
அதிஷா

`ராமன்ராகவ் 2.0’ படத்துக்காக 20 நாட்கள் தொடர்ச்சியான படப்பிடிப்பு. ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் காய்ச்சலில் மயங்கி விழுந்துவிட்டார் நவாஸுதீன். அந்தேரியின் பிரபலமான மருத்துவமனையில் சேர்த்தனர். மருந்து கொடுத்து நவாஸுதீனைத் தூங்க வைத்திருந்தனர். அருகில் மனைவி உறங்கிக்கொண்டிருந்தார். அர்த்த ராத்திரியில் திடீரென ஒரு குரல். காட்டுத்தனமாகக் கேட்கிறது. அதிர்ந்து போய் விழித்துப்பார்க்க, நவாஸுதீன் ஏதேதோ கத்திக்கொண்டிருக்கிறார்; பிதற்றுகிறார். மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள். எல்லாம் நார்மல்.
என்னவென்று புரியாமல் நவாஸுதீனின் நெருங்கிய தோழனும் `ராமன்ராகவ் 2.0' படத்தின் இயக்குநரு மான அனுராக் காஷ்யபை அழைக் கிறார்கள். வந்து கவனித்த சில நிமிடங்களில் அனுராக் காஷ்யப்புக்குப் புரிந்துவிடுகிறது. அவர் முகத்தில் புன்னகை. நவாஸுதீன் அந்த இரவில் உளறிக்கொண்டிருந்தது... சைக்கோ கொலைகாரனான `ராமன்ராகவ்’ பாத்திரம் பேசவேண்டிய வசனங்கள். இந்த அர்ப்பணிப்பு, உழைப்பு இரண்டும் தான் நவாஸுதீன் சித்திக்கியின் அடையாளங்கள்.
`ராமன்ராகவ் 2.0' படத்தின் ட்ரெய்லர், அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 60-களில் மும்பையைக் கதறவிட்ட ராமன்ராகவ் என்கிற கொலைகாரனின் கதை. ஹீரோ, நம்ம ஆளுதான்!
`பாலிவுட்டில் நான் ஒரு காலா கலூட்டா' என்கிறார் நவாஸுதீன் சித்திக்கி. அதற்கு `கருமாண்டி' அல்லது கறுப்பு நிற அழகற்ற ஆள் என அர்த்தம். சிக்ஸ்பேக் சிங்கங்களும் செக்கச்செவேல் ஆணழகன்களும் நிறைந்த இண்டஸ்ட்ரி. அதில் எந்த நடிகனும் திடீரென எங்கு இருந்தோ கிளம்பிவந்து அவ்வளவு எளிதில் ஸ்டாராக ஆகிவிட முடியாது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசய வைபவம் அது. 60-களில் தர்மேந்திரா, 70-களில் மிதுன் சக்கரவர்த்தி, 80-களில் ஜாக்கி ஷெராப் என எப்போதாவதுதான் அந்த மேஜிக் நடக்கும். அப்படி நடந்த அற்புதம்தான் நவாஸுதீன். ஒல்லிப்பிச்சான் உடம்பும் ஒட்டிப்போன கன்னங்களும் கறுத்த முகமுமாக நவாஸுதீன் பாலிவுட்டில் நுழைந்ததும், எளியவர்கள் திறக்கமுடியாத கதவுகளை உடைத்ததும், ஒரு தனிமனிதனின் 12 ஆண்டு காலப் போராட்டம்.

`புடானா' - உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் மிகச் சிறிய கிராமம். `எங்கள் ஊரில் மூன்று விஷயங்கள் ஃபேமஸ். ஒண்ணு கோதுமை, இன்னொண்ணு கரும்பு, மூணாவது துப்பாக்கி' என்கிறார் நவாஸுதீன் சித்திக்கி. ஒரு கன்னாபின்னா கேங்ஸ்டர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தின் 10 பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தவர் நவாஸுதீன். வீட்டில் எல்லோருமே எந்நேரமும் வம்புச் சண்டை எனத் திரிவார்கள். நவாஸுதீனுக்கு அதில் எல்லாம் நாட்டம் இல்லை. அவர் நகரத்துக்குத் தப்பிவிட நினைத்துக்கொண்டே இருந்தார்.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கல்லூரிப் படிப்புக்காக ஹரித்வார் கிளம்பினார். அங்கேதான் நடிப்பு ஆர்வம் முதன்முதலாக எட்டிப்பார்த்தது. அங்கே வேதியியலில் பட்டப்படிப்பு. ஒரு பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் சுமாரான சம்பளத்தில் வேலை. `அங்கு சேர்ந்த பிறகுதான், இது என் வேலை கிடையாது. இது எனக்கான இடம் இல்லை என உணர்ந்தேன். உடனே வேலையை உதறிவிட்டு டெல்லிக்குக் கிளம்பிவிட்டேன்' - தன் ஆரம்ப நாட்கள் குறித்து நினைவுகூர்கிறார் நவாஸுதீன்.
