Published:Updated:

ஜிங்கா.. ஜிங்கா!

ஜிங்கா.. ஜிங்கா!
பிரீமியம் ஸ்டோரி
ஜிங்கா.. ஜிங்கா!

கார்க்கிபவா

ஜிங்கா.. ஜிங்கா!

கார்க்கிபவா

Published:Updated:
ஜிங்கா.. ஜிங்கா!
பிரீமியம் ஸ்டோரி
ஜிங்கா.. ஜிங்கா!
ஜிங்கா.. ஜிங்கா!

ந்தச் சிறுவனுக்கு வயது 17. அவனுடைய அணி வீரர்கள் ஓட்டமும் நடையுமாக மைதானத்துக்குள் நுழைய, அவன் மட்டும் எதையோ யோசித்தபடி தயங்கித் தயங்கி நடக்கிறான். இருள் குறைந்து, வெளிச்சம் அவன் கண்களில் விழுகிறது. பரந்துவிரிந்த மைதானத்தில் காலடி எடுத்துவைத்ததும், ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரச் சத்தம் அவனை என்னவோ செய்கிறது. சுற்றிச்சுற்றிப் பார்க்கிறான். கால் முட்டி வலி தாங்காமல் அவன் முகம் மாறுகிறது.

இப்படித்தான் தொடங்குகிறது, பிரேசில் கால்பந்து வீரர் பீலேவின் வாழ்க்கைக் கதையான `பீலே: பர்த் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படம். 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர் பீலேவின் வாழ்க்கை அப்படியே ஜீரோ டு ஹீரோ கதை.  பெருமிதக்  கண்ணீர் வழியும் திறமைக் கொண்டாட்டமாக அதைப் பதிவு செய்திருக்கிறார்கள் ஜெஃப் - மைக் சகோதரர்கள். இசை, நம்ம ரஹ்மான்!

ஜிங்கா.. ஜிங்கா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`எட்டு வருடங்களுக்கு முன்னர்’ என்ற ஸ்லைடுடன் பீலேவின் குழந்தைப் பருவத்துக்கு நகர்கிறது படம். கொடிகளில் காயும் பழைய சாக்ஸ்களைத் திருடி, கால்பந்து செய்து விளையாடு கிறார்கள் சிறுவர்கள். அவர்களது கால்பந்து ஆர்வத்துடன், திறமையும் அதிகரிக்கிறது. லோக்கல் டோர்னமென்ட் ஒன்றின் இறுதி ஆட்டத்தில் ஒரு கோல் வித்தியாசத்தில் தோற்கிறார்கள். ஆனால், பீலே அட்டகாசமாக ஆடுகிறான். ஆட்டத்தைப் பார்த்த அனைவரும் முடிவில் `பீலே... பீலே...' என ஆர்ப்பரிக்க, உடலில் இருக்கும் ஐந்தரை லிட்டர் ரத்தத்தையும்விட அதிகமாக அவனுக்கு அட்ரீனலின் சுரக்கிறது. கெத்தாக நடந்து வீட்டுக்குப் போகிறான் பீலே.

ஆனால், வீட்டில் அவன் காதைத் திருக அம்மா காத்திருக்கிறாள். அவள் கால்பந்து என்றால், மழையைக் கண்ட சென்னைவாசி ஆகிவிடுவாள். எல்லாவற்றையும் ஆசிட் ஊற்றி அழித்துவிட்டு, படிப்பை மட்டும் கவனிக்க வேண்டும் என்பது அவள் விருப்பம் அல்ல... கட்டளை. அதற்குக் காரணம், பீலேவின் அப்பா. பிரேசில் நாட்டு ஆண்களைப்போல அவரும் ஒரு கால்பந்து வெறியர். அம்மாவுக்குத் தெரியாமல் பீலேவை ஃபைனலுக்கு விளையாட அழைத்துச் சென்றதே அவர்தான். 1950-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் பிரேசில் தோற்பதைக் கண்டு அவர் கதறி அழுகிறார். அதைப் பார்க்கும் பீலே, ‘நான் பிரேசிலுக்கு உலகக்கோப்பையை ஜெயித்துக் கொடுப்பேன்ப்பா' என்கிறான்.

நண்பனின் மரணம் பீலேவின் வாழ்க்கையை மாற்றுகிறது. தன் அம்மாவிடம் இனி படிப்பை மட்டும் கவனிப்பதாகச் சொல்கிறான். மருத்துவமனையில் கழிவறையைச் சுத்தம்செய்யும் அப்பாவுக்கு உதவியாக வேலைக்குச் செல்கிறான். ஆனால், அப்பாவும் கால்பந்து வெறியர் ஆயிற்றே. பீலேவின் ஆட்டம் மூர்க்கத்தனமானது. `கால்பந்தை கொஞ்சம் சாஃப்ட்டாக அடித்துப் பழக வேண்டும்' என்கிறார் அப்பா. அதற்காக தோட்டத்து மரங்களில் தொங்கும் மாம்பழங் களை வைத்து இருவரும் பயிற்சிசெய்கிறார்கள்.

ஜிங்கா.. ஜிங்கா!

