Published:Updated:

இறைவி - சினிமா விமர்சனம்

இறைவி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
இறைவி - சினிமா விமர்சனம்

இறைவி - சினிமா விமர்சனம்

இறைவி - சினிமா விமர்சனம்

புரிந்துகொள்ளப்படாத, பொருட்படுத்தப் படாத, ஆண்களால் வஞ்சிக்கப்படும் பெண்ணே ‘இறைவி’.

தான் இயக்கிய படத்தை வெளியிடாத தயாரிப்பாளர் மீது கோபத்தில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, முடங்கிக்கிடக்கும் அண்ணனின் படத்தை வெளியிட சிலை திருடிப் பணம் சம்பாதிக்க நினைக்கும் பாபி சிம்ஹா, விசுவாசத்துக் காகக் கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்லும் விஜய் சேதுபதி... இப்படி மூன்று ஆண்கள். விரக்தியில் குடித்துக்கொண்டே இருக்கும் சூர்யாவால் பாதிக்கப்படும் மனைவி கமாலினி முகர்ஜி, விஜய் சேதுபதியுடன் செக்ஸுக்காக மட்டும் நட்பாக இருக்கும் பூஜா தேவரியா, விஜய் சேதுபதிக்கு மனைவியாகி சகித்துக்கொள்ளும் அஞ்சலி... இப்படி சில பெண்கள். இந்தக் கதாபாத்திரங்களை முன்வைத்து ஆண் மனதையும் பெண் மனதையும் அலசியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

திருமணம் என்னும் ஏற்பாடும், குடும்பம் என்னும் நிறுவனமும் பெண்களின் மீது எப்படியான ஒடுக்குமுறையைச் செலுத்து கின்றன என்பதை படமாகப் பதிவுசெய்த கார்த்திக் சுப்புராஜுக்கு, பெண்கள் சார்பாகவும்  பெண்களை மதிக்கும் ஆண்கள் சார்பாகவும் வாழ்த்துகள்.

இறைவி - சினிமா விமர்சனம்
இறைவி - சினிமா விமர்சனம்

மழையில் நனைவதைக் கொண்டாட்டமாகவும் விடுதலை நிகழ்வாகவும் நினைத்தாலும், தன் கற்பு குறித்து கணவனின் சந்தேகக் கேள்விக்கு மத்தியிலும் காயப்போட்டிருக்கும் துணியை நனையாமல் எடுத்துவரும் அஞ்சலி, “என்ன சொன்னாலும் வெளியே போய் என்னை `அயிட்டம்'னுதானே சொல்வீங்க?” எனக் கேட்கும் பூஜா, வேலை செய்யும் இடத்துக்கே வந்து குடித்துவிட்டு கலாட்டாசெய்யும் சூர்யாவை வெறுத்துக்கொண்டே காதலிக்கும் கமாலினி, இறுதி வரை கோமாவில் படுத்திருந்தாலும் கதாபாத்திரமாக மாறி, படத்தின் உயிர்ப்புக்கு உதவிய வடிவுக்கரசி ஆகியோர் அந்தக் கதாபாத்திரங்களில் பொருந்திப்போய் நியாயம் செய்கிறார்கள்.

`அட எஸ்.ஜே.சூர்யாவா இது?’ என ஒவ்வொரு காட்சியிலும் வியக்க வைக்கிறார். `பொறுத்துக் கிறதுக்கும் சகிச்சுக்கிறதுக்கும் நாம என்ன பொம்பளையா... ஆம்பளை! ஆண் நெடில்; பெண் குறில்’ என்று தொடரும் எஸ்.ஜே.சூர்யாவின் வார்த்தைகள்  ஆண் திமிரின் மீது ஏவப்படும் அணு ஆயுதம். ஆண்களுக்குப் பெருமிதமாகச் சொல்லப்பட்ட விஷயங் களே எப்படி ஆதிக்கக் கருவிகளாக மாறுகின்றன என்பதை நுட்பமாகச் சொல்லும் வசனம் அது. ஏடாகூட காமெடிகளை ஒதுக்கிவிட்டு எஸ்.ஜே.சூர்யா, நல்ல கலைஞனாக நடமாடலாம். விசுவாசம், பயம், விரக்தி, சந்தேகம், கையறுநிலை, காதல் என அத்தனை உணர்வுகளையும் அழகாக வடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. உணர்வுகளை அவ்வளவு நுணுக்கமாக வெளிப்படுத்தி அத்தனை நடிகர்களுக்கும் சவால்விடுகிறார் அஞ்சலி.
 
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்கவைக்கின்றன. ஆனால், பாடல்கள் பொருத்தப்பட்ட இடங்கள் துருத்துகின்றன. தன்னைவிட்டு விலகிப்போன கமாலினியைக் கவர்வதற்காக எஸ்.ஜே.சூர்யா பாடும் பாடல், தேவையே இல்லாத ஆணி.  மூன்று க்ளைமாக்ஸ்களுக்குப் பிறகும் படம் நீள்வது அலுப்பூட்டுகிறது. பார்வையாளர்கள் உணர்வதற் கான இடைவெளியே தராமல் எல்லா உணர்வு களுக்கும் கதாபாத்திரங்கள் விளக்கவுரை வாசிப்பது சலிப்பு. தொடக்கத்திலும் இறுதியிலும் நீளும் காட்சிகளை நீக்கிவிட்டால், ‘இறைவி’ இன்னும் மிளிர்ந்திருப்பாள்.

பாசிட்டிவ்கள் நிறைய இருந்தாலும் சில கேள்விகள் எழுகின்றன. எஸ்.ஜே.சூர்யாவின் குடிப்பழக்கத்தை தொடர்ச்சியாக அவருடைய எக்ஸ்டர்னல் ப்ரஷர் என்று நியாயப்படுத்துவது ஏன்? சமூக சீர்திருத்தப் படம் எடுக்கும்  இயக்குநர், அதற்காக சிலை திருட்டு செய்வது அறமான காரியம்தானா? பெண்ணியம் என்றால் குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வது எனச் சொல்லிவிட முடியுமா? ‘பொறுப்பாக’ குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் ஆண்கள் எல்லாம் பெண்ணியவாதிகள் எனச் சொல்லிவிட முடியுமா? டைட்டில் தொடங்கி கதாபாத்திரங் களின் உருவாக்கம் வரை பெண்களை ஏன் தொடர்ந்து `புனிதப்படுத்திக்கொண்டே' இருக்கிறது படம்? இறுதிக்காட்சியில் இயல்பாக பெண்கள் மீது வரவேண்டிய இரக்கம் ஏன் ஆண் கதாபாத்திரங்கள் மேல் எழுகிறது? கணவனை விட்டுப் பிரிவதும் தனித்திருப்பதும்தான் பெண் சுதந்திரத்துக்கான ஒரே தீர்வா? என,  பல கேள்விகள் எழுகின்றன. 

இறைவி - சினிமா விமர்சனம்

`ஆண்களை முழுக்கக் குற்றவாளிகள் ஆக்கி யிருக்கிறது இந்தப் படம்’ என்ற ஆதங்கத்தை பல ஆண்களிடம் பார்க்க முடிகிறது. ஆனால், அறிந்தோ அறியாமலோ பெண்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் எல்லா ஆண்களும் குற்றவாளிகள்தான் என உணரும்போது, பெண்களுக்கான நியாயங்களையும் அவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

 இப்படி எல்லாம் பேசுவதற்கான, விவாதிப் பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்ற வகையில் ‘இறைவி’யை வரவேற்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு