Published:Updated:

24 - சினிமா விமர்சனம்

24 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
24 - சினிமா விமர்சனம்

24 - சினிமா விமர்சனம்

24 - சினிமா விமர்சனம்

லாஜிக்கை ஃபில்டர் பண்ணிவிட்டு, டைம் மெஷின் அறிவியல் தூவி, குடும்ப சென்டிமென்டில் ஊறவைத்து, குளுகுளு ஃபலூடாவாக... சம்மரில் பந்திவைக்கிறது `24’.

கைகளில் கட்டக்கூடிய காம்பேக்ட் கால எந்திரத்தை (கழுகார் உதவியோடு) கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானி சூர்யா. அதைத் திருட நினைக்கும் அவரின் ட்வின் ப்ரதரான ஆத்ரேயா விஞ்ஞானியின் குடும்பத்தை வேட்டையாடுகிறார்; ஆனால் இதில் மகன் சூர்யா, சரண்யாவோடு சென்னைக்குத் தப்புகிறான். கன்னித் தாயால் வளர்க்கப்படும் சூர்யாவுக்கு, கழுகாரின் உதவியால் மீண்டும் கிடைக்கிறது அப்பாவின் கால எந்திரம். தமிழ் சினிமா ஃப்ளாஷ்பேக் இலக்கணப்படி மிகச் சரியாக 26 ஆண்டுகள் கழித்துத் திரும்பிவருகிறார் ஆத்ரேயா. சூர்யாவின் கையில் இருக்கும் கால எந்திரத்தைக் கைப்பற்ற, விட்ட இடத்தில் இருந்து வேட்டையைத் தொடர்கிறார். காலம் யார் வசமானது என்பது கடைசி எபிசோட்.

காலம் பற்றிய படம் என்பதால், கண்டதையும் காட்டி நேரத்தை வீணடிக்கவில்லை. முதல் ஃப்ரேமில் இருந்தே கதையைத் தொடங்கிவிடுகிறார் இயக்குநர் விக்ரம் கே குமார்.  ஹீரோ துப்புகிற பபிள்கம் தொடங்கி, கைநழுவி விழுகிற மின்சாரக் கம்பி வரை  கதைக்குள் எது நழுவினாலும் அது திரைக்கதையோடு தொடர்புகொள்கிறது. நாயகன் - வில்லன் சதுரங்கச் சண்டையில் எல்லா மூவ்களுமே எதிர்பார்த்தபடி நகர்த்தப்பட, முடிவில் வைத்திருக்கிற சின்னத் திருப்பம்  தூக்கி அடிக்கிறது.

அறிவியல் லாஜிக்குகளுக்குள் நுழைந்தால், ஏராளமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று, இயற்பியல் வேதியியலை எல்லாம் எளிதாகக் கடந்துவிட்டு, அழகான ஃபேமிலி டிராமாவுக்குள் கதையைக் கொண்டுசென்றது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

மூன்றுமுகம் காட்டும் சூர்யாவுக்கு அயன்  டைப் `க்யூட்பாய்... குட்பாய்' முகம்தான் டாப்பாக செட்டாகிறது. வில்லன் ஆத்ரேயாவின் கெட்டப் செம சுவாரஸ்யம். சமந்தாதான் நாயகி என்றாலும், மாதாஜி சரண்யாதான் மனதில் நிற்கிறார்.

மூன்று சூர்யாக்களுக்கும் தனித்தனியாக வண்ணம்பிடித்ததில் தொடங்கி ரசித்து ரசித்து, காட்சிகளைக் காதலியைப்போல படம்பிடித் திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு.

பல் சக்கரங்களால் உருவான அந்த ஆய்வுக்கூடத்தில் ஆர்ட் டைரக்டர் அமித் ரே மற்றும் சுப்ரதா சக்ரபோர்ட்டியின் பங்களிப்பு எக்கச்சக்கம். இசை ஏ.ஆர்.ரஹ்மான்  என்பது ஆங்காங்கே தெரிகிறது.

இவ்வளவு நீ...ளமான படத்தில் ரெண்டு நிமிடங்கள் ஆத்ரேயா-சேதுராமன் பிரச்னையைச்  சொல்லியிருக்கலாமே. 24 மணி நேர கால எந்திரத்தில் சின்ன காலண்டரை மாட்டி, ஓவர்நைட்டில் அதை முழுமையான காலஎந்திரமாக மாற்றுவது `ரோஃபல்' மொமன்ட். இத்தனை பரபரப்பான கதையில் இரண்டாம் பாதியில் வரும் காதல் காட்சிகளுக்கு ஃபாஸ்ட் ஃபார்வேர்டு போட்டிருக்கலாம்.

24 - சினிமா விமர்சனம்

​சயின்ஸைத் தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தால்... நல்ல டைம்பாஸ்!

- விகடன் விமர்சனக்குழு