Published:Updated:

" 'உறியடி’ எங்கள் முதல் அடி!”

   " 'உறியடி’ எங்கள் முதல் அடி!”
பிரீமியம் ஸ்டோரி
News
" 'உறியடி’ எங்கள் முதல் அடி!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: ப.சரவணகுமார்

   " 'உறியடி’ எங்கள் முதல் அடி!”

“ஒரு நல்ல படம், இந்தச் சமூகத்தால் எப்படிக் கொண்டாடப்படும்னு கடந்த ரெண்டு வாரமா பார்த்துட்டு இருக்கேன். சென்னை, மதுரைனு எல்லா இடங்கள்லயும் படம் முடிஞ்சதும் எழுந்து நின்னு கை தட்டுறாங்களாம் ப்ரோ” - சொல்லும்போதே விஜய் குமாருக்கு முகம் நிறைய மகிழ்ச்சி.

மெகா பட்ஜெட், சூப்பர் ஹீரோஸ், பெரிய டெக்னிக்கல் டீம்... என எதுவும் இல்லாமல் புதுமுகங்களை வைத்து சமூகத்துக்கான சினிமாவாக ‘உறியடி’யைக் கொடுத்திருக்கிறார் விஜய் குமார். படத்தின் இயக்குநர், ஹீரோ, தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி இசை... எல்லாமே விஜய் குமார்தான்.

“நான் பக்கா சென்னை பையன். மெட்டலர்ஜி இன்ஜினீயரிங் படிச்சுட்டு டிராக் மாறி, சாஃப்ட்வேர் கம்பெனியில எட்டு வருஷமாக வேலை செஞ்சுட்டு இருந்தேன். பெங்களூர்ல வேலை. நண்பர்கள் யாரும் இல்லாத வெறுமையான சூழல். அந்த வெறுமையை மெள்ள மெள்ள சினிமா ஆக்கிரமிச்சுது. உள்ளூர் சினிமாவுல தொடங்கி, உலக சினிமா வரை அத்தனை சிறந்த படங்களையும் தேடித் தேடி பார்த்தேன். அப்பதான் ‘நாளைய இயக்குநர்’ போட்டி அறிவிச்சாங்க. அதுக்காக ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, ஒன்றரை லட்சம் செலவு செஞ்சு, குறும்படம் எடுத்தேன். ஒரு படம் எந்த இடத்துல சொதப்பும், எப்படி எடுக்கக் கூடாது, ஸ்கிரிப்ட் எழுதும்போது எதுல கவனமா இருக்கணும்...

எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். அந்த நிகழ்ச்சியில் முதல் சுற்றில் செலக்ட் ஆனேன். இடையில எதிர்பாராத ஒரு விபத்து நடந்ததால் தொடர்ந்து கலந்துக்க முடியலை. அடுத்த லெவல் போகணும்னா ஸ்கிரிப்ட் எழுதணும்னு தோணுச்சு. ஆனா, எப்படி எழுதுறதுனு தெரியலை. சுஜாதா எழுதின திரைக்கதை புத்தகத்தை மட்டும் படிச்சுட்டு, நானே தனியா ஃபீல் பண்ணி எழுதிட்டு இருப்பேன். அப்பவே எங்க வீட்ல, ‘ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சதும் படம் இயக்கப்போறேன். நம்ம சொத்தை எல்லாம் விக்கணும். தயாரா இருங்க’னு சொல்வேன். விளையாட்டுக்கு சொல்றான்னுதான் நினைச்சாங்க. ஆனா, நிஜமாவே சினிமாவுல இறங்குவேன்னு யாரும் நினைக்கலை” என்றவர் `‘இங்கேதான் என் லைஃப்லயும் ஒரு பெரிய ட்விஸ்ட் நடந்துச்சு’’ என சஸ்பென்ஸ் வைக்கிறார்.

