Published:Updated:

நானே ஹீரோ... நானே வில்லன்!

நானே ஹீரோ... நானே வில்லன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நானே ஹீரோ... நானே வில்லன்!

அர்விந்த் சுவாமி ரிப்பீட் ம.கா.செந்தில்குமார்

நானே ஹீரோ... நானே வில்லன்!

‘‘இந்தப் படத்துக்கு அர்விந்த் சுவாமி சாரை நான் யோசிக்கவே இல்லை. காரணம், ‘தனி ஒருவன்’ தந்த ஹிட் காம்பினேஷன்.  ` ‘ரெண்டுல  எது பெஸ்ட்?’ என்ற கம்பேரிசன் வந்துடுமோ?'னு பயம். ஆனா ரவி சார்தான், ‘இதுக்கு நாம அர்விந்த் சாரையே கேட்போம். என்ன தப்பு இருக்கு?’ என்றார். இந்தக் களமும் கதையும் வேறு. கண்டிப்பா ஒப்பீடு எதுவும் வராது, ‘தனி ஒருவன்’ல இருந்து தனிச்சுத் தெரியும் என்று முடிவுக்கு வந்த பிறகுதான் அர்விந்த் சுவாமி சார் ‘போகன்’ ஆனார்’’ - ஆர்வமாகப் பேசுகிறார் லக்‌ஷ்மன். அறிமுகப் படம் ‘ரோமியோ ஜூலியட்’டில் காதலுக்காகக் கொடி பிடித்தவர் ‘போகன்’-ல் ஆக்‌ஷன் மோடுக்குத் தாவுகிறார்.

‘‘ ‘போகன்’ என்ன மாதிரியான படம்?’’

‘‘நான் படித்த சில செய்திகளின் பாதிப்பில் உருவான கதை. இதில் ரவி சார் உதவி போலீஸ் கமிஷனர். அர்விந்த் சுவாமி சார் ராஜபரம்பரை வாரிசு. எல்லா சுகங்களுக்கும் அடிமைப்பட்டவனை ‘சுகபோகி’ என்பார்கள். அர்விந்த் சுவாமிக்கு அப்படியான ஒரு கேரக்டர். படத்தில் அவர்தான் ‘போகன்’. சப்டைட்டிலில்கூட ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்றுதான் தரப்போகிறேன். படத்தில் அவர் என்ன மாதிரியான மனிதர் என்பது புதுமையான விஷயம். சட்டரீதியாகக்கூட தண்டிக்க முடியாத மனிதர். அவரைக் கண்டுபிடிப்பதும் கட்டுப்படுத்துவதும் ரவியால் மட்டும்தான் முடியும்.

அர்விந்த் சுவாமி சாரின் கேரக்டர் பெயர் ஆதித்யா, ரவியின் கேரக்டர் பெயர் விக்ரம். இந்த இருவரின் நவீன விக்கிரமாதித்யன் கதை என்றுகூட இதைச் சொல்லலாம். படத்தின் முதல் பாதியில் அர்விந்த் சுவாமி வில்லன், ரவி ஹீரோ என்றால்... இரண்டாம் பாதியில் அர்விந்த் சுவாமி ஹீரோ, ரவி வில்லன். வழக்கமான சினிமா தளத்தில் இருந்து விலகி இன்னும் கமர்ஷியலாக வெரைட்டியாக விளையாட அழகான புதுக்களம்.’’

நானே ஹீரோ... நானே வில்லன்!

‘‘அர்விந்த் சுவாமியுடன் வொர்க் பண்ற அனுபவம் எப்படி?’’

‘‘படம் நல்லா வரணும்கிறதுக்காக எந்த லெவலுக்கும் இறங்குவார். சினிமா மேல அவருக்கு அவ்வளவு லவ். ஆனால், மனிதர் அவ்வளவு சீக்கிரம் கன்வின்ஸ் ஆக மாட்டார். அவரோட மென்டல் மெச்சூரிட்டி வேற லெவல்ல இருக்கும். பிரில்லியன்ட் பெர்சன்.