சில ஆண்டுகள், அம்மாவுக்குத் தெரியாமல் அப்பாவுடன் மாம்பழத்தில் மட்டும் விளையாடுகிறான் பீலே. அதைப் பார்க்கும் அவன் அம்மா, அவனை ஒரு கால்பந்து பயிற்சியாளரிடம் சேர்க்கிறாள். தனது ஊரையும் குடும்பத்தையும்விட்டு நகரத்துக்குக் கிளம்பும் பீலே, அடுத்த 18-வது மாதத்தில் பிரேசில் நாட்டுக்காக உலகக்கோப்பை போட்டியில் ஆடும் அளவுக்கு வளர்கிறான். உலகக்கோப்பை போட்டிக்காக முதன் முதலில் மைதானத்தில் பீலே நுழைவதுதான் படத்தின் முதல் காட்சி.

பீலே ஒரு கறுப்பர். போர்த்துக்கீசியர்கள், ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக பிரேசிலுக்கு அழைத்து வரும் பல நூற்றாண்டு வரலாறு சில நிமிடங்களில் சொல்லப்படுகிறது. அவர்களின் தற்காப்புக் கலை, பீலேவின் கால் பந்தாட்ட டெக்னிக்களில் வெளிப் படுகிறது. `ஜிங்கா' எனப்படும் அந்த உத்தி, பீலேவால்தான் பிரபலமாகிறது. 1958-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஜிங்கா என்னவெல்லாம் செய்கிறது என்பதை, ரஹ்மானின் ‘ஜிங்கா’ பாடலோடு பார்க்க வேண்டும். ரஹ்மானின் பின்னணி இசை, படத்துக்கு மிகப் பெரிய பலம்.

`எனக்கு பீலே பற்றி எதுவும் தெரியாது. இந்தப் படத்துக்காகத்தான் அவரைப் பற்றி படித்தேன். என் வாழ்க்கையும் கிட்டத்தட்ட பீலேவின் வாழ்க்கை போன்றதுதான்’ என்கிறார் ரஹ்மான். படம் பார்த்த பீலே, `ரஹ்மானின் இசையில், பிரேசில் இசையின் சாயலைப் பார்த்தேன்' எனப் பாராட்டினார்.

ஜிங்கா.. ஜிங்கா!

இளவயது பீலேவாக நடித்த கெவின் டி பாலா, அவரின் அச்சு அசல் ஜெராக்ஸ். அதுவே படத்துக்கு மிகப் பெரிய பலம். சிறு வயது பீலேவாக நடித்திருக்கும் லியோனார்டோ லிமா செம க்யூட். `உண்மையில், நான் அவ்வளவு அழகாக இருந்தது இல்லை’ என கமென்ட் அடித்திருக்கிறார் பீலே. அப்பாவாக நடித்த சியோ ஜார்ஜ், பிரேசில் நாட்டு சூப்பர் ஸ்டார்.

பீலே என்பது இவரது நிஜப்பெயர் அல்ல. இவரது ஃபேவரிட் கோல் கீப்பர் `பைல்'(Bile) என்றவரின் பெயரை சிறு வயதில் `பீலே' என இவர் தவறாக உச்சரிக்க, அதைவைத்தே நண்பர்களால் கிண்டல் செய்யப்பட்டார். தனக்கு நேர்ந்த அவமானத்தையே மூலதனமாக்கி வெற்றியை ரசித்தவர் பீலே என்கிற எட்சன் அரண்ட்ஸ் நாசிமெண்டோ.

`இந்தப் படத்தில் `ஃபுட்பால் கம்மியா இருக்கு', `இன்னும் கொஞ்சம் வேகம் இருந்திருக்கலாம்’ என நெகட்டிவ் விமர்சனங்களும் இருக்கின்றன. பீலே என்ற ராட்சசனின் வெற்றியே, `நீ இதுக்கு சரிப்பட்டு வர மாட்ட'  எனத் தன்னை நோக்கி வந்த  விமர்சனங்கள் அனைத்தையும் கோலுக்குள் காலால் உதைத்துத் தள்ளியதுதான். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல!

ஜிங்கா.. ஜிங்கா!

பீலேவின் ரெக்கார்டுகள் ஏராளம். ஆனால், ஒரே போட்டியில் அவர் அப்பா அடித்த  ஐந்து ஹெட்டர் கோல்  சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை.

 பீலே தனது சிறுவயதில் நண்பர்களுடன் ஆரம்பித்த ஃபுட்பால் டீமின் பெயர் `ஷூலெஸ் ஒன்ஸ்'. ஷூக்கள் இல்லாமலே விளையாடி இறுதிப்போட்டி வரை வந்தார்கள்.

மூன்று முறை உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்த ஒரே வீரர் பீலேதான்.

 பீலே, 92 முறை ஹாட்ரிக் கோல் அடித்திருக்கிறார். நான்கு கோல்கள் 31 முறையும், ஐந்து கோல்கள் 6 முறையும் அடித்திருக்கிறார். பெனால்டி கிக்கில் கோல் அடிப்பது எல்லாம் கோழைத்தனம் என்பது பீலேவின் அதிரடி ஸ்டேட்மென்ட்.

பிரேசில் அரசு பீலேவை `தேசிய பொக்கிஷம்' என அறிவித்தது!