Published:Updated:

ஸ்டார்ட்... கேமரா... கேரளா!

ஸ்டார்ட்... கேமரா... கேரளா!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார்ட்... கேமரா... கேரளா!

அதிஷா, பா.ஜான்ஸன்

ஸ்டார்ட்... கேமரா... கேரளா!

ழைய நினைவுகளை இழந்த ஒரு போலீஸ் அதிகாரி (நாயகன்), தன் நண்பனைக் கொலைசெய்தது யார் எனத் தேடுகிறார். சின்னச்சின்னத் தகவல்கள்  கிடைக்கின்றன. கொலைகாரனை நெருங்கி, கடைசியில் கண்டுபிடித்தும்விடுகிறார். கொலைசெய்தது அவரேதான். காரணம், அவர் ஓர் ஓரினச் சேர்க்கையாளர். ‘மும்பை போலீஸ்’ படத்தின் கதை இது.

நினைவிழந்த போலீஸாக நடித்திருப்பது, மலையாளப்  பட உலகின் முன்னணி நடிகர் ப்ரித்விராஜ். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நம் `தல-தளபதி’களைக் கற்பனையாவது செய்ய முடியுமா நம்மால்? நிச்சயமாக இது மலையாள சினிமாவில்தான் சாத்தியம்.

`டிராஃபிக்'கில் தொடங்கி `பிரேமம்' வரை இன்று மலையாள சினிமாவின் பெரும்பாலான வெற்றிப் படங்கள் இந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் ஆகின்றன. அவை எல்லோருக்கும் ஏற்றவடிவில் உருவாகின்றன. யதார்த்தப் படங்களுக்கும் விருதுப் படங்களுக்கும் பெயர்போன மலையாளத் திரை உலகம், தன்னை கமர்ஷியல் உலகத்துக்கு ஏற்ப எப்படி மாற்றிக்கொண்டது, எப்படி நடந்தது இந்த மாற்றம்?

மிகச் சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது இந்தப் புதிய அலை. புத்தம்புது ஐடியாக்களுடன், நூற்றுக்கணக்கான இளைஞர்கள், வித்தியாசப் பின்னணிகளுடன் திடுதிடுவெனக் களமிறங்கினர். சின்னச்சின்ன ஐடியாக்களை, சிறந்த சீன்களாக மாற்றி ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பிப் பார்க்கவைத்தனர். இவை எல்லாம் விருதுப் படங்கள் அல்ல; எந்த மொழிக்கும் மாற்றிவிடக்கூடிய ஜாலியான மசாலாப் படங்கள்.

ஸ்டார்ட்... கேமரா... கேரளா!

90-கள் வரைக்குமே யதார்த்தமான படங்களால் சீரோடும் சிறப்போடும் இருந்தது மலையாள சினிமா. ஷகிலாவின் வரவு ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் உலுக்கியெடுத்தது. திரையரங்குகள் காற்றாடின. சேட்டன்கள் ஷகிலாவுக்குப் பின்னால் படையெடுக்க, மம்மூட்டிகளும் மோகன்லால்களும் பதறிப்போயினர். இதைத் தடுக்கவேண்டி, தமிழ் சினிமா பாதிப்பில் படங்கள் எடுக்கத் தொடங்கினர். இது நடந்தது 2000-மாவது ஆண்டுகளின் தொடக்கத்தில். அடுத்த 10 ஆண்டுகளில் கேரளா சினிமா தன் அறிவுஜீவி முகத்தை எல்லாம் இழந்து, முறுக்கு மீசையும் தூக்கிக்கட்டிய வேட்டியுமாக மசாலா பூசிக்கொண்டது.

