பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கலக்கும் கன்னட சினிமா!

கலக்கும் கன்னட சினிமா!
பிரீமியம் ஸ்டோரி
News
கலக்கும் கன்னட சினிமா!

பா.ஜான்ஸன்

கலக்கும் கன்னட சினிமா!

னவுகளும் நிஜங்களும் கபடி ஆடிய `லூசியா’ படத்தை மறக்க முடியுமா? அது ஆச்சர்யமூட்டும் ஒரு கல்ட் கிளாசிக். அந்தப் படத்தை இயக்கிய கன்னட இயக்குநர் பவன்குமாரின் அடுத்த படம் `யூ-டர்ன்’.

பெங்களூரில் இருக்கிறது ஒரு டபுள் ரோடு பிரிட்ஜ். அந்த பிரிட்ஜில் இருந்து ஒன்வேயில் தவறாகத் திரும்பிச்செல்ல, டிவைடர் கற்களை நகர்த்திவிட்டு யூ-டர்ன் அடிக்கிறார்கள் சிலர்.

இந்தச் சாலை விதிமீறலைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக, யூ-டர்ன் செய்யும் வண்டிகளின் எண்களை எழுதிவைக்கிறார் பத்திரிகையாளர் ரச்சனா. அதில் முதல் நபரைப் பேட்டி எடுப்பதற்காக அவர் வீட்டுக்குச் சென்று, அங்கே யாரும் இல்லை என்பதால் தன் வீட்டுக்கு இரவில் திரும்புகிறார். அப்போது, ரச்சனாவை போலீஸ் சுற்றிவளைக்கிறது. காரணம், ரச்சனா சந்திக்கச் சென்ற நபர் வீட்டில் மர்மான முறையில் இறந்துகிடக்கிறார். கொலையாளி ரச்சனாதான் என விசாரணை ட்ராக் மாற, பூமராங்காகப் பறக்கிறது திரைக்கதை.

ரச்சனா போலீஸிடம் யூ-டர்ன் கட்டுரையைப் பற்றிச்சொல்லி, குறித்துவைத்திருக்கும் மற்ற வண்டியின் எண்களையும் காட்டுகிறார். விசாரித்துப்பார்த்தால், அவர்கள் அனைவரும் இறந்திருக்கிறார்கள். அவை தற்கொலை எனப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. யார் இந்தக் கொலைகளுக்குக் காரணம்? யூ-டர்னுக்கும் இந்தக் கொலைகளுக்கும் என்ன சம்மந்தம் என, அடுத்தடுத்து பல த்ரில் முடிச்சுகளை அவிழ்க்கிறது படம்.

கலக்கும் கன்னட சினிமா!

திடீரென காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுற்றி என்ன நடக்கின்றன எனத் தெரியாமல் திணறுவதும், இவை அனைத்தும் தற்கொலைகள் இல்லை என நிரூபிக்கப் போராடுவதும் என, பத்திரிகையாளர் ரச்சனாவாக ஷ்ரதா ஸ்ரீநாத் சிறப்பாக நடித்திருக்கிறார்.

`லூசியா’ மாதிரியான ஓர் அபாரமான படம் கொடுத்துவிட்டதால், அடுத்த படத்தில் அதை மீறவேண்டும் என்ற மெனக்கெடல்கள் அதிகம் இருக்கும். சமயத்தில் அதுவே படத்துக்குப் பெரிய சறுக்கலாக அமைந்துவிடும். ஆனால், அதில் நிலைகுலையாமல் பாஸாகிறார் பவன்குமார். அவரின் சக்ஸஸ் லிஸ்டில் ஆட்ஆன் இந்த `யூ-டர்ன்’

கலக்கும் கன்னட சினிமா!

ராம் ரெட்டி என்னும் அறிமுக இயக்குநரின் முதல் படம் `திதி'.

செஞ்சுரி கெளடா என்னும் முதியவர் தன்னுடைய 101-வது வயதில் இறந்துபோகிறார். கௌடாவின் பேரன் தமன்னாவுக்கு, தாத்தாவின் ஐந்து ஏக்கர் நிலத்தை உடனே விற்கவேண்டிய பண நெருக்கடி. ஆனால், அதை விற்க மறுக்கிறார் தமன்னாவின் அப்பா கட்டப்பா (நாட் `பாகுபலி’, இவர்வேறு கட்டப்பா!). கடுப்பாகும் தமன்னா, தாத்தாவோடு சேர்த்து அப்பாவுக்கும் இறப்புச் சான்றிதழ் பெற்று நிலத்தை விற்க ஏற்பாடுசெய்கிறான். நிலம் விற்கப்பட்டதா, கட்டப்பா நிலத்தை மீட்க என்ன செய்தார் என்பதுதான் `திதி’யின் மீதிக் கதை.

சிம்பிள் கதை, அதைவிட சிம்பிளான யதார்த்த மனிதர்கள், அவர்களுடைய பலவீனங்கள்... என கச்சிதமான கிராமத்துக் கதை. கட்டப்பாவாக நடித்திருக்கும் சன்னே கௌடாதான் படத்தின் நாயகன். பரட்டைத் தலையும் அடர்ந்த தாடியுமாக அவர் ஆடும் கெட்ட ஆட்டம் ரசனை ரகளை. நிலத்தைக் கேட்டுவரும் மகனை `என்னா ப்ராப்ளம் உனக்கு?' என சவடாலாகக் கையாள்வது, ஆடுமேய்க்கும் கூட்டத்திடம் `என்னையும் உங்ககூடச் சேர்த்துக்குவீங்களா?' எனக் கேட்டுச் சேர்ந்துகொள்வது வெகு இயல்பு.

இந்த எளிய கதையை அதிகமான திருப்பங்கள் இல்லாமல் நகைச்சுவையோடு நேர்த்தியான சினிமாவாகத் தந்திருக்கிறார் இயக்குநர் ராம் ரெட்டி.

கலக்கும் கன்னட சினிமா!

தமன்னாவுக்கு ஏற்படும் மிகப் பெரிய பணச்சிக்கல், தந்தை செஞ்சுரி கௌடாவால் கட்டப்பாவுக்கு நிகழும் இழப்பு என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் 1,000 எபிசோட்கள் அழுவதற்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதை கிராமியக் கேலியோடு சொல்லி, காட்சியைக் கடக்கவைத்திருப்பது இந்தப் படத்தின் பலம். கட்டப்பா தன் வாழ்க்கை பற்றி ஆடு மேய்க்கும் கூட்டத்தினரிடம் சொல்லிவிட்டு `இதெல்லாம் என் வாழ்க்கையில நடந்ததா இல்ல... நடந்த மாதிரி நான் கனவுகண்டேனானு தெரியல’ எனக் கூறும் இடம் அத்தனை நெகிழ்ச்சி.

தான் பிறந்த மண்ணை சக மனிதனைப்போல நேசிக்கிற ஒருவரை யாருக்குத்தான் பிடிக்காது. அப்படி ஒரு மனிதரை அற்புதமாகப் படமாக்கி யிருக்கிறது `திதி’.