ஆரம்பத்தில் நான் கதை சொல்லும்போது, ‘கொஞ்சம் இப்படிப் போனா நல்லா இருக்குமா, அப்படிப் போனா நல்லா இருக்குமா?’ எனக் கேட்டுக்கொண்டே இருந்தார். ‘எனக்கு மணிரத்னம் சார் மாதிரி எல்லாம் படம் பண்ண வராது சார். எனக்கு வர்றதை பண்ணத் தெரியும்’னு ஃபன் பண்ணினேன். பிறகு, ஸ்பாட்டுக்கு வந்தவர், ‘இவன் ஸ்கூல் வேற மாதிரி புதுசா இருக்கு. ஆனா, நல்லா இருக்கு’னு சொல்லிட்டுப் போயிட்டார்.’’

நானே ஹீரோ... நானே வில்லன்!

‘‘ஜெயம் ரவி-அர்விந்த் சுவாமி காம்பினேஷன். ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்கு?’’

‘‘தினம் தினம் இன்ட்ரஸ்ட்டிங். இப்ப வழக்கமா ஒருத்தரோட ஷாட் முடிஞ்சிடுச்சுன்னா, இன்னொருத்தர் போய் உட்கார்ந்துடலாம். ஆனால், இதுல அப்படி இருக்க முடியாது. ரெண்டு பேருமே ஸ்பாட்ல நின்னே ஆகணும். ரெண்டு பேரும் இருந்தாத்தான் ஷூட் பண்ணவே முடியும். கதை அப்படி. 80 நாள் கால்ஷீட்னா, இருவருமே 80 நாட்கள் இருந்தாகணும். அர்விந்துக்கு ரவியும் ரவிக்கு அர்விந்தும் கத்துக்கொடுக்கணும். அந்த மாதிரி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. ஆனா, ஃப்ரேம்ல பார்க்கும்போது அவ்வளவு அழகா இருக்கும்.’’

நானே ஹீரோ... நானே வில்லன்!

‘‘ஹன்சிகாவுக்கு இந்தப் படத்திலும் வழக்கமான ஹீரோயின் ரோல்தானா?’’

‘‘எல்லா ஆண்களுக்கும் ரொம்பப் பிடிக்கிற கேரக்டர். ‘வரப்போற பையன்தான் தன் உலகம். அவனுக்காக என்ன தியாகம் வேணும்னாலும் பண்ணலாம்னு பெர்ஃபெக்ட் ஹோம் மேக்கரா வாழ ஆசைப்படும் பெண். தன் கணவருக்கு இப்படி எல்லாம் டிரெஸ் பண்ணிப் பார்க்கணும்னு நினைச்சு ஃபேஷன் டிசைனிங் படிப்பா. வர்றவனுக்கு என்ன சமையல் பிடிக்கும்னு தெரியாதேனு யோசிச்சு, எல்லாவிதமான சமையலையும் கத்துக்க கேட்டரிங் கோர்ஸ் போவானு செம ஜாலியான கேரக்டர். கதையை நகர்த்துவதிலும் அவங்களுக்கு முக்கியமான பங்கு இருக்கு.’’

நானே ஹீரோ... நானே வில்லன்!

‘‘இந்த புராஜெக்ட்டுக்குள் பிரபுதேவா எப்படி வந்தார்?’’

‘‘பிரபுதேவா மாஸ்டர், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ஒருவர்.  அவர் தயாரிப்பாளரா அமைஞ்சது பெரிய விஷயம். ‘ரோமியோ ஜூலியட்’டை இந்தியில் பண்ணலாம்னு பிரபு மாஸ்டர் அந்தப் படம் பார்க்க வந்தார். ‘படம் நல்லா இருக்குடா. வேற என்ன கதை எல்லாம் வெச்சிருக்க?’ என்றார். பல கதைகள் சொன்னேன். ‘இந்தக் கதை நல்லா இருக்குடா.  இதுக்கு உனக்கு ரவி, ஓ.கே-வா?’ என்றார். அந்த நிமிடத்திலேயே `போகன்' ஆரம்பிச்சிடுச்சு. அவரை வெச்சு நான் படம் பண்ணணும்னு போய், அவர் என்னை வெச்சு படம் பண்ணிட்டு இருக்கிறது மிகப் பெரிய சந்தோஷம். ரவி-ஹன்சிகா `எங்கேயும் காதல்'-ல பிரபுதேவா மாஸ்டர் அறிமுகப்படுத்தின காம்பினேஷன். அர்விந்த் சுவாமி-பிரபுதேவா இருவரும் ‘மின்சாரக் கனவு’ காம்பினேஷன். இப்போது ‘போகன்’-ல இந்த எல்லா காம்பினேஷன்களையும் ஒருங்கிணைச்சிருக்கிறது எனக்கு சந்தோஷம்.’’