மம்மூட்டி ஒருபக்கமும் மோகன்லால் மறுபக்கமும், நூற்றுக்கணக்கான ஆட்களை அடித்து நொறுக்கி பன்ச் டயலாக் பேசிக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் சுரேஷ்கோபி ஆங்கிலத்தில் பேசிய கோர்ட் வசனங்கள் காதை நிரப்பின. திலிப், காமெடி டிராக் பிடித்து ஜாலி பயணம் போய்க் கொண்டிருக்க, தனித்துவமான மலையாள சினிமா ‘இதுவும் இன்னொரு இண்டஸ்ட்ரி’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஸ்டார்ட்... கேமரா... கேரளா!
ஸ்டார்ட்... கேமரா... கேரளா!

அப்படி ஒரு சமயத்தில்தான் ஆஷிக் அபு, அஞ்சலி மேனன், வினீத் னிவாசன், ப்ரித்விராஜ், ஃபகத் பாசில், நிவின் பாலி, பார்வதி மேனன்... எனப் பெரிய இளைஞர் பட்டாளமே உள்ளே நுழைந்தனர்.

வீழ்ந்துகொண்டிருந்த மலையாள சினிமா கௌரவத்தை நிமிர்த்த ஆரம்பித்தனர். உலகமயமாக்கலுக்குப் பிறகு சினிமா கற்றுக்கொண்ட அதிநவீன இளைஞர்கள் இவர்கள். இன்னமும் மண்வாசனை, கள்வாசனை எனப் பழைய பஞ்சாங்கமாக இல்லாமல், மாடர்ன் விஷயங்களைப் புகுத்தி கேரள சினிமாவை நகரமயம் ஆக்கினர். புதுப்புதுக் களங்கள், புத்தம்புது உறவுச் சிக்கல்கள், பேசத் தயங்கும் விஷயங்கள் என அவர்கள் தொட்டது எல்லாம் டமால்... டுமீல் ஹிட்!

மலையாள சினிமாவின் ரூட் மாறலுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று `சால்ட் அண்ட் பெப்பர்' படம். லால் நடித்த இந்தத் திரைப்படம் அதுவரை காணாத ஒரு புதிய தொடக்கமாக அமைந்தது. 40 ப்ளஸ் வயதில் நாயகன், குடித்துவிட்டு ஃபீல் பண்ணும் முதிர்க்கன்னி நாயகி என, சாப்பாட்டுப் பின்னணியில் மணக்க மணக்க ஒரு காதல் கதை. அதே சமயத்தில் வெளியான `சாப்பாகுரிஷூ' வித்தியாசமான த்ரில்லராக இருந்தது. வினீத் னிவாசன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான `தட்டத்தின் மறயத்து' ஆரோக்கியமான காதல் கதைகளுக்கான ஜன்னல்களைத் திறந்துவைத்தது. அப்படி ஒரு படத்தின் வெற்றிதான் பின்னாளில் `பிரேமம்' மாதிரி ஒரு படத்துக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

ஸ்டார்ட்... கேமரா... கேரளா!

மலையாள உலகத்துக்குள் நுழைந்த இளம் இயக்குநர்கள், அதுவரை இருந்த பழைய கதைகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஃப்ரெஷ்ஷாக முதலில் இருந்து தொடங்கினர். குறிப்பாக ஆஷிக் அபூ, சமீர்தாஹிர், வினித் னிவாசன், அல்போன்ஸ் புத்திரன், அஞ்சலி மேனன், ராஜீவ் ரவி, அப்ரித், பிரஜித், மார்டின் பரகாட்... என ஒரு நவீன தலைமுறை இயக்குநர்களின் அறிமுகம் மலையாள சினிமாவின் முகத்தையே மாற்றியது.

