Published:Updated:

குறும்புக்காரன் டைரி - 12

குறும்புக்காரன் டைரி - 12
பிரீமியம் ஸ்டோரி
News
குறும்புக்காரன் டைரி - 12

தி.விக்னேஷ் ஓவியங்கள்:ராஜேஷ் ஆர்.வி

குறும்புக்காரன் டைரி - 12

ஸ்கூலுக்கு போய்ட்டு இருக்கும்போது, எப்படா லீவு வரும் ஜாலியா என்ஜாய் பண்ணலாம்னு இருக்கும், இப்போ லீவு. ஆனா, எப்படா ஸ்கூல் தொறப்பாங்கனு இருக்கு. வரப்போற எக்ஸாம் ரிசல்ட்டை நினைச்சா திக்குத் திக்குனு இருக்கு.

போன வாரம், ''கிஷோர், இந்த எக்ஸாம்ல நீ ஏ கிரேடு வாங்கினா, உனக்கு சைக்கிள் வாங்கித் தர்றேன். மார்க் குறைஞ்சா, உன்கூட ஒரு வாரத்துக்கு பேச மாட்டேன்'னு அம்மா சொன்னாங்க.

நான் உடனே, 'அப்போ, ஒரு வாரத்துக்கு பாட்டி ஊருக்குப் போயிர்றேன். அந்த ஒரு வாரம் பேசாம இருந்துக்கோங்க'னு சொல்ல, அம்மாவுக்கு அப்பவே என் ரிசல்ட் தெரிஞ்சுபோச்சு.

லீவுல எந்தச் சேட்டையும் பண்ணாம, நான்பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். என் அண்ணன் லோகேஷ்தான், வாடா கிரிக்கெட் விளையாடலாம்னு கூப்பிட்டான். வீட்டுக்குள்ளயே மினி கிரிக்கெட். ஆளுக்கு ஒரு ஓவர் மேட்ச், அவனோட ஸ்கோர், மூணு ஃபோர் ஒரு சிக்ஸ். என்னோட ஸ்கோர், ரெண்டு ஃப்ளவர் வாஸ், ஒரு வால் க்ளாக்.

லோகேஷ் என்னைக் குற்றம் சொல்றதுக்கு முன்னாடி, 'ஏண்டா இவ்வளவு ஸ்பீடா பால் போட்டே, உன்னாலதான் எல்லாம் உடைஞ்சுருச்சு'னு கத்துனேன். அதுக்கு அவன் டென்ஷனாகி, 'டேய் நீ அடிச்சு உடைச்சிட்டு என்னைய சொல்றியா?'னு கொலவெறியில பாய்ஞ்சான்.

ரெண்டு பேரும் கட்டி உருண்டு சண்டை போட்டதுல, மீன்தொட்டி மேல மோதி, அதுவும் உடைஞ்சுபோச்சு. இதை யார் கணக்குல எழுதுறதுனு மறுபடியும் சண்டை வர, அதுக்குள்ள வெளியில போயிருந்த அம்மாவும் அப்பாவும் வந்துட்டாங்க. அரை மணி நேரம் நிறுத்தாம திட்டுனாங்க. கடைசியில ஃபினிஷிங் டச்சா, 'லீவுல வீட்டுல இருந்தா, இப்படித்தான் எதையாவது உடைச்சு வைப்பீங்க. நாளைல இருந்து ஒழுங்கா சம்மர் கிளாஸ் போங்க'ன்னாங்க.

என்னது, சம்மர்லயும் கிளாஸா? அதுக்கு லீவே விட்டிருக்க வேணாமேனு தோணுச்சு.

சும்மா இருக்கிற நேரத்துல ஏதாச்சும் உருப்படியா கத்துக்கிட்டா, ஃப்யூச்சர்ல யூஸ் ஆகும்னு, கிளாஸ் போகவைக்கவே ஒரு மணி நேரம் கிளாஸ் எடுத்தாங்க. வேற வழியே இல்லாம சரின்னுட்டேன்

குறும்புக்காரன் டைரி - 12

அன்னைக்கு மதியம், 'உனக்கு கிட்டார் கிளாஸுக்கு ஃபீஸ் கட்டியாச்சு. ஒழுங்கா நாளைல இருந்து கிட்டார் வாசிக்கக் கத்துக்கோ’னு சொல்ல, எப்படியாச்சும் இந்த லீவு முடியுறதுக்குள்ள, 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ பாட்டை மட்டும் வாசிக்கக் கத்துக்கணும். அப்பத்தான் அடுத்த வருஷம் ஸ்கூல் ஆண்டு விழாவுல வாசிச்சு, ஸ்கூல் பிரபலமாகிடலாம். நினைக்கும்போதே செம கெத்தா இருந்துச்சு.

