Published:Updated:

தோழா - சினிமா விமர்சனம்

தோழா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தோழா - சினிமா விமர்சனம்

தோழா - சினிமா விமர்சனம்

பிஸி பிசினஸ்மேன் நாகார்ஜுனா. அவர் ஒரு விபத்தில், கழுத்துக்குக் கீழே எல்லா பாகங்களும் செயலிழந்து வீல் சேரில் முடங்க, அவருக்கு கேர்டேக்கர் ஆகிறார் சிறையில் இருந்து பரோலில் வந்திருக்கும் கார்த்தி. இந்த முதலாளி - தொழிலாளி காம்போவுக்கு இடையில் பூக்கும் நெகிழ்வான நட்புதான் `தோழா’.

கலகல பார்ட்டி நாகார்ஜுனாவை ஒரு கண்ணாடி பொம்மைபோல எல்லோரும் கவனமாகக் கையாள, கார்த்தியோ ஜஸ்ட் லைக் தட் டீல் செய்கிறார். மரத்துப்போன அவர் காலில் வெந்நீரை ஊற்றி, `ஒண்ணுமே ஆகலையா?’ எனச் சிரிக்கிறார். இந்த அதிரடி ட்ரீட்மென்ட்டில் தன் குறையை மறந்து சிரிக்கிறார் நாகார்ஜுனா.

படம் முழுக்க அத்தனை க்ளோஸப், அத்தனையையும் அப்படியே தாங்குகிறது நாகார்ஜுனாவின் நடிப்பு. அந்த விரக்தி சிரிப்பும், ஒரு துளி ஆனந்தக் கண்ணீரும் தான் அசத்தல். தனது டிரேட்மார்க் கலாட்டாக்கள்தான் என்றாலும், கார்த்திக்கு இது கம் பேக் படம். இருவரின் பெர்ஃபார்மென்ஸில்தான் படமே நிற்கிறது. தமன்னா, பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா, அனுஷ்கா என தமிழ், தெலுங்கில் மார்க்கெட் இருக்கும் எல்லோருமே ஆஜர். அனுஷ்காவை, நாகார்ஜுனா பார்க்கும் இடத்தில் டூயட்டா என பயந்தால், `இது தெலுங்கு படம் அல்ல, பிரெஞ்சு படம் பாஸ்’ என்கிறார் இயக்குநர். `தி இன்டச்சபிள்ஸ்’ என்ற படத்தின் உரிமையை வாங்கி, ரீமேக் செய்திருக் கிறார்கள்.

தோழா - சினிமா விமர்சனம்

`தோழா'வின் வசீகரம், வசனங்கள்தான். ஒரே ஒரு செகண்ட்ல என் லைஃப் வெறும் ஞாபகமா மாறிடுச்சு’, `மனுஷன் போற இடத்துக்கு எல்லாம் மனசு போகாது’, ‘ப்ரேயர்ல சைலன்ஸ் ஓ.கே., பார்ட்டில என்ன சார் சைலன்ஸ்?’ - ஒவ்வொரு மூடுக்கும் சிக்ஸர் அடித்திருக்கின்றனர் ராஜுமுருகன் - முருகேஷ் பாபு.

வேறு பிரச்னைகளே இல்லாமல், ஒரே ரூட்டில் போகும் கதையும் கார்த்தியின் குடும்பப் பிரச்னைகள் சீரியல் ரேஞ்சுக்கு இழுப்பதும் திருஷ்டிப் பொட்டுகள். மகிழ்ச்சியாக இருக்க பணம் முக்கியம் அல்ல என்பதைச் சொல்ல மெனக்கெட்டிருந்தாலும், படத்தில் எல்லா பிரச்னைகளும் பணத்தால்தானே தீர்கிறது ப்ரோ? படம் முழுக்க பாசிட்டிவ் விஷயங்களைக் காட்டிவிட்டு, ரோடு ரேஸிங் த்ரில்லானது எனக் காட்டியிருப்பதும் நெருடல்.

தோழா - சினிமா விமர்சனம்பிரான்ஸில் நடக்கும் அந்தப் பிரமாண்ட கார் சேஸிங்கில் தெறிக்கிறது பி.எஸ்.வினோத்தின் கேமரா. டிரீம் சாங்குக்கு மனசு ஏங்காத திரைக்கதை என்பதால், கோபி சுந்தரின் பாடல்கள் எக்ஸ்ட்ரா லக்கேஜ்தான்.

கொஞ்சம் மெலோ டிராமாவாக இருந்தாலும், ஒரு குட்டி வாழ்க்கையையே வாழ்ந்துவிட்டுத் திரும்பியதுபோல இருக்கிறது!

- விகடன் விமர்சனக் குழு