Published:Updated:

“விஜய்யிடம் ரஜினியைப் பார்க்கிறேன்!” - ‘நடிகர்’ மகேந்திரன்

“விஜய்யிடம் ரஜினியைப் பார்க்கிறேன்!” - ‘நடிகர்’ மகேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
“விஜய்யிடம் ரஜினியைப் பார்க்கிறேன்!” - ‘நடிகர்’ மகேந்திரன்

ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்

‘‘‘அவன் குறைமாசத்துல பொறந்தவன்யா... அப்படித்தான் இருப்பான்’ - என் சின்ன வயதில் இப்படி சிலர் என்னைக் கேலி பேசுவார்கள்.   அப்போதில் இருந்தே என்னை அறியாமல் எனக்குள்  ஒரு தாழ்வுமனப்பான்மை.  ‘இதெல்லாம் நமக்குத் தெரியலையே’ என்ற தவிப்புடனேயே சுற்றுவேன்.  நிறையத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தேடியதில் கிடைத்ததுதான் வாசிப்பு. படிப்போம், கேட்டுப்போம், தெரிஞ்சவங்களோட பழக்கம்வெச்சுப்போம்... ‘நான் யார்?’ எனக் கேட்டீர்கள் என்றால் இதுதான் என் வாக்குமூலம். இந்த எண்ணம் இருக்கும்வரை நான் மாணவன்தான். கற்றுக்கொண்டே இருப்பேன்’’ - ஆர்வமாகவும் ஆழமாகவும் பேசுகிறார் இயக்குநர் மகேந்திரன், மன்னிக்கவும் ‘நடிகர்’ மகேந்திரன். எப்போதும் புகையும் சிகரெட், முகத்தில் வழியும் தாடி... அட்டகாச அறிமுகம் கொடுக்கிறார் ‘தெறி’ வில்லன் மகேந்திரன்.

‘‘தாணு சார் என் நெடுநாளைய குடும்ப நண்பர். நம்பகமான மனிதர். ஒருநாள் அழைத்தார். ‘உங்ககிட்ட ஒரு உதவி தேவை சார். காலையில் வீட்டுக்கு வர்றேன்’ என்றார். இரவு முழுவதும் தூக்கம் தொலைத்தேன். ‘அவர்ட்டதானே நிறையப் பேர் உதவி கேட்பாங்க. அவருக்கு என்கிட்ட என்ன உதவி? இது ரீமேக் காலமாயிற்றே, ஒருவேளை என்  படங்களின் கதையையோ, படத் தலைப்பையோ கேட்டு வரலாம். ஓ.கே அவர் எதைக் கேட்டாலும் செய்துகொடுக்க வேண்டும்’ என உறுதி எடுத்துக்கொண்டு தூங்கிவிட்டேன். மறுநாள் வந்தார். ‘சார் உங்கள் படங்களின் மூலமா இந்த உலகத்தை எங்களுக்குக் காமிச்சிருக்கீங்க. அந்த உலகத்துக்கு உங்க முகத்தைக் காட்ட ஆசைப்படுறோம். விஜய் தம்பி நடிக்கிற படத்துல நீங்க நடிக்கணும்’ என்றார். எதிர்பார்க்காத ஒன்று என்பதால் கொஞ்சம் அதிர்ச்சி. அடுத்து, நான் நடிக்க முடியுமா, முடியாதா என்ற கேள்விக்குள் போகவில்லை. ‘சார் இது மிஸ்டர் விஜய்க்குத் தெரியுமா?’ என்றேன். ‘அவர் ஓ.கே சொன்னதால்தான் நான் வந்திருக்கேன்’ என்றார். அவர் பெயரைச் சொன்னதும் நான் க்ளீன் போல்டு. அதன் பிறகு மறுக்க சான்ஸே இல்லை. காரணம், விஜய் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. வணிகரீதியான படங்களில்கூட அவரின் யதார்த்தமான நடிப்பு, ஓர் இயக்குநராக எனக்குப் பிடிக்கும். அந்த மிகச் சிறந்த மனிதரையும் பிடிக்கும்.’’

“விஜய்யிடம் ரஜினியைப் பார்க்கிறேன்!” - ‘நடிகர்’ மகேந்திரன்

‘‘ `வில்லன் ரோல்’ என்று சொன்னதும் என்ன சொன்னீங்க?’’