டெல்லியில் தன் கல்லூரித் தோழர்களோடு தங்கிக்கொண்டார். அவர்கள் நாடகத் துறையில் ஆர்வம்கொண்டவர்கள். நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவோடு தொடர்பு உள்ளவர்கள். அதனால் அங்கு சுற்றித்திரிவதும் மேடை நாடகங்கள் பார்ப்பதும்தான் ஒரே வேலை. ஆறு மாதங்களில் 70 நாடகங்கள். ஆர்வமிகுதியில் நாடகங்களில் நடிக்க முயற்சிசெய்ய... அவருக்குக் கிடைத்த வேலை செட் பிராப்பர்ட்டிகளைச் சுத்தம்செய்வது, நடிகர்களுக்கு டீ, காபி போட்டுத் தருவது. நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் நடிப்புப் பயிற்சியிலும் சேர்ந்துகொண்டார். இதற்கு நடுவில் சாப்பாட்டுக்கும் தங்கும் இடத்துக்கும் காசு வேண்டுமே. வயிற்றுப்பாட்டைக் கவனிக்க இரவில் வாட்ச்மேன் வேலை. லட்சியத்துக்காக பகலில் நடிப்புப் பயிற்சி.
நாடகங்களில் நடிப்பது என்றால், பெரிய பெரிய பாத்திரங்கள் இல்லை. அலைந்து திரிந்து பாதல்சர்க்காரின் நாடகம் ஒன்றில் வாய்ப்பு வாங்குகிறார். அதில் அவருக்கு வசனம், `அடடே, அவங்களே வந்துட்டாங்களே!' என்பது மட்டும்தான். இன்னொரு நாடகத்தில் அவருக்கு ஒரு மரத்தின் பாத்திரம். இரண்டு மணி நேரம் கைகளை உயர்த்திக்கொண்டு கிளைகளைப் பிடித்தபடி நிற்க வேண்டும்.
நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதற்கு மேலும் இங்கே இருந்தால் 40 ஆண்டுகளுக்கு இப்படியே இருந்து மடியவேண்டியதுதான். முன்னேறவே முடியாது என முடிவெடுத்தவர், `இனி செத்தாலும் மும்பையில் சாவோம்' எனக் கிளம்பினார். மும்பையில் அவரை வரவேற்க முன்பைவிடவும் இன்னும் மோசமான வாழ்க்கை காத்திருந்தது. மிகச் சிறிய அறை, 250 ரூபாய் வாடகை, வீட்டுவேலை எல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும், வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும், சமைத்துக் கொடுத்து விட வேண்டும் என்ற கண்டிஷன்களோடு நண்பர்கள் அறையில் தங்க, இடம் கிடைத்துவிட்டது. ஆனால் வாய்ப்பு?

கம்பெனி கம்பெனியாகத் திரிவார்; தொலைக் காட்சித் தொடர்களில் முயற்சிசெய்யலாம் எனச் சுற்றுவார். அவரும் அவருடைய நல்ல உடல்வாகுள்ள ஒரு நண்பனும் சேர்ந்து ஒரு மெகா சீரியலில் நடிக்க வாய்ப்புக் கேட்டுச் சென்றனர். 20 நாட்கள் அலையவிட்ட ஏஜென்ட் ஒருவன், கடைசியில் ஒரு வாய்ப்பு தருவதாகக் கூறுகிறான். ஹீரோயின் வரும் வழியில் பிச்சைக்காரர்களாக அமர்ந்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பும் நவாஸுதீனுக்கு இல்லை. அவருடைய நண்பனுக்கு மட்டும்தான் கிடைத்தது. காரணம், நவாஸுதீனின் வசீகரம் இல்லாத முகம்.
