Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 10

குறும்புக்காரன் டைரி - 10
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 10

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 10

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 10
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 10

காலங்கார்த்தால ஆறு மணி இருக்கும். என் அண்ணன் லோகேஷ், 'டேய் கிஷோர், சீக்கிரம் எழுந்திரிடா. பூகம்பம் வந்திருச்சுடா’னு பதறிக்கிட்டே எழுப்பினான்.

கண்ணைத் திறந்து பார்த்தா, ரூமே களேபரமா இருந்துச்சு. டேபிள் மேல இருந்த பொருளெல்லாம் கீழே சிதறி, சுவத்துல மாட்டியிருந்த போட்டோ சாய்ஞ்சு இருக்க, அலறியடிச்சு எழுந்தேன். கையில சிக்கின பொருளை வாரிச் சுருட்டிக்கிட்டு வெளியில ஓடப்போக, 'டேய், ஸ்கூல் பேக்கை விட்டுட்டியேடா...’னு கத்தினான் லோகேஷ்

குறும்புக்காரன் டைரி - 10

'ஹி... ஹி... ஹோம்வொர்க் எதுவும் பண்ணலை. மிஸ் கேட்டால், பூகம்பத்துல மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லிருவேன்' என்றேன்.

'அடப்பாவி, சரி சீக்கிரம் ஓடு. நான் மத்த பொருட்களை எடுத்து வர்றேன்’ என்றான்.

உசேன் போல்ட்டை மனசுல நினைச்சுக்கிட்டு மாடியில இருந்து கீழே ஓடிவந்தா, அம்மா நின்னு நிதானமா காபி குடிச்சுக்கிட்டு இருந்தாங்க. 'என்னம்மா, கூலா காபி குடிக்கிறே’னு கேட்டேன்.

'கூலா எங்கேடா குடிக்கிறேன்? சூடா குடிக்கிறேன்’னு சிரிச்சாங்க. (நக்கலடிக்கிறாங்களாம்...).  

'அம்மா, பூகம்பம் வந்து ஊரே பதறுது’னு சொல்லிக்கிட்டே திரும்பினா, அப்பா தலைகீழா நின்றார். 'பாருங்க, அப்பாகூட கவுந்துட்டாரு!’ என்றேன்.

'மடையா, அவர் யோகாவுல இருக்கார். காலையில என்ன ஆச்சு உனக்கு?’னு முறைச்சாங்க.

எனக்குப் புரிஞ்சுபோச்சு. அசடு வழிஞ்சுக்கிட்டே ரூமுக்கு வந்தேன்.  என்னைப் பார்த்ததும் லோகேஷ், 'ஏப்ரல் ஃபூல்’ என்றான்

குறும்புக்காரன் டைரி - 10

என்னை ஏமாத்த ஒரு மணி நேரம் ஒர்க்அவுட் பண்ணி, ரூமை மாத்தி இருக்கான்.

இந்தச் சம்பவத்துக்கு அப்புறம், ஸ்கூல்ல யார்கிட்டேயும் ஏமாறக் கூடாதுனு உஷாரா இருந்தேன். போன வருஷம் எப்படியெல்லாம் ஏமாந்தோம், எப்படியெல்லாம் ஏமாத்தினோம்னு ஞாபகப்படுத்திப் பார்த்துக்கிட்டேன்.

'கிஷோர், உன் ஸ்கூல்பேக் மேல பல்லி’, 'என்னடா சட்டையில ஓட்டை’னு யார் என்ன சொன்னாலும் ஒரே ரியாக்ஷன், 'ஆஹான்’.

இப்படி நல்லா போயிட்டிருக்கும்போது ஜெகன் வந்து, 'கிஷோர், உன்னை விமலா மிஸ் கூப்பிட்டாங்க’னு சொன்னான். அவனுக்கும் ஒரு 'ஆஹான்’ கொடுத்தேன்.