‘‘ஹீரோபோலவே வில்லனும் ஒரு கேரக்டர்தான். அவனும் தான் செய்யும் செயல் சரி என்று பிடித்துப் பண்ணக்கூடியவன். அவனைப் பொறுத்தவரை அவனுக்கு அவன் ஹீரோ. ஓர் இயக்குநராக வில்லன் கேரக்டரை நான் இப்படித்தான் பார்ப்பேன். ‘நெகட்டிவ் கேரக்டர். நல்லவன் மாதிரியே வரும் கெட்டவன். அது கடைசியில்தான் தெரியும்’ என்றார் தாணு. என் வாழ்க்கையில் ஒருநாள்கூட நான் ஷேவ் பண்ணாமல் இருந்தது இல்லை. உடம்புக்கு முடியாமல் இருந்த சமயங்களில்கூட ஷேவ் பண்ணின பிறகுதான் படுப்பேன். அப்படி இருந்த நான் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இந்த கேரக்டருக்காக தாடி வளர்த்தேன்.’’

‘‘இயக்குநர் அட்லி என்ன சொன்னார்?’’

‘‘உலகத்திலேயே விலைமதிப்பற்றதும் மலிவாகக் கிடைக்கக்கூடியதும் அன்பு மட்டும்தான். இந்த அன்பு என்னும் சென்டிமென்ட்டை சினிமாவில் ஒருவர் எப்படிக் கையாள்கிறார் என்பதைக் கவனிப்பேன். அடுத்து திரைக்கதை. இந்த இரண்டையும் மிஸ்டர் அட்லி தன் ‘ராஜா ராணி’யில் மிக அழகாகக் கையாண்டிருந்தார். தாணு சார் மாதிரியான எதுவும் செய்துதரக்கூடிய தயாரிப்பாளர் கிடைக்கும்போது, தன் படத்தில் வரும் சின்னச் சின்ன கேரக்டர்கள்கூட முகம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என இயக்குநர் நினைப்பார்கள். அதுதான் அவர்களின் பலமும்கூட. ஆனால், அட்லி என்னை ஏன் தேர்வு செய்தார்? அவரிடமே கேட்டேன். ‘உங்கள் படங்கள். அடுத்து ரஜினி சார். `எந்திரன்’, `சிவாஜி’ படப்பிடிப்பு சமயங்களில் ரஜினி சாருடன் நெருங்கிப்பழகும்போது, அவர் உங்களைப் பற்றி நிறையப் பேசுவார்’ என்றவர், ‘நீங்கள் என் மானசீக குரு’ என்றார். படத்தில் நான் பேசின ஒவ்வொரு வார்த்தையும் அட்லி எழுதின வார்த்தைகள்தான். அவர் வெரிகுட் டயலாக் ரைட்டர். ‘என் அடுத்த படத்துக்கு நீங்கள்தான் வசனம் எழுதித் தரவேண்டும்’ என்று கேட்டிருக்கிறேன். மிஸ்டர் அட்லியை ஸ்பாட்ல நான் `கோச்... கோச்...’ என்றுதான் கூப்பிடுவேன். யெஸ். அட்லி என் ஆக்டிங் கோச்.’’

“விஜய்யிடம் ரஜினியைப் பார்க்கிறேன்!” - ‘நடிகர்’ மகேந்திரன்

‘‘நீங்கள் கமர்ஷியல் படங்களில் இருந்து விலகி யதார்த்தப் படங்கள் எடுப்பவர். ‘தெறி’யில் நடித்ததில் உங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லையா?’’

‘‘ ‘என் படங்களிலேயே என் ஆர்ட்டிஸ்டுகளை அண்டர் ப்ளே பண்ணச் சொல்லுவேன். அதீதமா நடிக்க வேணாம் என்பேன். என்னாலும் அப்படிப் பண்ண முடியாது. ஆர்ப்பாட்டமா கத்திகித்திப் பேசுற மாதிரி எல்லாம் கொடுத்துடாதீங்க. அடுத்து ஸ்பாட்ல என்னை டைரக்டர் மகேந்திரனா பார்க்காதீங்க. புதுமுகத்தை ட்ரீட் பண்ற மாதிரி நடத்துங்க. கடைசியா... முதல் நாள் பாருங்க, இரண்டாவது நாளும் பாருங்க. உங்களுடைய எதிர்பார்ப்பை என்னால பூர்த்திபண்ண முடியலை,  நீங்க  எதிர்பார்த்த மாதிரி என்னால நடிக்க முடியலைனு நினைச்சீங்கன்னா, ‘சார் நீங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்’னு வெளிப்படையா  சொல்லிடுங்க.’ இவை இந்தப் படத்தில் கமிட் ஆவதற்கு முன் அட்லியிடம் நான் வைத்த  கோரிக்கைகள். ஆனால் போட்டோஷூட் பண்ணும்போதே அட்லி என் நடிப்புக்கு ஸ்பாட்டிலேயே பாஸ் மார்க் கொடுத்துட்டார்.’’