''ஹலோ கிட்டாரிஸ்ட் கிஷோர், ஆட்டோகிராஃப் பிளீஸ்'னு பல பேர் கேட்கிற மாதிரி கற்பனை சிறகடிச்சுது. ஆனா, நைட்டே அப்பா ஷாக் கொடுத்தார். நாளைக்கு கிளாஸுக்கு யூஸ் ஆகும்னு சொல்லி ஸ்விம்மிங் சூட்டை நீட்டினார். கிட்டார் கிளாஸுக்கு எதுக்கு ஸ்விம்மிங் சூட்?னு கேட்டேன்.

''என்னது, கிட்டார் கிளாஸா? உன்னை ஸ்விம்மிங் கிளாஸ்லதானே சேத்திருக்கேன்’னு அப்பா சொல்ல, என்னை மாதிரியே அம்மாவுக்கும் ஷாக்.

அப்புறம்தான் விஷயமே புரிஞ்சுது. அப்பாவோட சாய்ஸ் ஸ்விம்மிங். ஆனா, கிட்டார் கிளாஸ்தான் சேரனும்னு அம்மா சொல்றாங்க. கடைசியில, காலைல ஸ்விம்மிங், மாலைல கிட்டார் போகட்டும்னு அவங்களே ஒரு முடிவுக்கு வந்தாங்க. லோகேஷ் இந்தக் கொடுமைகளைப் போன வருஷமே அனுபவிச்சதால அவனுக்கு யோகா கிளாஸ். பய, சும்மாவே தலைகால் புரியாம சுத்துவான். இதுல யோகா கிளாஸ் வேற

குறும்புக்காரன் டைரி - 12

வீட்டுல கொஞ்ச நேரம் குளிச்சாலே, இவ்வளவு நேரம் தண்ணியில இருந்தா சளி புடிச்சுக்கும்னு திட்டிட்டு, இப்போ என்னடான்னா ஃபுல்லா தண்ணியிலஇருக்க வைக்கிறாங்களேனு கடுப்பா இருந்துச்சு. கிட்டார் கிளாஸ் போறதுதான் எனக்குப் பிடிச்சிருந்தது.

முதல் நாள் கிட்டார் கிளாஸ், 'உனக்கு கிட்டார்ல என்னெல்லாம் தெரியும்?'னு மாஸ்டர் கேட்டாரு. எதுவுமே தெரியாது சார். ஆனா, எப்படியாச்சும் பத்து நாள்ல, 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ பாட்டை மட்டும் வாசிக்க வெச்சிருங்க போதும்னு சொல்ல, என்னை மொறச்சுப்பாத்தாரு.

வெளிநாட்டுக்காரங்க கிட்டார் வாசித்தை எல்லாம் போட்டுக் காட்டினாங்க. கிளாஸ் முடியுறதுக்குள்ள இதைவிட அசத்தலா வாசிப்பேன்னு நினைச்சேன். ஆனா, மாஸ்டர் சொல்லிக்குடுத்ததை வாசிக்க ஆரம்பிச்சா, ஏதோ கம்பிகள்ல எசகுபிசகா கைவைக்க, அதுல வர்ற சத்தம் என்னாலேயே தாங்க முடியாது. பக்கத்துல இருக்கிற பசங்களையும் மாஸ்டரையும் பாக்கவே பாவமா இருக்கும்.

இந்த பத்து நாளும் மாஸ்டர் ஒரு பாட்டைச் சொல்லிக்குடுக்க, நான் என் பாட்டுக்கு வாசிக்க, கடைசியில டென்ஷனாகி, 'தம்பி அடுத்த வருஷம் உனக்கு சூப்பரா கத்துத் தர்றேன் போயிட்டு வா'ன்னு அனுப்பிட்டாங்க. அப்பவும் விடாம, 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ மட்டும் சொல்லிக் குடுத்துருங்க பிளீஸ்னு சொல்ல, தம்பி நீ இந்த மாதிரி வாசிச்சா, நெஞ்சுக்குள்ள மழை பெய்யாது. காதுக்குள்ளதான் கரன்ட்டு கம்பியைச் சொருகுனா மாதிரி இருக்கும், வேணாம்னு சொல்லிட்டாரு. சோ சேட்

குறும்புக்காரன் டைரி - 12

நீச்சலும் ஒழுங்கா கத்துக்கல, கிட்டாரும் ஒழுங்கா கத்துக்கலை. சரி, எனக்குத்தான் இப்படி ஆகிருச்சு. லோகேஷ் நிலைமை என்னாச்சுனா, தலைகீழா நின்னு சிரசாசனம் பண்றேன்னு கழுத்தை சுளுக்கிக்கிட்டான். கோணக் கழுத்தோட அவனைப் பார்க்கிறப்ப செம காமெடியா இருக்கு.

இதையெல்லாம் ஜெகன்கிட்ட சொல்லிச் சிரிக்கலாம்னு போன் பண்ணினா, 'சஞ்ரிஞ்டா’ன்னு ராகமா பாடிக்காட்றான். பய, இவனும் சம்மர் கிளாஸால பாதிக்கப்பட்டிருக்கான் போல.

(டைரி புரட்டுவோம்...)