காலையில் பயங்கரமா பல்பு வாங்கிட்டோமே, பதிலுக்கு யாருக்காவது பல்பு கொடுத்தே ஆகணுமே. இதோ, கைக்குத் தோதா சிக்கி இருக்கான். இவனைவெச்சு செஞ்சுருவோம்னு முடிவு பண்ணினேன்.

'ஜெகன் ஒரு கேம் விளையாடலாமா?’னு கேட்டேன். 'ஓ... விளையாடலாமே’ என்றான்.

என் அஞ்சு விரல்களையும் மூடினேன். கையை அவன் முன்பு நீட்டி, 'இதான் ஃபிரிட்ஜ். ஓப்பன் தி டோர்’னு சொன்னேன். ஜெகனும் விரல்களைத் திறந்தான்.

'டேக் தி வாட்டர் பாட்டில்’னு சொன்னேன்.

'இங்கே எங்கடா வாட்டர் பாட்டில் இருக்கு?’னு தெளிவா கேட்டான்

குறும்புக்காரன் டைரி - 10

'இருக்கிற மாதிரி நினைச்சு எடு’னு சொன்னதும், வாட்டர் பாட்டிலை எடுத்தான்.

'டிரிங்க்’னு சொன்னதும், தண்ணீர் குடிக்கிற மாதிரி நடிச்சுட்டு, 'ம்... குடிச்சுட்டேன்’னு சொன்னான்.

'பாட்டில் மூடியைத் திறக்காமலே குடிக்கிறே, முட்டாப் பயலே’னு கலாய்ச்சேன்.

அப்போது, விமலா மிஸ் என்ட்ரி கொடுத்து, 'கிஷோர், கூப்பிட்டுவிட்டா வர மாட்டியா?’னு கோபமா கேட்டாங்க.

உடனே ஜெகன், 'சொன்னேன் மிஸ். ஏப்ரல் ஃபூல் பண்றேன்னு சொல்லி, இவன் கண்டுக்கவே இல்லை’னு போட்டுக்கொடுக்க, மிஸ் முறைச்சுக்கிட்டே போய்ட்டாங்க.

இந்தச் சம்பவத்துக்கு அப்புறம், அன்னிக்கி முழுக்க எவன் எது சொன்னாலும், 'அய்யோ, நிஜமா சொல்றானா... ஏப்ரல் ஃபூல் பண்றானா?’னு இடியாப்ப மனநிலையிலேயே திரிஞ்சேன்.

நல்லவேளை, ஒரு நாள் மட்டும் ஏப்ரல் ஃபூல் கொண்டாடுறாங்க. ஒரு மாசம் முழுக்க இப்படி இருந்தா, என்ன ஆகும்னு நினைச்சுக்கிட்டேன்.

எப்படியோ, வேற பல்பு எதுவும் வாங்காம வீட்டுக்கு வந்துட்டேன். இந்த டைரியை எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, காலைல  என்னை மரண கலாய் கலாய்ச்ச அண்ணனுக்கு பல்பு கொடுக்கும் யோசனை வந்துச்சு. அவன்கிட்டேயும் விரல்களை மூடி நீட்டினேன்

குறும்புக்காரன் டைரி - 10

'ஓப்பன் தி டோர்’னு சொன்னதும், உஷாரா என்னைப் பார்த்தவாறே திறந்தான்.

'டேக் தி ஆப்பிள்’ என்றதும், எடுத்தான்.

'கட் தி சிக்ஸ் பீஸ்’னு சொன்னதும், ஒரு விரலை கத்தியாக மாற்றி அறுத்தான்.

'சாப்பிடு’ என்றதும், கொஞ்சம் தயக்கத்தோட என்னைப் பார்த்துக்கிட்டே சாப்பிட்டான்.

'ஏண்டா, ஆப்பிளை கழுவிட்டுத்தானே சாப்பிடணும். அப்படியே கட் பண்ணி சாப்பிடுறே... என்னதான் படிக்கிறியோ, போடா போ’னு சொன்னதும், முறைச்சுகிட்டுப் போனான்.

அப்பாடா, இனி நிம்மதியா தூக்கம் வரும்!

(டைரி புரட்டுவோம்...)