“அப்ப நான் ஒரு பெண்ணை லவ் பண்ணிட்டு இருந்தேன். 2008-ம் வருஷம் அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அமெரிக்காவுக்குப் பறந்துட்டேன். அங்கே வேலை பார்த்துட்டே ‘உறியடி’ ஸ்கிரிப்ட்டை எழுதினேன். எட்டு மாசம் எழுதி முடிச்சதும் வீட்டுலயும் என் மனைவிகிட்டயும் ‘சினிமா என்னை வா... வானு கூப்பிடுது. நான் இருக்கவேண்டிய இடம் சாஃப்ட்வேர் கிடையாது. சினிமாதான்’னு சொல்லி லட்சத்தில் சம்பளம் வாங்கிய வேலையைவிட்டுட்டு சென்னைக்கு வந்துட்டேன். அதுவரை உழைச்சு சம்பாதிச்ச மொத்த சொத்துக்களையும் வித்துட்டு, என் முழு உழைப்பையும் போட்டு எடுத்த படம்தான் ‘உறியடி’ '' எனச் சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

“படத்தின் கதையே சாதி அரசியலைப் பற்றியதுதான். முதல் படத்திலேயே இப்படி ஓர் ஆழமான சப்ஜெக்ட்டைத் தொடணும்னு எப்படித் தோணுச்சு?”

“இந்தக் கதை, புதுசு எல்லாம் கிடையாதுங்க. இங்கே ஏற்கெனவே நடந்துட்டு இருக்கிறதுதான். மாணவர்களுக்கு சாதி அரசியலைப் பற்றி சில விஷயங்களைத் தெரியப்படுத்தணும்னு தோணுச்சு. அதை அவங்க பாணியிலேயே சொல்லணும்னு ஆசைப்பட்டேன். அதனாலதான் நகரமும் இல்லாம கிராமமும் இல்லாம கதை நடக்கும் இடத்தை என்.ஹெச்-ல வெச்சிருப்போம். அதுலயும் அந்த நாலு பசங்கள்ல ரெண்டு பேர் சென்னையைச் சேர்ந்தவங்களாகவும், மீதி ரெண்டு பேரை வேற ஊராகவும் காட்டியிருப்போம். அனைத்து தரப்புக்கும் பொதுவான கதையா இருக்கணும். அதுதான் என் நோக்கம். ஒரு நல்ல கமர்ஷியல் கதை எழுதி, சுயநலமா பேரு வாங்கிட்டுப் போறதுல எனக்கு இஷ்டம் இல்லை” - விஜய் குமார் சொல்லி முடிக்கும்போதே ``வணக்கம் சார்'' என என்டர் ஆகிறார் படத்தில் ‘குவார்ட்டர்’ ஆக நடித்திருக்கும் சிவபெருமாள்.

“நான் படிச்சது சென்னை பச்சையப்பன் காலேஜ். படிக்கும்போதே சினிமா மேல ஆர்வம் அதிகம். ஆனா, அதுக்கு என்ன பண்றதுனு எல்லாம் தெரியாது. நிறையப் பேரைச் சந்திச்சேன். என் சைஸ் பார்த்துட்டு கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, நான் அசரலை. பார்ட் டைமா சின்னச்சின்ன வேலை பார்த்துட்டு வாய்ப்பு தேடிட்டே இருந்தேன். அப்பதான் இந்தப் படத்துக்கு ஆடிஷன் நடக்குதுனு வந்தேன். மூணு மாசம் நடிப்புப் பயிற்சி கொடுத்தாங்க. ஷூட்டிங் போனப்பகூட கொஞ்சம் சொதப்பினேன். குட்டையா இருந்தாலும் படத்துல என் கேரக்டர் செம கெத்து. இதுல இன்னொரு ஸ்பெஷல், எனக்கு இப்போ இன்னோர் அம்மா கிடைச்சுட்டாங்க” - படத்தில் தனக்கு அம்மாவாக நடித்திருக்கும் ஜானகியை அறிமுகப்படுத்துகிறார் சிவபெருமாள்.

