கெளதம் பெர்சனல்நா.கதிர்வேலன்,படம் : கே.ராஜசேகரன்
##~## |
சென்னைக்கும் மும்பைக்கும் சீஸன் டிக்கெட் போட்டுப் பறந்து பறந்து வேலை பார்க்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். 'அமெதிஸ்ட்’டில் கொஞ்சம் காபி... நிறைய பேச்சு... ஓவர் டு கௌதம் மேனன்.
''விஜய்யோடு 'யோகன்’ சரி. அதென்ன அத்தியாயம் 1’..?''
''முதல் அத்தியாயம்... ஸோ சிம்பிள்! விஜய் யோடு முதல் சந்திப்பு சரியா அமையலை. அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டலை. கடைசிச் சந்திப்பில் 'இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை. இனி, மிஸ் பண்ணவே வேண்டாம்’னு அவரே சொன்னார். நானும் அவரை வெச்சுப் படம் பண்ண ரொம்ப ஆர்வமா இருந்தேன். 'யோகன்’ ஒரு இன்டர்நேஷனல் தமிழ்ப் படமாக இருக்கும். இதில் இன்டர்நேஷனல் ஏஜென்ட் ஆக வர்றார் விஜய். எனக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு படம் புதுசு. வெளிநாட்டு அசைன்மென்ட்டுக்குப் போன பிறகு, யோகனின் இரண்டு மாத அனுபவங்கள்தான் முதல் அத்தியாயம். அடுத்து, ஒவ்வொரு இரண்டு வருஷத்துக்கும் அதன் அத்தியாயங்களை நீட்டிக்க ஆசை. யார் கண்டா... இது ஒரு சீரிஸாகக்கூட அமையலாம். இந்தப் படத்தின் ஆக்ஷன் விஜய்க்கு செம ஃபிட்டா இருக்கும். கதையைக் கேட்டதும் ரஹ்மான் ஆர்வமா மியூஸிக் போட்டுக் கொடுத்துட்டார். உங்க எல்லாரையும் அசரடிப்பான் 'யோகன்’!''

'' 'நீதானே என் பொன் வசந்தம்’ வழக்கமான உங்க காதல் ஸ்பெஷல்னு தெரியுது... ஜீவாவை இன்னும் ஸ்டைலா மாத்தி இருக்கீங்கபோல?''
''ஆமா... மத்தபடி ரொம்ப அழகான படம். 6 வயசுல இருந்து 25 வயசு வரை வளர்ற நட்புதான் கதை. எனக்கு இளையராஜாவின் பாடல் வரிகள் மேல் பெரிய க்ரேஸ். அதனால, படத் துக்கு இந்தத் தலைப்பு. 'கோ’வுக்கு முன்னாடியே ஜீவாவை எனக்குப் பிடிக்கும். 'கற்றது தமிழ்’ படத்துல கிளாஸிக்கா நடிச்சிருப்பார். 'கோ’வுக்குப் பிறகு, அவரே எனக்கு போன் பண்ணினார். 'உங்க படத்தில் நடிச்சால், சந்தோஷப்படுவேன்’னு சொன்னார். 'லோக்கலா இறங்கும்போது உங்களைக் கண்டிப்பாக் கூப்பிடுறேன்’னு சொன்னேன். 'சார், இந்த லோக்கல் இமேஜ் இப்போதைக்குப் போதும். உங்க படத்தில் மாடர்னா என்னை நடிக்க வைங்க’னு சொன்னார். உடனே, இந்தப் படத்தைக் கையில் எடுத்துட்டோம். தமிழ், தெலுங்கு, இந்தினு மூணு மொழிகளிலும் ஒரே சமயத்தில் தயாராகுது. நான் பார்த்த திலேயே அருமையான மனுஷன் ஜீவா!''

''இந்தி 'விண்ணைத் தாண்டி வருவாயா’ எப்படி வந்திருக்கு?''
'' 'ஏக் திவானா தா’னு படத்துக்குப் பேர். 'ஒரு பைத்தியக்காரத்தனமான காதலன் இருந்தான்’னு அர்த்தம் வரும். ஸ்மிதா பாட்டீல் பையன் பிரதீக்தான் ஹீரோ. சிம்பு பண்ண மாதிரி இந்தப் பையன் செய்யலை. 'ஸீனுக்கு ஸீன் சிம்பு மாதிரி நடிங்க’னு சொல்லலை. அவனே ஒரு ஸ்டைலுக்குள் வந்தான். சிம்பு, பிரதீக்... ரெண்டு பேரில் யார் நல்லா நடிச்சிருக்காங்கனு யோசிக்கவே முடியாது. இரண்டுமே வேற வேற வெர்ஷன். த்ரிஷா ரோலில் 'மதராசபட்டினம்’ ஏமி ஜாக்சன். ஃபாரினரா வந்த பொண்ணு, ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது அசல் மலையாளி ஆகிட்டாங்க. ஷூட்டிங் இல்லாதப்பவும் ரெண்டு மூணு மாசமாவே சுடிதார், சேலைனு போடச் சொல்லி, அவங்களைப் பழக்கப் படுத்தினோம். ஏ.ஆர்.ரஹ்மான் 'வி.டி.வி’யை விட இன்னும் ரெண்டு பாட்டு அதிகம் மியூஸிக் பண்ணிக் கொடுத்திருக்கார். இந்தி மார்க்கெட்டுக்கு நானும் புதுசு மாதிரிதான். பிரதீக் இப்பதான் வந்திருக்கார். ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும்தான் 'ஏக் திவானா தா’வுக்கு மாஸ் அட்ராக்ஷன். படம் பார்க்க வந்து, தியேட்டர் ஸீட்ல உட்கார்ந்த பிறகு ரசிகர்களை என் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்திருவேன்னு நம்புறேன். ஃபாக்ஸ் ஸ்டாரும் நானும் சேர்ந்து தயாரிக்கிற முதல் சினிமா. இதுக்கு நடுவில் நானும் சிம்புவும் உட்கார்ந்து பேசினோம். 'வி.டி.வி’-யின் க்ளைமாக் ஸுக்குப் பிறகு யோசிச்சுப் பார்க்கலாமேனு தோணுச்சு. இன்னும் கதை ரெடியாகலை. நிச்சயம் 'வி.டி.வி’ பார்ட்-2 வரும்!''

'' 'நடுநிசி நாய்கள்’ சரியாப் போகலைனுதான் திரும்பவும் காதல் களத்தில் குதிச்சிட்டீங்களா? 'ஏன்டா அந்தப் படத்தை எடுத்தோம்’னு தோணியிருக்கா எப்பவாச்சும்?''
''அது கொஞ்சம் பிரச்னையான படம்னு எனக்கும் தெரியும். ரசிகர்களுக்குப் பிடிக்காமலே போகலாம்னும் எனக்குத் தெரியும். பல பரிசோதனை முயற்சிகளும் செய்தேன். காதல் மட்டுமே சமூகம் இல்லை. அதன் அனைத்துப் பக்கங்களையும் காட்ட லாம்னு யோசிச்சேன். ஜீரணிக்க முடியாத அருவருப்பான பக்கங்களும் சமூகத்தில் இருக்கு. அதனால்தான் அந்த சினிமாவை சின்ன பட்ஜெட்டில் எடுத்தோம். ஆனா, இப்பவும் அந்தப் படம் எடுத்ததற்காக எந்த வருத்தமும் இல்லை. சோதனை முயற்சியா இன்னும் நிறைய சின்னச் சின்னப் படங்கள் எடுக்கணும்னு ஆசை இருக்கு. அதேசமயம் யோசனையாவும் இருக்கு. நேரம் கிடைக்கும்போது பார்ப்போம்!''
''கௌதம் - சமந்தா கிசுகிசு உங்களுக்கும் தெரிஞ்சி இருக்குமே...''
''நம்ம ராசி அப்படி. அப்போ சமீரா ரெட்டி... இப்போ சமந்தா! என்னைச் சுத்தி இருக்கிறவங்களும் வீட்ல இருக்கிறவங்களும் அதை நம்பினால்தான் நான் கவலைப்படணும். அது எனக்கு இல்லை. 'நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் அத்தனை வெர்ஷனிலும் சமந்தாதான் ஹீரோயின். சமந்தா இப்போ ரொம்ப மெச்சூர்டு பொண்ணு. கொஞ்ச மாசம் முன்னாடி நான் பார்த்த சமந்தா இல்லை அவங்க. நம்மளையே அசர அடிக்கிற அளவுக்கு நடிச்சு ஷாட் ஓ.கே. பண்ணிட்டுப் போறாங்க. தெலுங்கில் அவங்களுக்குப் பெரிய மார்க்கெட். 'சமந்தாதான் ஹீரோயின். ஹீரோவா யாரையும் ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க’னு புரொடியூசர்ஸ் சொல்ற அளவுக்கு க்ரேஸ் இருக்கு. ஒரு டைரக்டர் - ஹீரோயின் ரிலேஷன்தான் எங்களுக்குள். மத்தபடி... நத்திங் ஸ்பெஷல்!''

'' 'தங்க மீன்கள்’ போன்ற வித்தியாசமான முயற்சிகளை ஊக்குவிக்கும் துணிச்சல் எப்படி வந்தது?''
''துணிச்சல் என்பது பெரிய வார்த்தை. 'கற்றது தமிழ்’ என்னை ரொம்பவும் பாதிச்ச படம். 'தங்க மீன்கள்’னு தலைப்பு சொல்லி, வேற ஒரு ஹீரோ பெயர் சொல்லி கதை சொன்னார் ராம். அவர் வசனங்களோடு, நடிப்போடு ஆழ்ந்து போய், சொன்ன இரண்டரை மணி நேரமும் உணர்ச்சிக் குவியலில் கண் கலங்கி ஒரு மாதிரி ஆகிட்டேன். 'நீங்களே ஹீரோவா நடிச்சா, இந்தப் படம் பண்றேன்’னு

சொன்னேன். யோசனைக்குப் பிறகு நடிக்க வந்தார். கிட்டத்தட்ட முடிந்த 'தங்க மீன்கள்’ பார்த்தபோது, நான் கணிச்சதும் ராம் நடிச்சதும் ஒரே நேர்க்கோட்டில் அமைஞ்சிருந்தது. இந்தப் படம் தயாரிச்சதுக்கு நான் பெருமைப்படுறேன்!''
''தமிழ் சினிமாக்கள் இப்ப அதிக அளவில் உலக சினிமாக்களில் இருந்து தழுவப்படுது. அதை இன்ஸ்பிரேஷன்னு, காப்பினு... ஏதேதோ பேர்ல நியாயப்படுத்துறாங்க. 'பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலமா உங்க மேலயும் அந்தக் குற்றச்சாட்டு உண்டு... ஏன் இப்படி?''
'' 'பச்சைக்கிளி முத்துச்சரம்’ டிரெயில்டு’ புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுனு படத்தோட டைட்டில்லயே வரும். இன்ஸ்பிரேஷன் தப்பில்லை. நான் அதைத் தவிர, எந்தப் படத்தையும் அப்படிச் செஞ்சது இல்லை. இன்னிக்கு இன்டர்நெட் யுகத்தில் அடுத்த கணமே தப்பு தெரிஞ்சிடும்!''