இந்த இளைஞர்கள் புது ரூட் பிடித்து ராக்கெட் வேகத்தில் பயணிக்க... அதுவரை ஏதேதோ பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த ப்ரித்விராஜ், காலம் தாழ்த்தாமல் ட்ராக் மாறி உடனடியாக இந்த இளைஞர்களிடம் தன்னை ஒப்புவித்துக்கொண்டு மெருகேற்றிக்கொண்டார். அதனால்தான் `மும்பை போலீஸ்' மாதிரியான ஒரு படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தைத் தைரியமாக ஏற்று நடிக்க முடிந்தது. கூடவே `செல்லுலாய்டு' மாதிரி ஒரு படத்தில் வெரைட்டி காட்டுவதும் சாத்தியமானது. ப்ரித்விராஜைப் போலவே இந்தக் காலகட்டத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி தனக்கு என ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர் ஃபகத் பாசில். ‘22 பீமேல் கோட்டயம்’, நத்தோலி செரிய மீனல்ல’, ‘ஆமென்’, ‘அன்னயும் ரசூலும்’ என ஃபகத் பாசில் நடித்த ஒவ்வொரு படமுமே அவ்வளவு தனித்துவமான கதையம்சம் கொண்டது.

ஸ்டார்ட்... கேமரா... கேரளா!

வெறும் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய திரைப்படங்களில் பெண்களுக்கான, பெண்கள் சார்ந்த, அவர்களுடைய சிக்கல்களை நேரடியாகப் பேசக்கூடிய திரைப் படங்களும் வெளியாயின. ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’, ‘22 பீமேல் கோட்டயம்’, ‘பெங்களூர் டேஸ்’ போன்ற படங்கள் எல்லாமே பெண்களின் அகவாழ்க்கையைப் பதிவுசெய்தன. அவர்களுடைய கோபத்தை, ஆதங்கத்தை திரையில் முழுமையாக வெளிச்சமிட்டுக் காட்டின.

ஸ்டார்ட்... கேமரா... கேரளா!

என்னதான் ஊர் எல்லாம் அலைந்துதிரிந்து வேலை பார்த்தாலும், தங்களுடைய மண் மீதான பாசம் குறையாதவர்கள் மலையாளி சேட்டன்கள். அதனாலேயே இந்தக் காலகட்டத்தில் வெளியான படங்களில் மண் மீதான மோகத்துடன்கூடிய போற்ற மறந்த விஷயங்களைத் தொடர்ச்சியாகப் பதிவுசெய்தனர். உதாரணத்துக்கு, ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தைச் சொல்லலாம். படம் முழுக்க `நாம் ஏன் நம்முடைய பாட்டனார்களின் பாரம்பர்யத்தைக் கட்டிக்காக்க வேண்டும்?' எனக் கறாராகச் சொல்லியிருப்பார் கதாசிரியர் அஞ்சலி மேனன். அவர் பின்னாளில் இயக்கிய `மஞ்சாடிக்குரு'வும் அதே மாதிரியான பாரம்பர்யப் பாதுகாப்புப் படம்தான்.

இன்னொரு பக்கம், நாஸ்டால்ஜியாவைத் தட்டி எழுப்பும் திரைப்படங்களும் உருவாகி வெற்றிபெற்றன. ‘1983’, ‘பிரேமம்’ போன்றவை அந்தவகைப் படங்களே. `1983' படம், முழுக்க முழுக்க இன்றைய இளைஞர்களின் பால்யத்தை அப்படியே மீட்டெடுத்துத் தூக்கிப்போய் மைதானத்தில் வைத்து கிரிக்கெட் ஆடவைத்தது. `பிரேமம்', அதே காரியத்தில் காதலை நுழைத்தது. இரண்டு படங்களுக்கும் நிறையவே ஒற்றுமைகள். முக்கியமான ஒற்றுமை நிவின் பாலி!

ஸ்டார்ட்... கேமரா... கேரளா!

