Published:Updated:

வாழ்க்கை எப்பவுமே அழகு செல்லம்!

நா.கதிர்வேலன்படங்கள் : ர.குமரேஷ்

வாழ்க்கை எப்பவுமே அழகு செல்லம்!

நா.கதிர்வேலன்படங்கள் : ர.குமரேஷ்

Published:Updated:
##~##

பாண்டிச்சேரி செல்வதே கொண்டாட்டம் என்றால், அங்கே பிரகாஷ்ராஜ் சந்திப்பு தீபாவளி போனஸ். அதுவும் 'டைரக்டர்’ பிரகாஷ்ராஜ். மிக அருகில் கடல் கை தட்ட, எப்போதும்போல் இனிமையாகப் பேசுகிறார் செல்லம்!

 ''பொதுவா, வாய்ப்புகள் குறையும்போதுதான், நடிகர்கள் டைரக்டர்கள் ஆவாங்க. ஆனா, 'எப்பவும் தேடப்படும் நடிகர்’ நீங்க. ஏன் திடீர்னு டைரக்ஷன்?''

''நடிப்பு ஒரு பக்கம் போய்க்கிட்டே இருக்கு. அனுபவம் சேர்ந்துக்கிட்டேதான் இருக்கு. 'நீ நல்லா நடிக்கிற’னு சொல்றதை மட்டுமே எத்தனை நாள் கேட்டுக்கிட்டே இருக்கிறது? எனக்குச் சவால் பிடிக்கும். சென்னையில் வெறும் 140 ரூபாயோட வந்து இறங்கினபோது, நடிகன் ஆவேன்னுகூட நெனைச்சுப் பார்க்கலை. ஆகிட்டேன். 200 படங்கள் நடிச்சிட்டேன். மலையாளம் வருது. கர்நாடகாவில் மறுபடி கூப்பிடுறாங்க. இந்தி 'சிங்கம்’ ஓடுது. நானே அந்தந்த மொழியில் பேசுறேன். திரைக்கதை புரியுது. எடிட்டிங் தெரியுது. இவ்வளவு அனுபவத்தை வீணாக்கலாமா? அதான் மனசுக்குப் பிடிச்ச ஒரு சினிமா

வாழ்க்கை எப்பவுமே அழகு செல்லம்!

செய்றேன். அதுதான் 'டோனி’.''

''கிரிக்கெட் கதையா?''

''கிரிக்கெட்டும் கதையில் இருக்கு! என் பொண்ணு 10-வது பரீட்சை எழுதப்போறா. அவ மேல இருக்கிற பிரஷர்... அப்பப்பா! இப்போ யோசிக்கிறேன். நான் படிச்சது எதுவும் என் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் எனக்கு உதவலை. ஆனா, குழந்தைங்க மேல மட்டும் ஏன் திணிக்கி றோம்? என் பொண்ணுக்கு பெயின்டிங் வரும்னு தெரியுது. அப்புறம் ஆர்ட்ஸ், சயின்ஸ்னு ஏன் தொல்லை கொடுக்கு றோம்? நான் சின்ன வயசுல பண்ண மாதிரி 'சரிதான் போங்கடானு’ என் பொண்ணு போக முடியாது. ஒரு குழந் தையை முட்டாள்னு எப்படிச் சொல்றாங்க? இந்த உலகத்தில் எந்தக் குழந்தை முட்டாள்? ஏன், அப்பா - அம்மாவை ஸ்கூல்ல இன்டர்வியூ பண்றாங்க? அப்பா - அம்மாவை இன்டர்வியூ பண்ணி இருந்தால், அப்துல்கலாம் வந்திருப்பாரா? அன்பு, பழக்கவழக்கங்களை நாம கத்துக் கொடுக்கலாம். படிப்பைக் கத்துக்கொடுக்க வேண்டியது பள்ளிக்கூடம் இல்லையா? வீட்ல இருக்கிறதைவிட அதிக நேரம் அங்கேதானே இருக்காங்க? என் குழந்தை எதில் பெட்டர்னு அவங்களுக்குத்தானே தெரியணும்? யார் குற்றவாளி? பள்ளிக் கூடமா...  நாமா... இந்த சிஸ்டமா? இதை 'டோனி’யில் பேசலாம்னு தோணுச்சு. இளையராஜா என் கனவுக்கு உயிர் கொடுத்து இருக்கார்!''  

''நல்ல நடிகர்னு எல்லாருக்கும் தெரியும்... ஆனா, மிரட்டல் வில்லனா மட்டுமே நடிச்சு உங்களை நீங்களே ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைச்சுக்கிட்டீங்களோ?''

