Published:Updated:

கண்ணு... தங்கம்... நண்டு - ‘தெறி’பேபி நைனிகா

கண்ணு... தங்கம்... நண்டு - ‘தெறி’பேபி நைனிகா
News
கண்ணு... தங்கம்... நண்டு - ‘தெறி’பேபி நைனிகா

வி.எஸ்.சரவணன், பா.ஜான்ஸன், படங்கள்: மீ.நிவேதன்

`நைனிகா’ என்றால் `கண்ணின் மணி’ என்று அர்த்தமாம். `ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்...' என `தெறி’ டீஸரில் விஜய் பாடுவது நைனிகாவுக்காகத் தான். அம்மா மீனாவைப் போலவே திரையுலகில் அதிரடியாக என்ட்ரி கொடுக்கிறார் ஜூனியர் மீனா.

`சர்ர்ர்...' என ஸ்கேட் ஸ்கூட்டரில் சறுக்கி விளையாடிக்கொண்டே வந்து `ஹலோ’ சொன்னார். படிக்கட்டில் இருந்து வேகமாகப் பாயும் நைனிகாவைப் பார்த்து மீனா பதறியபடி குரல்கொடுக்க, வாசல் கேட்டைத் தொடுவதுபோல சென்று நொடிக்குள் திரும்பி, பழிப்பு காட்டியபடி சிரிக்கிறார். ‘`இதோ வந்துட்டேன்’' என்று மீனா செல்வதற்குள், வண்டியில் புறப்பட்டு, காருக்குப் பின்னால் சென்று மறைகிறார். குழந்தைத்தனத்துக்கே உரிய  குறும்பும் கொள்ளை அழகும்தான் நைனிகாவின் அடையாளங்கள். அவரின் அதிரடி விளையாட்டைத் தொந்தரவுசெய்யாமல் ஜாலியாகப் பேச ஆரம்பித்தோம்.

கண்ணு... தங்கம்... நண்டு - ‘தெறி’பேபி நைனிகா

“விஜய்யை உங்களுக்குப் பிடிக்குமா?”

 “ஓ... விஜய் அங்கிள் என்னை `பேபி’னுதான் கூப்பிடுவார். அவரோட டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்போ நானும் விஜய் அங்கிளும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் தெரியுமா?”

``உங்களுக்கு கிஃப்ட் கொடுத்தாராமே?’’

“ஆமா. எல்லாமே சூப்பரான கிஃப்ட்ஸ். ஃபர்ஸ்ட் ரிமோட் கார், நெக்ஸ்ட் பிங்க் கலர் பேக், பஸில்ஸ், வாட்ச்... அப்புறம் நிறைய சாக்லேட்ஸ்.”

கண்ணு... தங்கம்... நண்டு - ‘தெறி’பேபி நைனிகா

“முதல்முறையா நடிக்கிறீங்களே... பயமா இருந்துச்சா?’’

“பயம் எல்லாம் இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல நான் ஜாலியா விளையாடிட்டே இருந்தேன். டக்குனு ஷூட்டிங் முடிஞ்சிருச்சு.’’

“விளையாடினீங்களா... டைரக்டர் ஒண்ணும் சொல்லலையா?”

“அவர் வெரி வெரி ஸ்வீட் அங்கிள். என்னைத் திட்டவே மாட்டார்.”

“அட்லிக்கு அவ்வளவு செல்லமா நீங்க?”

“ஆமா. அவர் என்னை `கண்ணு’, `தங்கம்’, `பேபி’னு கூப்பிடுவார். அப்புறம்... (யோசிக்கிறார்) ‘நண்டு’னும் கூப்பிடுவார்'' (சொல்லி முடிப்பதற்குள் க்யூட் சிரிப்பு).

`` ‘தெறி’ ஆடியோ ஃபங்ஷனில் எல்லாரோட பார்வையும் உங்க மேலதான். `தெறி’ பாடல்களில் உங்க ஃபேவரிட் எது?’’

“ `ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்’ என்று ஸ்கூல் ரைம்ஸைப் பாட ஆரம்பித்து, பிறகு டிராக் மாறி, ‘டய்யிலு க்யூட்டா கையில் மாட்டிக்கிட்டா... நிலவோடு மார்னிங் வாக்கா, கிய்யா முய்யா டாக்கா, சும்மா இங்கி, பிங்கி, பாங்கி, போங்கு போட்டு ஓடிப்புட்டா’ '' - `தெறி’யின் சூப்பர்ஹிட் பாடலை க்யூட்டாகப் பாடுகிறார்.

