளமே இல்லாம வாழ்ந்துட்டுப் போயிடுற இன்னொரு செட் இருக்காங்க. அப்படியான ஒரு பையனோட அப்பாவா நமோ நாராயணன். ‘டேய்... யார் பார்வையும் நம்ம மேல படக் கூடாதுடா. இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டுப் போயிடணும்டா. நமக்கு எதுக்குடா வம்பு? எதுவா இருந்தாலும் நடுவுலயே இரு’ என்பான். அவருக்கு ‘நடுநிலையான்’னே பேர் வெச்சிருக்கேன். இந்த மூன்று வகையான அப்பாக்களில் ஏதோ ஒருவரில் உங்க அப்பாவை உணர்ந்தீங்கன்னா, படம் எடுத்த நோக்கம் நிறைவேறிடும்.''

‘‘சமூகத்துக்குத் தேவையான கதை. ஆனால், பிரசாரத் தொனி இல்லாமல் சொல்றதுதானே இதன் சவால்?’’

‘‘உண்மைதான். அந்தத் திரைமொழிக்குத் தான் ரொம்பக் காலம் எடுத்துக்கிட்டேன். படம் தொடங்கினதும், என் பையன்கிட்ட, ‘இந்த உலகம் ரொம்ப அழகானது; நிறைய நல்லவங்க இருக்காங்க’னு சொல்லுவேன். கட் பண்ணினா, ‘இந்த உலகம் ரொம்ப மோசமானது. யாரையும் நம்பக் கூடாது. முழிச்சிட்டு இருக்கும்போதே முழியை நோண்டிருவாய்ங்க’ என்பார் தம்பி ராமையா தன் மகனிடம். ‘முதல்நாள் பள்ளிக்குப் போகும்போது யாரையும் பார்த்தா சிநேகமா சிரிக்கணும்’ என்பேன். ‘பல்லைக்காட்டினே, பாயைப் போட்டு பக்கத்துல படுத்துடுவானுங்க’ என்பார் அவர். இப்படி படம் தொடங்கின முதல் காட்சியிலேயே கதை ஆரம்பமாகிடும். எங்கேயுமே அட்வைஸ் பண்ற தொனி இருக்காது.''

‘‘வேறு யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?’’

‘‘குழந்தைகள்தான் ஸ்பெஷல். அவங்களைத் தேடிப்பிடிக்கிறதுதான் பெரிய சவால். நீச்சல் தெரிஞ்ச பையன் வேணும். ஒவ்வொரு நீச்சல் குளமா தேடி முகிலை காசிமேட்டுல பிடிச்சேன். இதில் இன்ட்ரஸ்டிங் என்னன்னா, நமோ நாராயணனின் மகனா வர்ற 17 வயசு பையன் கடைசி வரை வளராமலேயே இருப்பான். ‘எங்கப்பா இருக்கிற இடம் தெரியாம இருக்கணும்னு சொல்லிச் சொல்லியே வளர்த்தார். அதனாலதான் நான் இருக்கிற இடம் யாருக்குமே தெரியலை’னு வருந்திச் சொல்லுவான். பெரிய வலியா இருக்கும். வளர்ந்த பிறகு என் மகனா வர்றது ‘காக்காமுட்டை’ விக்னேஷ். பிரமாதமா பண்ணியிருக்கான். அடுத்து, அந்த 15 வயதில் பெண்ணைப் பார்த்ததும் வர்ற வேதியியல் மாற்றங்கள். அதை வெகு அழகா டீல் பண்ணியிருக்கோம். அதுக்காக படத்தில் யுவா, கேபி என இரண்டு பெண்கள். இருவருமே அவ்வளவு மெச்சூர்டான நடிப்பைத் தந்திருக்காங்க.''

“12 மொழிகள்லயும் படம் இயக்கணும்!”

‘‘முதல்முறையாக இளையராஜாவுடன் இணைகிறீர்கள். என்ன ஸ்பெஷல்?’’

‘‘முழுப் படத்தையும் எடுத்து முடிச்சிட்டுத்தான் அவர்கிட்ட எடுத்துட்டுப் போனேன். படத்துல டயலாக் அதிகமா இருக்காது. ஒரு இடத்துல 11 நிமிஷம் வசனம் இல்லாம அமைதியாக் கடக்கும். படம் பார்த்துட்டு தெய்வீகமா சிரிச்சவர், ‘ரொம்ப நல்லா எடுத்திருக்க. திரையில இந்த மாதிரி நல்ல விஷயங்களைத்தான் சொல்லணும். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, நிறைய வேலை இருக்கே’ன்னார். 11 நாள் ரீரெக்கார்டிங். உண்மையிலேயே பிரமிப்பா இருந்தது. காலை ஏழு மணிக்கு உட்கார்ந்து ஒவ்வொரு ஷாட்டுக்கும் இந்த இடத்துல இது வரணும், அது வரணும்னு நோட்ல எழுதினார். ‘இந்தப் படத் திரைக்கதையை தனிப் புத்தகமா போடப்போறேன்.  அப்ப  இந்த  இசைக் குறிப்புகளைப் பயன்படுத்திக்கிறேன்’னு எல்லாத்தையும் வாங்கிக்கிட்டேன்.''

‘‘ `கீதாரி' நாவலை மையமாவெச்சு நீங்க ஆரம்பிச்ச ‘கிட்ணா’ திரைப்படம் என்ன ஆச்சு?’’