மிகப் பெரிய போராட்டத்துக்குப் பிறகு 1999-ம் ஆண்டு வெளியான அமீர்கான் நடித்த `ஷர்பரோஸ்' படத்தில் சின்ன வேடம் ஒன்று கிடைத்தது. சில நூறு ரூபாய் சம்பளம். மிகச் சரியாக 61 விநாடிகள் திரையில் தோன்றினார் நவாஸுதீன். `முதலில் எனக்குக் கிடைத்த வேடம் ஒரு நிமிடம் ஒரு நொடி நீளம் உள்ளது. அடுத்த படம் `ஷூல்’ (1999). அதில் ஒரு நிமிடம் இரண்டு நொடிகள். அதற்கு அடுத்த படத்தில் ஒரு நிமிடம் மூன்று விநாடிகள். என் சினிமா வாழ்க்கை நொடி நொடியாக முன்னேற, காலமோ வருடம் வருடமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. நான் என் இளமையை இழந்துகொண்டிருந்தேன்' என்கிறார் நவாஸுதீன்.
1999-ம் ஆண்டு தொடங்கி 2007-ம் ஆண்டு வரை அவர் நடித்தது ஏழு படங்கள். அதிலும் பெரிய பாத்திரம் எதுவும் இல்லை. கூட்டத்தில் ஒருவனாக, பிக்பாக்கெட் திருடனாக, கைதிகளில் நான்காவது ஆளாக என கொசுறு கோவிந்தனாக மட்டும்தான் இருந்தார். `பல படங்களில் என்னை நடிக்கத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். நான் மகிழ்ச்சியாகிவிடுவேன். பிறகு அழைத்து, `உன்னை நீக்கிட்டோம்' என்பார்கள். நூறு முறைக்கும் மேலாக இப்படி நடந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் புறக்கணிப்பு எனக்கு நண்பனாகி விட்டது. அது என்னைப் பாதிப்பதை நிறுத்தியும்விட்டது. அதை என் வாழ்வின் ஓர் அங்கம் என ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டேன்' என்கிறார் நவாஸுதீன்.
பாலிவுட்டில் எட்டு ஆண்டுகள் வனவாசத்தை முடித்துவைத்து நவாஸுதீனின் வாழ்வில் ஒளியேற்றிவைத்தவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். நாடகத் துறை காலத்தில் இருந்தே அவருக்கு நவாஸுதீன் அறிமுகம். அவர்தான் தன் இரண்டாவது படமான `ப்ளாக் ஃப்ரைடே'வில் நவாஸுதீனுக்கு வாய்ப்புத் தந்தார். கொஞ்சமே கொஞ்சம் கவனம் கிடைத்தது. அதற்குப் பிறகு 2012-ம் ஆண்டில் `கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' மூலமாக நவாஸுதீனை ஹீரோவாக்கினார். அப்போது தொடங்கிய நட்பு, `ராமன்ராகவ் 2.0' வரை தொடர்கிறது.
`பிளாக் ஃப்ரைடே'வுக்குப் பிறகு அவருக்கு பத்து பதினைந்து நிமிடங்கள் வருகிற அளவுக்குப் பாத்திரங்கள் கிடைக்கத் தொடங்கின. குறிப்பாக, `நியூயார்க்' படத்தில் அவர் வரும் ஒரே ஒரு காட்சி பெரிய அளவில் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது. ஆனாலும் வாய்ப்புகளைப் பெற்றுத்தரவில்லை.
2010-ம் ஆண்டில் வெளியான `பீப்ளி லைவ்' படத்தில் ஒரு பத்திரிகையாளன் வேடம், படத்தில் அவருக்கு நிறையக் காட்சிகள். எப்படியாவது டி.வி ரிப்போர்ட்டர் பெண்ணை கரெக்ட் பண்ணிவிடத் துடிக்கும் இளைஞனாகக் கிடைத்த ஃப்ரேமில் எல்லாம் வெளுத்து வாங்கியிருப்பார். பாலிவுட்டில் தன் வருகையை முதன்முதலாக நவாஸுதீன் அறிவித்தது இங்கேதான்.
2011-ல் அடுத்தடுத்து வாய்ப்புகள் வர...

