
கார்க்கிபவா

“பெண்கள் இப்போதான் அடிமைத்தனத்தை விட்டு, கொஞ்சம் வெளியே வந்திருக்காங்க. சுயமரியாதையோடு வாழப் பழகிருக்காங்க. இந்தச் சூழல்ல, பெண்களைப் பார்த்து ஆண்கள் கேட்கும் பல கேள்விகள் இரிட்டேட்டிங்கா இருக்கு. இங்கே பசங்களுக்கு லவ் பண்ணவே தெரியலை. இப்படி இருக்கிற இந்தக் காலத்துல ஆண்-பெண் ரிலேஷன்ஷிப்ல வர்ற பிரச்னைகள்தான் `தரமணி’ படம்” - ஆண்ட்ரியாவின் அழகு முகத்தில் அவ்வளவு சீரியஸ்னெஸ். யாரும் நடிக்கத் தயங்கும் கேரக்டர்களில் தன்னைச் சோதித்துப்பார்க்கும் துணிச்சல், பேசத் தயங்கும் விஷயங்களைப் பேசுகிற பாய்ச்சல்... இவைதான் ஆண்ட்ரியா.
`` ‘தரமணி’ படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்’னு சொன்னீங்க... அப்படி என்ன ஸ்பெஷல்?”
``எப்பவும் நான் படத்துல நடிக்கிற கேரக்டருக்கும் எனக்கும் எந்த கனெக்ஷனும் இருக்காது. ‘அன்னயும் ரசூலும்’ மலையாளப் படத்துக்கு அப்புறம் `தரமணி’ல என்னை நானே கொஞ்சம் பார்த்துக்க முடிஞ்சது. சில படங்கள் நேரம் இருக்குனு பண்றேன். சில படங்கள் காசுக்காகப் பண்றேன். நானும் நிறைய பில்ஸ் கட்டணுமே? எல்லா படங்களையும் நாம ரசிச்சு, விரும்பிப் பண்ண முடியாதுதான். ஆனா, `தரமணி’ நான் விரும்பிப் பண்ண ஒரு படம். நிறையப் பேரால இந்தப் படத்தின் கதாபாத்திரங்களோடு தங்களை கனெக்ட் பண்ணிக்க முடியும். இதுல எந்த டிராமாவும் கிடையாது. இந்த உண்மைதான் `தரமணி’யின் பலம்.’’
``இயக்குநர் ராம்?”
``வீ நோ ஈச் அதர் வெல். `ராம் சார்கூட படம் பண்றேன்’னு சொன்னதும் நிறையப் பயமுறுத்தினாங்க. `அவர் ரொம்ப டார்ச்சர் பண்ணுவார்’னுகூடச் சொன்னாங்க. ஆனா, எனக்கு அவர்கூட வேலைபார்த்தது ரொம்ப கம்ஃபர்டபிளா இருந்தது. என் வேலையில பெஸ்ட் வர்ற வரைக்கும் நான் விட மாட்டேன். அவரும் அதே மாதிரிதான். அந்த பெஸ்ட்டுக்காக நாம மெனக்கெடத் தயாரா இல்லைன்னா, `அவர்கூட வொர்க் பண்றது டார்ச்சர்’னுதான் சொல்வாங்க. எல்லோராலும் அவர்கூட வொர்க் பண்ண முடியாது. அவரை முதல்ல நம்பணும். நான் இயக்குநர் ராமை நம்புறேன்.’’
``எந்த இமேஜும் பார்க்காம சில டேரிங் கேரக்டர்கள் பண்றீங்க. உங்க கரியரை அது பாதிக்காதா?”
``இமேஜ் பார்த்திருந்தா நான் பண்ணின பல நல்ல புராஜெக்ட்களைப் பண்ணியிருக்க மாட்டேன். நானும் என் இமேஜ் பத்தி யோசிச்சு சில புராஜெக்ட்களை `வேணாம்’னு சொல்லியிருக்கேன். ஆனா, மத்தவங்க என்ன நினைப்பாங்கனு நினைக்கிறது எனக்கு ஒத்துவராது. ஒருவேளை என் முடிவு தவறு ஆகிட்டாகூட, எனக்குப் புடிச்சதைச் செஞ்சேன்கிற திருப்தி இருக்கும்ல.”
``மலையாளத்துல நிறையப் படங்கள் பண்றீங்க... தமிழ் சினிமா - மலையாள சினிமா... என்ன வித்தியாசம்?’’