சின்னச்சின்னச் செய்திகளையும் அப்படியே சிறந்த கதைகளாக மாற்றும் தைரியம்மிக்கவர்களாகவும் மலையாளிகள் மாறியுள்ளனர். ‘டிராஃபிக்’ படத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தன் இதயத்தை தானமாக வழங்கிய சென்னையைச் சேர்ந்த ஹிதேந்திரன் விஷயம் யாருக்குமே மறந்திருக்காது. அதை அப்படியே அழகான பரபர த்ரில்லராக மாற்றி சூப்பர் ஹிட் அடித்ததோடு, அதே படத்தை தமிழ், இந்தி என ரீமேக்கி மகிழ்ந்தனர். ஆன்லைனில் காதலித்து ஏமாற்றும் எத்தனையோ செய்திகளை, ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். ஆனால், அதைச் சிரிக்கச் சிரிக்க சிறந்த படமாக மாற்றி தந்தது ‘ஒரு வடக்கன் செல்ஃபி’. `மறைந்து இருந்து செல்போனில் படம் எடுத்து மிரட்டும் பள்ளி மாணவர்கள்' என்ற செய்தி எப்படி ‘த்ரிஷ்யம்' ஆக மாறியது என்பதில் இருக்கிறது வெற்றி ரகசியம். காதலுக்கும் நாஸ்டால் ஜியாவுக்கும் நடுவில் ‘த்ரிஷ்யம்’, ‘மெமரீஸ்’, `புதிய நியமம்’ மாதிரி த்ரில்லர்களுக்கும் பஞ்சம் இல்லை.

எளிய மனிதர்களின் கதைகளைப் படமாக்குவது மலையாளிகளுக்குப் பிடித்திருந்தது. `பிரேமம்' தொடங்கி `பதேமரி' வரைக்கும் மலையாளத்தில் வெற்றிபெறும் படங்கள் எல்லாமே எளிய மனிதர்களின் கதைகளை யதார்த்தமாகச் சொன்னவைதான்.

இப்படி இளைஞர்கள் வெளுத்துக்கட்டிக் கொண்டிருக்க, இதை எல்லாம் பார்த்து கடுப்பாகாமல், `சின்னப் பசங்க ஏதோ பண்ணிட்டிருக்காங்க. ஆனா, நாம மாஸ் ஹீரோடா' என ஒதுங்காமல், சீனியர்களும் அந்த ரூட்டில் தங்களையும் இணைத்துக்கொள்ளும் பக்குவத்துக்கு வந்திருப்பது குறிப்பிடவேண்டியது. மம்மூட்டியின் ‘முன்னறியிப்பு’, மோகன்லாலின் ‘ஸ்பிரிட்’ இரண்டு படங்களுமே அப்படிப்
பட்டவைதான்.

லால் ஜோஷ், ஆஷிக் அபூ போன்ற இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ஆனது, ப்ரித்விராஜ் போன்ற நடிகர்களும் படத் தயாரிப்பில் இறங்கியது என வர்த்தக விஷயங்களுக்குள்ளும் சினிமா ஆட்களே இருப்பது கூடுதல் பலம்.

மலையாளத்தில் இது எப்படிச் சாத்தியமானது? ஒரே காரணம்தான்... எழுத்தாளர்களுக்கும் சினிமாவுக்குமான இடைவெளி அங்கே குறைந்துவிட்டது. தமிழ் எழுத்தாளரை அழைத்து கதை பண்ணச் சொல்கிறார்கள். மலையாள நாவல்களை, சுயசரிதைகளைப் படமாக்குகிறார்கள். அதனால்தான் அங்கே ‘என்னு நின்டே மொய்தீன்’ மாதிரியான ஒரு படம் சாத்தியமாகிறது.

படங்களின் எண்ணிக்கையிலும் பட்ஜெட்டிலும் அளவில் மிகச் சிறியது மலையாளத் திரையுலகம். அவர்களால் `பாகுபலி' பிரமாண்டத்தையோ, `கத்தி', `வேதாளம்' ஹீரோயிசத்தையோ காட்ட முடியாது. சுற்றிச் சுற்றி நான்கு கடற்கரைகளும், தென்னந்தோப்புகளும், ஆறுகளும்தான் ஒட்டுமொத்த மாநிலம்! பட்ஜெட் என எவ்வளவு முக்கினாலும் மூன்று கோடியைத் தாண்ட மாட்டார்கள். `பத்து கோடி' என்பது எல்லாம் மகத்தான பட்ஜெட். இப்படி ஒரு நிலைமையில் மலையாளிகள் பக்கத்து மாநில விஜய்யுடனும் அல்லு அர்ஜுனுடனும் தாறுமாறாகப் போட்டிபோட வேண்டியிருக்கிறது.

