Published:Updated:

சைரஹத் - ஆணவப் படுகொலைக்கு எதிரான ஓர் ஆவணம்!

சைரஹத் - ஆணவப் படுகொலைக்கு எதிரான ஓர் ஆவணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சைரஹத் - ஆணவப் படுகொலைக்கு எதிரான ஓர் ஆவணம்!

விக்னேஷ் ஜெயவேல்

சைரஹத் - ஆணவப் படுகொலைக்கு எதிரான ஓர் ஆவணம்!

கையில் செல்போன், பையில் டேப்லெட், வீட்டில் லேப்டாப், அலுவலகத்தில் டெஸ்க்டாப் துணையுடன் ஃபேஸ்புக்கில் அமெரிக்க நண்பனுக்கு லைக் போடுவோம்; டெல்லி தோழிக்கு ஹாய் சொல்வோம். கூடவே ஆணவப்படுகொலைகளையும் அடிக்கடி செய்வோம். இவையே இன்றைய நாகரிகத் தமிழனின் அடையாளங்கள்.

வெற்றுப்பார்வையில் நச்சுக்காற்று எப்படி கண்களுக்குத் தெரியாதோ, அதைப்போலத்தான் நம் நாகரிக உள்ளத்தில் படிந்துகிடக்கும் சாதிவெறியும். புரையோடிப்போயிருக்கும் ஆணவப் படுகொலைகளை அப்படியே அச்சு அசலாக வெளிப்படுத்துகிறது மராத்தி மொழிப் படமான `சைரஹத்'. தலித்துகளின் துயரத்தை சாட்டையில் அடிப்பதுபோல சுளீரெனச் சொன்ன `ஃபாண்ட்ரி' பட இயக்குநர் நாகராஜ் மஞ்சுலேவின் அடுத்த படைப்பு.

சைரஹத் - ஆணவப் படுகொலைக்கு எதிரான ஓர் ஆவணம்!

‘சைரஹத்’ என்றால் ‘காட்டுமிராண்டித்தனம்’ என அர்த்தம். அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம். `ஃபாண்ட்ரி' திரைப்படத்தில் ஒரு தலித் சிறுவனின் பால்யகால காதலைச் சொல்லியிருப்பார் நாகராஜ். `சைரஹத்'தில் அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் ஒரு காதலை, அதன் சிக்கலை, அந்தக் காதல் மீது சாதி உண்டாக்கும் தாக்கத்தை முகத்தில் அறைவதுபோல சொல்லியிருக்கிறார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிட்டர்காவ் எனும் கிராமத்தில் கதை நடக்கிறது. தலித் குடும்பத்தைச் சேர்ந்த பர்ஷ்யா, பணக்காரக் கும்பத்தைச் சேர்ந்தவரும் ஆதிக்க சாதி பெண்ணுமான ஆர்ச்சியை விரட்டி விரட்டிக் காதலிக்கிறான். அவளைப் பார்க்கும்போது எல்லாம் அவனுக்குள் காதல் சிறகடிக்கிறது. ஆர்ச்சியின் தந்தை மதவாதமும் ஆணாதிக்கமும் கலந்த அரசியல்வாதி. அவருடைய ஆதிக்க சாதித் திமிர் ஆர்ச்சியிடமும் இருக்கிறது. கல்லூரியில் பர்ஷ்யாவும் ஆர்ச்சியும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். ஆர்ச்சிக்கு, பர்ஷ்யாவைப் பிடித்துவிடுகிறது. தன் காதலை வெளிப்படுத்துகிறாள். மகிழ்ச்சி மட்டுமே நிறைந்த அவர்களின் காதல் வாழ்க்கையில் சாதி குறுக்கிடுகிறது.

சைரஹத் - ஆணவப் படுகொலைக்கு எதிரான ஓர் ஆவணம்!

`தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த உனக்கு, உயர் சாதிப் பெண் கேட்கிறதா?' என பர்ஷ்யாவும் அவன் குடும்பத்தினரும் மிரட்டப்படுகின்றனர். கர்மலாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு விரட்டப்படுகிறான் பர்ஷ்யா. ஆர்ச்சிக்கு, திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. வீட்டில் இருந்து தப்பித்து, பர்ஷ்யாவிடம் செல்கிறாள். நண்பர்களின் உதவியுடன் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, இருவரும் ஆந்திராவுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

இதுபோன்ற முதிரா வயதில் உருவாகும் காதலின் அத்தனை உளவியல் சிக்கல்களையும் இருவரும் எதிர்கொள்கிறார்கள். திருமணம் செய்துகொள்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. குழந்தையைப் பார்த்தால், குடும்பத்தினர் தம்மை ஏற்றுக்கொள்வார்கள் என எண்ணி, தன் தாயிடம் தொலைபேசியில் பேசுகிறாள் ஆர்ச்சி. அவர்கள் இருக்கும் இடத்தை சாதிவெறியர்கள் தெரிந்துகொள்கிறார்கள். முடிவில் கோகுல்ராஜுக்கு நடந்தது, இளவரசனுக்கு நடந்தது, சங்கருக்கு நடந்தது... பர்ஷியாவுக்கும் நடக்கிறது. `ஃபாண்ட்ரி'யைப்போலவே இந்தப் படமும் இறுதியில் சாதிக்கு எதிரான ஒரு கேள்வியுடன் நம்மை உறையவைக்கிறது.

சைரஹத் - ஆணவப் படுகொலைக்கு எதிரான ஓர் ஆவணம்!

சாதி ஆணவப்படுகொலைகள் எந்த அளவுக்கு மிருகத்தனமானவை என்பதையும், அது எப்படி எல்லாம் காத்திருந்து கொல்லும் என்பதையும் இத்தனை வலிமையாக இதுவரை யாருமே பதிவுசெய்தது இல்லை. படம் முடிந்து வெளியே வரும்போது நம் கண்முன்னே நடந்த சாதி ஆணவப்படுகொலைகளும், அவற்றை எல்லாம் வெறும் மௌன சாட்சிகளாகக் கடந்துபோன நம் மனநிலையும் நம்மை உலுக்கி எடுக்கின்றன.