``மலையாளத்துல எல்லா ஸ்டார்ஸும் நல்ல நடிகர்கள். நடிக்கத் தெரியாம அங்க ஸ்டார் ஆகவே முடியாது. இது ஹீரோக்களுக்கு மட்டும் அல்ல... ஹீரோயின்களுக்கும்தான். அங்கே நடிகை ஒருவர் நல்ல ஸ்டார் ஆகணும்னா அழகா இருந்தா மட்டும் போதாது; நல்லா நடிக்கத் தெரிஞ்சிருக்கணும். ஆனா, தமிழ்ல அப்படி இல்லை. ஒரு படம் எடுக்க தமிழ்ல நிறைய நேரம் எடுத்துக்கிறாங்க. ஆனால், நிறைய மலையாளப் படங்கள் ஒரே ஷெட்யூல்ல எடுக்கிறாங்க. அதனால பட்ஜெட்டும் கம்மி; ஃபோகஸும் அதிகமா இருக்கும். சுந்தர்.சி சார், `நான் படத்தைச் சீக்கிரமா எடுக்கிறதுக்கு காசு மட்டும் காரணம் இல்ல. ஒரு கிரியேட்டருக்கு ஒரு படத்துல ஃபோகஸ் கொஞ்ச நாட்கள்தான் இருக்கும். அப்பவே அந்தப் படத்தை முடிச்சிடணும்’னு சொல்வார். அது உண்மைனு நினைக்கிறேன். மலையாளத்துல அதை நூறு சதவிகிதம் ஃபாலோ பண்றாங்க.”
``ஆண்ட்ரியா இயக்குநர் ஆவாரா?”
``நான் டைரக்ட் பண்ணா குறைஞ்சது பத்து பேரையாவது சுட்டுக் கொன்னுடுவேன். ஏன்னா நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். சொல்றதைச் செய்வேன்... செய்றதைத்தான் சொல்வேன். ஆனா மத்தவங்க அப்படி இல்லை. அதனால, நோ டைரக்ஷன். தவிரவும், அது ஒண்ணும் அவ்ளோ ஈசியான வேலை கிடையாது.”
``கமலுடன் மூன்று படங்கள் நடிச்சிட்டிங்களே?”
``நம்பவே முடியாத திறமைசாலி அவர். இந்தத் தலைமுறை ஆட்களுக்கு சக்சஸ்கூட சீக்கிரம் போரடிச்சுடுது. ஒரு நல்ல புராஜெக்ட் தந்தாலே `இட்ஸ் போரிங்... வேறு ஏதாவது பண்ணலாம்’னு யோசிக்கிறாங்க. ஆனா, இத்தனை வெற்றிகளுக்கு அப்புறமும், ஒரு சின்னக் குழந்தை மாதிரி கத்துக்க அவ்வளவு ஆர்வமா இருக்கார். அவரை மாதிரி மனிதர்கள் அபூர்வம். அவர் செட்ல இருந்தாலே அப்படி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். எனக்கு கமல் சார் மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன்.”
``பாடகி ஆண்ட்ரியா அடிக்கடி காணாமப் போயிடுறாங்களே?”
“என்னை யாருமே பாடக் கூப்பிட மாட்றாங்க. ஏன்னு தெரியலை. முழு நேர நடிகை ஆகிட்டதா நினைச்சிட்டாங்கபோல. நடிப்பும் இசையும் எனக்கு இரண்டு கைகள் மாதிரி. ரெண்டும் வேணும். பாடுவதை நிச்சயம் விட மாட்டேன்.”
``இண்டிபெண்டன்ட் மியூஸிக்’ வளந்துட்டுவருது. ஆனால், அதில் பெண்கள் குறைவாத்தான் வர்றாங்க. ஏதாவது ஒரு டிப்ஸ் சொல்லுங்களேன்..?”
``நான் எப்படிச் சொல்ல முடியும்? நானே என் ஆல்பம் ரிலீஸ் பண்ணப் போராடுறேன். இவ்ளோ பாடல்கள் பாடின பிறகும், ஒரு நடிகையான பிறகும் என் ஆல்பத்தை நானே தயாரிக்க வேண்டியிருக்கு. யாராவது ஒருத்தர் அதை ஐஸ் பிரேக் பண்ணணும். அது நடந்துடுச்சுன்னா அப்புறம் மத்தவங்களுக்குக் கொஞ்சம் ஈஸியா இருக்கும்.”
``ஆண்ட்ரியாவுக்குப் பிடிச்ச மூன்று விஷயங்கள் சொல்லுங்க?”
``மனசுக்குப் பிடிச்ச ஆட்களைப் பார்க்கிறது பிடிக்கும். சாக்லெட்ஸ் ரொம்பப் பிடிக்கும்.
ஒரு வேலையை ஒழுங்கா முடிச்சதும் வர்ற திருப்தி ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.”