''தெரியலை. ஆனா, கொஞ்சம்  சினிமாவைக் குறைச்சிருக்கேன். நானும் எவ்வளவு படம் தான் 'டாய்... டூய்’னு சவுண்ட் விட்டுட்டே இருக்க முடியும்! வேற ஏதாவதுதான் தேடணும். 'மொழி’,  'அபியும் நானும்’ 'டோனி’ மாதிரி நல்ல சினிமா கொடுக்கத்தான் நான் நிறையப் படங்கள் நடிக்க வேண்டிஇருந்தது. என்ன பண்ணலாம்? நீங்களே சொல்லுங்களேன்...''

வாழ்க்கை எப்பவுமே அழகு செல்லம்!

''அது இருக்கட்டும்... நீங்க சொல்லுங்க, தமிழில் உங்களை ஆச்சர்யப்படுத்தும் நடிகர் யார்?''

''அப்படித் திடமா யாரையும் சொல்ல முடியலை. கடந்த 10 வருஷமா நடிகர்களிடம் இருந்து எந்தப் பெரிய பங்களிப்பும் இல்லை. நான் இதில் என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன். இருந்தும்  தமிழ்நாட்டுக்கு வெளியே, தமிழ் சினிமாவுக்கு மரியாதை இருக்குன்னா, அதைக் கட்டிக் காப்பாத்துறது புது வரவாக ஜொலிக்கும் இயக்குநர்கள்தான். கதாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் எல்லார்கிட்டயும் புது விஷயங்கள் வந்துட்டே இருக்கு, நடிகர்களைத் தவிர்த்து. இது பச்சை உண்மை. இதுக்கு ரசிகர்களும் கொஞ்சம் பொறுப்பு ஏத்துக்கணும். நடிகர்கள் என் மீது கோபப்படுவதைவிட, வியாபாரத்தைத் தாண்டி தொழிலை சின்சியரா செய்யணும். சாரி பாய்ஸ்... ஆனா, நான் சொல்றது சத்தியமான உண்மை!''

வாழ்க்கை எப்பவுமே அழகு செல்லம்!

''போனி வர்மாவுடனான திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?''

''எப்போதும்போல. நதி மாதிரி, வெள்ளம் அடிச்சுட்டுப் போற மாதிரி, திடீர்னு 'ரஷ்’ஷா இருக்கிற மாதிரி விதவிதமா போகுது. லதா நல்லா இருக்கா. போனி அழகா இருக்கா. குழந்தைகள் நல்லாப் புரிஞ்சுக்கிட்டு இருக்காங்க. அம்மா என்கூடவே வந்துட்டாங்க. நான் எல்லார் பக்கத்துலயும் இருக்கேன்!''

வாழ்க்கை எப்பவுமே அழகு செல்லம்!

''இந்தப் பக்குவம் எப்படி சாத்தியம்னு தெரியலை... லதாகூடவும் சௌகரியமா உணர்றீங்க. போனிகூடவும் அதே ரிலேஷன். எப்படி?''

''லதாவை என்னோட கட்டிவைக்கப் பசங்க இருக்காங்க. தனிப்பட்ட மனிதர்களாக எங்களுக்குப் பிரச்னை இருந்துச்சு. அதை நாங்க தீர்த்துக்கிட்டோம். இப்ப ஆபீஸுக்கு வர்றாங்க. எங்க பிரச்னை எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அடுத்த வங்க எரிஞ்ச கல்லு எதுவும் பட்டு நாங்க அடிபடலை. ரெண்டு பேரும் அடிச்சுக்கலை. 'நான் நல்லா இருக்கேன்... நீ நல்லா இருக்கியா?’னு பரஸ்பரம் கேட்டுப்போம். போனி வீட்டுக்கு மேக்னா போறா. போனி வந்தா, கை நிறையப் பசங்களுக்கு பிடிச்சதா என்னென்னவோ அள்ளிக்கிட்டு வர்றா. போனி பிறந்த நாளுக்கு லதா வாழ்த்து சொல்றா. என் மகன் சூர்யா நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த ரெண்டு பேரும் வர்றாங்க. எல்லாமே ஒரு பக்குவம்தான். அப்போ எங்க ளைப் பார்த்துச் சிரிச்சவங்க, இப்போ வியந்து பார்க்குறாங்க. இதுக்கு லதா, போனி, என் குழந்தைகள்னு எல்லோருடைய பெருந்தன்மையும் காரணம். வாழ்க்கை எப்பவுமே அழகு செல்லம்!''