கண்ணு... தங்கம்... நண்டு - ‘தெறி’பேபி நைனிகா

``கார்ட்டூன் சேனலை மாத்தவிட மாட்டீங்களாமே... அம்மா சொன்னாங்க. எந்த கார்ட்டூன் கேரக்டர் பிடிக்கும்?’’

அம்மாவைச் செல்லமாக முறைத்தபடி, ``ஆமா... சோட்டா பீம். அவர் லட்டை எடுத்து அப்படியே டப் டப்னு முழுங்குவார். குண்டு காலியா, டோலு போலுவை அடிச்சிட்டே இருப்பாரு, பீமோட ஃப்ரெண்ட் சுக்கி. அப்புறம் மிக்கி மவுஸ், டோரா, க்ருஷ்...’’ - அம்மாவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சொல்கிறார்.

“உங்க ஸ்கூல்வொர்க்கை அம்மாதான் செய்வாங்களாமே?”

``நோ... நோ... நான்தான் எழுதுவேன். அதுவும் ஷார்ட் டைம்ல செஞ்சுருவேன்.’’

``ஸ்கூல்ல உங்களோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் யார் யார்?’’

`‘மீரா, தனுஸ்ரீ, அஷ்விகா, சாய்ரியேன், இஷாந்த், சர்வேஸ்வர், அஸ்வின், மதி, அர்ஜுன், ஐஷா’’ - பட்டியல் நீள்கிறது.

கண்ணு... தங்கம்... நண்டு - ‘தெறி’பேபி நைனிகா

``உங்களோட ஃபேவரிட் டீச்சர் யார்?’’ 

``நல்லி மேம், அனூஷ் மேம், கவிதா மேம், நீலு மேம், கெளஷி மேம், லஷ்மி மேம், கலரிங் செய்யச் சொல்லும் கிறிஸ்ட்டி மேம். ஒண்ணு தெரியுமா... நல்லி மேம் என்னை `நைனு... நைனு’னுதான் கூப்பிடுவாங்க.’’

கண்ணு... தங்கம்... நண்டு - ‘தெறி’பேபி நைனிகா

``சரி... `தெறி’யில் உங்களுக்கு என்ன கேரக்டர்?’’

மாஸ்லுக்விட்டு, கையை ஸ்டைலாக ஆட்டிக்கொண்டே சொல்கிறார்... `‘தெறி பேபி”.

நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே அவருடைய ஸ்கேட்டிங் ஸ்கூட்டர் கிளம்பிவிட, பாப்பாவுக்கு `பை’ சொல்லிவிட்டு,

 `` `தெறி’க்குள் குட்டி தேவதை நுழைந்தது எப்படி?'' என அம்மா மீனாவிடம் கேட்டோம்.

“அதுதான் எனக்கு இப்ப வரைக்கும் தெரியலை. இயக்குநர் அட்லி, நைனிகாவின் போட்டோவை எங்கேயோ பார்த்துட்டு என்னிடம் கேட்டார். `ரொம்பச் சின்னப் பொண்ணு அவ. அதனால வேணாமே’னு சொல்லிட்டேன். அப்புறம் அவர் வந்து கதையைச் சொல்லி, ‘நீங்களே குழந்தை நட்சத்திரமா நடிக்க வந்தவர்தானே...’னு என் மனதை மாத்திட்டார். ஆனாலும் எனக்கு எப்படி நடிப்பாளோங்கிற பதற்றம் இருந்தது. அட்லியின் உதவி இயக்குநர்கள், நைனிகாவோடு விளையாடி ஃப்ரெண்ட்ஸ் ஆனதும்தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்.

முதல் நாள் ஷூட்டிங்கில், கொடுத்த வசனங்களை நைனிகா கரெக்ட்டா பேசினதோட, அதுக்கு சரியான ரியாக்‌ஷனையும் காட்டினப்ப, எனக்கே ஆச்சர்யமா இருந்தது. விஜய் சார், `என்னங்க... இப்படி அசத்துறாங்க?!’னு கேட்டதும் கூடுதல் சந்தோஷம். மேடம் நல்ல மூடில் இருந்தா கலக்கிடுவாங்க. மூட் அவுட் ஆச்சு... தொலைஞ்சோம்” என்று சிரிப்போடு மீனா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, `தெறி’ பேபியின் ஸ்கேட் ஸ்கூட்டர் நம்மைத் தாண்டி சீறிப் பாய்கிறது!