Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 11

குறும்புக்காரன் டைரி - 11
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 11

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 11

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

Published:Updated:
குறும்புக்காரன் டைரி - 11
பிரீமியம் ஸ்டோரி
குறும்புக்காரன் டைரி - 11
குறும்புக்காரன் டைரி - 11

பீதியாகுறதுனா என்னான்னு ஒரு பையனுக்கு இதைவிட தெளிவா புரியவைக்க வேணாம். ஒரு ரூமுக்குள்ள போட்டு கதவைச் சாத்தினாலே அலற ஆரம்பிச்சுருவேன். நேத்து அவ்வளவு பெரிய காட்டுக்குள்ளே, தனியாளா சுத்தினதை நினைக்க நினைக்க டெரர் ஆகுது.

சம்மர் லீவுக்கு, பாட்டி ஊருக்குப் போறதாதான் பிளான். ஆனா, ஸ்கூல்ல ட்ரெக்கிங் கேம்ப் கூட்டிப்போறதா சொன்னாங்க. எத்தனை நாளைக்குத்தான் மனுஷங்களையே பாக்குறது. ரெண்டு நாள் காட்டு நண்பர்களைப் பாக்கலாமேனு நானும் கையத் தூக்கிட்டேன்.

காட்டுக்குள்ளே ஹாயா சுத்தலாம்; சிங்கம், புலி யானைகளோட செல்ஃபி எடுக்கலாம், அருவியில் குஷியா குளிக்கலாம்னு கற்பனை ஓட ஆரம்பிச்சது. திரும்பி வரும்போது, ஒரு முயலைப் புடிச்சுட்டு வந்துடணும்டானு ஜெகன் சொல்லிட்டு இருந்தான்.

அந்த நாளும் வந்துச்சு. காட்டு எல்லை வரை பஸ்ஸுல வந்தோம். அங்கே செக்போஸ்ட்ல எங்க பைகளைச்  சோதனை போட்டாங்க. பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் எதுவும் கொண்டுபோகக் கூடாதுனு சொன்னாங்க. 'நீங்க ட்ரெக்கிங் போகும் வழியில் பிளாஸ்டிக் கவர் கிடந்தாலும் எடுத்துவெச்சுட்டு, திரும்ப வரும்போது இங்கே  கொடுத்துடுங்க’னு ஃபாரஸ்ட் ரேஞ்சர் சொன்னார். போறபோக்குல ஒரு பொதுச்சேவை.

'காட்டுக்குள்ள சத்தமா பேசக் கூடாது. விலங்குகள் வந்துரும். கீழே கட்டை கிடந்தா எடுக்காதீங்க. அதுக்குள்ளே பூச்சிகள் இருக்கலாம். வீட்டுல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வந்திருந்தா கொடுத்துருங்க. ஏன்னா, வாசனையைக் கண்டுபிடிச்சு யானை வந்துரும்’னு ரேஞ்சர் சொல்லச்சொல்ல, மனசுக்குள்ளே மறைஞ்சிருந்த பயம், முகத்துல பப்ளிக்கா எட்டிப் பாத்துச்சு

குறும்புக்காரன் டைரி - 11

அப்போ, 'உருளைக்கிழங்கு பொரியல் எடுத்துட்டு வந்திருக்கேனே அதை என்ன பண்றது?’னு ஜெகன் கேட்க, 'நல்லவேளை சொன்னியே, யானை நம்மளை பொரியல் ஆக்கிடும்’னு அதைப் பிடுங்கிவெச்சுட்டாரு ரேஞ்சர் மாமா.

இப்படியே முதல் நாள் பகல் ஃபுல்லா கிளாஸ் எடுக்கிறதுலயே போயிருச்சு. அன்னைக்கு நைட்டு காட்டுக்குள்ள தங்குறதுதான் பிளான். நல்ல இடமா பார்த்து டென்ட் போட்டு படுத்துக்கிட்டோம்.

அசந்து தூங்கிட்டு இருக்கும்போது, ஏதோ சத்தம் கேட்டு முழிச்சுக்கிட்டேன். நாங்க இருந்த டென்ட்டு ஆடிட்டு இருந்துச்சு. ஒருவேளை யானை வந்து ஆட்டுதோனு பயந்துபோய் ஜெகனை உலுக்கி,  'அடேய் எழுந்திருடா, உன் உருளைக்கிழங்கு பொரியல் வாசனை, உன் பையில இன்னும் ஒட்டிட்டு இருக்கும்போல’னு கிசுகிசுத்தேன்.

அவன், வீட்டுல இருக்கிறதா நினைச்சுக்கிட்டு, 'இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் மம்மி. காஃபி வேணாம்’னு புரண்டான்.