“நான் 20 வருஷமா சினிமாவுலதான் இருக்கேன். பெரிய ரோல்ல எல்லாம் நடிச்சது இல்லை. ‘வெண்ணிலா கபடிகுழு’ படத்துல அம்மாவா நடிச்சேன். அப்புறம் சில படங்கள்ல கூட்டத்தோடு கூட்டமா தலை காட்டியிருக்கேன். இந்தப் படத்துல நான் சில காட்சிகள்ல நடிச்சாலும் பார்க்கிறவங்க மனசுல பதியும்படியா நடிச்சுட்டேன்” என்கிறார் ஜானகி.

“அடுத்து பேசறவர் கொஞ்சம் பல்கா இருப்பார். அதனால அவர் காலேஜ் ஸ்டூடன்ட் இல்லைனு நினைச்சுடாதீங்க” - சிவபெருமாள் நடுவில் புகுந்து சவுண்டுவிட, வெட்கத்துடனேயே பேசுகிறார் படத்தில் நான்கு நண்பர்களில் ஒரு நண்பரான ஜெயகாந்தன்.

“அனிமேஷன் வேலையைவிட்டுட்டு நடிக்க வந்துட்டேன். வேலையை விட்டதால முதல்ல வீட்டில் கோபப்பட்டாங்க. ஆனா, நடிச்சதைப் பார்த்துட்டு இப்ப எல்லாருக்கும் சந்தோஷம்” என்றவரிடம் “சூப்பரா நடிச்சுட்டீங்க. கவலைப்படாதீங்க” என, தோள் தட்டுகிறார் அருகில் இருந்த சந்துரு.

இந்த நால்வர் அணியில், படத்தில் கண்ணாடி போட்டுவரும் செகண்ட் ஹீரோதான் சந்துரு. இவர் ஒரு போட்டோகிராஃபரும்கூட. “சினிமாவுல நடிக்கணும்னு திருநெல்வேலியில இருந்து சென்னைக்கு வந்தேன். இதுக்கு முன்னாடி ஒரு படத்துல நடிச்சேன். திட்டித் திட்டி ஒரு சைக்கோ போலவே மாத்திட்டாங்க. வாழ்கையே வெறுத்துப்போய் இருந்த சமயத்துலதான் இந்த வாய்ப்பு கிடைச்சது. உடம்பை கொஞ்சம் ஏத்தணும்னு சொன்னாங்க. ஜிம்முக்குப் போய், வொர்க்அவுட் பண்ணி உடம்பை ஏத்தினேன். ஆரம்பத்துல வீட்டுல சப்போர்ட் இல்லை. இப்போ படம் ரிலீஸ் ஆனதும், பையன் பிழைச்சுக்குவான்னு நம்புறாங்க. என் வாழ்க்கையே மறுபடியும் கிடைச்ச மாதிரி ஒரு ஃபீல்” என எமோஷனலாகிறார் சந்துரு.

   " 'உறியடி’ எங்கள் முதல் அடி!”

“காலேஜ் பசங்களா ஒழுங்கா படிக்கணும். புரியுதா?” என போதை வில்லன்களாக படத்தில் வந்த சுருளி, சாதிக் இருவரும் அதட்டிக்கொண்டே வர... “ஏம்ப்பா... நீங்க இன்னமும் அந்த வில்லன் கேரக்டரை விடலையா?” என நால்வரும் சேர்ந்து கலாய்க்க... “நாங்க பெர்ஃபாமன்ஸ் பண்ணலாம்னு பார்த்தா, கேட் போடுறீங்களேப்பா...” எனச் சிரிக்கிறார் சுருளி.

