Published:Updated:

கோபக்கார பறவைகள்!

கோபக்கார பறவைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கோபக்கார பறவைகள்!

பா.ஜான்ஸன்

கோபக்கார பறவைகள்!

ரியாக 10 கோடிப் பேரின் ஆண்ட்ராய்டு போன்களைத் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் வீடியோ கேம் ஆங்ரிபேர்ட்ஸ். முதல் பாகத்தின் கணக்கு மட்டும்தான் இது. ஆங்ரிபேர்ட்ஸின் மற்ற பாகங்களையும் சேர்த்தால் ரசிகர்களின் எண்ணிக்கை நாற்பது கோடியைத் தாண்டும்.

சாதாரண மொபைல் கேமாக ஆரம்பித்த இந்தக் கோபக்கார பறவைகள், இன்று பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் கோடீஸ்வர பறவைகளாக மாறிவிட்டன.
`க்ரஷ் தி கேஸ்டல்' கேமின் தாக்கத்தில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த `ஆங்ரிபேர்ட்ஸ்'.

2009-ம் ஆண்டில் `ரோவியோ' நிறுவனத்தின் சீனியர் கேம் டிசைனர் ஜக்கோ லிசலோதான் இந்த விளையாட்டுக்கான ஐடியாவை உருவாக்கினார். கால்களோ, இறக்கைகளோ இல்லாமல் கோபமாக இருக்கும் சில பறவைகள் என்பதுதான் டிசைன். பறவைகள் என்றாலே சிரிப்பு, அமைதி என்றே பழக்கப்பட்டவர்களுக்கு இந்த ஐடியா பிடித்துவிட்டது.

கேம் உருவாக்கும் வேலைகளை உடனே ஆரம்பித்தனர். பறவைகள்தான் ஹீரோ என வைத்துக்கொண்டால் வில்லன் வேண்டுமே... யார் அந்த வில்லன் என யோசித்த சமயத்தில் ஊரெங்கும் பன்றிக்காய்ச்சல் பரவியது. `கிடைச்சான்டா வில்லன்' என, பச்சை நிறப் பன்றிகளை வில்லனாக்கிவிட்டனர். பறவைகளிடம் இருந்து முட்டைகளைத் திருடிச் செல்லும் பன்றிகள், அதை மீட்கக் கிளம்பும் பறவைகள் என, கதாபாத்திரத்தைச் சுற்றி கதையையும் வடிவமைத்து கேமை உருவாக்கினார்கள்.

கோபக்கார பறவைகள்!

2009-ம் ஆண்டு டிசம்பரில் வெளியான கேம், வெகுவிரைவில் நம்பர் 1 இடத்தையும் பிடித்தது. முதல் பாகம் ஹிட் அடிக்க, அடுத்தடுத்து விதவிதமான பின்னணிகளில் ஆங்ரிபேர்ட்ஸ் நம் செல்போன்களுக்குள் நுழைந்தன. டச் ஸ்கிரீன் போன்கள் பிரபலமாகத் தொடங்கிய 2010-ம் ஆண்டில் அந்தத் திரைக்கு ஏற்றவகையில் முதலில் களம் இறங்கியது ஆங்ரிபேர்ட்ஸ் கேம்தான். அதனால் புதிதாக செல்போன் வாங்கினால் அதில் முதலில் எல்லோரும் டவுண்லோடு செய்தது ஆங்ரிபேர்ஸைத்தான். நேரம் காலம் தெரியாமல் மக்கள் பன்றி வேட்டையில் இறங்கினர். இதில் வயது வேறுபாடே இல்லை.

வீடியோ கேமுக்குப் பிறகு ஆங்ரிபேர்ட்ஸ் கதாபாத்திர பொம்மைகள், டீஷர்ட்கள் ஆரம்பித்து கீச்செயின் வரை பரவியது. அதன் அடுத்தகட்ட பாய்ச்சல் டி.வி-யில் தொடர்ந்தது. ஆங்ரிபேர்ட்ஸ் டூன்ஸ், பிக்கி டேல்ஸ் என இரண்டு கார்ட்டூன் தொடர்கள் தொடங்கப்பட்டது. டி.வி.டி., வீடியோ ஆன் டிமாண்ட், யூ டியூப் சீரியல் என இந்தத் தொடர்கள் சென்ற இடம் எல்லாம் செம ஹிட்.

ஆங்ரிபேர்ட்ஸின் வெற்றி உலகம் முழுக்க ஏகப்பட்ட போலிகளை உருவாக்கியது. ஆங்ரிபேர்ட் போலவே இருக்கும் டூப்ளிகேட் கேம்கள் தொடங்கி, எல்லாவித விளையாட்டுப் பொருட்களும் போலிச் சந்தைகளில் புழங்க ஆரம்பித்தன. எல்லாமே சைனாதான். சீனர்கள் ஒருபடி மேலே போய் எந்தவித அறிவிப்பும் இன்றி ஆங்ரிபேர்ட்ஸ் தீம் பார்க்கைக்கூட உருவாக்கினர். இதைக் கேள்விப்பட்டு ரோவியோ நிறுவனம் சுதாரித்துக்கொண்டு உண்மையான ஆங்ரிபேர்ட்ஸ் தீம் பார்க்கை ஃபின்லாந்தில் உருவாக்கியது.

கோபக்கார பறவைகள்!

டி.வி தொடர்களின் மூலம் கிடைத்த வரவேற்பு, ஆங்ரிபேர்ட்ஸ் திரைப்படம் ஆவதற்கான சாத்தியங்களை உருவாக்கியது. 2014-ம் ஆண்டு அக்டோபரில் வேலைகள் தொடங்கப்பட்டன. வீடியோ கேமாக உருவானபோது அதன் கான்செப்ட் இதுதான். ஆங்ரிபேர்ட்ஸால் பறக்க முடியாது. அவற்றின் முட்டைகளை பச்சைப் பன்றிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக எடுத்துச் சென்றுவிட அவற்றை மீட்பதற்காக, தங்களையே ஆயுதமாக்கி பச்சைப் பன்றிகளைத் தாக்கும். படத்திலும் இதே கதை களம்தான். குட்டீஸ்களின் பேராதரவுடன் படம் உலகம் முழுக்க மெகாஹிட். இந்தியாவில் மட்டும் ஆங்ரிபேர்ட்ஸின் முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா? 2.16 கோடி!

** துவரை முந்நூறு கோடி பேர் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இந்த கேம், ஆப்பிள் ஐபோன் மூலமாக மட்டும் ஒரு நாளைக்கு புதியதாக 13,707 பேரால் டவுண்லோடு செய்யப்படுகிறது.

** ஒரு ஒரிஜினல் ஆங்ரிபேட்ஸ் ஆப் டெவலப் செய்ய, 94,46,481 ரூபாய் செலவாகும்.

** லண்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆங்ரிபேர்ட்ஸ் கேம்தான்.

**கதையில் வரும் `பிக்கி' கதாபாத்திரத்தின் நோக்கமே முட்டைகளைத் திருடி சாப்பிடுவது தான். அதை வைத்து `பேட் பிக்கிஸ் - எக் ரெசிப்பீஸ்' என புத்தகம் போட்டு முட்டையை வைத்து வெரைட்டி ரெசிப்பி புக்கையும் விற்றிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து குளிர்பான விற்பனையும் களைகட்டியிருக்கிறது.