அவர்களுக்கு இணையான மெகா பட்ஜெட் படங்களை இவர்களால் தர முடியாது.

இவர்களால் செய்ய முடிந்தது எல்லாம் கதையிலும் திரைக்கதையிலும் காட்ட முடிகிற பிரமாண்டம்தான். `ஷட்டர்' படம் முழுவதுமே பத்துக்குப் பத்து அறையில்தான் நடக்கும். ஆனால், அந்த அறையைப் பிரமாண்டமாகக் காட்டியது கதையின் அழுத்தம். கதை நகர நகர, அந்த அறை விரிவடைந்துகொண்டே செல்லும். அதுதான் மலையாளிகளுக்குள் நடந்திருக்கும் மாற்றம். சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான `சார்லி'யில் என்ன பிரமாண்டம் இருக்கிறது? இரண்டு பேர் ஒருவரை ஒருவர் விரட்டுகிற காதல்தான். ஆனால், அந்தத் தேடலில் எவ்வளவு பிரமாண்டமாக விரிகிறது காதல்?

இங்கே நாம் என்கவுன்ட்டர் படங்கள் எடுத்துக்கொண்டிருக்க, அதே காலகட்டத்தில் வருகிறது ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’. எத்தனை மெல்லிய அழகான போலீஸ் படம்?! துளி வன்முறையும் இல்லை. முழுக்க முழுக்க அன்பினால் மட்டுமே சாத்தியப்படுகிறது இந்த வகை திரைப்படங்கள். நம் ஊரில் வழக்கொழிந்து போய்விட்ட ஃபேமிலி டிராமாவையும் மலையாளிகள் விட்டுவைக்கவில்லை.

‘ஜேக்கப்பின்ட ஸ்வர்க்கராஜ்ஜியம்’ டிபிக்கல் விக்ரமன் பாணி படம்தான். ஆனால், அதையும் ரசிக்க முடிகிறது. ரோட்டில் ஒருவனுடன் தகராறு ஏற்பட, அதில் அடி வாங்கிய ஹீரோ, `நான் அவனைத் திரும்ப அடிக்கும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன்' என சபதம் எடுப்பதை ஒரு சினிமாவாக யோசிக்க முடியுமா உங்களால்? அதுதான் ஃபகத் பாசில், நடிகர் திலேஷ் போத்தனின் இயக்கத்தில் நடித்த ‘மகேஷின்டே பிரதிகாரம்’.

ஸ்டார்ட்... கேமரா... கேரளா!

ஓர் ஒப்பீடாக, `ஏன் இது தமிழில் நிகழ்வது இல்லை?' என யோசித்தால், நாம் அந்த நேரத்தில்தான் பேய் ஓட்டிக்கொண்டிருந்தோம். சந்தானத்தோடு சேர்ந்து யாராவது ஒரு ஹீரோ, அதே ஹன்சிகாவையும் நயன்தாராவையும் துரத்தித் துரத்திக் கலாய்த்துக்கொண்டிருந்தார். மிகச் சில இயக்குநர்கள்தான் அத்திப்பூத்த மாதிரி நல்ல படங்களுடன் வர, பெரும்பாலான படங்கள் இந்த டிஜிட்டல் புரட்சியில் அதே பாணியில் வெளியாகி முடங்கி தேங்கின.

தமிழ் சினிமா, மலையாளக் கரையில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய நேரம் இது. பிரமாண்டம் என்பது, செய்யும் செலவில் இல்லை, எடுக்கும் கதையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டிய தருணம் இது!