‘‘விஜய் உடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘பஸ், கார், ட்ரெய்னில் பயணிக்கும்போது அதன் வேகத்தை நாம் உணர்வோம். சத்தத்தைக் கேட்போம். அதே சமயம் அத்தனை ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தின் உள்ளே உட்கார்ந்திருக்கும்போது அதன் வேகம், சத்தத்தை ஃபீல் பண்ணவே முடியாது. ரொம்ப அமைதியாக ஏதோ ஏசி அறையில் அமர்ந்தி ருப்பதுபோல் இருப்போம். அதுபோலத்தான் விஜய். கடுமையான உழைப்பால் இவ்வளவு உயரத்துக்குப் போயும்கூட பாசாங்கு இல்லாமல் எளிமையாகப் பழகுகிறார். முதல் படத்தில் நடிப்பதுபோல் இருக்கிறார். ரஜினி சாரிடம் என்ன இயல்பை ஃபீல் பண்ணுவேனோ, விஜய்யிடமும் அதே இயல்பு. விஜய்யிடம் நான் ரஜினியைப் பார்க்கிறேன்.  ஒரு காட்சியில், அவர் முகத்துக்கு நேராக உட்கார்ந்திருப்பேன். போலீஸ் யூனிஃபார்மில் பிரமாதமாக கிண்டலும் கேலியுமா பேசி நடிப்பார். அட்டகாசமான நடிப்பு. நான் தியேட்டரில் இருந்தால் கண்டிப்பா கிளாப் பண்ணுவேன். அப்படி ஒரு நடிப்பு. மினிஸ்டரான நான், அவர் பேசப்பேச சிகரெட்டைப் பற்றவைத்து அவர் முகத்தில் புகையை ஊதியபடியே இருக்கவேண்டும். மகேந்திரன் என்ற மனிதனாக எனக்கு அது அன்ஈஸி. அந்த ஒரு காட்சிக்கு ரெண்டு பாக்கெட் சிகரெட் பற்றவைத்தேன். ஆனால், ஒன்றைக்கூட முழுசாக ஸ்மோக் பண்ணவே இல்லை. அட்லியும் விஜய்யும் ‘நல்லா ஊதுங்க சார் புகை மண்டலமா இருக்கணும்’ என்கிறார்கள். ஆனால் மகேந்திரன் என்ற இயக்குநராக எனக்கோ, ‘விஜய் என்ன பிரமாதமான எக்ஸ்பிரஷன் காமிச்சிட்டு இருக்கார். ஒருவேளை ஸ்மோக் அவரது எக்ஸ்பிரஷனை மறைச்சிடுச்சுன்னா ஆடியன்ஸுக்குத் தெரியாமல்போயிடுமே என்ற பயம். என்ஜாய் பண்ண முடியாதே என்ற கவலை. இன்று வரும் ஒரு படங்களைக்கூட விடாமல் பார்ப்பவன் என்ற முறையில் சொல்கிறேன், கமர்ஷியல் படங்களில் விஜய், அட்லி போன்றவர்கள் கிடைப்பது அபூர்வம்.’’

“விஜய்யிடம் ரஜினியைப் பார்க்கிறேன்!” - ‘நடிகர்’ மகேந்திரன்

‘‘இந்தப் படம் முடிந்ததும் என்ன உணர்ந்தீர்கள்?’’

