Published:Updated:

ஹாலிவுட் தமிழா!

ஹாலிவுட் தமிழா!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹாலிவுட் தமிழா!

பா.ஜான்ஸன்

ஹாலிவுட் தமிழா!

``சின்ன வயசுல இருந்தே சினிமான்னா ரொம்பப் பிடிக்கும். காலேஜ் முடிச்சுட்டு ‘சென்னைக் கவிகள்’னு நண்பர்கள் சேர்ந்து தமிழ் மென்பொருட்கள் உருவாக்கினோம். தமிழ் ஃபான்ட்ஸ் ரொம்பப் பிரபலமாப் பேசப்பட்ட சமயம் அது. பத்து ஃபான்ட், 20,000 ரூபாய்க்கு வித்தாங்க. அந்தச் சமயத்தில் எங்களுடைய ‘சென்னைக் கவிகள்’ பேசப்பட்டது. பிறகு, எல்லாரும் பிரிஞ்சு போயிட்டோம். நான் சினிமாவுக்குப் போனேன்'' - மென்மையாகப் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் மனோஜ் அண்ணாதுரை. ‘கெட் ஹேப்பி’ என்ற ஹாலிவுட் படம் மூலம் பல திரைவிழாக்களில் கவனம் ஈர்த்தவர். தன் படத்துக்காக கோல்டன் ரெமி விருதைப் பெற்றிருக்கும் தமிழர்.

ஹாலிவுட் தமிழா!

``நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் ஒரு கோர்ஸ் பண்ணினேன். அதைத் தவிர வேற சினிமா அனுபவம் எதுவும் எனக்கு இல்லை. இன்னைக்கு டெக்னாலஜி வளர்ந்திடுச்சு. நல்ல டீம் அமைஞ்சுதுன்னா, பாதி வேலை முடிஞ்சுடும். எனக்குக் கிடைச்ச டீம்தான் நான் வெற்றிகரமா ஒரு படம் எடுக்கக் காரணம்!''
 
`` ‘கெட் ஹேப்பி’ எப்படி உருவானது?''

``நான் கதைகள் எழுதிட்டிருந்தபோது, ஸ்கிரிப்ட் டாக்டர்ஸ்கிட்ட கொடுத்துப் படிக்கச் சொல்வேன். அதில் ஒருத்தர் எனக்கு நெருங்கிய நண்பர். `நான் உனக்கு சில ஸ்கிரிப்ட்ஸ் தர்றேன். நீ படிச்சுட்டுச் சொல்லு'னு கொடுத்தார். அதில் எனக்குப் பிடிச்ச ஒண்ணுதான் `கெட் ஹேப்பி'.

எல்லாருமே, சந்தோஷமா இருப்பதற்கான வழியைத் தேடித்தான் ஓடுறோம். ஆனா, நிஜமான சந்தோஷம் என்பது, கால ஓட்டத்தில் மாறக்கூடியது; நபர்களைப் பொறுத்து மாறக் கூடியது. அப்படி சந்தோஷத்தைக் தேடும் ஒருத்தனைப் பற்றிய கதைதான் ‘கெட் ஹேப்பி’. பொதுவா சந்தோஷத்துக்காகச் சொல்லப்படும் வழிகள் ‘எப்பவும் பாசிட்டிவா இரு’, ‘எதையும் மனசுக்குள்ள வெச்சுக்காத... எல்லாத்தையும் கொட்டிடு’. நான் இந்த ரெண்டு விஷயங்களையும் ஹீரோவோட ரெண்டு நண்பர்கள் கேரக்டரா வெச்சிருக்கேன். இவங்களுக்குள்ள நடக்கும் சுவாரஸ்யங்கள்தான் கதை. இதுக்கு இடையில் சின்னக் காதல்.''

ஹாலிவுட் தமிழா!

``இண்டிபெண்டன்ட் ஃபிலிம், ஏதாவது திரைவிழாக்களில் கொஞ்ச பேர் பார்ப்பாங்க. அதைத் தாண்டி யாருக்கும் முழுசா போய்ச் சேராதே?''

``பொதுவா ‘இண்டிபெண்டன்ட் மூவி’ பிரிவில் தயாராகும் பெரும்பாலான படங்கள் தியேட்டர்ல ரிலீஸ் ஆகாது. ஆனா, என் படத்தைப் பார்த்த ஒரு அமெரிக்க விநியோகஸ்தர் படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணார். ஏன்னா, ‘கெட் ஹேப்பி’க்கு மன்ஹாட்டன் ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல ‘சிறந்த ரொமான்டிக் காமெடி’ பிரிவில் விருதும், இன்னும் சில திரைப்பட விழாக்களில் பாராட்டும் கிடைச்சிருக்கு. இது வெறுமனே விருது படம் இல்லை, எல்லாருக்குமான ரசனைப் படம்.''

ஹாலிவுட் தமிழா!

``எதுக்காக ஆங்கிலப் படம்... தமிழ்ல பண்ணலாமே?''

``அங்கேதான் எனக்கு வாய்ப்பு கிடைச்சது,  நம்ம ஊர்ல ஒரு படம் எடுத்தோம்னா, அது தியேட்டர்ல ஓடினால்தான் காசு. வேற எந்த வழியும் கிடையாது. ஹாலிவுட்ல இந்தப் பிரச்னையே இல்லை. அங்கே தியேட்டர்ல ரிலீஸ் பண்ணலைன்னாக்கூட, என்னால சம்பாதிக்க முடியும். விமானத்தில் போகும்போது அதில் படம் பார்ப்பாங்கள்ல... அதில் தொடங்கி நிறைய விஷயங்கள் மூலமா படத்தை மார்க்கெட் பண்ண முடியும்.''

ஹாலிவுட் தமிழா!

``ஹாலிவுட் மூவி மேக்கிங்ல நீங்க பார்த்த வேற வித்தியாசங்கள் என்ன?''

``அங்கே எல்லா படங்களிலும் ஒரு என்டர்டெய்ன்மென்ட் லாயரைச் சேர்த்துக்கணும். அது கட்டாயம். அவர் கதையில் இருக்கும் சட்டச் சிக்கல்களை சரிபண்ணுவார். எந்த அளவுக்குன்னா, என் ஸ்கிரிப்ட்ல ஒரு சீன் எழுதியிருந்தேன். அதில், காட்சியின் பின்னணியில் `டாக்ஸி டிரைவர்'ங்கிற படத்தின் போஸ்டர் இருக்கும்னு எழுதியிருந்தேன். அவர் அதைப் படிச்சுட்டு, `இந்த போஸ்டரை யூஸ் பண்ண நமக்கு அனுமதி கிடையாது'னு சொல்லிட்டார். இப்போ, நாம இளையராஜா பாடல்களை எல்லாம் தூக்கி, கதையில அங்கே இங்கே செருகுவோம் இல்லையா, அந்த மாதிரி அங்கே பண்ணவே முடியாது.''