Published:Updated:

நாகேஷ் சில நினைவுகள்...

இரா.சரவணன்

நாகேஷ் சில நினைவுகள்...

இரா.சரவணன்

Published:Updated:
##~##

யக்குநர் ஸ்ரீதரைக் கடைசியாகப் பேட்டி கண்ட துயரமான அதிர்ஷ்டசாலி நான். பக்கவாதத்தால் மிகவும் நலிவுற்று மரணப் படுக்கையில் இருந்த ஸ்ரீதர் அன்றைய தினத்தில் இரண்டு பேரைப் பற்றி சிலாகித்துப் பேசினார். ஒருவர் ஜெயலலிதா... இன்னொருவர் நாகேஷ்.  

 '' 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் ஆரம்பிச்சப்ப ஏற்கெனவே வாய்ப்பு கேட்டுப் போயிருந்த நாகேஷை வரச் சொன்னேன். குழந்தையைக் காணாமல் கம்பவுண்டர் தேடுற காட்சிக்கு ஒத்திகை பார்த்தோம். அந்த கேரக்டரில் நடிக்க வேண்டிய ராமாராவ் வரவில்லை. அதனால், நாகேஷை நடிக்க வெச்சோம்.   படுக்கைக்குக் கீழே குனிந்து குழந்தையைத் தேடுவதுதான் காட்சி. ஆனால், நாகேஷ் என்ன செய்தார் தெரியுமா? பெட்டில் கிடந்த தலையணையைத் தூக்கிப் பார்த்தார். பெட்டுக்கு அருகே இருந்த டிராயரைத் திறந்து பார்த்தார். குழந்தையைக் குழந்தைத்தனமாகவே அவர் தேடிய காட்சி ஸ்பாட்டில் எல்லாரையும் சிரிக்கவைத்துவிட்டது. கல்யாண்குமார் அழைத்தவுடன் வேகமாக படிக்கட்டில் நாகேஷ் இறங்கி வர வேண்டும். நடிப்பு தத்ரூபமாக வருவதற்காக படிக்கட்டில் விழுந்து புரண்டு ஓடினார். என் சம்மதம் இல்லாமல் கேரக்டர்கள் எதையும் செய்ய அனுமதிக்க மாட்டேன். ஆனால், நாகேஷ§க்கு மட்டும் நான் எல்லா சுதந்திரத் தையும் கொடுத்தேன். காரணம், நான் நாகேஷின் ரசிகன்!'' - ஸ்ரீதர் சிலாகித்துச் சொன்ன வார்த்தைகள் அப்படியே இன்றும் மனதுக்குள் ரீங்கரிக்கின்றன.

நாகேஷ் சில நினைவுகள்...

''எதையும் மிகைப்படுத்திப் பேசப் பிடிக் காது. ஆனா, நாகேஷ் மாதிரி ஒரு கலைஞனை மிஞ்சுற ஆள் இந்தியாவிலேயே இல்லைனு சொல்வேன். அந்த மாபெரும் கலைஞனுக்கு பத்மஸ்ரீ பட்டம்கூடக் கிடைக்கலையேங்கிறது என்னோட மிகப் பெரிய ஆதங்கம்!'' - வருத் தத்தில் துடிக்கிறது இயக்குநர் பாலசந்தரின் குரல். நாடகத் துறையின் மீது நாகேஷ் கொண்டிருந்த அதீத பாசத்தை விவரிக்கிறார் பாலசந்தர்.

''என்னோட 'மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் அப்போ ஏக பிரசித்தம். டி.கே.சண்முகம்,  நாகேஷ் எல்லாரும் 'மேஜர் சந்திரகாந்த்’பத்தி எல்லார்கிட்டயும் பெருமையாப் பேசினாங்க. 'இனிமே துண்டு துக்கடா வேஷத்தில் நடிக்க விரும்பலை. உங்களோட இயக்கத்தில் நான் நடிச்சே ஆகணும்’னு சொன்னார் நாகேஷ். தினமும் மாலை அவர் என்னைப் பார்க்க வரும் நேரம்தான் எனக்கு டீ டைம்.