‘‘க்ளைமாக்ஸ் ஃபைட். என் ஆட்கள் விஜய்யை மர நாற்காலியில் கட்டிவைத்திருப்பார்கள். நான் தூர நின்று அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டி ருந்தேன். ‘சார் இந்த அட்மாஸ்பியர் உங்களுக்கு ரொம்ப ஸ்ட்ரேஞ்சா இருக்கும்ல?’ என்றார் விஜய். ‘நீங்கல்லாம் இவ்வளவு ரிஸ்க் எடுக்குறீங்க,  இவ்வளவு கஷ்டப்படுறீங்க என்பதே இப்பதான் புரியுது. என்னைப் பொறுத்தவரை யதார்த்தப் படங்கள் எடுக்கிறது எளிது. வாழை இலையில் சாப்பிடுவது மாதிரி. ஆனா, இப்படி மெயின் ஸ்ட்ரீம் படங்கள் பண்ண ரொம்பப் பொறுமை தேவை. தவிர இந்த மாதிரி சினிமா வெல்வது பெரிய விஷயம். இத்தனை பேரின் கடுமையான உழைப்பு ஆச்சர்யம்’ என்றேன். விஜய் அந்த மரச்சேரை உடைச்சிட்டு எந்திரிக்கணும். அப்படி உடைச்சிக்கிட்டு எழுந்தார். உடைஞ்ச பாகங்களில்  பெரிய பெரிய உண்மையான ஆணிகள். அதிர்ந்துட்டேன். ‘இது ரொம்ப ரிஸ்க் மிஸ்டர் விஜய். ஜாக்கிரதையா பார்த்து நடிங்க’ என்றேன். கமர்ஷியல் படங்கள் பண்ணுவது கடினம்தான்.’’

‘‘எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் பழகிய நீங்கள் அடுத்து  கமல், ரஜினி, இப்போது விஜய்... மூன்று தலைமுறை ஹீரோக்களுடனான நட்பைப் பற்றி...”

‘‘நீங்கள் இப்படிக் கேட்டப் பிறகே ‘யப்பா... நம்ம டிராவல் அங்கே இருந்து ஆரம்பிச்சிருக்கா?’ என நினைக்கத் தோணுது. சில சமயங்களில் வயது பெரிய அனுபத்தைத் தருது; ஒரு வகையான மறதியையும் தருது. என் வாழ்க்கையில் எந்த நல்ல விஷயமாக இருந்தாலும், அதைத் தந்தது எம்ஜி.ஆர்-தான். அதேபோல சிவாஜி சார், `தங்கப்பதக்கம்’ மூலமா இந்தியா முழுவதும் என் பேரைக் கொண்டுபோய் சேர்த்தவர். வெளியில் எம்.ஜி.ஆரை கடவுள் மாதிரி பார்த்த காலகட்டத்தில், மேலே துண்டு மட்டும் போட்டு்க்கொண்டு உட்கார்ந்திருந்த எம்.ஜி.ஆர் உடன் அவர் பக்கத்தில் நான் இருந்த காலங்கள் உண்டு. அதுவும் நான்கு ஆண்டுகள். ஒருநாள்கூட அவருடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தோணவே இல்லை. இப்போது நினைத்துப்பார்த்தால், `அவங்களோட கிரேட்னெஸ் புரியாமலேயே ஜடப்பொருளா இருந்திருக்கோமே’ என்று தோன்றுகிறது. ரஜினி, கமலைத் தொடர்ந்து அந்த நட்புப் பயணம் மூன்றாவது தலைமுறையாக விஜய்யுடன் தொடர்வது மகிழச்சியாக இருக்கிறது.’’

“விஜய்யிடம் ரஜினியைப் பார்க்கிறேன்!” - ‘நடிகர்’ மகேந்திரன்

‘‘தொடர்ந்து நடிப்பீர்களா?’’

‘‘ஓர் இயக்குநராக என் நினைப்பு டைரக் ஷன் பக்கம்தான். என் கனவு புராஜெக்ட் ஒன்று உண்டு. ஹீரோயினை மையப்படுத்திய கதை. பேரன், பேத்தி எடுத்த ஹீரோ-ஹீரோயின். நடிப்பார்கள் என நான் எதிர்பார்த்த சில ஹீரோக்கள் தயங்கினார்கள். ‘ஹீரோயின் மேல் கதை முடியுது. என் மேல கதை முடியணும்’ என்கிறார்கள். யாருமே வராவிட்டால் அந்த ஒரு படத்தில் வேண்டுமென்றால் நான் நடிக்கலாம். ஆமாம், அந்தக் கதையை நான் வீணடிக்க விரும்பவில்லை. தொடர்ந்து நடிக்கலாம். ஆனால் இயக்குநராக என் தேர்வு எப்படி செலெக்டிவாக இருக்குமோ, அப்படித்தான் நடிப்பிலும் இருக்கும்.’’