2012-ம் ஆண்டு நவாஸுதீனை உச்சத்துக்கே கொண்டுசென்றது. `கஹானி'யில் கோபக்கார போலீஸ்காரர், `பான் சிங் தோமர்'-ல் நாயகனைக் காட்டிக்கொடுக்கும் நண்பன், `தலாஷ்' படத்தில் விபச்சார விடுதி ஒன்றை நடத்தும் மாமாவுக்கு அல்லக்கையாக, `மிஸ்.லவ்லி'யில் பிட்டு படங்கள் பண்ணும் இயக்குநர்... என அந்த ஆண்டில் நடித்த எட்டு படங்களிலும் முத்திரை பதித்திருந்தார் நவாஸுதீன். அது அவருக்கு ஒரு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. குறிப்பாக, `கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்தில் சிறுநகரம் ஒன்றை ஆட்டிப்படைக்கும் கேங்ஸ்டராக, ஒல்லிக்குச்சி உடம்போடு அவர் நடித்தது தனித்துவமானது.
நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் ஒருமுறை ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செக்காவின் `இவனோவ்' என்ற கதை, நாடகமானது. அதில் நவாஸுதீனுக்கு முக்கியமான வேடம். அதற்காக செக்காவின் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தார். பின்னாளில் `அந்த இலக்கிய வாசிப்பு, ஆழமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க உதவியது’ என்கிறார் நவாஸுதீன். அதுதான் `கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்துக்குப் பிறகு வந்து குவிந்த 200 வாய்ப்புகளையும் மறுக்க வைத்திருக்கிறது.
இதோ இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் நவாஸுதீன். `லஞ்ச் பாக்ஸ்', `பத்லாபூர்', `பாம்பே டாக்கீஸ்', `மாஞ்சி தி மவுன்டெய்ன் மேன்' மாதிரி மாற்று சினிமா முயற்சிகளில் நடிக்கிறார். இந்தியாவின் மாற்று சினிமா முன்னோடிகள் எல்லாம் நவாஸுதீனைக் கொண்டாடுகிறார்கள். இன்னொரு பக்கம் சல்மான்கானின் `கிக்'கிலும், `பஜ்ரங்கி பாய்ஜானி'லும் மாஸ் காட்டுகிறார். `பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பதால் என் சின்னப் படங்களுக்குச் சிறியதாக ஒரு வெளிச்சம் கிடைக்கிறது' என்கிறார் நவாஸுதீன்.

ஒவ்வொரு படம் முடிந்ததும் எங்கேயாவது பயணம் பண்ணக் கிளம்பிவிடுகிறார். ஆனால், பாலிவுட் ஸ்டைலில் சுவிட்ஸர்லாந்துக்கோ பிரான்ஸுக்கோ செல்வது இல்லை. இந்தியாவின் மிகச் சிறிய கிராமங்களை நோக்கி ஓடுகிறார். தன்னை யார் என அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஊர்களில் சுற்றுகிறார். `அங்கே என்னை யாருக்கும் தெரியாது. அவர்களோடு நட்பாக உரையாட முடியும். நூற்றுக்கணக்கான மனிதர் களோடு இயல்பாகப் பேசுவேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதைகளைக் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் வழியே எனக்கான தத்துவங்களையும் கண்டடைகிறேன்' என்கிறார். இத்தனை உயரத்தை அடைந்த பின்னரும் கைவிடாத இந்த எளிமைதான் நவாஸுதீன் ஸ்பெஷல்.
நம் குழந்தைக்கு என்ன புகட்டுகிறோம் என்பதில்தான் அதன் எதிர்காலம் தீர்மானிக்கப் படுகிறது. அப்படித்தான் சினிமாவிலும். நல்ல நடிகருக்கு என்ன மாதிரியான கதாபாத்திரங் களைக் கொடுத்து அவரை மேம்படுத்துகிறோம் என்பதில் இருக்கிறது சூட்சமம். நவாஸுதீன் அத்தகைய வேடங்களைத் தேடி ஓடுகிறார். அவருக்கான பாத்திரங்களை பாலிவுட்டின் படைப்பாளிகள் உருவாக்குகிறார்கள். நவாஸுதீ னுக்குக் கொஞ்சமும் சளைக்காதவர்கள் தமிழ் சினிமாவிலும் நிறையப் பேர் உண்டு. ஆனால், அவர்கள் எல்லோரையும் ரௌடிகளாக்கி மீசை முறுக்கவிட்டிருக்கிறோம்!