'ஏதோ ஒரு கேரக்டரைக் கொடுக்க முடியாது. உன்னை மனசுல வெச்சு தனியா கதை பண்ணினால்தான் உண்டு. அதனால, நீ கொஞ்ச காலம் காத்திரு’னு சொன்னேன். அப்போ ஸ்ரீதருடைய 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ ரிலீஸாகி, ஓவர் நைட்ல நாகேஷ் ஃபேமஸ் ஆகிட்டார். அப்புறம் அவர் என்னைப் பார்க்க வரும்போது எல்லாம் கூட்டம்கூடிரும். சினிமாவில் பிரபலமான பின்னும் என் நாடகத்தில் நடிக்கணும்னு தீவிரமா இருந் தார். அவருக்காகவே நான் உருவாக்கியது தான் 'சர்வர் சுந்தரம்’ நாடகம். அந்த நேரம் பார்த்து 'காதலிக்க நேரமில்லை’ ரிலீஸ். நாகேஷ் பெரிய காமெடியனா உருவாகிட்டார். எனக்குப் படபடப்பு ஆகிருச்சு. காரணம், ஒரு காமெடியனா நாகேஷ் சினிமாவில் ஜெயிச்சிருக்கும்போது 'சர்வர் சுந்தரம்’ நாடகம் எப்படி எடுபடும்கிற தயக்கம். நாகேஷ் அழுவுற ஸீன்லகூட மக்கள் சிரிச்சிடுவாங்களேங்கிற பயம். ஆனாலும், நாகேஷ், 'அப்படி எல்லாம்நடக் காது பாலு. நாடகம் நிச்சயம் ஹிட் ஆகும்’னு நம்பிக்கையா சொல்லிட்டு இருந்தார். தயக்கமும் பயமுமா நாடகம் முடிஞ்சப்ப, பெரிய ரெஸ்பான்ஸ். 'நான் உங்களுக்குத் தைரியம் சொன்னேனே தவிர, எனக்கும் பதற்றம்தான். கைத்தட்டலைப் பார்த்த துக்கு அப்புறம்தான் பதற்றம் போச்சு’னு சொன்னப்ப, நாகேஷ் முகத்தில் அப்படிஓர் உருக்கம். நாம் எதிர்பார்க்கிறதைக் காட்டி லும் அதிகமாகச் செய்து அசத்துவதில் நாகேஷை மிஞ்ச ஆளே கிடையாது!'' - பாலசந்தரின் வார்த்தைகளே நாகேஷின் நடிப்புக்கான பதக்கங்கள்.

நாகேஷ் சில நினைவுகள்...

''சத்யா ஸ்டுடியோ பக்கம் வர்றப்பலாம் எங்க வீட்டுக்கு வந்து என் அம்மா கையால ஃபில்டர் காபி வாங்கிச் சாப்பிடுவார். 1976-ல் அவருக்குத் திடீர்னு உடல்நிலை சரி இல்லா மல் போயிடுச்சு. ஜி.ஹெச்சுக்கு ஓடினேன். 'எல்லாம் முடியப்போகுது’னு டாக்டர் கை விரிச்சுட்டார். கோமாவில் இருந்த நாகேஷ் கிட்ட 'நான் மௌலி வந்திருக்கேன்’னு சொன்னேன். 'எனக்கு காபி தர்றியா’னு முனங்கினார். அதுதான் அவர் என்கிட்ட பேசுறது கடைசினு நினைச்சேன். ஆனா, பல லட்சம் பேரின் பிரார்த்தனைகள் கோமாவின் பிடியில் இருந்த நாகேஷை அன்றைக்குக் காப்பாற்றியது!'' என்கிறார் மௌலி அப்போதைய பரவசம் விலகாத குரலில்.

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகப் பேசுகிறார் கிரேஸி மோகன். '' 'அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் சிங்கத்திடம் நாகேஷ் சிக்குவதுபோல் ஒரு காட்சி. நாங்க டூப் போட்டு எடுத்துக்கிட்டு இருந்தோம். அப்போ, அங்கே வந்த நாகேஷ் சார், 'இந்த ஸீனுக்கு ஏன் டூப் போடுறீங்க? நான் இதில் நடிச்சே தீருவேன்’னு மல்லுக்கு நின்னார். 'சிங்கத்தைப் பார்த்துப் பயம் இல்லையா’னு கேட்டால், 'வீரன் போரில்தான் சாகணும். வியாதியில் சாகக் கூடாது. நடிக்கிறப்பவே செத்தால் அது வரம்’னு சொன்னார். நாங்க உடனே நெகிழ்ந்து உருக்கமாகவும், 'அட, உங்களைக் கலாய்க்கச் சொன்னேன்பா... இந்த மாதிரி எத்தனை சிங்கத்தை நான் பார்த்திருப்பேன்’னு டைமிங்கா காமெடி பண்ணார். என்னோட ஒரு நாடகத்தில் முதலில் ஒரு பைத்தியக்கார கேரக்டர் வரும். அடுத்து வர்ற ஒரு நபரும் மனநிலை தவறிய மாதிரியே பேசுவார். அதைப் பார்க்கும் ஹீரோ, 'நீயும் பைத்தியமா’னு கேட்பார். அந்தக் காட்சியைப் பார்த்த நாகேஷ், 'ஏன்பா, ஹ்யூமருக்குப் பொழிப்புரை போடுறீங்க. இரண்டாவது வர்ற ஆளைப் பார்த்து, 'நீயுமா’னு கேட்டாலே போதுமே. 'நீயும் பைத்தியமா’னு ஏன் ரெண்டு வார்த்தைகள் போடுறீங்க. வார்த்தைகளை எப்பவுமே வீணடிக்கக் கூடாது’னு சொன்னார். வார்த்தைகளைக் கௌரவப்படுத்திய கலைஞன் அவர். இறப்பதற்கு ஒரு மாசத்துக்கு முன்பு என்னோட 'சாக்லேட் கிருஷ்ணா’ நாடகத்தைப் பார்க்க வந்திருந்தார். 'மோகன், எனக்கு உடம்பு சரியில்ல. அதனால, பத்து நிமிஷத்துலயே கிளம்பிடுவேன்’னு சொன்னார். ஆனால், நாடகம் முடியும் வரை உட்கார்ந்து பார்த்தார். மறு நாள் போன் பண்ணி, ஒன்றரை மணி நேரம் பாராட்டினார். நாடகத்தின் மீது அவர் வெச்சிருந்த பாசமும் மரியாதை யும் அப்படிப்பட்டது!''