டென்ட்டில் இருந்த நாலு பசங்களும் எழுந்து அலற ஆரம்பிச்சுட்டோம். எனக்கு அழுகையே வந்துருச்சு. மெதுவா எழுந்து நிதானமா விஷயத்தைப் புரிஞ்சுக்கிட்ட ஜெகன், 'ஏன் கிஷோர், சினிமால வர்ற மாதிரி ஏதாச்சும் பாட்டு கீட்டு பாடினா யானை திரும்பிப் போக வாய்ப்பிருக்கா?’னு கேட்டான்.

'நீ பாடினா, அந்த யானை போய் சிங்கத்தையும் கூட்டிட்டு வந்துரும்டா’னு சொல்லிட்டு இருக்கும்போதே, டென்ட்டை ஒரு தும்பிக்கை... இல்லை இல்லை ஒரு கை திறந்துச்சு.

'அடேய், ஏன் கத்துறீங்க. நான்தான்’னு ரேஞ்சர் மாமா வந்து நின்னாரு

குறும்புக்காரன் டைரி - 11

'சார், யானை போயிருச்சா? டென்ட்டை ஆட்டிட்டு இருந்தது’ன்னு சொன்னேன்.

'காத்துக்கு டென்ட் ஆடுது. காட்டுக்குள்ளே இப்படித்தான் காத்து அடிக்கும். இப்போ, நீங்க கத்துன கத்துக்குதான் எல்லா விலங்குகளும் கிளம்பி இருக்கும். சத்தம் போடாம படுங்க’ன்னு சொல்லிட்டுக் கிளம்பினார்.

அதுக்கப்பறம் எங்கே தூங்குறது? எப்படா விடியும்னு பயத்துலயே போயிருச்சு.

அடுத்த நாள், இதைவிட டெரரா போச்சு. காலையில அருவியில குளிச்சுட்டு மலையேறினோம். ரேஞ்சர் மாமா ஏதேதோ பழங்களை எடுத்துட்டு வந்திருந்தார். அதைச் சாப்பிட்டுட்டு அப்படியே நடக்க ஆரம்பிச்சோம். காட்டுக்குள்ள ஒத்தையடிப் பாதையில் போய்ட்டு இருக்கும்போது, ஒரு இடத்துல முயல் ஒண்ணு தூங்கிக்கிட்டு இருக்கிறதைப் பாத்தேன்.

ஜெகன்கிட்டே ரகசியமா, 'நீங்க முன்னாடி போங்க. இதோ வந்துர்றேன்’னு சொல்லிட்டு நைஸா நழுவினேன். அந்த முயல்கிட்டே மெதுவா வந்தேன். என்னை எப்படி பார்த்துச்சோ தெரியல, டச்சுனு துள்ளிக்கிட்டு ஓடிருச்சு. கொஞ்ச தூரம் பின்னடியே ஓடிட்டு திரும்பிப் பார்த்தா, எங்கூட வந்தவங்க ஒருத்தரையும் காணலை

குறும்புக்காரன் டைரி - 11

'அதுக்குள்ளேவா கண்ணுக்கு எட்டாத தூரத்துக்குப் போய்ட்டாங்க?’ன்னு ஆச்சர்யமா இருந்துச்சு. கத்தலா கூப்பிடவும் பயம். அந்தச் சத்தத்தைக் கேட்டு, சிங்கமோ புலியோ கிளம்பிருச்சுனா.

பேசாம டென்ட்டுக்கே திரும்பிப் போகலாம்னு பார்த்தா, எந்தத் திசையில போகணும்னு தெரியலை. குத்துமதிப்பா ஒரு திசையில அழுதுக்கிட்டே ஓட ஆரம்பிச்சேன்.

பின்னாடி இருந்து 'கிஷோர், நாங்க இங்கே இருக்கோம்’னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தா, எல்லா பயல்களும் பாறைக்குப் பின்னாடி இருந்து வர்றாங்க.

பக்கத்துல வந்த ரேஞ்சர் மாமா, 'வரிசையில போகும்போது, இப்படி தனியா போகக் கூடாது.  மத்தவங்களுக்கும் இது பாடமா இருக்கட்டும்னுதான் ஒளிஞ்சு விளையாடினோம்’னு சிரிச்சார்.

நான் தலையைச் சொறிஞ்சுக்கிட்டு நின்னேன். அப்புறம், வீட்டுக்கு வர்ற வரைக்கும் தனியா போகணும்னு நினைக்கக்கூட இல்லை. எவன் கையவாச்சும் புடிச்சுக்கிட்டேதான் சுத்துனேன்.

 (டைரி புரட்டுவோம்...)