‘‘அந்தப் பட ஸ்கிரிப்ட் ரெடி. ஆனா, ஷூட்டிங் போகும் சமயத்தில்தான் தன்ஷிகாவுக்கு ‘கபாலி’யில் நடிக்கும் வாய்ப்பு. என்கிட்ட வந்து விஷயத்தைச் சொன்னாங்க. `நல்ல வாய்ப்பு. உடனே கிளம்புங்க. பெருசா ரீச் ஆவீங்க. அது கிட்ணாவுக்கும் பயன்படும்’னு சொல்லி அனுப்பினேன். அவங்க வந்ததும் அந்தப் படத்தை ஆரம்பிச்சிடுவேன். ‘அப்பா’வை மலையாளத்தில் ரீமேக்க மம்மூட்டி சாரிடமும், தெலுங்கில் வெங்கடேஷ் சார், கன்னடத்தில் புனீத் ராஜ்குமார்னு இப்போதைக்குப் பேசி வெச்சிருக்கோம். இந்தியாவில் 12 மொழிகள்ல சினிமா எடுக்கிறாங்க. அந்த 12 மொழிகள்லயும் `அப்பா'வை எடுக்கணும், நானே இயக்கணும்னு பேராசை எனக்கு உண்டு. அடுத்து, தம்பி ஜெயம் ரவியை இயக்குறேன். சசியுடன் மீண்டும் இணையவும் பேசிட்டு இருக்கோம். சசி, ரவி  ரெண்டு பேருமே  ‘நீ ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டுச் சொல்லு. எப்ப கூப்பிட்டாலும் நடிக்கிறோம்’னு சொல்றாங்க. இப்படிப்பட்ட தம்பிகள் இருக்கும்போது எனக்கென்ன கவலை?’’

‘‘ ‘விசாரணை’யில் இன்ஸ்பெக்டர் முத்துவேல் கேரக்டர் ரொம்ப உண்மையா இருந்தது. அந்த அனுபவம் சொல்லுங்க?’’

‘‘வெற்றி சார்தான் அதுக்குக் காரணம். டயலாக் எழுதிவெச்சிட்டு, `இதைப் பேசுங்க’னு சொல்ற வழக்கமான சினிமா பாணி இல்லை. ‘இதுதான் நடக்கப்போகுது. நீங்களா இருந்தா என்ன செய்வீங்க?’ம்பார். நான் `இப்படியேதான் இருப்பேன்’ம்பேன். `அவ்ளோதான்... அப்படியே இருங்க’ன்னு சொல்லிட்டுப் போயிடுவார். வெற்றி சாரின் அணுகுமுறையே புதுசா இருந்தது. ஸ்பாட்ல சத்தமா சிரிக்கிறதோ, பேசுறதோ கிடையாது. படப்பிடிப்பு முழுக்க இரவில்தான், பகலே தெரியாது. ‘ஜிம் போகாதீங்க. ஃப்ளாட்டா வாங்க’ம்பார். அந்த 35 நாள் பயணம் மட்டுமில்ல, ‘விசாரணை’ படமே  எனக்குப் புதுசா இருந்தது.’’

“12 மொழிகள்லயும் படம் இயக்கணும்!”

‘‘மலையாளம், தெலுங்குனு மற்ற மொழிகள்லயும் நடிக்க ஆரம்பிச்சிட்டீங்க. நடிகர் சமுத்திரக்கனியை அங்க எப்படிப் பார்க்கிறாங்க?’’

‘‘மலையாளத்தில் எனக்கு ஒரு நல்ல இடம் தந்திருக்காங்க. அங்கு பண்ணின ஏழு படங்களில் நாலு படங்களில்  கம்யூனிஸ்ட் தோழர் கேரக்டர். முதல் படமே மோகன்லால் சார்கூட... இப்பக்கூட ப்ரித்விராஜ் உடன் ஒரு படம் வந்தது. தேதி இல்லாம போக முடியலை. தெலுங்கில் ஒரு படம் பண்ணிட்டு வந்திருக்கேன். சுவாரஸ்மான கேரக்டர். நமக்காக பல மொழிகள்ல யோசிக்கிறாங்க என்பதே சந்தோஷம்.’’

‘‘தமிழ் சினிமா இப்ப எப்படி இருக்கு?’’

‘‘பிரமாதமா இருக்கு. `நாடோடிகள்’ வெற்றியின்போது என் மனநிலை என்னவோ இப்ப அதே மனநிலையில் இருக்கேன். காரணம், `பிச்சைக்காரன்’ வெற்றி. அது பெரிய டெரர் படம் கிடையாதுதான். ஆனா, மனித உணர்வுகளை ரொம்பச் சரியா கடத்தியிருக்கு. சசி சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரிடம் உதவியாளரா சேரணும்னு ஆசைப்பட்டவன். ஆனா, அவரின் சில படங்கள் ரசிகர்களை கனெக்ட் பண்ணாமப்போயிடுச்சு. ‘நம்பிக்கையின் பலமே முழுசா நம்புறதுலதான் இருக்கு’ - இது `பிச்சைக்காரன்’  பட வசனம். அவருக்கு அவரே எழுதிக்கிட்டது மாதிரி இருந்தது. படம் பார்த்துட்டு மாலை வாங்கிக்கிட்டு ஓடினேன். அவ்வளவு மகிழ்ச்சி. ‘ரஜினிமுருகன்’, ‘விசாரணை’, ‘இறுதிச்சுற்று’, இப்ப ‘பிச்சைக்காரன்’... வெவ்வேறு ஜானர் படங்கள். இந்த வருடம் ரொம்பச் சிறப்பா தொடங்கியிருக்கு!’’

அடுத்த கட்டுரைக்கு