“12 வருஷத்துக்கு முன்னாடி சினிமாவுல நடிக்கிறதுக்காக 5,000 ரூபாய் பணத்தோட சிவகங்கையில் இருந்து கிளம்பி வந்தேன். சினிமா கஷ்டம்னு புரிஞ்சதும் கடை கடையாப் போய் பீடி, சிகரெட் போட ஆரம்பிச்சேன். வேலையை முடிச்சுட்டு சந்து பொந்துல இருக்கிற எல்லா சினிமா கம்பெனிகளுக்கும் போய் வாய்ப்புக் கேட்பேன். `சினிமா... சினிமானு சொல்லி 12 வருட வாழ்க்கையைத் தொலைச்சுட்டோமே. சாகுறத்துக்குள்ள ஒரு சீன்லயாவது நடிச்சுட முடியுமா?'னு நினைப்பேன். ஆனா, இந்தப் படத்துல இவ்வளவு பெரிய ரோல் கிடைக்கும்னு நினைச்சுக்கூட பார்க்கலை. அதுவும் எனக்கு நடிப்பு சுத்தமா வரலை. நடிப்புப் பயிற்சி கொடுத்தப்பவும் வரவே இல்லை. ஆனா, விஜய் சார் என் திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுக்காம, என் வறுமையைப் பார்த்துதான் வாய்ப்பு கொடுத்தார். படத்துல க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில சுத்தமா நடிப்பே வரலை. `என்னை அடிச்சாவது நடிப்பை வாங்கிடுங்க’னு சொல்வேன். ஆனா, இயல்பா எனக்குள் இருக்கும் நடிகனைக் கொண்டுவந்துட்டார் விஜய் சார்” எனச் சொல்லும்போதே சுருளியின் கண்கள் கலங்குகின்றன.

சுருளியின் நண்பனாக படத்தில் வரும் சாதிக்தான் இந்தப் படத்தின் மேனேஜர். “நானும் நடிக்கணும்னுதான் சென்னைக்கு வந்தேன். ஆனா, வாய்ப்பு கிடைக்காம, ஒரு கம்பெனியில ஆபீஸ் பாய் வேலை பார்த்தேன். அடுத்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு தயாரிப்பு ஏரியாவுல கவனம் செலுத்தி, பணத்தைக் கையாளக் கத்துக்கிட்டேன். அமீர் சார்கூட கொஞ்சநாள் இருந்தேன். விஜய் அமெரிக்காவுல இருந்து வந்ததும் என்கிட்டதான் முதலில் கதை சொன்னார். முதலில் படத்தின் மேனேஜராகத்தான் இருந்தேன். கடைசியில் ‘நடிக்கிறதுக்கு 17 வருஷத்துக்கு முன்னாடி ராமநாதபுரத்துல இருந்து வந்தீங்க. அப்புறம் நடிக்காம இருந்தா எப்படி?’னு என்னையும் நடிக்கவெச்சுட்டார். தேங்க்ஸ் சார்” என நெகிழ்கிறார் சாதிக்.

``கேமராமேன் பால் லிவிங்ஸ்டன், ஆர்ட் ஏழுமலை, ஸ்டன்ட் ஜீவானு எல்லோரும் ஒரே டீமா இருந்ததாலதான் படம் நல்லா வந்திருக்கு. நிறையப் பேர் பாராட்டுறாங்க. ‘நம் தகுதிக்கு மீறிய பாராட்டோ!’னு இப்ப தோணுது. மக்களுக்காக ஒரு படம் எடுத்தா மக்கள் அதை ரசிப்பார்கள், ஏற்றுக்கொள்வர்கள் என்கிற நம்பிக்கையிலதான் வேலையைவிட்டுட்டு இங்கே வந்தேன். ‘உறியடி’ எங்கள் முதல் அடி. இந்தப் படம் கடைசி ஷோ ஓடுற வரைக்கும் என் கவனம் ‘உறியடி’ மேலதான்'' - நம்பிக்கையோடு கைகொடுக்கிறார் விஜய் குமார்.