Published:Updated:

அன்புள்ள அப்பா

அன்புள்ள அப்பா
பிரீமியம் ஸ்டோரி
அன்புள்ள அப்பா

உஹூரு

அன்புள்ள அப்பா

உஹூரு

Published:Updated:
அன்புள்ள அப்பா
பிரீமியம் ஸ்டோரி
அன்புள்ள அப்பா
அன்புள்ள அப்பா

பாலிவுட், தன் வழக்கமான கதைகளையும் கதை சொல்லும் முறைகளையும் உடைத்து, சொல்லத் தயங்கும் கதைகளை தைரியமாகப் பேச ஆரம்பித்து பல காலம் ஆகிவிட்டது. அந்த வகையில், நாம் அதிகம் விவாதிக்க விரும்பாத ஒருபாலின ஈர்ப்பையும், ஓரினச்சேர்க்கை யாளர்களின் உலகையும் `மை பிரதர் நிகில்', `ஐ'யம்', `அலிகர்' தொடங்கி பல படங்கள் தொடர்ச்சியாகப் பேசிவந்தன. இருந்தாலும் இந்தப் படங்கள் எல்லாமே `குடும்பம்' என்ற அமைப்பில் இல்லாத தனி மனிதர்கள் சார்ந்த கதைகளாகவே இருந்தன. அதனாலேயே இந்த வகை படங்களில் இருந்து, சமீபத்தில் வெளியான ‘டியர் டாட்’ கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

திருமணம் ஆன, இரண்டு குழந்தைகளின் தந்தை, தன் பாலினத் தேர்வு தனக்கு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு அதை தன் குடும்பத்தினரும் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறார். அதைச் செயல்படுத்த முயற்சிக்கும்போது குடும்பம் அதை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான், ‘டியர் டாட்’ கதை.

படத்தின் தொடக்கத்தில் `அழகான ஒரு குடும்பம் நமக்கு அறிமுகமாகிறது. ஓர் அப்பா-அம்மா, சரியான கால இடைவெளியில் பெற்றெடுக்கப்பட்ட ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என பெர்ஃபெக்ட் பிரசன் டேஷன். `எல்லாம் இன்பமயம்' ஆக அவர்களின் வாழ்வு நகர்ந்துகொண்டிருக்க, அதில் பூகம்பமாக வந்து நிற்கிறது, `தந்தை, ஓரினச்சேர்க்கையாளர்’ என்ற உண்மை. தன்னுடைய பதின்வயது மகனுக்கு இது தெரிய வேண்டும் என தந்தை விரும்புகிறார். அதைச் சொல்ல சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கிறார். விடுமுறை முடிந்து ஹாஸ்ட லுக்குத் திரும்பும் மகனை, தானே காரில் அழைத்துச் செல்கிறார். வழியில் தன்னைப் பற்றியும், தன் சுதந்திரமான பாலினத் தேர்வு குறித்தும் உணர்த்துகிறார். இந்தப் பயணம்தான் படம்.

விஷயம் எத்தகையதாக இருந்தாலும் அதை குழந்தைகளுக்குப் புரியும்படி தயங்காமல் பேசுவது எப்படி, குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ‘டியர் டாட்’ அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

தந்தையாக நடித்திருப்பது, அர்விந்த் சுவாமி. பயணத்தின்போது தன் மகனிடம் ஓரினச் சேர்க்கையாளரான ஒரு கிரிக்கெட் வீரரைப் பற்றி பேசத் தொடங்கி, பயத்தில் பேச்சை பாதியில் நிறுத்துவதிலும், சுயநினைவு இழந்த தன் தந்தையிடம் தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்லி உடைந்து அழும் இடத்திலும் அர்விந்த் சுவாமியின் நடிப்பு அசத்தல்.

அன்புள்ள அப்பா

அவரது மகனாக நடிக்கும் ஹிமான்ஷூ ஷர்மா, `நீங்க சொல்ற எதுவும் எனக்குப் புரியலை. எனக்கு என் குடும்பம் உடையக் கூடாது. அம்மா நிலைமை என்னாகும்... தங்கச்சிக்கு என்ன சொல்வேன்?' எனக் கோபப்படும் நேரத்தில் தனது இயலாமையை அத்தனை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். `அப்பா... உங்களுக்கு எல்லா ஆண்களையும் பிடிக்குமா?' எனக் கேட்டு, அதற்கு அர்விந்த் சுவாமி, `உனக்கு எல்லாப் பெண்களையும் பிடிக்குமா?' என எதிர் கேள்வி கேட்கும்போது அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் இடத்தில் மனதை நெகிழ வைத்து விடுகிறார்.

கதையின் ஓட்டத்துக்கு இடைஞ்சலாக இல்லாத எளிய பின்னணி இசை. நடிகர்கள் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற `லைவ் ரிக்கார்டிங்' முறையில் செய்யப்பட்ட ஒலிப்பதிவு. இரண்டும் படத்தின் மிகப் பெரிய பலம்.

தன் முதல் படத்திலேயே இப்படி ஒரு கதையைப் படமாக்கத் துணிந்த இயக்குநரின் முயற்சியை நிச்சயம் பாராட்டலாம். ஆனால், படம் சார்ந்து நம்மிடம் சில கேள்விகள் எஞ்சி நிற்கின்றன. நாயகன், எதிர்பாலின ஈர்ப்பு இருந்ததில்லை எனத் தெரிந்தும் திருமணம் செய்துகொண்டு, இரண்டு குழந்தை களுக்குத் தகப்பன் ஆனது ஏன்? மனைவியிடம் இதைப் பற்றி கூறியபோது அவர் எப்படி ஏற்றுக்கொண்டார்? அப்பா கூறிய இந்த மிகப் பெரிய உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மகனைப் பக்குவப்படுத்திய விஷயங்கள் என்னென்ன என்பதையும் இயக்குநர் ஆராய்ந்திருக்கலாம்.
இருப்பினும் இது, இதுவரை கூறப்படாத கதை. பேசப்படாத பேச்சு.

அன்புள்ள அப்பா

`டியர் டாட்' படத்தின் இயக்குநர் தனுஜ், கல்லூரி மாணவர் போலவே இருக்கிறார்.

``நான் டேராடூனில் உள்ள போர்டிங் பள்ளியில் படித்தவன். விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பும்போது அப்பாவும் என்னுடன் வருவார். இந்த கார் பயணங்களில் நாங்கள் இருவரும் நிறைய உரையாடுவோம். அந்த உரையாடல்களின் நினைவாகத்தான் நான் இந்தப் படத்தை இயக்கினேன். நாங்கள் பயணித்த சாலைகளில்தான் இதைப் படமாக்கினோம். அமெரிக் காவில் நான் படித்துக்கொண்டிருந்த போது, அங்கு ஓரினச்சேர்க்கை என்பது மிகச் சாதாரணமான ஒன்றாகத்தான் எனக்கு அறிமுகமானது. அதுபோன்ற சுதந்திரச் சூழல் இங்கும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தால்தான் என் கதையின் நாயகனை ஓரினச்சேர்க்கையாளராக வைத்தேன்” என்கிறார்.